பெரு பயணம் நெடுகிலும் எர்னஸ்டோவை இம்சித்த இரு விஷயங்கள், கொசு மற்றும் ஆஸ்துமா. ‘எருதின் நீண்ட அலறலைப் போன்ற இளைப்பு நோயிலிருந்து’ விடுபடுவது சவாலான காரியமாக இருந்தது. ஒரு நாளைக்கு நான்கு முறை அட்ரினலின் ஊசி தனக்குத் தானே செலுத்திக்கொண்டபிறகும் மூச்சு வாங்குவது நிற்கவில்லை. சில சமயம் நாள் முழுவதும் படுக்கையில் பொழுதைக் கழிக்கவேண்டிய நிலை. சில சமயம், எழுந்து சிறிதளவு உண்ண முடியும், ஆனால் வெளியில் எங்கும் சுற்றிவரமுடியாது. குளிர்ந்த காற்று உடலில் படும் ஒவ்வொரு முறையும் உடல் நடுக்கம் கண்டது. நடுங்கும் உடலை கொசுக்களுக்கும் அர்ப்பணம் செய்யவேண்டியிருந்தது. ‘ஆஸ்துமாவும் கொசுக்களும் என் சிறகுகளைத் துண்டித்தன. (ஆனால்) இயற்கையின் அனைத்து ஆற்றல்களும் எனது வேட்கையை அதிகரித்தன.’
வறியவர்கள், நோயாளிகள், பழங்குடிகள், செல்வந்தர்கள், சீட்டுக்கட்டு விளையாடும் சீமான்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், பணக்காரர்கள், சுற்றுலாப் பயணிகள், மருத்துவர்கள், சாமானியர்கள் என்று பலரையும் தன் பயணத்தில் எர்னஸ்டோ எதிர்கொண்டார். இந்த மனிதர்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை எர்னஸ்டோவுக்கு ஏற்படுத்தினார்கள்? பெருவில் ஒரு கப்பல் பயணத்தின்போது தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பதிவு செய்யும்போது ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. ‘சாதாரண மாலுமிகளுடன் எங்களால் நன்றாகப் பழக முடிந்தது. ஆனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடன் — அவர்கள் பணக்காரர்களோ இல்லையோ – எங்களால் பழக முடியவில்லை.’
ஏன் முடியவில்லை? ‘கையில் காசின்றிப் பயணம் செய்யும் இருவரிடம் (எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும்) கவனத்தைச் செலுத்துவதைக் காட்டிலும் தங்கள் பழைய கதைகளைப் பேசுவதிலேயே அவர்கள் கவனமாக இருந்தார்கள். எல்லோரையும் போலவே அவர்களும் அறியாமை நிறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் வாழ்க்கையில் அவர்கள் பெற்ற சிறுசிறு வெற்றிகள்தான் அவர்களுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இவற்றால் அவர்கள் ஆதாயமடைந்ததால் ஏற்பட்ட மூர்க்கத்தனத்தின் விளைவாகவே அவர்கள் கீழான கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.’
ஜூன் 1, 1952 அன்று பெருவில் இக்யுடோஸ் (Iquitos) என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்து ஆறு தினங்கள் ஆஸ்துமாவால் தொடர்ந்து அவதிப்பட்டார் எர்னஸ்டோ. சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதும் சான் பாப்லோவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். கப்பலில் இரு தினங்கள் பயணம் செய்யவேண்டியிருந்தது. இந்தப் பயணத்தின்போதும் எர்னஸ்டோவைவிட்டு ஆஸ்துமா அகலவில்லை.
எர்னஸ்டோவுக்கு ஒரு வருத்தம் இருந்தது. புதிய இடங்களையும் புதிய மனிதர்களையும் காண முடிந்தது என்றாலும் நாகரிகத்தின் சுவடுகள் அற்ற பழங்குடிகளை அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சென்று காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில பழங்குடிகளை வழியில் காணமுடிந்தது என்றாலும் அவர்களுடைய இருப்பிடத்துக்கே நேரில் சென்று அவர்களோடு இயல்பாக பழகமுடியவில்லை. ஜூன் 4 அன்று தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தன் வருத்தத்தை அவர் பகிர்ந்துகொண்டார். போதுமான உணவில்லாமல் காட்டுப்பகுதிகளுக்குச் செல்வது ஆபத்தானது, குறிப்பாக ஆஸ்துமா தாக்குதல் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட பயணங்கள் சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.‘ஆற்றைப் பின்பற்றிக் காடுகளுக்குச் சென்றால் அவ்வளவு நாட்களுக்கு உண்ண உணவின்றி எங்களால் இருக்கமுடியாது. இத்தகைய இடங்களுக்குச் செல்வது அபாயகரமானது என்பது அல்ல காரணம். பணம் சேமிக்கவேண்டும். இப்படிச் சேமிக்கும் தொகை பின்னால் எனக்கு உதவிகரமாக இருக்கும்.’
ஒரே ஒரு திருப்தியும் இருந்தது. அது, தொழுநோய் மருத்துவமனைகளைச் சென்று பார்த்தது. ‘தொழுநோய் மருத்துவமனை ஊழியர்களைப் பொருத்தவரை எங்கள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறிவிட்டது. வருகை புரியும் இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு உரிய மரியாதையோடு அவர்கள் எங்களை நடத்துகிறார்கள். தொழுநோய் மருத்துவத்தில் எனக்கு உண்மையிலேயே ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்த ஆர்வம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.’
எர்னஸ்டோ தொடர்கிறார். ‘எங்களுடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்படி எங்களுக்கு உத்வேகமளிப்பதற்கு, லிமா மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பியதே போதுமானது… எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது அவர்களில் பலருடைய கண்களில் கண்ணீர் அரும்பியது. நாங்கள் மருத்துவர்க்குரிய முழு உடைகளையோ கையுறைகளையோ அணியவில்லை. எல்லோருடனும் கைகுலுக்குவது போலவே அவர்களுடனும் கைகுலுக்கினோம். அவர்களோடு உட்கார்ந்து எதைப் பற்றியாவது பேசிக்கொண்டிருப்போம். அவர்களோடு கால்பந்து விளையாடினோம். அவர்கள் எங்களைப் பாராட்டுவதற்குக் காரணம் இதுதான். இதெல்லாம் அர்த்தமற்ற துணிகரச் செயல்களாகக் கருதப்படலாம். ஆனால் எப்போதும் மிருகங்களைப் போலவே நடத்தப்பட்ட இந்தப் பரிதாபத்துக்குரிய மக்கள் சராசரி மனிதர்களாக நடத்தப்படுவதன் மூலம், அவர்களுக்குக் கிடைக்கும் மனநிறைவு அளவிட முடியாதது.’ இந்த மனநிறைவைவோடு ஒப்பிட்டால் நாங்கள் சந்தித்த ஆபத்துகளும் சிக்கல்களும் துன்பங்களும் ‘புறக்கணிக்கக்கூடிய அளவுக்கு மிகவும் சிறியவை’ என்கிறார் எர்னஸ்டோ.
சான் பாப்லோவிலும் தொழிநோயாளிகள் குடியிருப்பைக் காண்பதில்தான் எர்னஸ்டோ முதலில் ஆர்வம் செலுத்தினார். தொழுநோயாளிகளை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி ஓரிடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்த சமயம் அது. ஐந்து முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான மத்திய காலகட்டத்தில் ஐரோப்பாவில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. பல பகுதிகளில் அதற்குப் பிறகும் இவ்வாறு தனிமைப்படுத்தும் வழக்கம் தொடர்ந்தது. இப்படிப்பட்ட குடியிருப்புகளை கிறிஸ்தவத் துறவிகள் தலைமை தாங்கி நடத்துவது வழக்கம். தொழுநோய் குறித்து பல தவறான நம்பிக்கைகள் அப்போது இருந்தன. உடலை உருக்கி சிதைக்கும் கொடூரமான நோய் என்றும், எளிதில் பரவக்கூடிய வியாதி என்றும் இதனைக் குணப்படுத்தவே முடியாது என்றும் அவர்கள் நம்பினார்கள். எனவே சமூகத்தில் இருந்து தொழுநோயாளிகள் பிரித்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான குடியிருப்பை லாசரஸ் என்னும் புனிதரின் பெயரால் லாசர் வீடு என்று அழைத்தனர்.
இப்படிப்பட்ட குடியிருப்புகள் பொதுவாக மலைப்பாங்கான இடத்திலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்திலும் அமைக்கப்பட்டன. இந்தக் குடியிருப்புகளை நடத்த பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டன. இங்குள்ள நோயாளிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து வேதனையளிக்கும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தோல் வியாதிகள் கொண்டவர்களையும்கூட தொழுநோயாளிகள் என்று அழைத்து இப்படிப்பட்ட குடியிருப்புகளில் அடைத்துவிடும் வழக்கமும் இருந்திருக்கிறது.
சான் பாப்லோவில் உள்ள தொழுநோயாளிகளின் குடியிருப்பை நிர்வகித்து வந்தவரும் ஒரு கன்னியாஸ்திரிதான். நோயாளிகள் பிரிவு என்று அழைக்கப்பட்ட பகுதியில் குடிசைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைப் பற்றிய எர்னஸ்டோவின் முதல் விவரிப்பு இது. ‘காட்டுக் குடிசைகளில், தாங்கள் விரும்பியதைச் செய்தபடி, சில தனித்தன்மைகளோடு தனக்கே உரிய ஒரு வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஓர் அமைப்பில் தாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட வேலைகளில் ஈடுபட்டபடி, சுதந்தரமாக ஏறத்தாழ அறுநூறு நோயாளிகள் வசிந்து வந்தார்கள்.’
அந்தக் குடியிருப்புப் பகுதியில் ஒரு ஊராட்சித் தலைவரும் நீதிபதியும் காவல்துறை அதிகாரியும் இருந்தனர். டாக்டர் பிரெஸ்ஸியானி என்பவருக்கு அங்கே நல்ல செல்வாக்கு இருந்தது. நோயாளிகளின் உடல் உபாதைகளைக் கவனித்துக்கொள்தோடு அவ்வப்போது அவர்களுக்குள் எழும் சண்டை, சச்சரவுகளையும் தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. பிரெஸ்ஸியானியுடன் எர்னஸ்டோ விரிவாக உரையாடினார். நோயின் தீவிரம் குறித்தும் அளிக்கப்படும் சிசிச்சை முறைகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டார். சான் பாப்லோ அவர் வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயமாக மாறவிருந்தது.
டாக்டர் பிரெஸ்ஸியா சேகரித்து வைத்திருந்த ஆய்வுத் தகவல்கள் தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக எர்னஸ்டோ குறிப்பிடுகிறார். நானூறு நோயாளிகளைத் தொடர்ந்து பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்ததன் காரணமாக அவர் மருத்துவ அறிவு ஆழமடைந்திருந்தது. சான் பாப்லோ குடியிருப்பில் உள்ள பெரும்பாலான தொழுநோயாளிகளுக்கு நரம்பு மண்டலம் பாதிப்படைந்திருந்தது. குடியிருப்பில் வசித்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கும்கூட ஆரம்பக்கட்ட நரம்பியல் கோளாறுகள் இருக்கின்றவா என்பதை மருத்துவர்கள் பரிசோதித்துக்கொண்டிருந்தனர்.
எர்னஸ்டோ முன்பு கண்டிருந்த தொழுநோய் குடியிருப்பைப் போலவே இங்கும் அடிப்படை வசதிகள் காணப்படவில்லை. மின்சார விளக்குகள் இல்லை. குளிர்சாதனப் பெட்டி இல்லை. ஆய்வுக்கூடம் என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஒரு நல்ல நுண்ணோக்கி இல்லை. உதவியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லை. நரம்பு மண்டலப் பிரச்னைகள் அதிகம் இருந்தபோதிலும் இங்கு அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமில்லை.
மீன் பிடிப்பதற்கும் நீச்சலடிப்பதற்கும் இடையில் நேரம் கிடைத்தது. கால்பந்து விளையாடவும் மருத்துவரோடு சீட்டு விளையாடவும்கூட முடிந்தது. என்றாலும், எர்னஸ்டோவின் கவனம் திரும்பத் திரும்ப தொழுநோயாளிகளைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
சான் பாப்லோவையும் தொழுநோயாளிகள் குடியிருப்பையும் எர்னஸ்டோவால் மறக்கமுடியாமல் போனதற்கு இன்னொரு காரணம் அவருடைய பிறந்தநாள். ‘இன்னும் சிறுவனாகவே இருந்த எனக்கு 1952 ஜூன் 14ம் தேதி சனிக்கிழமை அன்று இருபத்து நான்கு வயது நிறைவடைந்தது.’ வாழ்வு தன்னை அந்த அளவுக்கு மோசமாக நடத்தியிருக்கவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றியது. வாழ்வின் கால் நூற்றாண்டின் சிகரம். இதுவரை செய்திருப்பது என்ன? இனி செய்யவிருப்பது என்ன?
டாக்டர் பிரஸ்ஸியானியின் வீட்டில் எர்னஸ்டோவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மிகுந்த அன்புடன் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தைக் கண்டு நெகிழ்ந்துபோனார் எர்னஸ்டோ. அங்கு அவர் சிறியதாக உரையாற்றினார்.
‘நாங்கள் ஏராளமான இடையூறுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் தற்போதைய நிலைமையில், எங்களால் வழங்க முடிந்ததெல்லாம் வார்த்தைகள்தான். எனவே அவற்றைப் பயன்படுத்தி என்னுடைய, என் நண்பனுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது என்றபோதும் அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல் என் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடித் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்… இன்னும் சில நாள்களில் நாங்கள் பெருவில் இருந்து கிளம்பிவிடுவோம். எனவே எனது உரை உங்களிடமிருந்து விடைபெறுவதாகவும் அமைகிறது. முதன்முதலாக நாங்கள் பெரு நாட்டின் டாக்னா என்னும் நகருக்குள் அடியெடுத்து வைத்தபோது எங்களிடம் தங்களுடைய விருந்தோம்பல பண்பையும் அன்பையும் வெளிப்படுத்திய இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ’
தனது பயணங்கள் வாயிலாகத் தான் கண்டுணர்ந்த சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார் எர்னஸ்டோ. ‘அமெரிக்கக் கண்டம் பல நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தப் பிரிவினைகள் நிலையற்றவை, மோசடியானவை. போலி நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய இந்த நம்பிக்கையை நாங்கள் மேற்கொண்ட பயணம் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனினும் இத்தகைய மேன்மையான லட்சியத்தின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய தகுதி எங்களுக்குக் கிடையாதுதான். நாம் அனைவரும் ஒரே மெஸ்டிஸோ இனத்தைச் சேர்ந்தவர்கள். மெக்ஸிகோவிலிருந்து மெகல்லன் நீர்ச்சந்தி வரையில் தனிச்சிறப்பான இனவரைவியல் ரீதியான ஒத்த தன்மைகள் நம்மிடம் இருக்கின்றன. எனவே, குறுகிய மனப்பான்மை கொண்ட பிரதேசவாதங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கான ஒரு முயற்சியாக, பெருவுக்கும் ஒன்றுபட்ட அமெரிக்கக் கண்டத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’
யாகுவா பழங்குடி மக்களைக் காண்பதற்காக ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிளம்பினார்கள். அது ஒரு குடிசைப் பகுதி. வைக்கோல், பலகைகள் இரண்டையும் கொண்டு இருப்பிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. எர்னஸ்டோ சந்தித்த பழங்குடி மக்கள் நவீன உடைகளையே உடுத்தியிருந்தனர். குழந்தைகளின் வயிறு பெருத்து காணப்பட்டது. ஆனால் வயதானவர்கள் குறைபாடுகள் இன்றி இருந்தனர். வாழைப்பழம், தென் அமெரிக்க நாடுகளில் விளையும் யக்கா எனப்படும் கிழங்கு வகை, ஈச்சம்பழம், விலங்குகள் ஆகியவை இந்த மக்களின் முக்கியமான உணவு வகைகள்.
சான் பாப்லோ தொழுநோய் குடியிருப்பைத் தொடர்ந்து சென்று பார்வையிட்டு வந்தார் எர்னஸ்டோ. மருத்துவர்களிடமும் தொழுநோய் நோயாளிகளிடமும் நெருங்கி பழகினார். அங்கேயே அவருக்குத் தங்குமிடம் வழங்கப்பட்டது. மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து தன்னால் இயன்ற அளவு உதவிகள் செய்தார். பிரார்த்தனை கூடத்துக்கு வருபவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று கன்னியாஸ்திரிகள் வலியுறுத்தியிருந்தனர். குடியிருப்பை நிர்வகிப்பவர்கள் அவர்கள்தாம் என்பதால் அவர்கள் இட்டதுதான் கட்டளை. எர்னஸ்டோவுக்கு தேவாலயம் செல்ல விருப்பமில்லை என்பதால் அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்றபோதும் வேறு வழியில் நண்பர்கள் தொடர்நது உணவு அனுப்பிக்கொண்டிருந்தனர். ‘இந்தச் சின்ன பனிப்போரைத் தவிர வாழ்க்கை மிக மிக இனிமையாகக் கழிந்தது.’
பிஸ்கோ என்னும் ஒருவித போதை அளிக்கும் மது வகையையும் எர்னஸ்டோ விட்டுவைக்கவில்லை. அமெரிக்க ஒற்றுமை குறித்து அவர் நிகழ்த்திய உரைக்கு இந்த பிஸ்கோவும் உரிய பங்களிப்பு செய்திருந்தது.
தங்கியிருந்த இடத்திலிருந்து மருத்துவமனை செல்ல மிதவைகள் பயன்படுத்தப்பட்டன. திடீரென்று அமேசான் நதியை நீந்தி கடக்கவேண்டும் என்னும் ஆவல் ஏற்பட, இரண்டு மணி நேரம் நீந்தி கரையேறினார் எர்னஸ்டோ. வழக்கம் போல் இங்கும் நோயாளிகள் எர்னஸ்டோவைக் கண்கலங்க விடைகொடுத்து அனுப்பிவைத்தார்கள்.
‘நாங்கள் கிளம்பவேண்டிய நாளான வெள்ளிக்கிழமையன்று நோயாளிகளிடம் விடைபெறுவதற்காகச் சென்றோம். சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்… மூன்று மணிக்கு அனைவரிடமும் விடைபெற்றோம். மூன்றரை மணிக்கு மம்போ டாங்கோ என்று பெயரிடப்பட்ட மிதவையுடன் கிளம்பினோம்… நெஞ்சை நெகிழவைக்கும் விதத்தில் உரை நிகழ்த்தினார்கள். எங்களை வழியனுப்பும் விதமாக படகுத்துறையில் ஒரு இசை நிகழ்ச்சியையும் நடத்தினார்கள்…’
இந்த இசை நிகழ்ச்சி குறித்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் எர்னஸ்டோ மேலும் விவரித்தார். ‘வலது கையில் ஒரு விரல்கூட இல்லாமல் அவற்றுக்குப் பதிலாக சில குச்சிகளைத் தனது மணிக்கட்டில் கட்டிக்கொண்டு அக்கார்டியன் வாசிக்கும் ஒரு கலைஞன்’ எர்னஸ்டோவை கவர்ந்துவிட்டான். பாடகனுக்குக் கண்பார்வை கிடையாது. இவை போக, நரம்பு மண்டல நோய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலர் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் முகம் விகாரமாக இருந்தது. ‘ஆற்று நீரில் பிரதிபலிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில், ஒரு திகில் படத்தில் வரும் காட்சியைப் போல இருந்தது அது.’
அனைத்துக்கும் அடித்தளத்தில் அன்பு நிரம்பியிருந்தது. நோயும் ஏழைமையும் நிறைந்திருந்த அந்தப் பகுதியில்தான் அளவிட முடியாத வளங்களும் காணக்கிடைத்தன. ‘ஆற்றின் நடுப்பகுதி வரையில் எங்களைக் கொண்டு வந்தவர்கள் (டாக்டர் பிரெஸ்ஸியானி உள்ளிட்டோர்) இனி எங்கள் பயணத்தை நாங்களே மேற்கொள்ளும்படி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.’ இப்போது அவர்கள் வெனிசூலாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தார்கள். ‘… சில பெசோக்கள் பற்றாக்குறையோடு வெனிசூலாவை நோக்கி கிளம்பிக்கொண்டிருக்கிறேன்… ’
ஜூலை 2, 1952. கொலம்பியாவில் உள்ள போகோடா (Bogata) என்னும் பகுதியை வந்தடைந்தபோது தனது பயணங்கள் குறித்து எர்னஸ்டோ தன் அம்மாவுக்கு விரிவாக எழுதினார். இந்தப் பயணம் தனது கனவைப் பலப்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. காட்டின் வளங்களும், இயற்கை அழகும் எர்னஸ்டோவை வசீகரித்திருந்தன என்றால் உதவி தேவைப்படும் மக்களின் நிலை அவரை மிகவும் பாதித்திருந்தது. ‘வழி நெடுகிலும் மருத்துவம் செய்துகொண்டே பராகுவே நதியிலிருந்து அமேசான் நதிவரை நீர் வழியாக மேட்டோ ரிõஸ்ஸோ பிரதேசத்தைக் கடக்கவேண்டும் என்று கனவு காணும்படி எங்களைத் தூண்டுபவை இவைதான்… என்றேனும் ஒரு நாள் வீடு கட்டவேண்டும் என்பதைப் போன்ற கனவு இது.’
கொலம்பியாவில் நிலவிய அரசியல் சூழலை எர்னஸ்டோ தனது கடிதத்தில் பதிவு செய்தார். ‘நாங்கள் இதுவரை சென்ற எல்லா நாடுகளையும்விட இங்கேதான் தனிமனித சுதந்தரம் தீவிரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது. போலிசார் துப்பாக்கிகள் ஏந்தியபடி தெருக்களில் வலம் வருகிறார்கள். அடிக்கடி பயண ஆவணங்களைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு படிக்க முயல்கிறார்கள். பதற்றமான சூழல். புரட்சி வெடிக்கலாம். கிராமப்புறங்களில் கலகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை அடக்குகின்ற வலிமை ராணுவத்துக்குக் கிடையாது. பழைமைவாதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமை இல்லை… சுருங்கச் சொன்னால், மூச்சுத் திணறவைக்கும் சூழல் இது. கொலம்பியர்கள் இந்தச் சூழலைச் சகித்துக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு வாழ்த்துகள்.’
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 18
நீண்ட நெடிய கேள்விகளும் விசாரணைகளும் ஆவணங்கள் பரிசீலனைகளும் முடிந்தபிறகு ஜூலை 14 என்று முத்திரை குத்தி எர்னஸ்டோவையும் ஆல்பர்டோவையும் அதிகாரிகள் அனுப்பிவைத்தார்கள். கொலம்பியா, வெனிசூலா இரு நாடுகளுக்கும் எல்லையாகத் திகழ்ந்த பாலத்தின் வழியாக இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சிடுசிடுப்பிலும் கடுமையிலும் கொலம்பிய அதிகாரிகளுக்கும் வெனிசூலா அதிகாரிகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.
மேற்கொண்டு முன்னேறுவதற்கு அனுமதி கிடைக்கும்வரை சான் அன்டோனியா டி டாச்சிரா என்னும் பகுதியில் இருவரும் காத்திருந்தார்கள். இங்கு அனுமதி என்பது அரசாங்க அனுமதி அல்ல. அதிகாரம் கையிலிருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அனுமதி வழங்கவும் மறுக்கவும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் சந்தேகிக்கும் நபர்களை அவர்களால் திருப்பியனுப்பமுடியும். சுங்கச்சாவடியில் பைகள் சோதனை செய்யப்பட்டன. எர்னஸ்டோ தனது ரிவால்வரை அழுக்கு மூட்டையில் வைத்திருந்ததால் அதிகாரிகள் அதைத் தீண்டவேயில்லை. ஆனால் மிகவும் சிரமப்பட்டு எர்னஸ்டோ பாதுகாத்த கத்தி சிக்கிக்கொண்டது.
வெனிசூலாவின் தலைநகரம் காரகாஸை அவர்கள் அடைந்தாகவேண்டும். தான் செல்லவிருந்த பகுதி குறித்து ஓரளவுக்கு அடிப்படையான தகவல்களையாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில் எர்னஸ்டோ ஆர்வமாக இருந்தார். அவ்வாறே அருகிலிருந்த நூலகத்துக்குச் சென்று வெனிசூலா குறித்து படிக்க ஆரம்பித்தார். இந்த முறையும் ஆஸ்துமா மீண்டும் தலைதூக்கியதோடு அதிகப்படியான சிரமத்தையும் அளிக்க ஆரம்பித்திருந்தது. பேருந்தில் மூன்று நாள் பயணமா அல்லது சிறிய ஊர்தியில் இரு நாள்களா என்னும் கேள்வி வந்தபோது பேருந்தை நிராகரித்தார் எர்னஸ்டோ. ஆஸ்துமாவை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது.
கையிருப்பு குறைவாக இருந்ததால், அடிக்கடி சாப்பிடவேண்டாம் என்று முடிவு செய்தார் எர்னஸ்டோ. ஒரு நிறுத்தத்தில், அனைவரும் வண்டியிலிருந்து இறங்க எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் மட்டும் வண்டியில் மூட்டைகளோடு அமர்ந்திருப்பதைக் கண்டு மனம் இறங்கிய ஓட்டுநர் இருவரையும் வரவேற்று தன் செலவில் நல்ல உணவு வாங்கிக்கொடுத்தார். தன்னிடம் இருந்த கடைசி மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு மூச்சு விடச் சிரமப்பட்டுக்கொண்டு எப்போது காரகாஸ் வரும் என்று காத்திருந்தார் எர்னஸ்டோ.
பொழுது புலரத் தொடங்கியபோது காரகாஸ் வந்து சேர்ந்தார்கள். களைப்பின் உச்சத்தில் இருந்தார் எர்னஸ்டோ. ‘அரை பொலிவார் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்த அறையிலிருந்த படுக்கையில் விழுந்தேன். ஆல்பர்ட்டோ எனக்குப் போட்ட அட்ரினலின் ஊசியின் துணையுடன் ஒரு பிணத்தைப் போல் தூங்கினேன்.’
காரகாஸில் எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பிரிய வேண்டியிருந்தது. எர்னஸ்டோ தன் மாமாவின் கார்கோ விமானத்தைப் பயன்படுத்தி மியாமிக்குச் செல்ல விரும்பினார். அங்கிருந்து பியூனஸ் ஏர்ஸ். ஆல்பர்ட்டோ காராகஸில் சிறிது காலம் தங்கியிருந்து, அருகிலுள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்ற விரும்பினார்.
பயணம் என்பது புதியனவற்றைக் கண்டுகொள்வது மட்டுமல்ல பயணம் என்பது விடைபெறுவது, விடைகொடுப்பது. மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்குவதற்கு முன்பு தன் காதலியிடம் இருந்தும் பயணத்தின்போது தனது மோட்டார் சைக்கிளிடம் இருந்தும் இறுதிகட்டத்தில் தன் நண்பனிடம் இருந்தும் எர்னஸ்டோ பிரியவேண்டியிருந்தது. ‘ஆல்பர்ட்டோ என்னுடன் இல்லாதது மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு கற்பனையான தாக்குதலில் என் இடுப்பு ஒடிந்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவனிடம் ஏதேனும் சொல்வதற்காக அடிக்கடி திரும்பினேன். அவன் அங்கே இல்லாததை பிறகுதான் என்னால் உணரமுடிந்தது… நாங்கள் இருவரும் இரண்டறக் கலந்திருந்து, ஒரே மாதிரியான நிலைமைகளில் ஒரே மாதிரியாகக் கனவு கண்டு வந்த பழக்கம் எங்களை மேலும் நெருக்கமானவர்களாக ஆக்கியிருந்தது.’
முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டுகொண்டே செல்லும் ஏதாவதொரு அம்சம் வாழ்வில் உண்டா? வீட்டுக்குப் போயாகவேண்டும். படிப்பைத் தொடரவேண்டும். பட்டம் பெற்று, மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவேண்டும். சேகரித்த அனுபவங்களின் துணைகொண்டு தொழுநோய் மருத்துவத்தில் சாதனை படைக்கவேண்டும். ‘எனினும் விடைபெறுவது என்ற எண்ணமே எனக்கு மகிழ்ச்சி தரவில்லை.’
காரகாஸ் மலைகளின்மீது ஏறி சிறிது நேரம் நடந்தார் எர்னஸ்டோ. நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு தெளிவாக எதிர்காலம் குறித்து சிந்திக்க முயற்சி செய்தார். மலைகளில் கல் வீடுகளைக் காணமுடியவில்லை. திரும்பும் திசையெங்கும் குடிசைகளே நிறைந்திருந்தன. ஒரு குடிசைக்குள் நுழைந்து பார்த்தார். ஏழைமையின் பிடியில் சிக்கியிருந்த ஒரு குடும்பம் அங்கே வசித்துக்கொண்டிருந்தது. உங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று எர்னஸ்டோ கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். படம் எடுத்ததும் எங்களுக்கு அதை முதலில் கொடுப்பதாக இருந்தால் சம்மதிக்கிறோம் என்றார்கள். அது சாத்தியமில்லை, கழுவிய பிறகே படம் கிடைக்கும் என்று எர்னஸ்டோ சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. மறைந்திருந்து ஒரு குழந்தையைப் படமெடுக்க முயன்றார் எர்னஸ்டோ. அந்தக் குழந்தை பயத்துடன் தடுமாறிவிழுந்துவிட, கண்டபடி திட்டியபடி அவர்கள் எர்னஸ்டோவைத் துரத்தத் தொடங்கினார்கள்.
கிரானாடோவிடம் இருந்தும் வெனிசூலாவிடம் இருந்தும் விடைபெற்றுக்கொண்டு எர்னஸ்டோ ஒரு சரக்கு விமானத்தில் ஜூலை 27, 1952 அன்று மியாமி சென்று சேர்ந்தார். ஒரு நாள் அங்கிருந்துவிட்டு, திரும்பவும் காரகாஸ் சென்று, பிறகு அங்கிருந்து அர்ஜென்டினா வந்து சேர்வதுதான் அந்த விமானத்தின் பயணத்திட்டம். ஆனால் விமானத்தின் எஞ்சின் ஒன்று பழுதடைந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் சரிசெய்யப்படும்வரை மியாமியில் இருந்து விமானம் கிளம்பவில்லை.
முடிவடையவிருந்த பயணத்தின் திடீர் நீட்சி என்று கொள்ளலாம்தான். ஆனால் எர்னஸ்டோவிடம் இருந்தது ஒரு டாலர் மட்டுமே. ஒரு சிறிய விடுதிக்குச் சென்று, ஊருக்குச் சென்றதும் பணம் அனுப்புகிறேன் என்று மன்றாடி ஓர் அறையைப் பிடித்துக்கொண்டார். மற்ற விஷயங்களை வீடு திரும்பியதும் தன் தந்தை எர்னஸ்டோ குவேரா லிஞ்சிடம் பகிர்ந்துகொண்டார். இனி வருபவை எர்னஸ்டோ சீனியரின் குறிப்புகள்.
‘பணம் எதுவும் இல்லாமல் எப்படி நாள்களைக் கழித்தான் என்று வீடு திரும்பியதுமே அவன் எங்களிடம் கூறினான்… ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் அவன் நகரத்தின் மையத்திலிருந்த தனது விடுதியில் இருந்து சுற்றுலாத் தலமான கடற்கரைக்கு நடந்து சென்றான். அவன் அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் அரிதாகவே ஏற்றிக்கொள்ளப்பட்டான். இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் பதினைந்து கிலே மீட்டர் என்பதாக எனக்கு நினைவு. ஆனால் அவன் தன்னால் இயன்ற அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தான். அமெரிக்காவை, அதன் ஒரு சிறு பகுதியைத்தான் என்றபோதும், அறிந்துகொள்ள முயன்றான்.’ எர்னஸ்டோவின் பயணங்களுக்கு உந்து சக்தி இந்த இரு அம்சங்கள்தாம். இயன்ற வரை மகிழ்ச்சியாக இருப்பது. புதிய சூழலை முடிந்தவரை தெரிந்துகொள்ள முயன்றது.
எர்னஸ்டோவின் பயணத்தில் கடைசி கட்டம்வரை சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஒரு மாத காலத்தை மியாமியில் கழித்துவிட்டு, எஞ்சின் பழுது பார்க்கப்பட்ட பிறகு விமானத்தில் ஏறி, அது பறக்கவும் தொடங்கிவிட்டது. உறக்கத்தில் இருந்த எர்னஸ்டோவை ஒரு சிறுவன் அவசரமாக எழுப்பினான். ஆபத்து, சக்கரங்கள் வெளியில் வர முடியாதபடி விமானத்தின் அடிப்பகுதி செயலிழந்துவிட்டது, எழுந்திருங்கள்! எர்னஸ்டோ அதை ஒரு வேடிக்கையாக நினைத்து, மீண்டும் தூங்கப்போய்விட்டார். பயணிகள் என்று பார்த்தால் பைலட் போக, எர்னஸ்டோவும் அந்த சிறுவனும்தான் (அவன் குதிரை லாயத்தைச் சேர்ந்தவன்) விமானத்தில் இருந்தனர். மற்றபடி பழக்கூடைகள் கொண்ட பெட்டிகளே அதிகம் நிறைந்திருந்தன.
விழிப்பு வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது லாரிகளும் கார்களும் தீயணைப்பு வண்டிகளும் விமானத்தைச் சுற்றி நின்றுகொண்டிருப்பதை எர்னஸ்டோ பார்த்தார். விமானத்தின் அடிப்பகுதி மெய்யாகவே செயலிழந்திருந்தது. ஆனால் எப்படியோ ஆபத்து எதுவுமின்றி விமானம் தரையிறக்கப்பட்டது.
பெரிய இடைவெளிக்குப் பிறகு தன் மகனைக் கண்ட அந்தத் தருணத்தை எர்னஸ்டோ சீனியரின் வார்த்தைகளில் பார்ப்போம்.
‘மியாமியிலிருந்து வரும் சரக்கு விமானம் ஒன்றில் எர்னஸ்டோ மாலையில் வரப்போவதாக ஒரு நாள் காலையில் பியூனஸ் ஏர்ஸிலிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. எட்டு மாதங்களாக, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று பயணம் முடிந்து கடைசியில் அவன் வீடு திரும்புகிறான்.
‘எஸேய்ஸா விமான நிலையத்தில் அவனை வரவேற்பதற்காகக் குடும்பத்தினர் அனைவரும் சென்றோம். அன்று பிற்பகலில் மழை வரும்போல் இருந்தது. மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் வெளிச்சமே இல்லை. சரக்கு விமானம் பிற்பகல் இரண்டு மணிக்கு வருவதாக இருந்தது. நாங்கள் இரண்டு மணி நேரம் முன்னதாகவே காத்திருந்தோம். விமானம் வந்து சேராததால் நாங்கள் எல்லோரும் பதற்றமடைந்தோம். கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் ஏதும் வரவில்லை. சரக்கு விமானங்கள் எப்போதும் குறித்த நேரத்துக்கு வருவது கிடையாது என்றும், அவற்றை யாரும் எதிர்பார்க்காதபோதுதான் ஓடுபாதையில் அவை இறங்குவது வழக்கம் என்றும் கூறி, அவர்கள் எங்களைச் சமாதானப்படுத்தினார்கள்.
‘அன்றும் அதுதான் நடந்தது. அந்த டக்ளஸ் விமானம் திடீரென்று தோன்றியது. மேகங்களினூடாகத் தாழ்வாகக் பறந்தது. விமான நிலையத்தை வட்டமிட்டுவிட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் தரையிறங்கியது. சில கணங்களுக்குப் பின்னர், மழைத் துளியில் நனைந்து விடாதவாறு மழைக்கோட்டு அணிந்தபடி, எர்னஸ்டோ விமானத்திலிருந்து வெளியில் வந்து, ஓடுபாதையின் எல்லையை நோக்கி ஓடிவந்தான். நான் மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்தேன். என் கைகளை வாயருகில் குவித்து, என்னால் முடிந்த அளவுக்கு உரக்கக் கத்தினேன். அந்த சப்தம் அவனுக்குக் கேட்டது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. பிறகு மேல்தளத்தில் நாங்கள் நின்றுகொண்டிருப்பதை அவன் கண்டுகொண்டான். எங்களைப் பார்த்து கையசைத்தபோது புன்னகையுடன் காட்சியளித்த அவனுடைய முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அது 1952ம் ஆண்டு செப்டெம்பர் மாதம்.
<முடிவு பெற்றது>