புறச்சூழலுக்குள்
புரட்சி கருக்கொண்டுள்ளது!
“ஒரு
திசைவழியுடன் கூடிய செயல்பாட்டைத் தருவது இயக்கவியல் பொருள்முதல்வாதம். உண்மைநிலை
அறிவதற்கான ஒரே அணுகுமுறையாக அது விளங்குகிறது”---ஜார்ஜ்
லுகாக்ஸ்,”வரலாறும்,வர்க்க உணர்வும்”நூலிலிருந்து.
ஹங்கேரியில்
1956-ல் நடந்த கலகத்தை ரஷியத் துருப்புக்கள் முறியடித்தன.அமைச்சராக இருந்த ஜார்ஜ்
லூகாக்ஸ் பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.ஒரு அதிகாரி அவரிடம் “ஆயுதம் ஏதாவது இருக்கிறதா?”என்று கேட்டார்.லூகாக்ஸ் அமைதியாக தனது
சட்டைப்பையில் இருந்த பேனாவை எடுத்து அதிகாரியிடம் கொடுக்கிறார்.
பேனாவைப்
புரட்சிக்கு ஆயுதமாகப் பயன்படுத்தியது லெனின் தலைமுறை.அந்த வழித்தடத்தில் வந்தவர்
ஜார்ஜ் லூகாக்ஸ் (1885 – 1971).ஹங்கேரிய
கம்யுனிஸ்ட் கட்சி தலைவராக மார்க்சிய லெனினியத்தை அந்த நாட்டுச் சூழலில் பொருத்தி
உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்காகப் போராடியவர்.மார்க்சியத்திற்கு சிறந்த
தத்துவார்த்தப் பங்களிப்பு செய்தவர்.
ஜார்ஜ்
லூகாக்ஸ் பெருமளவில் பண்பாட்டுத் தத்துவ விமர்சகராகவே அறியப்படுகிறார்.தீவிர
அரசியல் களப் பணி செய்து கொண்டிருந்த வாழ்க்கையிலிருந்து விலகி,அழகியல் துறையில் கவனம் செலுத்தி பல நூல்களை எழுதினார்.
பொருளாதாரக்
காரணிகளே சமுக இயக்கத்தில் நிர்ணயிக்கும் பாத்திரம் வகிக்கின்றன என்றும்,மேற்கட்டுமானம் என்று கருதப்படுகிற அரசியல் சட்டம் கலை அனைத்தும் குறைவான
அல்லது இரண்டாம் நிலைப் பாத்திரமே வகிக்கின்றன என்றும் இயந்திரத்தனமாக அணுகும்
போக்கு பல மார்க்சியர்களிடையே இருந்தது.இதனை பொருளாதாரவாதம் என்றும்,நிர்ணயவாதம் என்றும் அழைக்கின்றனர். லூகாக்ஸ் இந்தப் போக்குகளை
விமர்சித்து மார்க்சியத்தின் உண்மையான சாராம்சத்தை நிலை நிறுத்தினார்.அவரது “வரலாறும், வர்க்க உணர்வும்” என்ற
நூல் இந்த விவாதத்தை நிகழ்த்துகிறது.
சமுக
நடைமுறை என்பது ஒரு சரியான அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
செயல்பாடு மட்டுமல்ல;அது வரலாற்று நிகழ்வுப் போக்கில்
வினையாற்றுகிறவருக்கும்,வினை நிகழ்த்தப்படுகிற பொருளியல்
உலகுக்குமான தொடர்பு.பொருளாதார,அரசியல்,சமுக நிறுவனங்கள் வினையாற்றுபவனின் உணர்வில் வினையாற்றும்.அதே போல
உணர்வும் இந்த நிறுவனங்கள் மீது வினையாற்றி மாற்றங்களை ஏற்படுத்தும் என்று
லூகாக்ஸ் வாதிடுகிறார். எதிர்கால மனித விடுதலையை மனிதர்கள்தான் உருவாக்கமுடியும்
என்பது அவரது அழுத்தமான கருத்து.
அவரது
கோணத்தில், உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக்
கைப்பற்றுவதற்கான புரட்சியை நிகழ்த்திட புறச் சூழல் “பக்குமடையும்”வரை
காத்திருக்க வேண்டியதில்லை.தொடர்ச்சியான அரசியல்-சித்தாந்தப் போராட்டங்களின் மூலம்
புறச்சூழலை “பக்குவப்படுத்த” முடியும்.அந் தப்
போராட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தின் அகநிலையை உயர்த்தி,புரட்சிகர செயல்பாட்டில் அவர்களை ஈடுபடுத்திடும்.
உழைக்கும்
வர்க்கங்களுக்கு புரட்சியை படைக்க வல்ல வர்க்க உணர்வு இயல்பாக வந்துவிடுவதில்லை.அதாவது, “புறவயமாக”நடந்திடும் சமுக இயக்கத்தில் தானாக, சுயம்புவாக
வர்க்க உணர்வு ஏற்பட்டுவிடுவதில்லை. வரலாற்று இயக்கத்தில் பிரிக்க முடியாதவாறு அது
உள்ளடங்கி இருக்கிறது. அரசியல் சித்தாந்தப்
போராட்டங்களின் ஊடாக அது பட்டை தீட்டப்பட்டு ஒளிர்விடுகிறது.
வேறு
வகையில் சொல்வதென்றால்,லூகாக்ஸ் அகநிலையையும் புற நிலையையும் தனித்தனியாக
பார்க்கவில்லை.சமுக யதார்த்தத்துடன் இணைந்ததாக,அரசியல் அக
உறுதிப்பாடு அமைந்துள்ளது.லூகாக்ஸின் இந்த விளக்கம் புரட்சி நிகழ்த்த விழையும்
மார்க்சிஸ்ட்டுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.புரட்சி ஆகாயத்திலிருந்து
குதிப்பதில்லை.அல்லது எங்கிருந்தாவது இறக்குமதி செய்யப்படுவதில்லை.புற
எதார்த்தத்தோடு புரட்சி இணைந்துள்ளது.அகவயத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும்
புரட்சியை புறவய எதார்த்தமே
கருக்கொண்டுள்ளது.
புறச்சூழல்,புரட்சிப் படைப்பாக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ள உயிரோட்டமான இயக்கவியல்
சார்ந்த தொடர்பு பற்றிய விளக்கம் பல மார்க்சியர்களை ஈர்த்தது.இன்றளவும் லுகாக்ஸின்
பங்களிப்பு பற்றிய ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருகின்றன.
இதே
அணுகுமுறையோடு,லெனின் எனும் மாமனிதனின் வாழ்க்கையை ஆராய்கிறார்
லுகாக்ஸ்.அவரது “லெனினது ஒருங்கிணைந்த சிந்தனை பற்றிய ஆய்வு” நூல் லெனினது
சிந்தனை,எண்ணவோட்டம் எப்படிப்பட்டது?என்ற
கேள்விக்கு விடை தேடுகிறது.
லெனினது
சிந்தனை,செயல்பாடு ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையோடு
எப்போதும் இருக்கும்.’புரட்சி மெய்ப்பட உள்ளது’ (actuality
of revolution) என்ற உணர்வு எக்கணமும் விலகாமல்
நிற்கும்.அந்த உணர்வோடு லெனினது சிந்தனை விழிப்பு அமைந்திருப்பதால் புறநிலை
யதார்த்தத்துடன் எளிதாக இணைந்து செயல் திட்டங்களையும் தேவையான தத்துவ
நிர்ணயிப்புக்களையும் உருவாக்கி புரட்சிகர முன்னேற்றம் சாத்தியமாக்கும் திறன் அவரிடம் இருந்தது.
இந்த
வகை எண்ணவோட்டம் அவசியமானது என லுகாக்ஸ் கருதினார். ”அன்றாட
நிகழ்ச்சிநிரலில் எதிர்படுகிற அரசியல், பொருளாதார, பிரச்னைகளாக இருந்தாலும் சரி, தத்துவம், நடைமுறை உத்தி, கிளர்ச்சி, ஸ்தாபனம்
குறித்த பிரச்னைகளாக இருந்தாலும் சரி, உறுதியான
வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கு” லெனினது ‘புரட்சி மெய்ப்பட
உள்ளது’ என்ற
உணர்வு தேவை என்கிறார் லூகாக்ஸ்.அதாவது, லெனின் தனது
அரசியல் சிந்தனையிலும், செயல்பாடுகளிலும் ஒரு முக்கிய
கேள்வியோடுதான் இருப்பார். ”என்ன செய்யப்பட வேண்டும்?”. அதில்
பெறும் விடைகள் அடிப்படையில் அந்த காரியங்களை செய்திட முனைவார்.
மனித
சிந்தனைக்கும், மனித உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்
லூகாக்சின் சிந்தனை இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இன்றைய முதலாளித்துவம், அதன் நவீன தாராளமயப்
பயணத்தில் உழைப்பு செலுத்துவோரின் உண்மை ஊதியத்தை தொடர்ந்து குறைத்துக் கொண்டே
வருகிறது. இதற்கு பல உத்திகளை பயன்படுத்துகிறது. முறைசாராத் தொழில்கள், பகுதி நேரப் பணியாளர்கள் என இந்த உத்திகளை அடுக்கிக் கொண்டே
போகலாம்.தொழிலாளர் ஊதியக்குறைப்பு மூலதனகுவியலுக்கு முக்கியமானது.
ஆனால்
முக்கியமான இந்தப் பிரச்னையை தொழிலாளர்கள் அறிந்துள்ளனரா எனபதுதான் இதில்
மார்க்சிய இயக்கம் எதிர்படும் கேள்வி.இதற்கு தொழிலாளர்களின் வர்க்க உணர்வு,அகநிலை உயர வேண்டும்.அகநிலை மாற்றம் இன்றைய எதார்த்தத்தை மாற்றிட
தேவையானது. ஆனால், தொழிலாளர் உணர்வு மட்டம் உயராமல் தடுக்க முதலாளித்துவம் தனது பிரச்சாரக்
கருவிகள் மூலம் முயற்சிக்கிறது. ’முதலாளி சிரமத்தில் உள்ள நிலையில் தொழிலாளர்
எண்ணிக்கையும் ஒன்றுபட்ட வலிமையும் பெருகுவதால்,ஊதியம்
உயர்கிறது; இதனால் இலாபம் குறைவதுடன் முதலீடுகள் குறைந்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எனவே தொழிலாளர்கள்தான்
பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம்’ என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது.இந்த பிரச்சாரத்தில் தொழிலாளர்கள் மயங்கிடாமல்
இருக்க மார்க்சிய போதனை தேவை.
தொழிலாளர்களின்
உணர்வின் ஊடாகவே மாற்றத்திற்கான உணர்வும் உறைந்து கிடக்கிறது என்பது லூகாக்ஸின்
பார்வை.அமெரிக்காவில் ஒரு கருத்துக்கணிப்பில் 18-லிருந்து 29 வயதுக்குட்பட்டவர்களில் 49 சதம்
பேர் “சோசலிசம்’என்ற
கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.அவர்கள் அனைவரும் சோசலிசத்திற்கான மார்க்சியப்
பாதையை அறிந்தவர்கள் என கருதிட இயலாது.ஆனால், புறச்சூழல்
அவர்கள் சிந்தனையில் சோசலிசத்தைக் கருவுறச் செய்துள்ளது.
(புத்தகம் பேசுது இதழில்
வெளியான இரண்டாவது பகுதி)
No comments:
Post a Comment