Wednesday, October 24, 2012

வரலாறு‍ மறக்கடித்த "மாமனிதன் - ஸ்டாலின்"





“மாமனிதன் - ஸ்டாலின்”

மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் வந்தவர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே.

இத்தகையவர்களில் ஒருவர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக தூற்றப்பட்டார். இதற்கு குருஷேவ் தலைமை தாங்கினார். ஸ்டாலின் வாழ்ந்தபோது குருஷேவ் அவரின் வளர்ப்பு நாய்போல குழைந்து, அவரை வானளாவப் புகழ்ந்தார்.

ஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய காலகட்டத்தையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே, அவரைப் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் , இது அத்தனை சுலபமல்ல. காரணம், வேறேந்த கம்யூனிசத் தலைவரையும் விட ஸ்டாலினுக்கு எதிரிகள் அதிகம்.

உண்மை நிலை அறியாத இந்திய மற்றும் உலக மக்கள். குருஷேவாலும் அவரது ஆதரவாளர்களாலும் ஸ்டாலின் எவ்வாறு அவதூறு செய்யப்பட்டார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஸ்டாலினை குருஷேவ் ஏன் பழி கூறினார் என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்து முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்; குருஷேவ் ஒரு திருத்தல்வாதி; அவர் ஒருபோதும் மார்க்சியவாதியாக இருந்ததில்லை. மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சீர்குலைக்கும் கொள்கையற்ற அரசியல்வாதியாகவே அவர் இருந்தார்.

உலக வரலாற்றில் ஸ்டாலினை ஈடுணையற்றத் தலைவராக ஆக்கியது எது? அவர் சோவியத் யூனியனின் ஐந்து ஆண்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தது முதற்காரணம். உண்மையில், ஐந்து ஆண்டுத் திட்டங்கள் உலகத்துக்கு ஸ்டாலின் அளித்த கொடையாகும். 1929 இல் உலகம் மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவித்தது. முதலாளித்துவ நாடுகளில் தொழில் மற்றும் வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இந்த நாடுகளின் மிகப் பெரிய நிறுவனங்கள் திவாலாயின. இந்தக் காலகட்டங்களில்தான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் தொடங்கியது. ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இந்தத் திட்டம் உதவாது என்று கணித்தது.

ஆனால் நான்கரை ஆண்டுகளிலேயே ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டுவிட்டதால், உலகமே வியந்து நின்றது.யாரெல்லாம் இந்தத் திட்டம் பற்றி அவதூறு பேசினார்களோ அவர்களெல்லாம் புகழ்த்து பேசவும், எழுதவும் வேண்டியதாயிற்று.

பல வெளிநாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் பயணம் செய்தனர். இவர்களில் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்தவரக்ள் இருந்தனர்." எங்கள் பயணத்தின் போது பிரம்மாண்டமான கட்டு மானங்களைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்" என்று அவர்கள் கூறினர்.

ரவீந்தரநாத் தாகூரும் ரஷ்யாவில் பயணம் செய்தார். ரஷ்யர்கள் கற்பிக்கும் புதிய கலாச்சாரத்தை சோதித்துப் பார்க்க அவர் விரும்பினார். ஒரு ஆரம்பப் பள்ளிக்குச் சென்றார். அவரது பேனாவை அங்கிருந்த குழந்தைகளிடம் காட்டி, இதனை5 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும் என்று வினவினார். உடனடியாக அந்தக் குழந்தைகள் ஆறுமாதம் ஜெயில் கிடைக்கும் என்றனர். ஒரு பொருளை வாங்கி அதிக விலைக்கு விற்பது குற்றமாக கருதப்பட்டது. இதனால் அவர் மிகவும் கவரப்பட்டார்.

மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனின் பொதுவான பொருளாதார வளர்ச்சி இருமடங்கு உயர்ந்தது.

நாடுகள்     ------------1929  ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933
அமெரிக்கா ------------100  ----. 80.7 ---- 63.1 ------ 59.3 ------64.9
பிரிட்டன்    ------------100  ----- 92.4  --- 83.8 ----- 83.8 ----- 86.3
ஜெர்மனி   -------------100  ----- 88.3 ---- 73.7 ----- 59.8 ------ 66.8
பிரான்ஸ்   -------------100 ----- 100.7 ---- 89.2 ---- 99.3 ------ 77.4
சோவியத் யூனியன் ---100  ---- 129.2  ---- 161.9 ---- 184.7 ------ 201.6

- (ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)

ஸ்டாலின் இரண்டாவது சாதனை கட்சிக்கு எதிரானவர்களைக் களையெடுத்தது. இதனை குருஷேவ் அவதூறாக குற்றஞ்சாட்டுகிறார்.பல சந்தப்பவாதிகளாலும், ஊசலாட்டக்காரர்களாலும், சோஷலிச எதிரிகளாலும் கட்சி ஆட்டிப் படைக்கப்பட்டது.இதனால் நாடு அதன் தோளில் சுமத்திய வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியவில்லை. லெனினின் கருத்தை நினைவூட்டி ஸ்டாலின் சொன்னார்."உள்நாட்டுப் போர் நடக்கும் திருப்புமுனையான இந்தக் காலகட்டங்களில் கையப்படுத்தப்பட்ட முறையில் கட்சி அமைப்பு இருந்தால்தான், ராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த உருக்கு போன்ற ஒழுக்கம் இருந்தால்தான், பரந்த அதிகாரங்களுடன் கட்டளையிடுவதாகவும் கட்சி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்றதாகவும் கட்சி மையம் வலுவானதாக இருந்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடமையைக் செய்ய முடியும்"
- (லெனின் - தொகுதி பத்து -பக் 201)

ட்ராட்ஸ்கி தவிர, சோவியத் யூனியனிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த விசாரனை வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும், அன்னாலூயி ஸ்றாங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரனையை கவனித்தனர்.

இந்த விசாரனை திட்டமிட்ட நாடகம் எனப்படும் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தினர். ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடனிருந்த முதலாளிகள் மட்டும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை வேதவாக்கு போல நடத்தி வந்தனர்.

இந்த மறைமுக சதி நீடித்திருந்தால், ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கியிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நாம், இப்போது கொஞ்சம் நினைவு கூர்ந்து சிந்திக்க வேண்டும்.

அவரது மூன்றாவது பெருமை போர்களில் பெற்ற வெற்றியாகும். முதலாவது உள்நாட்டு யுத்தம் இரண்டாவது இரண்டாம் உலக யுத்தம். ஏற்கனவே சோசலிசம் வீழ்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்த்து சோசலிசத்திற்கு எதிரான வேலையில் உள்ள முதலாளித்துவத்தையும் ஸ்டாலின் என்ற ஒற்றை மனிதர் எதிர்த்து வென்றிருக்கிறார் என்றால் அங்கு கட்சியும், ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் எப்படி உருக்கு இரும்பு போன்று கட்சி ரீதியாக உருவாக்கப்பட்டிருப்பார்கள். அப்படி கட்சியை உருவாக்கியதில் ஸ்டாலினின் பங்கு மிக முக்கியத்துவம் பெற்றது. 

உள்நாட்டு யுத்தத்தின் போது ராணுவத்துக்கான உணவுப் பொருளைக் கொள்முதல் செய்ய முழு அதிகாரத்துடன் தெற்கு எல்லைப் பகுதிக்கு ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அவர் சென்றபோது அனைத்தும் குறைபாடுகளாக இருந்தன., இதனால் அவர் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தானில் போராடும் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதியில் செஞ்சேனையின் தலைவரானார்.

இரண்டாவது உலக யுத்தத்தின் போது சோவியத் நாட்டின் உயர் அதிகார அமைப்பு ஸ்டாலினைப் பாதுகாப்பு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தது. பின்னர் 1941 ஆகஸ்ட் 8-இல் அவர் தலைமைத் தளபதியாக்கப்பட்டார். வரலாற்றில் இதற்கு இணையான நிகழ்வு இருப்பதாக் எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தேர்வு சரியானதுதான் என்பதையும் வரலாறு நிரூபித்துவிட்டது.

ஒரு தனி மனிதர் இப்படிப்பட்ட அனைத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது? அந்த கேள்விக்கன பதில் அவர் அடிப்படையில் ஸ்டாலின் ஒரு அடிப்படையான மார்க்சியவாதி, அவரது பங்களிப்பு அவரின் தனிப்பட்ட விஷயமல்ல; மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் தத்துவங்களை அவர் விளக்கினார்; விவரித்தார். இதில் அவர் ஈடு இணையற்ற விளக்கவாதி. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய அவரது கட்டுரை மார்க்சியத்தின் சாரமாகும். இதனையும் ஏங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலையும் படிப்பது மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.

19-ஆம் நூற்றாண்டின் மாமனிதர்களில் ஸ்டாலினும் ஒருவர். அவரது பரம் வைரியான சர்ச்சில் சொன்னார்: " நமது முயற்சிகலுக்கும் உறுதிகளுக்கும் ஸ்டாலினின் வாழ்க்கை மதிப்பிடற்கரிய உதாரணமாகும். இது வெறும் புகழ்ச்சியோ உயர்வு நவிற்சியோ அல்ல. வரலாற்றில் பல வெற்றிச் சாதனையாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அரசியல்வாதிகள். அந்த வெற்றியாளர்களும் போருக்கு பின் பல சோதனைகளை எதிர்கொண்டனர். அவர்களின் சாதனைகள் இந்தச் சோதனைகளில் அடித்துச் செல்லப்பட்டன. 

ஸ்டாலின் புகழ் ரஷ்யாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல; அவர் ஒரு மார்க்சியவாதி, உலகின் மூலை முடுக்குகளில் உள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டிற்கும் ஸ்டாலினும், அவரது சிந்தனைகளும் சொந்தம். அந்த மாமனிதனின் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் உலக நிகழ்வுகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இறுதிக் காலக் கட்டங்களில் லெனின் எழுதிய கடிதம் பற்றி நூலில் இருந்து்‌
லெனின் - ஸ்டாலின் உறவில் இறுதிவரை எந்தவித விரிசலும் கிடையாது. ட்ராட்ஸ்கி போன்றோர் கூச்சலிட்டபடி, குடுமிப்பிடி சண்டை எல்லாம் இல்லை. தவிரவும், அவர் ஸ்டாலினை மட்டும் கடுமையாக விமர்சிக்கவில்லை. கட்சியிலுள்ள அத்தனைப் பேரையும், விமர்சித்திருந்தார்.
இந்தக் காரணத்துக்காகத்தான் லெனினின் இந்தக் கடிதங்களை கட்சி நீண்ட காலத்துக்கு வெளியிடவில்லை.

இருந்தாலும், லெனினிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்ததை ஸ்டாலினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஸ்டாலின் மரணமடைந்த போது, அவரது மேஜை டிராயரில் லெனினின் கடிதமும் காணப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக வருந்தினார் ஸடாலின்.

லெனின், ஸ்டாலினை மட்டும் விமர்சிக்கவில்லை. ட்ராட்ஸ்கியையும் சேர்த்தே விமர்சித்திருந்தார். ட்ராட்ஸ்கிக்கு இது பற்றி பின்னர் தெரியவந்த போது, அதிர்ச்சியடைந்த அவர், லெனினின் உயிலையும் இறுதிக் கடிதங்களையும் வெளியிட வேண்டாம் என்று வாதாட ஆரம்பித்தார். தனது இறுதி நாள்களில் லெனினால் தெளிவாகக் சிந்திக்க முடியாமல் போய்விட்டது. அதனால்தான் யோசிக்காமல் கொள்ளாமல் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால், லெனினின் உயில் வெளியிடப்பட்டது. மக்கள் யோசித்தனர். ட்ராட்ஸ்கி , ஸ்டாலின் இருவரையும் தான் லெனின் விமர்சித்திருக்கிறார். கடிதங்களை வெளியிட வேண்டாம் என்றார் ட்ராட்ஸ்கி. ஆனால் ஸ்டாலினோ அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தொடக்கத்திலிருந்தே உயிரைக் கொடுத்துப் போராடியவர் ஸ்டாலின். கட்சியில் இணைவதற்கு முன்பாகவே கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர்.

ட்ராட்ஸ்கியை அப்படிச் சொல்ல முடியாது. புரட்சி வெற்றி பெறும் சமயமாகப் பார்த்து , என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஓடி வந்து ஓட்டிக் கொண்டார். ஸ்டாலினுடன் ஒப்பிட்டால், ட்ராட்ஸ்கி பல படிகள் கீழே இருக்கிறார். லெனினுடன் எப்போதும் விவாதம், சச்சரவு. லெனினின் கொள்கைகளில் பெரிய ஈடுபாடு எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் , லெனினுக்கு எதிரான தனது பார்வையை பல்வேறு சந்தர்ப்பங்களில் அழுத்தமாக் பதிவு செய்தவர் இவர்.

தவிரவும் ஸ்டாலினை அறிந்திருந்த அளவுக்கு ட்ராட்ஸ்கியை மக்கள் அறிந்திருக்கவில்லை. அவரை ஓர் அறிவிஜீவியாக மட்டுமே எல்லோரும் பார்த்தார்கள். ஆனால் ஸ்டாலின் வளைத்துக் கட்டி வேலை செய்பவர். அதே சமயம், லெனினே ஆச்சரியத்துடன் பாராட்டும் வகையில் மார்க்ஸிய மெய் ஞானம் கொண்டவர். எல்லாவற்றையும் விட, லெனினின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் அளித்த ஒரு பதிலே மக்களை வசீகரித்துவிட்டது.
ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.

"லெனினுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் தலைமைப் பண்பு யாரிடம் இருப்பதாக நினைக்கிறீர்கள்? அவர் இடத்தில் யார்?"

"லெனின் இருந்த இடத்தில் வேறு ஒருவரையும் அமர வைக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நபர் நம்மிடம் இல்லை. வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். ஒரு கமிட்டியை உருவாக்கி, அந்த கமிட்டியைத் தலைமைத் தாங்கச் சொல்லலாம் !"

அடுத்து நான் தான் என்று ஸ்டாலின் அறிவித்துவிடவில்லை. ட்ராட்ஸ்கியால் இப்படி பதிலளித்திருக்க முடியுமா?
எனில், இருவரில் யார் தகுதியான ஆளாக இருக்க முடியும்?

ட்ராட்ஸ்கியை பற்றி நூலில் இருந்து:

ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்ட அடுத்த ஆண்டு ட்ராட்ஸ்கி கான்ஸ்டாண்டிநோபிள் திரும்பினார். ஸ்டாலினைப் பிடிக்காத எல்லோருக்கும் ட்ராட்ஸ்கிதான் ஆதர்சனம். குறிப்பாக, மேற்குலக நாடுகளுக்கு ட்ராட்ஸ்கி என்றால் பரம இஷ்டம். வெறும் வாயை மென்று கொண்டிருந்த அவர்களுக்கு அவ்வப்போது அவல் போடுவார் ட்ராட்ஸ்கி.

ஸ்டாலினை விமர்சிப்பார். கம்யூனிஸ்ட் கட்சியை விமரிசிப்பார். மறைமுகமாக லெனினின் சிந்தனைகளை, எழுத்துக்களை, கொள்கைகளை எதிர்ப்பார். சோவியத், பாட்டாளி வர்க்கம், தொழிலாளர்கள், கூட்டுறவு பண்ணை எல்லாம் சுத்த ஹம்பக் என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவார்.

ட்ராட்ஸ்கி சோவியத்தில் இல்லாத சமயத்தில் கூட பிற நாடுகள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தன. ஸ்டாலின் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்று அவரை அவ்வப்போது சீண்டிக் கொண்டிருந்தன. ட்ராட்ஸ்கி எழுதிய சில நூல்களின் பட்டியலைப் பார்த்தாலே அவரது சிந்தனை யோட்டத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். 'ஏமாற்றப்பட்ட புரட்சி' 'அபாயத்தில் சோவியத் பொருளாதாரம்' 'ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி' 'ஸ்டாலினின் மோசடி சிந்தனை' , இன்ன பிற.

என் பணி சதி செய்து கிடப்பதே என்று துடிப்புடன் ஸ்டாலினைச் சுற்றி சுற்றி வந்தார் ட்ராட்ஸ்கி.



"ஸ்டாலின் - சகாப்தம்"


கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது மக்கள் அதனை "ஸ்டாலின் சகாப்தம்" என்று சொல்லக் கூடும். கோடிக்கணக்கான மக்கள் உலகத்தின் முதல் சோசலிச நாட்டை நிர்மாணித்தார்கள். ஆனால் அந்த வேலைக்குப் பொறியாளராக இருந்தவர் அவர்தான். விவசாய நாடாகிய ருஷ்யா இதைச் செய்ய முடியும் என்ற சிந்தனையை முதன் முதல் ஒலித்தவர் அவர்தான். அது முதற் கொண்டே அனைத்தின் மீதும் - எல்லா நன்மைகள் மீதும் எல்லாத் தீமைகள் மீதும் அவரது முத்திரை பதிந்தது.

அந்த சகாப்தத்தைத் தொகுத்துச் சொல்லும் நேர வந்து விடவில்லை. ஆயினும் அந்த முயற்சியை செய்து பார்க்கத்தான் வேண்டும். ஏனென்றால் அது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகெங்கிலும் பலருடைய நம்பிக்கைகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. முதன் முதலாக சோசலிசம் நிர்மாணிக்கப்பட்ட காலத்தில் ஆயிரக்கணாக்கான கொடிய அநீதிகளும், கடுமையான அடக்கு முறைகளும் நேரிட்டன என்று குருஷ்சேவ் வெளிப்படுத்தியுள்ள செய்திகளால் நல்ல நெஞ்சங்கள் கலக்கமடைந்துள்ளன. அவர்கள் கேட்கிறார்கள்; இது அவசியம்தானா? எப்போதுமே அது தான் சோசலிசத்திற்கான பாதையா? அல்லது ஒரு நபரின் மதிதானா இது?

ருஷ்யர்கள் இப்படி கேட்பதில்லை. மனிதகுல முன்னேற்றம் அனைத்தும் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதுதான்; போரில் வீரர்கள் இறப்பது மட்டுமல்ல, அநியாய மனிதச் சாவுகளும் அதற்கு விலையாகின்றன என்பது அவர்களுக்கு ( ருஷ்யர்களுக்கு) தெரியும்.

ஸ்டாலின் தலைமையில் சோசலிசத்தைக் கட்டிக் கொண்டிருந்த போது அனுபவித்த தீமைகள் முழுவதும் - அவை நேரிட்டது அவசியத்தாலென்றாலும், பிழையாலென்றாலும், குற்றத்தாலென்றாலும் - தலையீட்டுப் போர்களில் மேற்கத்திய உலகத்தின் முரட்டுப் பிடிவாதத்தாலும், இட்லர் படையெடுப்பாலும் தாங்கள் அனுபவித்த தீமைகளை விட மிகக் குறைவே, "இரண்டாவது போர் முனையைத்" துவக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அமெரிக்கா செய்த தாமதத்தினால் தாங்கள் அனுபவித்த தீமைகளைவிடவும் கூட மிகக் குறைவே என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

வரலாற்றின் மாபெரும் செயலூக்கமிக்க சகாப்தங்களில் ஒன்றாக அது திகழ்ந்ததுல் ஒருக்கால் அவற்றிலேயே ஆகச் சிறந்ததாய் அது இருக்ககூடும். ருஷ்யாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகத்தின் வாழ்க்கையே அது மாற்றியது. அதனைப் படைத்தவர்களில் யாரையும் அது மாற்றாமல் விடவில்லை. கோடானு கோடி வீரர்களையும், சில சைத்தான்களையும் அது பிரசிவித்தது. சிறிவர்கள் இப்போது அதனைத் திரும்பிப் பார்த்து, அதன் குற்றங்களுக்குப் பட்டியல் தயாரிக்கலாம். ஆனால் போராட்டத்தினூடே வாழ்ந்தவர்கள் - அதனால் இறந்த பலரும் கூட - நடந்து கொண்டிருந்த கட்டுமானப் பணிக்கான செலவின் ஒரு பகுதியாகக் கருதித் தீமையை ஏற்றுக் கொண்டனர்.

இட்லரை எதிர்த்து நிற்க முடியாமல் பிரான்ஸ் நாட்டுப்படை பதினோரே நாட்களில் மண் கவ்வியதே ஆயிரமாண்டுகள் நீடிக்கக்கூடிய புதிய இருண்ட காலம் வந்து விடுமென்று ஐரோப்பா அஞ்சிக் கொண்டிருந்ததே, அந்த 1940-ஆம் வருட ஐரோப்பாவை மறப்போமா ? அடிமை இனங்களுக்கெல்லாம் தாங்களே ஆண்டை இனமென்று முரசு கொட்டியவர்கள் மனித குலம் முழுவதன் மீதும் நடத்திய கொடுந்தாக்குதலையும், ஸ்டாலின் கிராடின் ஆண்களும் பெண்களும் இந்தத் தாக்குதலை முறியடித்த விதத்தையும் மறப்போமா? அவர்கள் அசுர வேகத்தில் நிர்மாணித்தார்கள், நிறைய விரயங்களோடு நிர்மாணித்தார்கள்; ஆனால் அவர்கள் நிர்மாணித்த வலிமைதான் உலகமே சுருண்டு கொண்டிருந்த போது நிமிர்ந்து நின்றது. இதற்காக உலகம் இன்று அவர்களுக்குக் கடனாளியாகி விட்டது.

இதற்காக மட்டுமல்ல, ஸ்டாலின் சகாப்தம் உலகத்தின் முதல் சோசலிச நாட்டையும், இட்லரைத் தடுத்து நிறுத்திய வலிமையையும் நிர்மாணித்தது மட்டுமல்ல. மனித குலத்தில் மூன்றிலொரு பங்கான சோசலிச நாடுகள் உருவாக்கி அனைத்துக்குமான பொருளாதார அடித்தளத்தை நிர்மாணித்தது.

அந்த சகாப்தத்தின் தீமைகளுக்குப் பல காரணங்களுண்டு. ருஷ்யாவின் கடந்த காலப் பழக்கங்கள், விரோதமான சுற்றி வளைப்பின் நெருக்குதல், இட்லரின் ஐந்தாம் படை போன்ற ஒரு காரணங்களுண்டு. முதற்பெரும் காரணம் என்னவென்றால் , மேலையுலகின் ஜனநாயகத் தன்மையுள்ள, தொழில் நுட்பத்தில் வளர்ச்சி பெற்ற தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை முதன் முதலில் கட்டுகின்ற பணியை எழுத்தறிவற்ற, தொழில்நுட்பத்தில் பிற்பட்ட ஒரு விவசாய மக்கள் சமூகத்திடம் விட்டு விட்டது என்பதே; இப்பணிக்குத் தாங்கள் தயாராயில்லை என்பது அம்மக்களுக்குத் தெரிந்திருந்தது; ஆயினும் அவர்கள் அதனைச் செய்து முடித்தனர்.

அன்னா லூயி ஸ்ட்ராங்...

தோழர் ஸ்டாலின் மீதான அவதூறு அனைத்திற்கும் இந்நூலில் சாட்டையடி தரப்பட்டு உள்ளது. கோடாண கோடி மக்கள் வறுமையினாலும், அமெரிக்க ஆக்கிரமிப்பினாலும் துன்புற்று மடிந்து கொண்டு இருக்கும் இன்றையச் சூழ்நிலையில் இதனை மாற்றி அமைக்க சோசலிசம் ஒன்றே தீர்வாக இருக்க முடியும். அத்தகைய சோசலிசத்தை உலகின் முதன் முதலில் உருவாக்கியவர் தோழர் ஸ்டாலின்.

"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள்.
ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள்.

ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.

ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.

சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.

"மக்களின் ஈர்ப்பு சக்தியாக சோஷலிசம் நீடிக்கும் வரை மாபெரும் புரட்சியாளரான ஸ்டாலின் பெயரும் நிலைத்து வாழும்."

1 comment:

  1. எந்த சர்வாதிகாரியும் ஸ்டாலினை ஸ்டாலின் தன் மக்களை கொன்று குவிக்கவில்லை இந்த மனித மிருகத்தை மாமனிதன் என்று சொல்வது வேடிக்கை

    ReplyDelete