Saturday, January 19, 2013

வாழ்க்கை முழுவதும் கம்யூனிச இயக்கத்திற்கே! - பி.சுந்தரய்யா.



எத்தனையோ புகழ்மிக்க அரசியல் தலைவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் வாழ்ந் திருந்தார்கள். எனினும் அவர்கள் அனைவ ருக்கும் மேலான தலைவராகத் திகழ்ந்தவர் தோழர் சுந்தரய்யா ஆவார். கம்யூனிஸ்ட் தலைவராகத் திகழ்ந்தது மட்டுமல்ல; அரசியல் வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்ட தலைவராகவும் அவர் விளங்கினார். எத்தனை காலம் ஒருவர் வாழ்ந்தார் என்பதிலோ, எவ்வளவு பெரிய பதவிகளை அவர் வகித்தார் என்பதிலோ, எவ்வளவு பணத்தைச் சேர்த்தார் என்பதிலோ ஒருமனி தன் அளவிடப்படுவதில்லை. சமூக மாற்றத் திற்காக ஒரு மனிதர் எந்த அளவுக்கு உழைத் திருக்கிறார் என்பதும், எதிர்காலச் சந்ததி யினருக்கான முன்மாதிரியாக அவரது உழைப்பு அமைந்திருந்ததா என்பதுமே ஒரு மனிதரைப் பற்றிய மதிப்பீட்டிற்கான அளவு கோலாகும். அந்த வகையில், தோழர் சுந்த ரய்யா அவர்கள் மக்களுக்காகவும், சமூகத்திற் காகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித் திருந்தார். அவரது வாழ்க்கையின் பல நிகழ்வு கள் இன்றும் பின்பற்றக் கூடியவையே.

தோழர் சுந்தரய்யாவின் கிராமத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ நடவடிக்ககைகளை எதிர்த்து, 1930ல் மேற்கொண்ட கிளர்ச்சியிலிருந்தே, அவரது போராட்ட வாழ்க்கை தொடங் கியது. அன்றைய நிலப்பிரபுத்துவ வழக்கங் களையும் நடைமுறைகளையும் அவர் கடுமையாக வெறுத்தார். சம உரிமைக்கான போராட்டத்தில் அவர் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருடன் நின்றார். அவரது குடும்ப சாதிப் பெயரான ‘ரெட்டி’ என்ற சொல்லைத் தனது பெயரிலிருந்து நீக்கிக் கொண்டார். அனைத்துச் சாதியினரும் பங் கேற்கும் வகையில் சமபந்தி உணவு உண் ணும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். கிரா மத்தில் இருந்த பொதுக் கிணறுகளில் தலித் துகள் தண்ணீர் இறைத்துக் கொள்ளும் உரி மைக்காக அவர் போராடினார். தலித்துகளுக் காகப் பலசரக்குக் கடையையும் நடத்தினார். சாதிமறுப்புத் திருமணங்களை அவர் உற்சாகப்படுத்தி வந்தார்.அன்றைய தலைமுறையினர் நடத்திய போராட்டங்களுக்குப் பின்னரும்கூட, நிலப் பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்கள், இன் றைக்கும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி யுள்ளன. நமது விடுதலைப் போராட்டத்தின் பலவீனங்களும், சுதந்திரத்திற்குப் பிறகு, ஆளும் வர்க்கம் அவர்களுடன் சமரசம் செய்து கொண்டதுமே இதற்குக் காரணமாகும். தனது பிரித்தாளும் கொள்கைக்காக, எப்படி சாதி, மதத்தை பிரிட்டிஷ் அரசு பயன்படுத்தியதோ, அதேபோல இன்றைய நவீன தாரா ளமய ஆட்சியாளர்களும், தனது சுரண்டலை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும், ஆதிக் கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், சாதி, மதம், குழுக்கள், வட்டாரம் போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி வருகின் றனர்.தற்போது நிலவி வரும், நிலப்பிரபுத்துவத் தின் மிச்ச சொச்சங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடாமல், மக்களைப் பிளவுப் படுத்தும் அடையாள அரசியல் போக்கை தடுக்க முடியாது. இத்தகைய நிலப்பிரபுத் துவத்தின் மிச்ச சொச்சங்களோடு கம்யூனிச இயக்கம் சமரசம் மேற்கொள்ளுமேயானால், மக்கள் இயக்கம் முன்னேறிச் செல்ல முடியாது என்பது மட்டுமின்றி, பலத்த பின்னடைவை யும் சந்திக்க நேரிடும். சாதிக்கொடுமைகள், வகுப்புவாதம், ஆணாதிக்கம் போன்ற நிலப் பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களை எதிர்த் துப் போராடாதவர் எவரும் ஒரு கம்யூ னிஸ்ட்டாக இருக்க முடியாது. அந்த வகையில் தான் தோழர் சுந்தரய்யா நிலப்பிர புத்துவ நடைமுறைகளை வெறுத்தார்; போராடினார்.

தோழர் சுந்தரய்யா, மக்களின் நலன்களுக்கான ஓய்வறியாப் போராளி. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கியமான போராட்டங்களின் முன்னணித் தளபதியாக அவர் விளங்கினார். சுதந்திரப் போராட்டத்தின்போது மேற்கொண்ட தலையாய போராட்டமான ‘தெலுங்கானா விவ சாயிகளின் ஆயுதப் போராட்டத்தை’ அவரது போராட்டங்களில் முதலாவதாகக் குறிப்பிட லாம். அந்தப் போராட்டத்தில், 10000 கிராமத் துணை ராணுவப் படையுடன், 2000 கொரில் லாப் படையினர், தொடக்கத்தில் நிஜாம் மன்னரின் படை வீரர்களான ரஸாக்கர்களை யும், பின்னர் 50000 பேர் கொண்ட மத்திய அரசின் ராணுவத்தையும், எதிர்த்துப் போராடி வந்தனர். 1946 முதல் 1952 வரை நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட தோழர்கள் உயிர்த் தியாகம் புரிந்தனர். 10000 செயல்வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்ட னர். போலீஸ் முகாமில் 50000 மக்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.அளவிடற்கரிய இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. இந்தப் போராட்டத்தின் விளைவாக, நிலப்பிரபுத்துவ நிஜாம் மன்ன ரின் பதவி பறிக்கப்பட்டது. ஹைதராபாத் மாநிலம் இந்திய யூனியனுடன் இணைக்கப் பட்டது. 10 லட்சத்துக்கும் மேலான ஏக்கர் நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. கட்டாய உழைப்பும், நிலத்தை விட்டு கட்டாய மாக வெளியேற்றும் முறையும் ஒழிக்கப்பட் டது. மொழிவாரி மாநிலங்கள் அமைவதற் கான உந்து சக்தியாக இந்தப்போராட்டங்கள் விளங்கின.

கம்மம் மற்றும் நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் நமது கட்சியின் விரிவான தளம் தொடர்வதற்கு இத்தகைய எழுச்சிமிகு போராட்டங்கள் வழிவகுத்தன. 1952ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ‘முற்போக்கு ஜனநாயக முன் னணி’ என்ற பதாகையின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் ஹைதராபாத் மாநிலத்தில், தெலுங்கானாப் பகுதியில் 100க்கு 45 இடங்களில் அதிசயக்கத்தக்க வெற்றியைப் பெற்றது. இத்தகைய வெற்றிக்கு, மேற்கூறிய போராட்டங்களே காரண மாகும்.இத்தகைய சிறப்புமிக்க மக்கள் போராட்டத்தின் அனுபவங்களையும், படிப்பினை களையும், 1972ல் எழுதிய “தெலுங்கானா மக்கள் போராட்டமும், படிப்பினைகளும்” என்ற நூலில் தோழர் சுந்தரய்யா தொகுத்து அளித்துள்ளார்.அவரது 2 வது போராட்டம் என்பது, தோழர் சுந்தரய்யாவின் வழிகாட்டுதலின் பேரில் ஆந்திராவின் கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற எழுச்சிமிகு ‘விவசாயிகள் பாதுகாப்புப் பயணம்’ ஆகும். கட்சியின் செய லாளர் என்ற வகையில், இந்தப் போராட்டத் திலும் தோழர் சுந்தரய்யா முக்கியப் பங்காற்றி னார். ‘மறு குடியமர்வுக் கொள்கையால்’ (சுநளவவடநஅநவே ஞடிடiஉல) இழைக்கப்பட்ட அநீதி யை எதிர்த்து, ‘இச்சப்புரம்’ என்ற ஊரில் இருந்து சென்னைக்கு, நூற்றுக்கணக்கான தோழர்கள், 2433 கிலோமீட்டர் தூரம், 525 கிரா மங்களைக் கடந்து 10 மாதகாலம் நடை பயணம் மேற்கொண்டனர். அந்தத் தோழர்கள் 500 இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத் தினர். நான்கரை லட்சம் மக்களைச் சந்தித் தனர். சென்னை சட்டமன்றம் வரை சென்று விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த முறையீட்டையும் அளித்தனர்.

நாடாளுமன்றவாதி

தோழர் சுந்தரய்யா அவர்களைப் பற்றிப் பேசும்போது அவரை ஒரு போராட்டத் தலை வராகவே நினைவு கூருகிறோம். ஆனால், அவர்ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியும் கூட. நாடாளுமன்ற மேலவைக்கு அவர் 1952ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955 வரை மூன்றாண்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவராக வும் பணியாற்றினார். 1955ல் ஆந்திர மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்குப் பிறகு, 1967 வரை 12 ஆண்டுகள், அவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். 1978 முதல் 1983 வரை மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் பணியாற்றினார்.அந்தக் காலத்திலேயே தோழர் சுந்தரய்யா, நாடாளுமன்றத்தில் தனித்தன்மையோடு விளங்கினார்.

கோப்புகளைப் சைக்கிளிலேயே பின்னால் கட்டி அவர் நாடாளுமன் றத்திற்குச் சென்று வந்தார் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, சட்டமன்றத் திற்கு மட்டுமல்ல; முதலமைச்சரைச் சந்திக் கச் செல்லும் சூழ்நிலையிலும் கூட, அனை வரும் வியக்கும் வண்ணம் சைக்கிளிலேயே சென்றவர். தனது 20 ஆண்டுக்கால நாடாளுமன்ற, சட்டமன்ற அனுபவங்களில் இருந்து, இந்தியப் புரட்சி இயக்கத்தில், நாடாளுமன்ற நடவ டிக்கைகளின் பங்கையும், அவற்றிற்குள்ள எல்லைகளையும் அவர் தெளிவாகப் புரிந்து கொண்டார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் விளங்கினார். மக்களின் பிரதிநிதி எவ்வளவு எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்பதை நடைமுறையில் அவர் வெளிப்படுத்தினார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற வாதி, தனது கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு முன்னால், பிரச்சனை பற்றி முழுமை யாக அறிந்து கொள்வதும், கூர்மையான, அதே நேரத்தில் பொறுப்பான விமர்சனத்தோடும், பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான, தகுந்த மாற்று ஆலோசனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பதிலும், வெளியில் நடைபெ றும் மக்கள் போராட்டங்களை மன்றங்களில் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு முன்னு தாரணமாகவும் அவர் செயல்பட்டார்.

சமூகநலப் பணியாளர்


புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மக்கள் போராட்டங்களைப் போலவே, சமூகநலப்பணி நடவடிக்கை களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் தோழர் சுந்தரய்யா மிகுந்த நம்பிக்கை கொண் டிருந்தார். வசதியற்ற கம்யூனிஸ்ட்டுகளின் உடல்நலப் பராமரிப்பு ஏற்பாடுகளுக்கான அவசியம் குறித்து தோழர் சுந்தரய்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறு வயதில் தோழர் சுந்தரய்யா, முதல் உதவி சிகிச்சை பற்றிச் சுயமாகப் பயிற்சி மேற்கொண்டு, அவரது கிராமத்தில் அடிப்படை உடல்நலப் பராமரிப்புச் சேவைகளைச் செய்து வந்திருந் தார். ‘மக்கள் மருத்துவமனை’ ஒன்றை தனது சகோதரர் டாக்டர் ராமச்சந்திரரெட்டி 1953 ல் நிறுவுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததுடன், அவரின் இறுதிக்காலம் வரை வழிகாட்டியும் வந்தார். இன்றும் அந்த மருத்துவமனை, கட்சியின் அறக்கட்டளையின் மூலம், ‘முன் மாதிரி மக்கள் மருத்துவமனையாக’ இயங்கி வருகிறது. 250 படுக்கைகள், 40 மருத்துவர்கள், 250 ஊழியர்களுடன் இந்த மருத்துவமனை ஏழை, நடுத்தர வர்க்கத்தின ருக்குச் சேவை செய்து வருகிறது. இரண்ட ரை லட்சத்துக்கும் மேலானோர் ஒரு ஆண் டில் வெளி நோயாளிகளாக மருத்துவ வசதி பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை யில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனைகளைத் தொடங்கி, இலவசமாகவும், குறைந்த செல விலும் மக்களுக்கு மருத்துவச் சேவை அளித்து வருகின்றனர். அத்துடன், மக்கள் இயக்கங்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றனர். 1971ம் ஆண்டில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தபோது, விலை உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டியும், அரசின் தோல்வியை அம்பலப்படுத்துவதற்காகவும், மக்களுக்கு நிவாரணம் கேட்டும் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தியதோடு, ‘ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு’ விற்பனை செய்யும் இயக்கத்தையும் மேற்கொண்டது. செய்தது.

39 கிராமங்களில் இவ்வாறான ‘குறைந்த விலை ரேசன் கடைகளை’ மூன்று மாதங்கள் வரை கட்சித் தோழர்கள் நடத்தி னார்கள். தொடர்ந்து, நாடு முழுக்க இந்த இயக்கத்தை விரிவுபடுத்தினார்கள். விவசா யிகளிடமிருந்து வாங்கிய நெல்லை, ஆலை களில் அரைத்து அரிசியாக்கி, அதனை ஏழைகளுக்கு விற்பனை செய்தனர். இதற் கான அனைத்துச் செலவுகளுக்குப் பிறகும் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு விற் பனை செய்ய முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர். இந்த நடவடிக்கையானது, கள்ளச் சந்தைக்காரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடுமையான நிர்ப்பந் தத்தை அரசுக்கு ஏற்படுத்தியது.மேலும் இயற்கைச் சீற்றங்களின் போது, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தோழர் சுந்தரய்யா எப்போதுமே முன்னணிப் பங்கு வகித்து வந்தார். 1977ல் வீசிய கடுமை யான புயலின் போது, கிருஷ்ணா மாவட்டத் தில் உள்ள ‘திவிசீமா’ என்ற பகுதியில் சுமார் 10000 பேர் மாண்டனர். சுமார் 100 கிராமங்கள் அழிந்து போயின. எங்கு பார்த்தாலும் மாண்டு போன மனிதர்களின், கால்நடைகளின் உடல்கள், நமது தோழர்கள் 30 நாட்களாக இரவு-பகல் பாராமல், மாண்டுபோன உடல் களை அகற்றுவதிலும் தப்பிப்பிழைத்தவர்க ளுக்கு மருத்துவ உதவியைச் செய்வதிலும் கண்ணும் கருத்துமாகக் கடுமையாகப் பணி யாற்றினார்கள். இந்த நடவடிக்கை களுக்கா கத் தோழர்களைத் திரட்டுவதிலும், நிவார ணப் பொருட்களைப் பெறுவதிலும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வதி லும் நமது கட்சி முக்கியமான பங்கு வகித்தது. தோழர் சுந்தரய்யா நேரடியாகக் களத்தில் நின்று நிவாரண நடவடிக்கைகளை வழிநடத் தினார்.இந்த நடவடிக்கைகளை, வெறும் சேவை நடவடிக்கைகளாக மட்டும் தோழர் சுந்தரய்யா எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பி டத்தக்க ஒன்றாகும். ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக, மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கான வழியாகவும் தோழர் சுந்தரய்யா இதனை உணர்ந்திருந்தார்.

தனிமைப்படுத்தப்படும்போதும் சாதகமற்ற சூழ்நிலையிலும்

நமது கட்சி அரசியல் ரீதியாகத் தனிமைப் படுத்தப்படும்போது, மக்களுடன் எவ்வாறு தொடர்ந்த, உயிரோட்டமான தொடர்புகளைத் தக்க வைத்துக் கொள்வது என்பதை தோழர் சுந்தரய்யாவிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொள்ள முடியும். 1942 ‘வெள்ளையனே வெளி யேறு’ போராட்டத்தின்போது, நமது கட்சி ஆந்திராவில் தனிமைப்படுத்தப்பட்டபோது, கம்யூனிஸ்டுகள் காட்டிக்கொடுப்பவர்கள் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், அந்த நாட்களில் பொதுக் கூட்டங்களை நடத்துவதுகூட நமக்குக் கடினமாக இருந்தது. மக்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்த ஆளும் வர்க்கம் மேற்கொண்ட முயற்சிகளை திட்டமிட்ட நட வடிக்கைகளின் மூலம் நமது கட்சி முறியடித் தது. கட்சியின் இப்படிப்பட்ட நடவடிக்கைக ளில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், 6 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலத்திற்குப் பயன ளித்து வந்த ‘பண்டாரு நீர்ப்பாசனக் கால்வா யைத்’ தூர்வாரிய பணியாகும். தலைவர்களும், முன்னணித் தோழர்களுமாக சுமார் 4000 பேர், 20 நாட்களாகப் போர்க்கால அடிப்படை யில் பணியாற்றி அந்தப் பணியை வெற்றிகர மாக முடித்தார்கள். இந்தப்பணியில், தோழர் சுந்தரய்யா, தலையில் மண்சுமந்தும் பணியாற் றினார். கால்வாய்ப் பகுதிகளில் தோழர் சுந்த ரய்யா தனது சைக்கிளின் மீது சாய்ந்து கொண்டு பணிகளை மேற்பார்வையிடும் புகைப்படம் இன்றும் காண்போரை பிரமிக்க வைக்கிறது. 1944ல் நடைபெற்ற இந்தப் பணியானது, ‘இதுபோன்ற வேலைகளை கம்யூனிஸ்டுகளால் மட்டுமே செய்து முடிக்க முடியும்’ என்ற பொதுமக்களின் பாராட்டுத லைப் பெற்றது.

ஈடு இணையற்ற அமைப்பாளர்


தோழர் சுந்தரய்யா அவர்கள் மிகச்சிறந்த ‘ஸ்தாபன அமைப்பாளர்’ என்பது அனைவ ரும் அறிந்ததே. தனது சிறு வயதிலேயே ‘ஸ்தாபன அமைப்புகளை’ உருவாக்கிய அவரது திறமை இதற்குச் சான்றாகும். அவரது 20வது இளவயதிலேயே, ஆந்திரா முழுவதும் பயணம் செய்து பல கம்யூனிஸ்ட் கிளைகளை யும், குழுக்களையும் உருவாக்கினார்.

தோழர் பி.சுந்தரய்யா 1935ல் அவரது 22வது வயதில் கேரளா முழுமையும் பயணம் மேற் கொண்டு, அங்கி ருந்த விடுதலை இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுடன் விவாதங்களை மேற் கொண்டு, அங்கு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குத் தளம் அமைத்தவர். இவற்றால்தான் தென்னிந்தியா வில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி யவர் என்ற நற்புகழை அவர் பெற்றார். இவ்வாறான அவரது பணிகளால்தான் 1934லேயே மத்தியக் குழுவிற்கு தோழர் சுந்தரய்யா கொண்டு செல்லப் பட்டார். தனது இறுதிக்காலம் வரை அவர் மத்தியக் குழு உறுப்பினராகவும், 1942 முதல் அரசியல் தலைமைக்குழுவிலும் பொறுப்பு வகித்தார்.தனது கிராமத்தில் 1932ல் முதலாவது விவ சாயத் தொழிலாளர் சங்கம் அமைவதற்கு, தோழர் சுந்தரய்யா முன்னோடியாகச் செயல்பட்டார். 1936ல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உரு வாவதற்கும் அவர் பெரும் பங்காற்றினார். இந்தச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், உதவிச் செயலாளராகவும் பணியாற்றினார்.அத்துடன் 1955ல் புதுதில்லியில், கட்சியின் அகில இந்திய மையம் உருவாவதற்கும் தோழர் சுந்தரய்யா முக்கியப் பங்காற்றினார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாவதற்கும் முன்னணிப் பங்கு வகித்தார். 1964க்குப்பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், பல்வேறு தடைகளுக்கு இடையில் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்குத் தனது ஸ்தாபன அமைப்புத் திறமையைப் பயன்படுத்தினார்.

ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை உயர்த்த

1976ம் ஆண்டிற்குப்பிறகு, ஆந்திரப்பிரதேசத் தைத் தனது பணியிடமாகத் தேர்ந்தெடுத்து வந்த போது, அவரை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில், தோழர் சுந்தரய்யாவின் முயற்சியால், கட்சி புத்துயிர் பெற்று முன்னேறத் தொடங்கியது. 1964ல் கட்சி பிளவுபட்டது. 1967ல் நக்சலைட்டுகளின் இடை யூறுகள், 1969 மற்றும் 1973களில் தனித்தெலுங் கானா மற்றும் ஆந்திரா பிளவுவாத இயக்கங்கள் ஆகியவற்றால், கட்சி மாநிலத்தில் மிகவும் பல வீனம் அடைந்திருந்தது. இவ்வாறான இடையூறு களால், பயிற்சி பெற்ற உணர்வுமிக்க ஊழியர்கள் பற்றாக்குறை கட்சிக்கு ஏற்பட்டிருந்தது. இந்தப் பல வீனத்திலிருந்து மீள்வதற்காக, 1977ல் அவசர நிலைக் காலம் முடிவுக்கு வந்தவுடனேயே, அவ சரநிலைக் காலத்தில் அச்சமின்றி செயல்பட்ட 2800 முன்னணித் தோழர்களுக்கு ஐந்து இடங் களில் அரசியல் வகுப்புகளை நடத்தினார். இந்த வகையில் கட்சியின் வளர்ச்சிக்கு உற்சாகமூட் டினார்.விவசாய அரங்கத் தோழர்களுக்கென்று தனி யாக இரண்டு இடங்களில் 10 நாட்கள் அரசியல் வகுப்புகள் நடைபெற்றன. 1980ல் கிராமங்கள் மட்டத்திலும், தொழிற்சாலைகள் மட்டத்திலும் பணியாற்றிவந்த கிளைச் செயலாளர்களின் வேலைத்தரத்தை உயர்த்துவதற்காக, விஜயவாடா வில் 7 நாள் அரசியல் வகுப்புகள் மூன்று முறை நடத்தப்பட்டன.அந்தக்காலகட்டத்தில், தொழிற்சங்க அரங்கத் தில் இருந்த பலவீனங்கள், கட்சிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன.

இதனை உணர்ந்த தோழர் சுந்தரய்யா, இந்த நிலைமையின் பால் ஆழமான ஆய்வினை மேற்கொண்டு அதனை மாற்றியமைப்பதற்கான ஒரு திட்டத்தை யும் வகுத்தளித்தார்.1981ல் நடைபெற்ற தொழிற்சங்க மாநில மாநாட் டில் இந்தத்திட்டம் விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இந்தத்திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய தொழிற்சங்கத் தோழர்களுக்கு 10 நாள் வகுப்பு நடத்தப்பட்டது. மாணவர் அரங்க முன்னணித் தோழர்களுக்கும் இதேபோன்று 10 நாள் வகுப்பு நடத்தப்பட்டது. இந்த ஏற்பாடு என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே பின்னர் மாறியது. தோழர் சுந்தரய்யாவின் இத்தகைய வழிகாட்டுதல், ஆந்திர மாநிலத்தில் இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தன்னெழுச்சிக்குப் பணிவதற்கு எதிர்ப்பு

கம்யூனிஸ்ட் தனி நபர்களோ, அல்லது கட்சிக் குழுக்கள் என்ற வகையில் கூட்டாகவோ, தன்னெ ழுச்சிக்குப் பணிந்து செல்லும் போக்கை தோழர் சுந்தரய்யா எதிர்த்தார். குறிப்பான நிலைக்கு ஏற்ற திட்டத்தை உருவாக்குவதும், அதன்படி செயல் படுவதுமே, அதாவது வேலை முறை ஆகும். அதிலும் குறிப்பாக, குழுக்களின் செயல்பாட்டுக்கு இந்த வேலைமுறையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துவது வழக்கம். தனிநபர்கள் எவ் வளவு திறமையாளர்களாக இருந்த போதும் அவர் களால் இயக்கம் முன்னேறும் என்பதை தோழர் சுந்தரய்யா ஒருபோதும் நம்பியதில்லை. கட்சி முழுவதுமே தலைசிறந்த அமைப்பாளராகச் செயல்பட வேண்டும் என்பதே அவருடைய கருத்து. கட்சிக்குழுக்களே, நல்ல விளைவுகளை உருவாக்கும் அமைப்பாளராகச் செயல்பட்டால், அப்போது தனி நபர்களின் பலவீனங்கள் வெற்றி கொள்ளப்படும். இயக்கம் முன்செல்ல முடியும்.

‘அரசியல் கல்வி’ போதனையின் முக்கியத்துவம்

அரசியலில் இருந்து மக்களை குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களை விலக்கி வைத்தும், அடையாளம் குறித்த கருத்துக்கள், சந்தை அடிப்படைவாதம் போன்றவற்றைச் சமூகத்தின் பெரும்பகுதி மக்கள் மனங்களில் திணித்துவரும் இன்றைய சூழலில், ஊழியர்களையும், தலைவர்க ளையும் தகுதிப்படுத்துவதற்கு, தோழர் சுந்தரய்யா வின் காலத்தைவிட இன்று அதிகம் முக்கியத் துவம் அளிக்க வேண்டும்.

கட்சித் தோழர்களின் மீதான அக்கறை

புரட்சி இயக்கத்துக்கு ஊழியர்களைத் தரு கின்ற மாணவர் அமைப்புகளுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். மாணவர் அமைப்புக ளின் வளர்ச்சியில் அவர் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்தார். இந்தப்பகுதியில் இருந்து கட்சிக்கு வரும் தோழர்களின் மீது தோழர் சுந்தரய்யா கவனம் செலுத்திய அளவுக்கு தற்போதும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நவீன தாராளமயத்தின் கசப்பான துவக்கமும், சில நாடுகளின் சோசலிசம் சிதைந்து போனதாலும், மாணவர் இயக்கங்களில் இருந்து கட்சிக்கு வருகின்ற புதிய தோழர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போனது. தற்போதைய இந்த நிலைமையை மாற்றியமைப்ப தற்கு தோழர் சுந்தரய்யாவின் வழித்தடத்தை நாம் பின்பற்றியாக வேண்டும். மாணவர்களை ஈர்ப்பதி லும் பயிற்சி அளிப்பதிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும்.மக்களின் புதிய பகுதிகளில் நமது நடவடிக் கைகளைப் பரவலாக்குவதன் மூலம், நாடு முழு வதும் கட்சியை விரிவுபடுத்தவும் வலிமைப்படுத் தவும் இன்று நாம் முயற்சித்து வருகிறோம். ‘பொருத்தமான ஊழியர் கொள்கை’ நம்மிடம் இருந்தால்தான் இது சாத்தியமாகும். இந்தப்பிரச் சனையில் தோழர் சுந்தரய்யாவிடமிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.தங்களது பொறுப்புகளைப் பயன்படுத்தும் போது ஏற்படும் தவறான போக்குகளையும், குறை பாடுகளையும் திருத்துவதற்கு தோழர் சுந்தரய்யா பொறுமையாக முயற்சிப்பார். அதேவேளையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்களிடமும், கட்சியின் முடிவுகளுக்கு எதிராகச் செயல்படுப வர்கள் மீதும் மிகக்கடுமையாக நடந்துகொள்வார்.

மேலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள், கட்சிக்கும் மேல் தங்களைக் கருதிச் செயல்படுப வர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும் அவர்களைக் கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆலோசனை அளிப்பதற் குக் கூட அவர் தயங்கியதில்லை. கட்சியின் முடி வுகளில் தனக்குக் கடுமையான வேறுபாடுகள் இருந்தாலும், அந்த முடிவுகளை நடைமுறைப் படுத்துவதில் அவர் தயக்கம் காட்டியது இல்லை.அகில இந்தியப் பொதுச் செயலாளராகத் தோழர் சுந்தரய்யா பணியாற்றியிருந்தபோதும், 1978 முதல், மாநில இயக்கங்களில் நம்மில் ஒருவராக அவர் செயல்பட்ட பாங்கு வியக்கத்தக்கதாகும். அவர் கடைப்பிடித்த அதிகபட்சக் கட்டுப்பாடும், கட்சிச் செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்கதாகும். கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இடதுசாரித் தீவிரவாத அமைப்பு ஒன்று, ஜலந்தர் மாநாட்டுத் தயாரிப்பின்போது ‘சில கொள்கை பிரச்சனைகளில் கட்சியுடன் அவர் கொண்டி ருந்த கருத்து வேறுபாடுகள் பற்றிய ஆவணங்கள்’ அடங்கிய ஒரு புத்தகத்தை வெளியிட்டது. ஆனால் தோழர் சுந்தரய்யா, கட்சி எடுத்த முடிவு களில் உறுதியாக நின்று அந்த அமைப்பின் முயற் சியை முறியடித்தார்.

திட்டவட்டமான ஆய்வும் தீர்வுகளும்

ஆந்திரப்பிரதேசத்தில் தண்ணீர்விநியோகப் பிரச்சனை ஏற்பட்டபோது மக்களை மோதவிடும் போக்கை ஆளும் கட்சிகள் கடைப்பிடித்தன. இத னை முறியடிப்பதற்காக, ‘நீர்வளத்திட்டம்’ என்ற ஒரு வழிகாட்டுதல் புத்தகத்தை 1981ல் தோழர் சுந்தரய்யா எழுதினார். அந்தப்புத்தகத்தில் ஆந் திரப்பிரதேசம் முழுவதற்கும் முறையாகவும், சம மாகவும் தண்ணீர் கிடைப்பதற்கான திட்டவட்ட மான ஆலோசனைகளை அவர் சுட்டிக்காட்டி யிருந்தார்.‘ஒன்றுபட்ட மாநிலத்தில் தெலுங்கு மக்கள் அனைத்து வகையிலுமான வளர்ச்சியைப் பெற முடியும்’ என்பதற்கான திட்டங்களை விளக்கும் வகையில் 1944ல் ‘விசால ஆந்திராவில் மக்கள் ஆட்சி’ என்ற ஒரு புத்தகத்தை அவர் எழுதினார். அந்த நாட்களில் ஒன்றுபட்ட மொழிவாரி மாநிலங் களுக்கான இயக்கத்துக்கு மிகவும் ஊக்கம் அளிப்பதாக அது அமைந்தது.

கொள்கை, நடைமுறைகளில் உறுதி - துணிச்சல்

தோழர் சுந்தரய்யாவை எவரும் அச்சுறுத்திவிட முடியாது. 1957ல் நடைபெற்ற கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் தோழர் சுந்தரய்யாவை மன தில் கொண்டு தோழர் எஸ்.ஏ.டாங்கே, ‘குருச்சேவ் திருத்தல்வாதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார் என்று சில தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்களுக்கு துணிவிருந்தால், இங்கே அவர்கள் அதனைக் கூறட்டும்’ என்று சவால் விடுத்தார். தோழர் சுந்தரய்யா உடனடியாக எழுந்து எந்தவிதத் தயக்கமோ, அச்சமோ இல்லா மல், “ஆமாம், குருச்சேவ் உண்மையில் திருத்தல் வாதப் போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார்” என்று உறுதிபடக் கூறினார். அவரது துணிவுக்கு எடுத் துக்காட்டாக மேலும் ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். 1935ல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில், அந்தக்காலத்தில் மிகப்பெரிய தேசியத் தலைவ ரான திரு. பிரகாசம் என்பவர், சோவியத் யூனியனைப் பற்றிப்பொய்யான தகவல்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது, தோழர் சுந்தரய்யா அதனை எதிர்த்துக் குரல் எழுப்பினார். கோபம் கொண்ட திரு.பிரகாசம், ‘யார் குரல் கொடுத்தது?’ என்று கேட்டார். ‘நான்தான் சுந்தரய்யா’ என்று இவர் பதிலளித்தார். அதற்கு மேல் திரு.பிரகாசம் ஒன்றும் பேசவில்லை.தோழர் சுந்தரய்யா, தனது இறுதி மூச்சுவரை, ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு காசையும், அனைத்துச் சக்திகளையும், மக்களுக்காக மக்க ளின் இயக்கங்களுக்காக செலவழித்தார். எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். தன்னுடைய வாழ்க்கையையும் நேரத்தையும் இயக்கங்களுக் காகவே செலவழிப்பதால், குழந்தைகளின் வளர்ச் சிக்காக நேரம் ஒதுக்க முடியாது என்று உணர்ந் ததால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது என முடிவெடுத்து அவர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்.

நவீன தாராளமயக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதோடு, நுகர்வுக் கலாச்சார மும், தனிநபர் வாதமும் எங்கும் பரவி வருகின்ற இந்த வேளையில், தோழர் சுந்தரய்யா கடைப் பிடித்த கொள்கைகளும், அவரது வாழ்க்கை முறையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.பகட்டு, ஊதாரித்தனம் என்பவை பெருமைக் கும், செல்வாக்குக்குமான அடையாளமாக மாறிப் போனது. லஞ்சம், ஏமாற்றுதல், சூழ்ச்சி, கவர்ச்சிப் பேச்சு போன்ற நடவடிக்கைகள், புத்திசாலித்தனத் திற்கும், திறமைக்கும் அடையாளமாக மாறிவிட் டது. அடக்குமுறையும், சுரண்டலும், பொதுச் சொத் துக்களைக் கொள்ளையடிப்பதும், சொத்துக்க ளைக் குவிப்பதற்காக ஒத்துக்கொள்ளப்பட்ட நியதி களாக ஆகிப்போனது. மறுபுறத்தில், ஒருவருக் கொருவருடனான ஒத்துழைப்பு, ஒற்றுமை, அன்பு, சகிப்புத் தன்மை, பிறர் மீதான அக்கறை போன் றவை தகுதியற்ற தன்மைகளாகியும் போய்விட்டது. இன்று, மனிதனும், இயற்கையும் கூட, லாபம் சம்பாதிப்பதற்கான கருவிகளாகிப் போனது.இவைபோன்ற போக்குகள், இன்று மனித குலத்தையும் இயற்கையையும் பேரழிவின் விளிம் பிற்குக் கொண்டு செல்வதை மேலும் தெளிவாக்கு கிறது. நம்பிக்கையின்மை, இயலாமை உணர்வு களை மக்களிடம் அவர்கள் எவ்வாறு பரப்பி வருகிறார்கள் என்பதே இதற்குச் சான்றாகும். இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளுக்கான அடிப்படைக் காரணங்களை அறியாத மக்கள், பழமைவாத, குழுவாத, பிளவுசக்திகளின் செல் வாக்குக்குப் பலியாகி வருகின்றனர்.மக்களின் மீதான இவை போன்ற திருத்தல் வாதக் கொள்கைகளின் ஆதிக்கத்தைப் பலவீனப் படுத்தாமல், கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலிமைப் படுத்த முடியாது. ‘நவீன தாராளமயக் கொள்கை கள், நிலவிவரும் சூழ்நிலைகளின் பெயரால் அமையும் வாழ்க்கைமுறை, சோஷலிசத் திட்டங் களின் பின்னடைவைக் காரணம் காட்டுதல், சமீபகாலத்தில் சோஷலிசத்தை எட்ட முடியாது’ என்றெல்லாம் சமரசம் செய்து கொள்வதாலோ, இவற்றையெல்லாம் அனுசரித்துச் செல்வதாலோ எவரையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்க முடியாது. நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவக் கொள் கைகளுக்கு எதிராகவும், சோஷலிசக் கொள் கைகளுக்கான சமரசமற்ற போராட்டத்துக்கான பாதையை, தோழர் சுந்தரய்யாவின் வாழ்க்கை திறந்து வைத்திருக்கிறது.ஒரு சோஷலிஸ்ட் மனிதர் எப்படி இருப்பார் என்று ஒருவர் கற்பனை செய்தால், அவர் ஆணோ, பெண்ணோ, தோழர் சுந்தரய்யாவைப் போலத்தான் இருப்பார் என்று நாம் எளிதாகச் சொல்லிவிட முடியும். முதலாளித்துவத்தின் கருப்பையிலி ருந்து கூட, சோஷலிஸ்ட்டாக மலர முடியும் என்பதற்கு தோழர் சுந்தரய்யாவின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும். இப்படி ஒருசிலரின் வாழ்க் கை மட்டுமே அமைந்திருப்பது போதுமானதல்ல. முதலாளித்துவத்தின் கருப்பையில் இருந்து கொண்டே, “விதையிலிருந்து வளரும் இளஞ் செடி” போல கம்யூனிஸ்ட் கட்சி சோஷலிச விழு மியங்களின் (ஏயடரநள) உறைவிடமாக வளரவேண் டும். அப்போதுதான், இளைஞர்கள் முன்பும், மக் கள் முன்பும் ஒரு புதிய சமுதாயப் பார்வை அளிப் பதற்கு முடியும். அப்போதுதான் எதிர்காலத் தலை முறைக்கு ஊக்கமூட்டி எழுச்சியூட்ட முடியும்.அந்த வழியில், வீறுநடை போடுவதே, தோழர் சுந்தரய்யாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

“பீப்பிள்ஸ் டெமாக்ரசி”தமிழில்: இரா. சோமசுந்தரம் போசு. திண்டுக்கல்
http://pd.cpim.org/

No comments:

Post a Comment