Saturday, October 6, 2012

இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்று பொருள் முதல்வாதமும்


இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்று பொருள் முதல்வாதமும் 
- ஸ்டாலின்
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு எனும் நூலைத் தொகுப்பதற்காக தோழர் ஸ்டாலின் இந்த கட்டுரையை 1938ல் எழுதினார். அந்த நூலின் 4 வது அத்தியாயத்தில் இரண்டாவது பிரிவாக இந்த கட்டுரை இடம் பெற்றது.
இயற்கையின் இயக்கவியல், டூரிங்குக்கு மறுப்பு, விஞ்ஞான சோசலிசமும் கற்பனாவாத சோசலிசமும் ஆகிய நூல்களிலிருந்து எங்கெல்ஸின் மேற்கோள்களும், மூலதனம் நூலிலிருந்து மார்க்சின் மேற்கோள்களும் எடுக்கப்பட்டுள்ளன. 
"கம்யூனிசத்திற்குத் தத்துவ அடிப்படையாக இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப்  பொருள் முதல்வாதமும் அமைந்துள்ளன. மார்க்சிய கட்சிக்கு இவை தத்துவ அடிப்படையாக உள்ளன. ஆகவே, இந்த தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு கட்சி உறுப்பினரது முக்கிய கடமையாகும். இவற்றை ஆழ்ந்து கற்றுணர வேண்டியது அவசியமாகும்" - தோழர் ஸ்டாலின் மேற்படி நூலில் சொன்னது. 
1. இயற்கை தோற்றங்களை பரிசீலித்து உணருவதற்கு இயக்கவியலையும் பொருள் முதல் வாதத்தையும் பயன்படுத்துவதால் இந்த கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. 
2. சமூக வாழ்க்கையின் மாற்றங்களை இயக்கவியல் பொருள்முதல் வாத அடிப்படையில் ஆராய்வது வரலாற்று பொருள் முதல்வாதம் எனப்படுகிறது. 
3. இயக்கவியலின் தத்துவ அடிப்படையை உருவாக்கியவர் ஹெகல் ஆக இருந்தாலும் மார்க்ஸ், எங்கெல்சின் இயக்கவியல் அணுகுமுறை ஹெகலின் அணுகுமுறையிலிருந்து அடிப்படையில் மாறுபட்டதாகும். ஹெகலின் தத்துவம் கருத்து முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இயக்கவியலின் பகுத்தறிவு பூர்வமான சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மேன்மேலும் வளர்ப்பதன் மூலம் அதற்கு நவீன அறிவியல் வடிவம் கொடுத்தார்கள். 
4. மார்க்ஸ் - மூலதனம் முதல் தொகுதியில்.  தனது அணுகுமுறை ஹெகலின் அணுகுமுறைக்கு நேர் எதிரானது என்கிறார். சிந்தனையின் இயக்கப் போக்கை ஹெகல் சுயேச்சையானதாக மாற்றி விடுகிறார். சிந்தனையின் இயக்கம் உலகை படைத்து விடுகிறது என்றும் யதார்த்த உலகம் என்பது கருத்தின் வெளித்தோற்றம் என்றும் ஹெகல் கூறுகின்றார். ஆனால் மார்க்ஸ் தனது உலகப் பார்வை - மனதிலிருக்கும் எண்ணம் பொருளியல் உலகத்தின் பிரதிபலிப்பைத் தவிர வேறு இல்லை. 
5. பொருள்முதல் வாதத்துக்கு முன்னோடியாக பயர் பாக் என்பவரை குறிப்பிடுகிறார்கள் மார்க்சும் எங்கெல்சும். பயர்பாக்கின் பொருள் முதல் வாதக் கோட்பாடு மதம் தொடர்பான தார்மீக நெறிமுறைக்குள் சிக்கிக் கிடந்தது. பாயர் பாக் பொருள்முதல் வாத கருத்துக்களை கொண்டிருந்தாலும் அவர் பொருள் முதல் வாதம் என்ற பெயரையே வெறுத்தார். அவரது மத்ததைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் கருத்துக்களைப் படித்தாலே அவரது கருத்து முதல் வாதம் வெட்ட வெளிச்சமாகும் என்று எங்கெல்ஸ் சொல்லியிருக்கிறார். 
6. இயக்கவியல் என்பது ஆங்கிலத்தில் டைலக்டிக்ஸ். இதன் மூலச் சொல்லான கிரேக்க டைலெகோ என்பதன் பொருள் உரையாடல் அல்லது விவாதித்தல் என்பதாகும். சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதும் கருத்துக்களை மோத விடுவதும்தான் உண்மையைக் கண்டறிவதற்கான சிறந்த வழி என்று பழங்கால  அறிஞர்கள் கருதினார்கள். இதே முறை இயற்கை தோற்றங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. இயக்கவியல் அணுகுமுறைப்படி இயற்கை பொருட்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன, தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. முரண்பாடுகள் முற்றுவதன் மூலமாகவும் எதிர் எதிரான சக்திகள் செயலாற்றுவதன் மூலமாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என்று இயக்கவியல் கருதுகிறது. 
7. இயக்கவியல் என்பது மாறா நிலை தத்துவத்திற்கு எதிர் தத்துவம் ஆகும்.  மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை

அ. இணைக்கப்பட்டு நிர்ணயமாகும் -  இயற்கை 
1. இயற்கை தற்செயலான குவியல்களால் ஆனது என்றும் அவற்றுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்றும் சொல்கிறது இயக்க மறுப்பியல் - மெட்டா பிசிக்ஸ் - மாறாநிலை தத்துவம். இயற்கை பொருட்கள் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டவை, முழுமையின் ஒரு பகுதி, சார்புத் தன்மை உடையவை, ஒன்றை மற்றொன்று தீர்மானிக்கும் தன்மை உடையவை என்று இயக்கவியல் தத்துவம் கூறுகிறது. 
2. அதாவது, ஒரு தோற்றத்தை பரிசீலிக்கும் போது அதைச் சுற்றியுள்ள அதை பாதிக்கும் அனைத்து தோற்றங்களுடனும் இணைத்து அவற்றையும் கருத்தில் கொண்டுதான் புரிந்து கொள்ள முடியும்.  

ஆ. தொடர்ச்சியான இயக்கமும் மாற்றமும் உடைய இயற்கை
1. இயற்கை தொடர்ந்து இயக்கத்தில் தன்னை மாற்றிக் கொள்வதாக புதுப்பித்துக் கொள்வதாக இருக்கிறது. இது மாறாநிலைத் தத்துவத்திற்கு எதிர்மாறானது. இயற்கையில் ஏதாவது ஒன்று அழிந்து கொண்டும் ஏதாவது ஒன்று புதிதாக தோன்றி கொண்டும் இருக்கின்றன என்றும் இயக்கவியல் கருதுகிறது. 
2. பல்வேறு தோற்றங்களின் தொடர்புகளையும் சார்புகளையும் மட்டுமின்றி இயக்கம், மாற்றம், வளர்ச்சி, தோற்றம், மறைவு இவற்றை சேர்த்து ஆராய வேண்டும்.
3. குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருள் நிலை பெற்றதாக தோன்றலாம். ஆனால் அது கொஞ்ச கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பொருள் புதிதாக தோன்றியிருந்தாலும் வளர்ந்து வருவதாக வெல்லற்கரியதாக விளங்குகிறது. முதலாளித்துவ சமூகத்தில் முதலாளித்துவம் அழிந்து கொண்டிருப்பது, பாட்டாளி வர்க்கம் வளர்ந்து கொண்டிருப்பது. புராதன பொதுவுடமை சமூகத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருப்பது. 
4. எங்கெல்ஸ் - இயற்கையின் எல்லா பொருட்களும் தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டிருக்கின்றன. எந்நேரமும் இயங்கிக் கொண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. பொருட்களை பரஸ்பர தொடர்பிலும், இயக்கப் போக்கிலும், தோன்றி வளர்ந்து மறையும் நிலைமையிலும் ஆராய வேண்டும். 

இ. இயற்கையின் அளவு மாற்றங்கள் பண்பு நிலை மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன
1. வளர்ச்சி என்பது சாதாரணமாக வளர்ந்து கொண்டிருக்கும் போக்காக மாறாநிலை தத்துவம் கருதுகிறது. அதன் படி அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களுக்கு கொண்டு போவதில்லை. இயக்கவியலின் படி அளவில் ஏற்படும் சிறு சிறு மாறுதல்கள் பகிரங்கமான அடிப்படையான பண்பு மாற்றத்துக்கு வழி வகுக்கின்றன என்று இயக்கவியல் கருதுகிறது. 
உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அடிப்படையான பண்பு மாற்றம், அதற்கு முந்தைய சமூகத்தில் சிறு சிறு மாற்றங்கள் - தனி நபர், மனித உறவுகள், உற்பத்தி முறைகளில்- நடப்பதன் மூலம் சாத்தியமாகிறது.  
அத்தகைய பண்பு மாற்றங்கள் படிப்படியாக நிகழ்வதில்லை. அவை அதி விரைவாக திடுதிடுப்பென்று நிகழ்கின்றன. அதனால் சமூக மாற்றம் சமரச, சமாதான வழியின் மூலம் சாத்தியம் என்று சொல்லும் திரிபுவாதிகளின் கோட்பாட்டை இது மறுக்கிறது. சிறு சிறு அளவு மாற்றங்களால் வந்தடைந்ததும் பண்பு மாற்றம் ஒரு புரட்சியாக வெடிக்கிறது.
அணுவினுள் ஆற்றல் மட்டங்கள், தண்ணீர் கொதிப்பவை போன்ற இயற்கை அறிவியல் நிகழ்வுகளிலும் இதை பார்க்கலாம். நிலையான சுற்றுப் பாதையில் இருக்கும் எலக்ட்ரானுக்கு சிறு சிறு ஆற்றல் அளித்தால் அது நிலை மாறுவதில்லை. ஆற்றல் அதிகரிப்பு குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும் அது ஒரு துள்ளு துள்ளி அடுத்த ஆற்றல் மட்டத்துக்கு போய் விடுகிறது.
அதே போல தண்ணீர் 99 டிகிரி வெப்பம் வரை நீராவியாக மாறுவதில்லை, 100வது டிகிரி வெப்பத்தை அடைந்த வுடன் ஒரே துள்ளலாக நீராவியாக மாறி விடுகிறது. 
2. இந்த வளர்ச்சி சுற்றிச் சுற்றி வரும் வட்டமாக இருப்பதில்லை. மாறாக படிப்படியாக உயர் நிலைக்குப் போகும் சுழல் வட்டமாக இருக்கிறது. எளிமையான நிலையிலிருந்து சிக்கலான நிலைக்கு மாறிச் செல்கிறது. 3.எங்கெல்ஸ்: இயக்கவியலின் ஆதாரமாக அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய புதிய ஆதாரங்களை  தருகின்றன. அவை இயற்கை இயக்கவியலின்படி அமைந்ததே என்று நிறுவியிருக்கின்றன. இதில் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு முக்கியமானதாகும். உலகின் தாவர, விலங்கு இனங்களும் மனிதனும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பயனாக ஏற்பட்டவையே. இது கோடானு கோடி ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதை நிருபித்து மாறாநிலை தத்துவப் பார்வைக்கு மரண அடி கொடுத்தார். 
இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒரு பொருளின் அளவு மாற்றங்கள் குணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் போதுதான் நிகழ்கிறது. பொருளின் உள்ளிருக்கும் இயக்கம் காரணமாக அல்லது வெளியிலிருந்து செலுத்தப்படும் இயக்கம் காரணமாக இந்த மாற்றம் நிகழலாம். 
இயற்பியல் உதாரணம் - சூடுபடுத்தும் போது தண்ணீர் நீராவி அல்லது பனிக்கட்டி ஆதல், மின்சாரம் செலுத்தும் போது உலோக இழையில் வெளிச்சம் ஏற்படுதல், சூடு படுத்தும் போது உலோகம் உருகுதல், திரவத்தின் கொதி நிலை அல்லது உறை நிலை (அழுத்தத்தைப் பொறுத்தது). வாயுக்கள் சரியான அழுத்தம் வெப்பநிலையில் திரவமாகி விடுகின்றன. மாற்றத்துக்கான இந்த புள்ளிகள் இயற்பியல் மாறிலிகளாக இருக்கின்றன. அதாவது குறிப்பிட்ட வெப்பநிலை அந்த திரவத்தின் கொதிநிலை மாறிலி, குறிப்பிட்ட குளிர் நிலை அதன் உறை நிலை மாறிலி. அளவு மாற்றங்கள் பண்பு மாற்றமாக வெளிப்படும் கட்டங்களை இந்த புள்ளிகள் குறிக்கின்றன. 
வேதியல் உதாரணங்கள்: வெவ்வேறு அளவில் சேரும் போது வெவ்வேறு பண்புடைய சேர்மங்கள் உருவாகின்றன. உதாரணமாக இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் ஆக்சிஜன் வாயுவாகவும், மூன்று ஆக்சிஜன் அணுக்களை கொண்ட பொருள் ஓசோனாகவும் இருக்கின்றன. இரண்டுக்கும் பெரிதும் வேறுபட்ட பண்புகள் இருக்கின்றன. நிறத்திலும் தன்மையிலும் ஓசோன் ஆக்சிஜனிலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஆக்சிஜன் - நிறமற்றது, இரண்டு இரட்டையாக்கப்படாத எலக்ட்ரான்களை கொண்டிருக்கிறது. தண்ணீரில் நன்கு கரையும். (-182.95 நீர்ம நிலை, -218.79 திட புள்ளி) 
ஓசோன் - நீல நிறம். நீர்ம ஓசோன் (-112 ), திட ஓசோன் (-193 ) இரண்டுமே நீல நிறம். ஓசோன்தான் வானத்தை நீல நிறமாக காட்டுகிறது. தண்ணீரில் சிறிதளவே கரையும். இதன் எலக்ட்ரான்கள் அனைத்தும் இரட்டையாக இருக்கின்றன. 
நைட்ரஜன் அல்லது கந்தகத்துடன் ஆக்ஸிஜன் வெவ்வேறு விகிதங்களில் கூடி வேறுபட்ட பண்புகளை கொண்ட வெவ்வேறு சேர்மங்களை உருவாக்குகிறது. அவை ஒவ்வொன்றும் பண்பு ரீதியில் வேறுபட்டவை.  

        Nitric oxide, also known as nitrogen monoxide, (NO), 
nitrogen(II)oxide Nitrogen dioxide (NO2), 
nitrogen(IV) oxide Nitrous oxide (N2O), 
nitrogen(I) oxide Nitrosylazide (N4O), 
nitrogen(I) oxide + diatomic nitrogen Nitrate radical (NO3), 
nitrogen(VI) oxide Dinitrogen trioxide (N2O3), 
nitrogen(III) oxide Dinitrogen tetroxide (N2O4), 
nitrogen(IV) oxide Dinitrogen pentoxide (N2O5), 
nitrogen(V) oxideTrinitramide (N(NO2)3)


டூரிங் இயக்கவியலை மறுப்பதற்கு ஹெகலை கடுமையாக விமர்சித்தாலும் அவரது ஆய்வுரையை தன்னுடையதாக பயன்படுத்திக் கொண்டார். உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் தோன்றுவதற்கான பாய்ச்சலை குறித்தது அது. குறிப்பிட்ட தீர்மானமான கட்டத்தை அடைந்தவுடன் பொருளில் ஏற்படும் அடுத்த சிறிய அளவு மாற்றம் பாய்ச்சலாக பண்பு மாற்றத்தை உருவாக்குகிறது. 

ஈ. முரண்பாடுகள் இயற்கையில் உள்ளார்ந்து இருக்கின்ற
1. ஒவ்வொரு பொருளின் உள்ளும் எதிரெதிர் முரண்பாடுகள் அடங்கியுள்ளன. அவற்றுக்கிடையேயான போராட்டம்தான் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாக மாறுவதற்கான காரணமும் எதிர்மறைகளுக்கிடையேயான இந்த போராட்டம்தான். 
2. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போவது நேரான ஒத்திசைவான நகர்வு இல்லை. அவை முரண்பாடுகளின் போராட்டத்தின் விளைவுகளே ஆகும். 
3. லெனின் இயக்கவியல் என்பது பொருட்களுக்குள்ளே பொதிந்திருக்கும் முரண்பாடுகளை ஆய்வதுதான். வளர்ச்சி என்பது எதிர்மறைகளுக்கிடையே நடக்கும் போராட்டத்தையே குறிக்கிறது. 
இவைதான் மார்க்சிய முறையிலான இயக்கவியல் அணுமுறையின் பிரதான அம்சங்கள் ஆகும். 
வரலாற்று பொருள் முதல்வாதம் சமூக வாழ்க்கையையும் மனித வரலாற்றையும் ஆய்வதற்கு இந்த இயக்கவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை இப்போது புரிந்து கொள்ள முடியும். சமுதாயத்தின் வரலாற்றுடனும் பாட்டாளி வர்க்க கட்சியின் நடைமுறை வேலைகளுடனும் இந்த கோட்பாடுகளை பொருத்திப் பார்க்க வேண்டும். 

உலகின் எல்லா பொருட்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றால் மனித வரலாற்றில் சமுதாய அமைப்புகளையும் இயக்கங்களையும் எப்படி மதிப்பிட வேண்டும்? என்றும் மாறாத கோட்பாடுகள் அல்லது முன் முடிவுகளுடனோ வரலாற்றை அணுகக் கூடாது. குறிப்பிட்ட சமுதாய அமைப்பும் அதோடு தொடர்புடைய சமுதாய இயக்கமும் தோன்றுவதற்கு காரணமான நிலைமைகளை ஆராய வேண்டும். இப்போது அடிமை முறை கொடுமையானதாகவும் பிற்போக்கானதாகவும் தோன்றலாம். ஆனால், புராதன பொதுவுடமை சமுதாயம் சிதைந்து வரும் சூழலில் அடிமை சமூக அமைப்பு ஒரு முன்னேற்றத்தை குறிக்கிறது. 1905ல் ரஷ்யாவில் ஜாரிசமும் முதலாளித்துவமும் இருந்ததையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிலப்பிரபுத்துவத்தை விட முன்னேறிய சமூக அமைப்பான முதலாளித்துவத்த ஜனநாயகம் வேண்டும் என்று கோரியது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்த வாதிகளை இந்த கண்ணோட்டத்துடன் அணுகலாம். 
ஆனால் சோவியத் சோசலிச குடியரசுகளின் காலத்திலோ, சீனாவிலோ ஒரு முதலாளித்துவ குடியரசு வேண்டும் என்று சொல்வது பிற்போக்கானதாகும். எதுவுமை நிலைமை, காலம், இடம் இவற்றைப் பொறுத்துதான் இயங்குகின்றன. 
சோவியத் யூனியனில் ஸ்டாலின் காலத்துக்குப் பிறகும் சீனாவில் மாவோ காலத்திற்கு பிறகும் திரிபுவாதிகள் கம்யூனிசத்தை நோக்கிய சோசலிச போராட்டத்தை கைவிட்டு முதலாளித்துவ அமைப்பை நிறுவியிருக்கிறார்கள். சமூக வளர்ச்சி என்பது நேர் கோட்டு பாதையில் நடக்காமல் முன்னும் பின்னுமாக முற்போக்கும் பிற்போக்கும் இடையேயான போராட்டத்தினூடாகவே இயங்கி செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். 
சமூக தோற்றங்களைப் பற்றிய இத்தகைய வரலாற்று கண்ணோட்டம் இல்லாமல் வரலாற்றைப் பற்றிய அறிவியல் பூர்வமான அணுகுமுறை இருக்க முடியாது என்பது தெளிவு. வரலாறு என்பது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகவும், தனி மனிதர்களின் சாகசங்களாகவும் இருப்பதாகவும் அணுகுபவர்களால் வரலாறு உருக்குலைந்து போவதிலிருந்து இதுதான் பாதுகாக்கிறது. 
உலகம் இயங்கிக் கொண்டிருப்பதும் பழமை மறைந்து புதுமை தோன்றுவதும் உண்மை என்றால் மாறாத சமூக அமைப்பு என்று எதுவும் இல்லை. சொத்துரிமை, தனி மனித உரிமை தொடர்பான காலத்தால் மாறாத கோட்பாடுகள் இருக்க முடியாது. திருக்குறள் உலகப் பொதுமறை என்று எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்துவது என்பது சாத்தியமில்லாதது. பண்ணையாருக்கு விவசாயி அடிமை, முதலாளி அதிகாரம் செலுத்த தொழிலாளி உழைக்க வேண்டும் என்ற நிலைமைகள் நிரந்தரமாக இருக்க முடியாது. நிலப்பிரபுத்தும் நீக்கப்பட்டு முதலாளித்துவம் உருவானது போல முதலாளித்துவம் நீக்கப்பட்டு சோசலிசம் உருவாவதும், அதிலிருந்து கம்யூனிசம் உருவாவதும் சாத்தியமே. சமுதாயத்தில் தற்போது ஆதிக்கம் செலுத்தினாலும் வளர்ச்சி அடையாத எதிர்காலம் இல்லாத பிரிவுகளை ஆதாரமாக கொள்ளக் கூடாது. எந்த பிரிவு வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறதோ, எதிர்காலத்தை உருவாக்குவதாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே வரலாறு வளர்ச்சி அடையும். 
1880-90 ஆண்டுகளில் மார்க்சிஸ்டுகளுக்கு நரோத்னிக்குகளுக்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாட்டாளி வர்க்கம் சிறுபான்மையாகவும் விவசாயிகள் பெரும்பான்மையினராகவும் இருந்தனர். இருப்பினும் பாட்டாளி வர்க்கம் வர்க்க ரீதியில் வளர்ந்து கொண்டே வர விவசாயிகள் வர்க்க ரீதியில் குறைந்து கொண்டே போயினர். எனவே மார்க்சிய வாதிகள் பாட்டாளி வர்க்கத்தை தமது கண்ணோட்டத்துக்கு ஆதாரமாக கொண்டனர். பாட்டாளி வர்க்கம் பெருமளவு வளர்ச்சி பெற்று பிற்காலத்தில் வரலாற்றை உருவாக்கும் சக்தியாக வளர்ந்தது என்பதை நாம் அறிவோம். 
நமது பார்வை முன்னோக்கி இருந்தால்தான் தவறிழைக்காமல் இருக்க முடியும். 
அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாக வெளிப்படும் என்றால் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் நடத்தும் புரட்சி தவிர்க்க முடியாதது. முதலாளித்துவத்திலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறுவதற்கான அளவு மாற்றங்கள் சிறு சிறு அளவில் நடந்தாலும் அதிகார மாற்றம் புரட்சி என்ற பண்பு ரீதியான மாற்றத்தின் மூலம்தான் நடக்க முடியும். கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டுமானால் சீர்திருத்த வாதத்தை விட புரட்சி வாதம்தான் பொருத்தமானது. 

மாவோயிஸ்டுகள் அளவு மாற்றங்கள் பண்பு மாற்றத்துக்கு இட்டு செல்வதை புரிந்து கொள்ளாமல் பண்பு மாற்றத்துக்கான சூழ்நிலை எப்போதும் நிகழ்வதாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். சீர்திருத்த வாத போலி கம்யூனிஸ்டுகள் அளவு மாற்றங்கள் மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதும் என்று பண்பு மாற்றத்துக்கான தயாரிப்புகளை நிராகரிக்கிறார்கள். உண்மையான மார்க்சிய பாதை சமூகத்தின் நிலைமைகளை புரிந்து கொண்டு அதன் தோற்றம், வளர்ச்சி மற்றும் மாற்றங்களை தொடர்ந்து அவதானித்து தேவையான அளவு மாற்றங்களை செய்து பண்பு மாற்றத்தை வந்தடைவதாகும். 

உள்ளிருக்கும் முரண்பாடுகள் வெளிப்படுவதன் மூலம் எதிர் சக்திகளின் மோதல்களின் மூலம்தான் வளர்ச்சி ஏற்படுகிறது என்றால் சமாதான சக வாழ்வு அல்லது அமைதியான வாழ்க்கை என்பது இயற்கையில் இல்லாதது. போராடும் வர்க்கங்களுக்கிடையேயான முரண்பாடுகள் போராட்டங்களாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளை பூசி மொழுகவோ, சமரசப் படுத்தவோ செய்யாமல் அதை அம்பலப்படுத்தி வர்க்கப் போராட்டத்தின் மூலம் பிற்போக்கு சக்திகளை பலவீனப்படுத்தி முற்போக்கு உழைக்கும் மக்களை பலப்படுத்த வேண்டும். 
பாட்டாளி வர்க்கக் கொள்கையை சமரசமில்லாமல் பின்பற்ற வேண்டும். சீர்திருத்த வாதக் கொள்கையை பின்பற்றக் கூடாது. முதலாளித்துவம் தானாக வளர்ந்து சோசலிசமாக ஆகி விடும் என்ற கொள்கை நடைமுறைக்கு விரோதமானது. சமூக வாழ்க்கையையும் மனித வரலாற்றையும் ஆராய்வதற்கு பின்பற்றப்படும் மார்க்சிய இயக்கவியல் முறை என்பது இதுதான். 

மார்க்சிய தத்துவ பொருள் முதல்வாதம்

அ. எங்கும் நிறைந்த பரம்பொருளின் உருவமே உலகம் என்றோ முழுமையான ஒரு கருத்தின் வடிவமே இந்த உலகம் என்பது கருத்து முதல் வாதம். உலகம் இயல்பிலேயே ஒரு பொருளாக இருக்க, இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்களின் வெவ்வேறு வடிவங்கள்தான் உலகின் பல்வேறு தோற்றங்கள் என்று மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் சொல்கிறது. பொருளின் இயக்க விதிகளின்படி உலகம் வளர்கிறது. அதற்கு கடவுள் தேவையில்லை. 
எங்கெல்ஸ்: இயற்கையை உள்ளது உள்ளபடியே உணர்ந்து கொள்வதுதான் பொருள் முதல்வாதம். யாருடைய கருத்தும் உண்மையை உணர்ந்து ஆய்ந்து முடிவுக்கு வரும் நமது அறிவியல் அணுகுமுறையை பாதிக்கக் கூடாது. அது மார்க்சின் அல்லது லெனினின் கருத்தாக இருந்தாலும் சரி. 
ஹெராக்ளிடஸ் - உலகம் அனைத்தும் உள்ளடங்கியது. கடவுளாலும் மனிதனாலும் படைக்கப்பட்டதல்ல. மங்கியும் பெருகியும் வரும் தீப்பிழம்பு போல உலகம் வளர்கிறது.இதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அருமையான விரிவுரை என்று லெனின் சொன்னார். 
ஆ. உணர்வுதான் முதன்மையானது, மனித உணர்வுகளிலிருந்து எண்ணங்களிலிருந்தும்தான் உலகின் பொருட்கள் உருவாகின்றன என்று கருத்து முதல்வாதம் கருதுகிறது. பொருள், இயற்கை, வாழ்நிலை என்பவைதான் உண்மை, புறநிலையாக இருப்பவை. அவை நமது உணர்வுக்கு அப்பால் சுயேச்சையாக இயங்குபவை அவை. பொருள்தான் உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் ஆதாரம். கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் தோற்றுவிக்கும் மூளையும், நரம்பு மண்டலமும் ஒரு பொருளாகவே இருக்கின்றன. பொருளின் பிரதிபலிப்பே உணர்வு, வாழ்வின் பிரதிபலிப்பே உணர்வு. 
சிந்தனை என்பது மூளை என்ற பொருளின் விளைவு. மூளைக்கு வெளியில் சிந்தனை இருக்க முடியாது. இல்லவும் இல்லை. 
எங்கெல்ஸ்:
தத்துவ விசாரத்தின் அடிப்படை கேள்வி, உலகத்துக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவைப் பற்றியதுதான். இந்த கேள்விகளுக்கு கொடுக்கும் விடையை பொறுத்து தத்துவ வாதிகள் பொருள் முதல் வாதிகள் கருத்து முதல் வாதிகள் என்று இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள். ஆன்மா, அல்லது சிந்தனை முதலில் (கடவுள் அல்லது மனிதனின்), அதிலிருந்துதான் உலகம் தோன்றியது என்று சாதிப்பவர்கள் கருத்து முதல் வாதிகள், உலகில் இருக்கும் பொருட்கள் இயக்கப் போக்கில் தோன்றி வளர்கின்றன. அவை ஏற்படுத்தும் பதிவுகள்தான் சிந்தனையின் பிறப்பிடம் என்பது பொருள் முதல்வாதம். 
எங்கெல்ஸ்: நாம் வசிக்கும் இந்த உலகமும் பருப்பொருளும் மட்டுமே யதார்த்தம். நமது சிந்தனைகள் இந்த பருப் பொருட்களிலிருந்து தனியாக தெரிந்தாலும் அது உருவாவது பருப் பொருளிலிருந்தே என்பது தெளிவு. பொருளை உணர்வு படைக்கவில்லை. உணர்வு என்பது பொருளால் படைக்கப்படும் ஒரு படைப்புதான்.
மார்க்ஸ்: பொருளிலிருந்து சிந்தனையை பிரிக்க முடியாது. எல்லா மாறுதல்களுக்கும் களமாக இருப்பது பொருள். 
லெனின்: உணர்ச்சி, புலன், அனுபவம் இவற்றை பற்றி கவலைப்படாமலேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்நிலையின் பிரதிபலிப்பே உணர்வு. உள்ளது உள்ளபடியே காட்டும் பிரதிபலிப்பே உணர்வு. நமது உடல் உறுப்புகள் வெளிப்புற தூண்டுதல்களால் தாக்கப்படும் போது அவை மூளையில் பதிவுகளை ஏற்படுத்தி எண்ணங்களுக்கு வழி வகுக்கின்றன. பொருளின் இயக்கம், பொருளின் சிந்தனை இவற்றை சித்தரிப்பதே உலகத்தை சித்தரிப்பதாகும். 

மூளை என்பது சிந்தனையின் பொருள்:

இ. உலகத்தையும் அதன் இயக்க விதிகளையும் முழுவதும் தெரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறது கருத்து முதல்வாதம். அறிவியல் ஆராய்ச்சிகளின் எல்லைகளை வகுக்கிறது கருத்து முதல்வாதம். அண்ட பெருவெடிப்பு பற்றி ஆய்வு செய்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போப்பை சந்திக்க போன போது, பிங் பேங்கின் சில விநாடிகளுக்குப் பிறகு வரை ஆராய்ச்சி செய்யலாம். அதற்கு முன்பு போவது கடவுளின் ஏரியாவில் தலையிடுவது என்று சொன்னாராம். தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டைனுக்கு கூட குவாண்டம் இயற்பியலை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தது. குவாண்டம் இயற்பியல் பொருட்களின், சிந்தனையின் இயக்கவியல் பற்றிய அதிக பட்ச ஆதாரம். 
அறிவியலுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் உலகத்தில் நிறைந்திருக்கின்றன என்று கருத்து முதல்வாதம் சாதிக்கிறது. இயக்கவியல் வழியில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் இயற்கையின் இயக்கங்களை படிப்படியாக இறுதி வரை புரிந்து கொண்டே போகலாம் என்பது பொருள் முதல் வாதம்.
இதுதான் அறிவியலின், தொழில் நுட்பத்தின் அடிப்படை. தினசரி வாழ்க்கையில் அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் சார்ந்து வாழ்பவர்கள் ஆன்மீக வாதம் எனப்பதும் கருத்து முதல் வாதத்துக்கும் அடிப்படையாக இருக்கிறார்கள். அறிவியல் உண்மைகள் நடைமுறையில் பரிசோதிக்கப்படக் கூடியவை, அதே சூழலில் இன்னொருவரும் பரிசோதனை செய்து நிரூபித்துக் கொள்ளக் கூடியவை. கருத்து முதல் வாத முன்வைப்புகள் நம்பிக்கியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. 
அறிய முடியாதவை என்று எதுவும் இல்லை, இதுவரை அறியாதவை என்பவைதான் உண்டு. அவற்றை தொடர் முயற்சியில் தெரிந்து கொள்ளலாம். 
உலகம் அறிவுக்கு எட்டாதது என்றும் அறிவுக்கு எட்டாத தானே ஆகிய பொருட்கள் இருப்பதாக சாதித்த கான்ட் முதலியவர்களை எங்கெல்ஸ் விமரிசித்தார். நமது அறிவு என்பது உண்மை அறிவுதான் என்று சாதிக்கும் உரையை எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார். 
நடைமுறை அனுபவம்தான் எதற்கும் உரைகல். அதாவது பரிசோதித்தலும் உழைத்தலும்தான். நாம் கொண்டுள்ள கருத்தை சரி என்று நிரூபிக்க அதை செய்து காட்ட வேண்டியிருக்கிறது. அப்படி பார்க்கும் போது தானே ஆகிய பொருட்கள் பற்றிய கருதுகோள்கள் உடைபட்டு விடுகின்றன. யாரும் அதை சோதித்துப் பார்ப்பதற்கான வழியை சொல்ல முடிவதில்லை. 
மனிதர்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் புரியாதவற்றை பிரம்மங்கள் அல்லது கடவுள் என்று சொல்வது சோம்பேறிகளின் பழக்கம். உடலில் நடக்கும் உயிர் வேதி வினைகளை புரிந்து கொள்ளாதது வரை அவற்றை மாய மந்திரம் என்று நினைத்திருந்தார்கள். அவற்றை செயற்கை முறையில் உற்பத்தி செய்வது ஆரம்பித்ததும் அவை அறிவியல் ஆகி விட்டன. மின்னல் என்னவென்று புரியாத வரை பிரம்மம், அது மேகங்களுக்கிடையேயான மின் ஊட்டப்பட்ட துகள்களின் இடைவினை என்று தெரிந்த பிறகு அது அறிவு ஆகி விடுகிறது. 
அலிஜரின் என்ற சாயப் பொருள் ஒரு தாவரத்திலிருந்து கிடைக்கிறது. ஆனால், அதை செயற்கை முறையில் நிலக்கரியிலிருந்தும் தயாரிக்க முடிகிறது. கோப்பர் னிகர் சூரிய மண்டலம் பற்றி சொன்ன அனுமானம் நிரூபிக்கப்படும் வரை வெறும் கருத்தாகவே இருந்தது. சூரிய மண்டலத்தின் கோள்களைப் பற்றிய தரவுகளை பதிவு செய்து கெப்ளர் விதிகளை நிறுவினார். லெவெரியே என்பவர் கண்ணுக்குத் தெரியாத கோள் இருப்பதன் அவசியத்தை கணக்குகளில் காட்டியது கருத்து என்றால் அத்தகை கோளை காலே கண்டு பிடித்த போது கோபர்னிகஸின் கோட்பாடும் லெவெரியேவின் கணக்கீடுகளும் உண்மை ஆகின. 
மாக் என்பவரின் சீடர்களான போக்டனோவ், பாசரோவ், யுஷ்கேவிச் போன்றவர்கள் அறிவியலுக்குப் பதிலாக நம்பிக்கையை ஆதரிக்கும் எதிர்ப் புரட்சிக் கோட்பாட்டை பின்பற்றுவதகா லெனின் கண்டித்தார். அறிவியல் அறிவுதான் உண்மை அறிவு என்றும் அறிவியல் விதிகள் புறநிலையான பொருட்களின் இயக்கம் பற்றிய உண்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற ஆய்வுரையை லெனின் ஆதரித்தார்.
பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் "கடவுள் நம்பிக்கை வாதம் எப்போதுமே அறிவியலை முழுமையாக நிராகரிப்பதில்லை. அப்படி நிராகரித்தால் மனிதர்கள் மதங்களை நிராகரித்து விடுவார்கள். அறிவியலை நிராகரித்து காடுகளில் வாழ்வதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். அந்தந்த காலத்தில் அறிவியல் அறிந்து கொண்ட இயக்க விதிகளுக்கு அப்பால் அறிவியலுக்கு வேலை இல்லை என்று சொல்கிறது. வெளியுலகை மனித அனுபவமாக பிரதிபலிக்கும் இயற்கை அறிவியல் மட்டுமே புறநிலை உண்மையை அறிவிக்க வல்லது என்றால் அனைத்து நம்பிக்க வாதங்களும் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது."
சமூக வாழ்க்கையையும் வரலாற்றையும் புரிந்து கொள்ள பொருள் முதல் வாதக் கோட்பாடுகளின் முக்கியத்துவம் பாட்டாளி வர்க்க கட்சியின் நடைமுறை வேலைகளிலும் இந்த கோட்பாடுகளை செயல்படுத்துவதும் முக்கியமானது. இயற்கை பொருட்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் இருப்பது வளர்ச்சி விதி என்றால் சமூக வாழ்வின் தோற்றங்கள் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டவையாகவும் ஆதாரமாகவும் உள்ளன. அவை தற்செயலாக ஏற்பட்டவை அல்ல என்று தெளிவாகிறது. 
சமூக வாழ்வும், வரலாறும் தனிநபர்களின் தற்செயல் செய்கைகளால் உருவாகவில்லை என்றும் ஒழுங்கான விதிகளின்படி சமூகம் இயங்குகிறது என்று அறிவியல் அணுகுமுறை சொல்கிறது. 
பாட்டாளி வர்க்க கட்சியின் நடைமுறை வேலைகள் - மகத்தான மனிதர்களின் ஆசியையோ பகுத்தறிவின் தீர்ப்புகளாக சொல்லப்படுபவையோ  உலகளாவிய அறநெறிகளைக் கொண்டவையோ அடிப்படையாக இருக்கக் கூடாது. சமுதாயத்தின் தோற்றங்கள், கடந்து வந்த வரலாறு இவற்றின் அடிப்படையில் தரவுகளை திரட்டி நடைமுறையில் சோதித்து பார்த்து நடைமுறை வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். நமது விருப்பத்தின் அடிப்படையிலோ, திறமையின் அடிப்படையிலோ அவை தீர்மானிக்கப்படக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். 
உலகம் அறியப்படக் கூடியது, இயற்கையின் இயக்க விதிகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றால் சமுதாய இயக்க விதிகளும் புரிந்து கொள்ளக் கூடியவையே. அந்த திசையில் முன்னேறுவதுதான் அறிவியல் அணுகுமுறை. சமூக தோற்றங்கள் சிக்கலாக இருந்தாலும் அவற்றையும் இயற்கை அறிவியல்கள் போல வரையறுக்கப்பட்ட கறாரான அறிவியலாக கற்றுக் கொண்டு செயல்பட முடியும். 
பாட்டாளி வர்க்க கட்சி மேம்போக்கான நோக்கங்களை வழி காட்டியாக கொள்ளாமல் சமுதாய வளர்ச்சி விதிகளையும் அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடைமுறை முடிவுகளையும் வழிகாட்டியாக கொள்ள வேண்டும். சோசலிசம் என்பது அரவிந்தன் நீலகண்டன் சொல்வது போல பொன்னுலகுக்கான கனவு இல்லை, அது அறிவியல் அணுகுமுறையின் ஒரு தேற்றம். நடைமுறை தரவுகளிலிருந்து கோட்பாடுகளை உருவாக்குவது, கோட்பாடுகளை நடைமுறையில் சரி பார்ப்பது இவைதான் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். 
மனித உணர்வுக்கு அப்பாற்பட்ட சுதந்திரமாக இயங்கும் புறநிலை உண்மைதான் புறநிலை உலகம். உணர்வு என்பது இந்த புறநிலை உலகத்தின் பிரதிபலிப்பு என்று ஏற்றுக் கொள்வதன் விளைவு என்ன?

1. சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு அதன் நிலைமை முதன்மையானவை. ஆன்மீக வாழ்வு இரண்டாம் பட்சமானது. 
2. பொருளாயத வாழ்வு மனிதர்களை சார்ந்திராமல் இயங்குகிறது. ஆனால் ஆன்மீக வாழ்வு அந்த பொருள்களை சார்ந்துதான் உருவாகிறது. ஆன்மீக வாழ்வு எங்கிருந்து பிறக்கிறது? சமுதாயக் கருத்துக்கள், கொள்கைகள், அரசியல் கருத்துக்கள், நிறுவனங்கள் எப்படி உருவாகின்றன? இந்த கேள்விக்கு விடை காண அவற்றுக்கு வெளியே ஆய்வு செய்ய வேண்டும். அவற்றுக்குள்ளேயே துருவிப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இவை எதன் பிரதிபலிப்பாக இருக்கின்றனவோ அந்த சமுதாயத்தின் பொருளாயத வாழ்வையும் அதன் நிலையையும் துருவிப் பார்க்க வேண்டும். 
வரலாற்றின் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு சமுதாயக் கருத்தக்களும், கொள்கைகளும், கண்ணோட்டங்களும் அரசியல் அமைப்புகளும் இருக்கின்றன. அடிமை சமுதாய முறையும், நிலப்பிரபுத்துவ முறையும், முதலாளித்துவ முறையும்  வெவ்வேறு வகையானவற்றை கொண்டிருக்கின்றன. அவற்றை விளக்குவதற்கு குறிப்பிட்ட அமைப்புகளின் பண்புகளை வைத்து ஆய்வு செய்யக் கூடாது அவற்றை உருவாக்கிய சமுதாய மாற்றத்தையும் நிலைமைகளையும் கொண்டு விளக்க வேண்டும். 
ஒரு சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் அடிப்படையில்தான் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன. 

மார்க்ஸ்: மனிதர்களின் வாழ்நிலையை அவர்களின் உணர்வு நிர்ணயிப்பதில்லை. அவர்களது வாழ்நிலைதான் உணர்வுகளை நிர்ணயிக்கிறது. சரியான கொள்கையை பின்பற்ற வேண்டுமானால் கட்சி புறநிலைக்கு அப்பால் நிற்கும் 'மனித பகுத்தறிவுக் கோட்பாடுகளை' ஆதாரமாகக் கொண்டு வேலைகளை செய்யக் கூடாது. சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தி அதன் பொருளாயத வாழ்விலுள்ள பருண்மையான நிலைமைகள்தாம் அந்த சக்தி. நல்லெண்ணங்களை ஆதாரமாகக் கொண்டு கட்சி செயல்படக் கூடாது. சமூகத்தின் பொருளாயத வாழ்வு வளர்வதற்கு வேண்டிய உண்மையான தேவைகளுக்கான வேலைகளை கட்சி செய்ய வேண்டும்.
கற்பனை உலகில் வாழ்பவர்கள் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் அவர்கள் புற உலகின் பொருளாயத வாழ்க்கை நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கருத்து முதல் வாத குட்டையில் இறங்கி விட்டதே ஆகும். சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் வேலை செய்யாமல் இலட்சியத் திட்டங்களையும், அனைத்தும் தழுவிய திட்டங்களையும் தங்களது வேலைக்கு ஆதாரமாகக் கொண்டனர். 
மார்க்சிய லெனினியத்தில் பலம் அது சமுதாயத்தின் புறநிலை யதார்த்தங்களின் அடிப்படையில் வேலை செய்கிறது. வாழ்க்கையிலிருந்து தன்னை கத்தரித்துக் கொள்வது கிடையாது. இப்படி சொல்வதன் மூலம் கருத்துக்களும் கொள்கைகளும், கண்ணோட்டங்களும் நிறுவனங்களும் சமுதாய வாழ்க்கையை பாதிப்பதே இல்லை என்று சொல்ல முடியுமா? இவை எங்கிருந்து தோன்றுகின்றன என்பதைத்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அவை சமுதாய வாழ்வில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை வரலாற்று பொருள் முதல்வாதம் மறுக்கவில்லை. 
சமூகக் கருத்துக்களிலும் கொள்கைகளிலும் வெவ்வேறு வகைப்பட்டவை உண்டு. என்றோ அழிந்து போயிருக்கக் கூடியவை பழைய கருத்துக்களும் கொள்கைளும் இன்னும் இருந்து வருகின்றன. சமுதாயத்தின் அழிந்து வரும் சக்திகளின் நலன்களை அவை பாதுகாக்கின்றன. நம் நாட்டில் பார்ப்பனீய கொள்கைகள் அத்தகையவை. இவை சமுதாய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தடங்கலாக இருக்கின்றன. மறுபுறம் முற்போக்கான கொள்கைகளும் கருத்துக்களும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உதவுகின்றன என்பதில்தான் அவற்றின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சியின் தேவைகளை அவை எவ்வளவு சரியாக பிரதிபலிக்கின்றனவோ அவ்வளவுக்களவு அவற்றின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. 
புதிய கருத்துக்களும் கொள்கைகளும் எப்போது உருவாகின்றன? சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சி புதிய கடமைகளை முன் வைக்கும் போது அவை உருவாகின்றன. உதித்து விட்ட பிறகு அவை ஆற்றல் மிக்க சக்தியாக விளங்குகின்றன. புதிய கடமைகளை நிறைவேற்ற உதவுகின்றன. இப்படித்தான் மக்களை திரட்டும் அமைப்பாக மாற்றும் புதிய சமுதாயமாக மாற்றி அமைக்கும் சக்தி வெளிப்படுகிறது. புதிய கருத்துக்களும் அமைப்புகளும் தோன்றுவதற்கு காரணம் அவை சமுதாயத்துக்கு தேவைப்படுகின்றன என்பதாலேயே. சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சி வைக்கின்ற கடமைகளிலிருந்து இந்த சக்திகள் தோன்றி நசிந்து வரும் சக்திகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டி அமைப்பாக மாற்றி அமைக்கின்றன. அதன் மூலம் வளர்ச்சியை தடுக்கும் சக்திகளை தகர்த்தெறிவதை சாத்தியமாக்குகின்றன. 
சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சி முன்வைக்கிற கடமைகளை அடிப்படையாகக் கொண்டுதான் சமுக கருத்துக்களும் கொள்கைகளும் அரசியல் நிறுவனங்களும் எழுகின்றன. உருவான பிறகு அவை சமுதாய நிலையின் மீதும் பொருளாயத வாழ்வின் மீதும் எதிர்வினை ஆற்றுகின்றன. 

மார்க்ஸ்: மக்களை தன்பால் ஈர்த்துக் கொண்டவுடன் தத்துவம் பௌதீக சக்தியாக மாறி விடுகிறது. 
சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சியின் மீது செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றால் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டுமானால், சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சியின் தேவைகளை பிரதிபலிக்கும் கோட்பாடுகளை கட்சி கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் சரியாக பிரதிபலிக்கும் சமுதாய கோட்பாடுதான் பெரும்பானான மக்களை ஈர்த்து பிற்போக்கு சக்திகளை தூள் தூளாக்கவும் சமுதாய முன்னேற்றத்துக்கு பாதை வகுக்கவும், மக்களை அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டுவதற்கும் ஆற்றல் பெற்றிருக்கும். 
பொருளாதார வாதிகளும் மென்ஷ்விக்குகளும் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் அவர்கள் முற்ப்போக்கான ஒரு தத்துவமும் முற்போக்கான கருத்துக்களும் மக்களை திரட்டும் சக்தி வாய்ந்தவை என்பதையும் அமைப்பாத் திரட்டி மாற்றியமைக்கும் அதன் பாத்திரத்தையும் அங்கீகரிக்காததுதான். 
சமுதாயத்தின் பொருளாயத வளர்ச்சியை சரியாய் பிரதிபலிக்கும்படியான ஒரு முற்போக்கான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதுதான் மார்க்சிய லெனினியத்தின் வலிமைக்கும் உயிர்த்துடிப்புக்கும் தோற்றுவாய் ஆகும். 
சமுதாய நிலைமைக்கும் சமுதாய உணர்வுக்கும் இடையிலுள்ள உறவு என்ன, பொருளாயத வளர்ச்சியின் நிலைமைகளுக்கும் ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கும் இடையிலுள்ள உறவு என்ன என்ற கேள்விக்கு வரலாற்று பொருள் முதல் வாதம் கொடுக்கும் பதில் இதுதான். 
வரலாற்றுப் பொருள் முதல் வாதம். சமுதாயத்தின் பொருளாயத நிலைமைகள் என்பதற்கு பொருள் என்ன? வரலாற்று பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தின் படி இவற்றின் பொருள் என்ன? 
1. சமுதாயத்தை சூழ்ந்துள்ள இயற்கை பூகோள சூழ்நிலை முதலில் அடங்கும். ஆனால் அது முதன்மையான சக்தியாக இல்லை. அது சமுதாய வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்தி அதை துரிதப்படுத்தவும் தடுக்கவும் செய்கிறது. ஆனால் வளர்ச்சியை நிர்ணயிக்கும்படியான செல்வாக்கு அதற்கு இல்லை. 
2. மூவாயிரம் ஆண்டுகளில் பூகோள சூழ்நிலை பெரிய அளவில் மாறுபடா விட்டாலும் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் உலகின் பல பகுதிகளிலும் சமுதாய அமைப்புகள் பெருமளவு மாறியிருக்கின்றன. பூகோளச் சூழ்நிலைகள் மாறுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும் ஆனால் மனித சமுதாயத்தின் முக்கிய மாறுதல்கள் சில நூறு ஆண்டுகளில் அல்லது ஆயிரம் ஆண்டுகளில் நடந்து விடுகின்றன. 
3. மக்கள் தொகை வளர்ச்சியும் மக்கள் தொகை அடர்த்தியும் இதில் அடங்கும். ஆனால் இதுவும் முதன்மை சக்தியாக இல்லை. சமுதாய வளர்ச்சியை எளிதாக்குகிறது அல்லது தடுக்கிறது என்றாலும் வளர்ச்சிக்கான அடிப்படை காரணமாக மக்கள் தொகை இருக்க முடியாது. 
அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் போன்ற மாற்றங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் சமுதாய வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். அமெரிக்காவை விட சீனாவின் மக்கள் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் அமெரிக்கா சமூக வளர்ச்சியில் முன்னணியில் இருக்கிறது. பெல்ஜியம் அமெரிக்காவை விடவும் சோவியத் யூனியனை விடவும் 20 மடங்கு அதிகம் மக்கள் அடர்த்தி கொண்டிருந்தும் அமெரிக்க சமூக அமைப்புக்கோ, சோவியத் யூனியனின் சமூக அமைப்புக்கோ மாறுவதற்கு அதற்கு பல காலம் பிடிக்கும். 
4. சமுதாய மாற்றங்களுக்கு முதன்மை காரணமாக இருக்கும் சக்தி எது? ஒரு சமுதாய அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாறி செல்வதை ஏற்படுத்தும் சக்தி எது? 
அ. உற்பத்தி முறைதான் இந்த மாற்றங்களின் அடிப்படை காரணி என்று வரலாற்று பொருள் முதல் வாதம் சாதிக்கிறது. உணவு, எந்திரங்கள், நுகர்வு பொருட்கள் இவற்றை உற்பத்தி செய்ய சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சமுதாய மாற்றங்களையும் சமுதாய நிலைமைகளில் வேறுபாடுகளையும் தோற்றுவிக்கின்றன என்று வரலாற்று பொருள் முதல்வாதம் சொல்கிறது. 
மக்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும் உற்பத்தி செய்வதற்கு தேவையான கருவிகளை செய்து அவற்றை பயன்படுத்த கற்றுக் கொள்வதும் அடிப்படையானவை. 
இயற்கை வளங்கள், உற்பத்தி கருவிகள், அவற்றை பயன்படுத்தும் மக்கள் இவைதான் உற்பத்தி சக்திகள். உற்பத்தி சக்திகள் உற்பத்தி முறையின் ஒரு அம்சம் மட்டும்தான். அதன் இன்னொரு முக்கிய பகுதி உற்பத்தி உறவுகள். மனிதர்கள் உற்பத்தி சக்திகளை பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கு திட்டமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உற்பத்திக்கா இயற்கையோடு மக்கள் போராடுவதோடு சக மக்களோடு சேர்ந்துதான் உழைக்கிறார்கள். உற்பத்தி என்பது எல்லா காலங்களிலும் சமூக ரீதியான உற்பத்தியாகத்தான் இருக்கிறது. உற்பத்தி முறையில் மக்கள் ஒருவருக்கொருவர் உறவுகளில் ஈடுபடுகின்றனர். அது சுரண்டல் உறவாக இருக்கலாம் அல்லது ஒத்துழைப்பு உறவாக இருக்கலாம். 

மார்க்ஸ்: உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள் இயற்கையின் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொண்டுதான் வேலை செய்கிறான். உற்பத்தி செய்யும் மட்டும் தம்மிடையே குறிப்பான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த உறவுகளின் அடிப்படையில்தான் உற்பத்தி நடக்கிறது. (கூலியுழைப்பும் மூலதனமும்)

உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் உள்ளடக்கியது. 
ஆ. உற்பத்தி முறை மாறிக் கொண்டே இருக்கிறது. உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் சமுதாய கருத்துக்கள், கண்ணோட்டங்கள், நிறுவனங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சமுதாயத்தின் ஒவ்வொரு வகையிலும் உற்பத்தி முறையும் வாழ்க்கை முறையும் வெவ்வேறாக இருக்கின்றன. அடிமை சமூகத்திலும், நிலப்பிரபுத்துவ சமூகத்திலும், முதலாளித்துவ சமூகத்திலும் உற்பத்தி முறைகள் வெவ்வேறாக இருக்கின்றன. இந்த உற்பத்தி முறைகள்தான் சமூகத்தின் நிறுவனங்களையும் மேல் கட்டுமானத்தையும் தீர்மானிக்கின்றன. மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அவனது சிந்தனையும் இருக்கிறது. இது தனி மனிதருக்கும் பொருந்தும், சமூகத்துக்கும் பொருந்தும். 
சமுதாய வளர்ச்சியின் வரலாறு என்பது உற்பத்தி முறை எப்படி வளர்ந்தது என்பதன் வரலாறுதான். உற்பத்தி சக்திகளும் மக்களிடையே உற்பத்தி உறவுகளும் எப்படி எல்லாம் பலப் பல நூற்றாண்டுகளின் காலப் போக்கிலே மாறி வந்திருக்கின்றன என்பதை பற்றிய வரலாறுதான். 
வரலாற்றை அறிவியல் ரீதியாக கற்க வேண்டுமானால் தளபதிகளின், அரசர்களின் , மாவீரர்களின் செயல்களை மட்டும் அதை குறைத்து விட முடியாது. பொருளாயத செல்வங்களை உற்பத்தி செய்கிற உற்பத்தியாளர்களரின் உழைப்பாளி மக்களின் வரலாற்றைக் கற்பதில் கவனம் செலுத்த வேண்டும். மனிதனின் எண்ணங்களையும், கண்ணோட்டங்களையும், கருத்துக்களையும் மட்டும் துருவிப் பார்த்துக் கொண்டிராமல் அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் சமுதாயம் எந்த உற்பத்தி முறையைக் கொண்டிருந்ததோ அந்த உற்பத்தி முறையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 
உதாரணமாக சோழர் குலத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, இராஜஇராஜ சோழன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான் என்று படிப்பது வரலாறு ஆகாது, அந்த காலத்தில் நிலவிய சமூக உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் இவற்றில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி படிப்பதுதான் அறிவியல் பூர்வமான வரலாறு ஆகும். பாட்டாளி வர்க்க கட்சி உற்பத்தியின் வளர்ச்சி விதிகளைப் பற்றியும் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி விதிகளைப் பற்றியும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சரியான கொள்கைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் கட்சி உற்பத்தியின் வளர்ச்சியைப் பற்றிய விதிகளிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். 
இ. மனிதர்கள் உழைக்கும் போது உற்பத்தி சக்திகளில் உருவாக்கும் மாற்றங்கள் மேம்படுத்தல்கள்தான் அடிப்படையான இயக்கவியல் காரணி. உற்பத்தி சக்திகள்தான் உற்பத்தியில் மற்ற எல்லாவற்றையும் விட புரட்சிகரமானதாக இருக்கிறது. புரட்சிகரமானது என்பதன் பொருள், தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து கட்டங்களை அடைவது என்பதாகும். உற்பத்தி கருவிகள், மனித திறமையில் ஏற்படும் மாற்றங்கள்தான் அடிப்படையானவை. இப்படி உற்பத்தி சக்திகள்  மாறும் போது அவை உற்பத்தி உறவுகள் மீது, சமூகத்தின் மேல் கட்டுமானம் மீது தாக்கத்தை செலுத்துகின்றன. இதுதான் முதன்மையான மாற்றத்துக்கான காரணம். 
குறிப்பிட்ட காலத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகள் மீது தாக்கத்தை செலுத்துவதும் உண்மைதான். அவை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தடை செய்யவோ துரிதப்படுத்தவோ செய்கின்றன. ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை சார்ந்திருப்பதில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப உற்பத்தி உறவுகள் மாறாமல் நீண்ட காலம் இருக்க முடியாது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் மட்டத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப உற்பத்தி உறவுகள் முன்னேறி தீர வேண்டியிருக்கிறது. அப்படி உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப மாறாமல் இருந்தால் உற்பத்தி சக்திகள்  அழிக்கும் நிலைமை ஏற்படுத்தப்படும். மேல் கட்டுமானமாக விளங்கும் அரசுகளுக்கிடையே நடக்கும் போர்கள்  உற்பத்தி சக்திகள் அழிவதில் போய் முடிகின்றன. பிரெஞ்சு புரட்சியை தடுக்க முயன்ற பழைய உற்பத்தி உறவுகள் ஏராளமான உற்பத்தி சக்திகளின் அழிவுக்கு வழி வகுத்தது. 
அதே போல மதங்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். கிருத்துவ மதம் முதலாளித்துவத்திற்கேற்ப புராட்டஸ்டன்ட் மதமாகவும், இந்து மதம் கார்பொரேட் உலகத்துக்கு ஏற்றபடி கார்பொரேட் சாமியார்களை ஏற்படுத்தியதையும் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கு உதாரணமாக பார்க்கலாம். ஆனால், அடிப்படையான மாற்றம் உற்பத்தி சக்திகள் பழைய மேல் கட்டுமானங்களை முழுமையாக தூக்கி எறிந்து தமது வளர்ச்சிக்கு ஏற்றபடியான உற்பத்தி உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்தான் ஏற்படும். 
சோவியத் யூனியன், கம்யூனிச சீனா போன்ற சமூகங்களில் உற்பத்தி முறையின் சமூக தன்மைக்கு பொருத்தமாக உற்பத்தி சக்திகள் சமூக உடமையாக இருப்பது பொருளாதார நெருக்கடிகளையும் உற்பத்தி சக்திகளின் அழிவையும் தவிர்த்தது. 
உற்பத்தி முறையில் உற்பத்தி சக்திகள்தான் மிகவும் நிலையற்ற புரட்சிகரமான அம்சமாக இருப்பதோடு உற்பத்தியின் வளர்ச்சியையே நிர்ணயிக்கும்படியான அம்சமாக விளங்குகின்றன. எந்த உற்பத்திக் கருவிகளை பயன்படுத்தி மனிதர்கள் தங்களுக்குத் தேவையான பொருளாயத செல்வங்களை உற்பத்தி செய்து கொள்கின்றனர் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலை. உற்பத்தி சாதனங்கள் யாருக்குச் சொந்தமாயுள்ளன என்ற கேள்விக்கு பதில் தருவது உற்பத்தி உறவுகளின் நிலை. உற்பத்தி சக்திகள் தனி மனிதர்களின் உடமையாக இருந்து அவர்கள் மற்றவர்களை  சுரண்டும் நிலை இருக்கிறதா அல்லது உற்பத்தி சக்திகள் சமூக உடமையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 

மனித வரலாற்றில் உற்பத்தி கருவிகள் எப்படி வளர்ச்சி அடைந்தன என்று பார்க்கலாம்

1. ஆரம்பத்தில் ஒழுங்காக செதுக்கப்படாத கல் ஆயுதங்கள்
2. வில்லும் அம்புகளும்
3. வேட்டை வாழ்விலிருந்து கால் நடை வளர்ப்பு
4. கல் ஆயுதங்களிலிருந்து உலோக ஆயுதங்கள் கண்டு பிடிப்பு
5. அவற்றை பயன்படுத்தி நிலத்தை பண்படுத்தும் முறை கண்டுபிடிப்பு
6. விவசாயம்
7. தாதுப் பொருட்களை பயன்படுத்தி உலோக ஆயுதங்களை மேம்படுத்தியது. 8. கொல்லனின் துருத்தி, மண்பாண்டத் தொழில்
9. கைத்தொழில் வளர்ச்சி
10. சுயேச்சையான கைத்தொழில் வளர்ச்சி
11. பட்டறைத் தொழில் வளர்ச்சி
12. இயந்திரங்களும் இயந்திரத் தொழில் முறையும்

இந்த உற்பத்திக்  கருவிகளை மேம்படுத்தியது அவற்றை பயன்படுத்திய மனிதர்கள்தான். உற்பத்தி சக்திகளாகிய கருவிகளை மாற்றுவதில் மனிதன் பங்காற்ற, இந்த மாற்றப்பட்ட கருவிகளை பயன்படுத்தி மனிதனின் அறிவும் வளர்ந்தது. தொழில் அனுபவம், வேலைத்திறன், கருவிகளை பயன்படுத்தும் திறமை முன்னேறியது. இந்த உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஏற்பவே உற்பத்தி உறவுகளும், பொருளாதார உறவுகளும் மாறின. 

வரலாற்றில் நிலவிய உற்பத்தி உறவுகளை பின் வருமாறு பிரிக்கலாம். இவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கூட நிலவியிருக்கலாம். 

1. புராதன பொதுவுடைமை முறை
2. அடிமை சமுதாய முறை
3. நிலப்பிரபுத்துவ முறை
4. முதலாளித்துவ முறை
5. சோசலிச முறை

புராதன பொதுவுடமை சமூகத்தில் மனிதர்கள் தனித்தனியே நின்று போராடாமல் சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. விலங்குகளை வேட்டை யாடவும், மீன் பிடிக்கவும், கனிகளை சேகரிக்கவும், வீடு கட்டிக் கொள்ளவும் ஒன்று கூடு பாடுபட வேண்டியிருந்தது. அப்படி உழைப்பு பொதுவாக இருந்த போது உற்பத்தி கருவிகளும் பொதுவுடமையாக இருந்தன. இங்கே சுரண்டல் கிடையாது, வர்க்கங்கள் கிடையாது. 
அடிமை சமுதாய முறையில் அடிமைகள் எஜமானனுக்குச் சொந்தம். உற்பத்தி சாதனங்களும் எஜமானனுக்குத்தான் சொந்தம். மேய்ச்சலும், உழுதலும், கைத்தொழிலும் உதித்த இந்த காலத்தில் கருவிகளை வளர்த்து செல்வதற்கு தனியுடமை உதவியது. உழைக்கும் மனிதர்களும் எஜமானனுக்குச் சொந்தம். அடிமைகளை வாங்கி விற்க அல்லது கொல்லக் கூடச் செய்யலாம். அந்த காலத்திய உற்பத்தி சக்திகளுக்கு பொருத்தமாக இந்த உற்பத்தி முறை இருந்தது. கல் ஆயுதங்களுக்குப் பதிலாக உலோக ஆயுதங்கள், மேய்ச்சல், உழுதல், கைத்தொழில் போன்ற உற்பத்தித் துறைகளிடையே வேலை பிரிவினை உதிக்கின்றன. மனிதர்களுக்கிடையேயும் சமுதாயங்களுக்கிடையேயும் பரிமாற்றங்களுக்கான சாத்தியங்களும் தோன்றுகிறது. ஒரு சிலர் கையில் செல்வமும் உற்பத்தி சாதனங்களும் குவிகின்றன. பெரும்பான்மையினர் ஒரு சிலருக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். இங்கு அடிமைகள் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகின்றனர். இங்கு உற்பத்தி சாதனங்களும் பயனும் தனி உரிமையாக்கப்பட்டு விட்டன. ஏழை, பணக்காரன், சுரண்டுபவன், சுரண்டப்படுபவன், உரிமைகள் அனைத்தும் படைத்தவர்கள், எந்த உரிமைகளும் இல்லாதவர்கள், இவர்களுக்கிடையேயான வர்க்கப் போர் இதுதான் அடிமை சமுதாய முறையின் சித்திரம். 
நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் நிலப்பிரபுவுக்குச் சொந்தம். ஆனால் உழைப்பாளி முழுவதும் சொந்தம் கிடையாது. அவரை கொல்ல முடியாது. ஆனால் விலைக்கு விற்கவோ வாங்கவோ செய்யலாம். இதுதான் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் உற்பத்தி உறவு. இரும்பிலான கருவிகள், கைத்தொழில் செய்பவர்கள் உருவான காலத்திற்கு இந்த உற்பத்தி உறவு பொருத்தமானதாக இருக்கிறது. 
தான் உழைக்கும் உற்பத்தித் துறையில் ஏதாவது வகையில் அக்கறையும் முன்முயற்சியும் காட்டும்படி உழைப்பாளியை இந்த கால கட்டம் கோருகிறது. இதனால் அடிமை முறை கைவிடப் படுகிறது. பண்ணையடிமை என்ற உழைப்பு முறை ஏற்படுத்தப்படுகிறது. பண்ணை முறைக்கு சொந்த நிலம், உற்பத்திக் கருவிகள் இருக்கிறது. தனது உழைப்பை மேம்படுத்திக் கொண்டு தனது விளைச்சலையும் நிலப்பிரபுவின் விளைச்சலையும் பெருகச் செய்கிறான். இதன் மூலம் தனிவுடமை மேலும் வளர்ச்சியடைகிறது. சுரண்டல் மேலும் தீவிரமடைகிறது. சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் இடையே வர்க்கப் போர் நிகழ்கிறது. 
முதலாளித்துவ முறையில் உற்பத்தி கருவிகள் முதலாளிக்குச் சொந்தம். தொழிலாளிக்கு உற்பத்தி சாதனங்கள் எதுவும் சொந்தமில்லை. அவன் பெயரளவில் சுதந்திரமானவன், ஆனால் உயிர் வாழ்வதற்காக அவன் தனது உழைப்பை கூலிக்கு விற்க வேண்டியிருக்கிறது. விவசாயமும் கைத்தொழில் பட்டறைகளும் இயந்திர மயமாக்கப்பட்டு பெரு முதலாளிகளுக்கு உடமையாகின்றன. சிறு உடமையாளர்கள் படிப்படியாக பாட்டாளிகளாக மாற்றப்படுகின்றனர். இந்த புதிய இயந்திரங்களை இயக்குவதற்கு போதுமான அளவு தொழிலாளர்களுக்கு கல்வி அறிவு அளிக்கப்படுகிறது. 
உற்பத்தி சக்திகளை வளர்த்து விட்ட பிறகு முதலாளித்துவம் முரண்பாடுகளில் சிக்கிக் கொள்கிறது. அதீத உற்பத்தி, கழுத்தை அறுக்கும் போட்டி இவற்றால் சிறு உற்பத்தியாளர்கள் அழிக்கப்படுகிறார்கள். பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அணி திரட்டப்படுவதன் மூலம் ஒரு பாட்டாளி வர்க்க இராணுவம் உருவாகிறது. இதன் மூலம் முதலாளித்துவம் தனக்கு எதிரான சக்தியை தானே வளர்த்து விடுகிறது. ஆனால் உற்பத்தி சாதனங்கள் முதலாளித்துவ தனியுடமையாகவே இருக்கின்றன.
உற்பத்தி சக்திகளின் சமுதாயத் தன்மைக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் உற்பத்தி நெருக்கடிகளில் வெளிப்படுகின்றன. பண்டங்கள் அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு விட்டதால் வேலையில்லா திண்டாட்டமும் பட்டினிக் கொடுமையும் ஏற்படுகின்றன. இந்தியாவின் உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் போது பல கோடி மக்கள் ஊட்டச் சத்து போதாமல் வாடுவதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 
சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடை விதிக்கும்படியாக முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகள் இருக்கின்றன. இந்த உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்கும் புரட்சிக்கான கரு முதலாளித்துவத்திலேயே உருவாகிறது. உற்பத்தி சாதனங்களின் மீது இருக்கும் தனிவுடமையை அகற்றி விட்டு சோசலிச சமூக உடமையை உருவாக்குவதுதான் இந்த புரட்சிக்கான நோக்கம். 
சோசலிச சமூகத்தில் உற்பத்தி உறவுகள் எப்படி இருக்கின்றன? உற்பத்தி சாதனங்கள் சமூக உடமையாக இருக்கின்றன. சுரண்டுபவனும் இல்லை, சுரண்டப்படுபவனும் இல்லை. உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு வினியோகிக்கப்படுகின்றன. இங்கே உற்பத்தி சக்திகளின் நிலைக்கு பொருத்தமாக உற்பத்தி உறவுகள் இருக்கின்றன. இதனால் சோவியத் யூனியனில் முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஏற்படுவது போன்ற உற்பத்தி நெருக்கடிகள் ஏற்படுவதில்லை. உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்ச்சியடைகின்றன. 
உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சார்ந்து இருக்கின்றது. உற்பத்தி சக்திகளில் ஏற்படும் மாறுதல்களும் வளர்ச்சியும் உடனடியாகவோ சிறிது காலத்திற்குள்ளாகவோ அதற்கு ஏற்ற மாதிரி உற்பத்தி உறவுகள் மாறுவதிலும் வளர்ச்சி பெறுவதிலும் கொண்டு விடுகின்றன.

மார்க்ஸ்: (மூலதனம் - முதல் பாகம்)

உற்பத்திக் கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவது மனித இனத்தின் தனிச்சிறப்பாகும். மனிதன் கருவிகளைப் படைக்கும் மிருகம் என்று பிராங்க்ளின் வருணித்தார். மனித வரலாற்றை ஆராய்வதற்கு முந்தைய காலத்தின் உற்பத்தி பொருட்களை ஆராய்வது பலன் தராது. அந்தந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட உற்பத்தி கருவிகளை ஆராய்ச்சி செய்வது அப்போது நிலவிய உற்பத்தி முறைகளை, எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அறியத் தருகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை பாதிக்கின்றன. கையினால் இயக்கப்படும் மில் நிலப்பிரபு சமூகத்தையும், இயந்திரத்தினால் இயக்கப்படும் மில் முதலாளித்துவ சமூகத்தையும் உருவாக்கின. 
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள், கருத்துக்கள் இவற்றின் வளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மாறாமல் இருப்பது இயக்கம் மட்டும்தான். 

எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)

பொருளாதார உற்பத்தி முறையும் அதன் அடிப்படையில் உருவாகும் சமுதாய அமைப்பும் அந்தந்த கால கட்டத்தின் அரசியல் வரலாற்றுக்கும் சிந்தனையின் வரலாற்றுக்கும் அடிப்படையாக இருந்துள்ளன. வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாக, சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாக இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் தமது வர்க்க ரீதியிலான விடுதலை முழு சமூகத்தையும் சுரண்டலிலிருந்து விடுவிப்பதன் மூலம்தான் சாத்தியமாகும். 

ஈ. உற்பத்தியின் மூன்றாவது அம்சம், புதிய உற்பத்தி முறை உருவாகும் புரட்சி. புதிய உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் பழைய சமூகம் அழிந்த பிறகு அதிலிருந்து தனித்து நின்று உருவாவதில்லை. பழைய சமூகத்திலேயே அவை உருவாகின்றன. 
1. எந்த உற்பத்தி முறை வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் வசதி மனிதர்களுக்கு இல்லை. அந்தந்த காலத்தில் நிலவும் உற்பத்தி சக்திகளுக்கேற்ப உற்பத்தி உறவுகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறை விட்டுச் சென்ற உற்பத்தி உறவுகளுக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. 
மிகவும் நியாயமான கடுமையாக உழைக்கக் கூடிய மக்கள் கூட இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் விதிகளுக்கேற்பத்தான் வாழ வேண்டியிருக்கிறது. 
2. உற்பத்தி சக்திகளை வளர்ப்பதால் சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படும் என்று மனிதர்கள் சிந்திப்பதில்லை. தமது உழைப்பை எளிமைப்படுத்துவதற்காக மட்டும் உற்பத்தி சக்திகளை மேம்படுத்துகிறார்கள். கல் கருவிகள், இரும்புக் கருவிகள், உலோகங்கள், இயந்திரங்கள் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் சமூகத்தின் உற்பத்தி உறவுகள் அடுத்த கட்டத்துக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த கால கட்டத்தில் குறைவான உழைப்பின் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியாக மட்டுமே அவற்றை செய்கிறார்கள். 
புராதன சமூகத்திலிருந்து அடிமை முறைக்கு இட்டுச் சென்ற கருவிகளையும் நிலப்பிரபுத்துவ முறையிலிருந்து முதலாளித்துவ முறைக்கு இட்டுச் சென்ற உற்பத்தி சாதனங்களையும் உருவாக்கியவர்கள் அந்தந்த காலத்து ஆதிக்க வர்க்கங்களுக்கு அவை ஆப்பு வைப்பவையாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

மார்க்ஸ் (அரசியல் பொருளாதரத்திற்கான விமர்னத்திற்கு ஒரு பங்களிப்பு நூலின் முன்னுரை): 

மனித சமூகத்தில் மனிதர்கள் திட்டமான உற்பத்தி உறவுகளில் ஈடுபடுகிறார்கள். அந்த உறவுகள் உற்பத்தி முறைக்கு அத்தியாவசியமானவை. மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவை. 
ஆனால் உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றம், பழைய உற்பத்தி உறவுகளை தூக்கி எறிந்து புதிய உற்பத்தி உறவுகளை ஏற்படுத்துவது வலுவான போராட்டங்களின் மூலம் புரட்சியின் மூலம்தான் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் சமூகத்தின் சுரண்டும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு பாதகம் ஏற்படாதது வரை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளில் மாற்றமும் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டு நடைபெறுகின்றன. ஆனால் இதிலும் ஆதிக்க வர்க்கங்கள் வளர்ச்சியை தமக்கு சாதகமாக திசை திருப்பிக் கொள்கின்றனர். போகப் போக இந்த முரண்பாடு இன்னும் தீவிரமாகிறது. ஆளும் வர்க்கங்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக குறுக்கே வருகின்றனர். இந்தக் கட்டத்தில் முற்போக்கு சக்திகள் அமைப்பாக திரண்டு ஆளும் வர்க்கங்களை வலுக்கட்டாயமாக தூக்கி எறிவதன் மூலம்தான் உற்பத்தி சக்திகளின் இயல்பான வளர்ச்சியை தொடர்ந்து சாத்தியமாக்க முடிகிறது. 

மார்க்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)

பாட்டாளி வர்க்கம் பழைய உற்பத்தி நிலைமைகளை பலத்காரத்தைக் கொண்டு துடைத்தெறிகிறது. தன்னை ஆளும் வர்க்கமாக அமைத்துக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்திடமிருந்து உற்பத்தி கருவிகளை கைப்பற்றுவதற்கு தனது அரசியல் மேலாதிக்கத்தை பாட்டாளி வர்க்கம் பயன்படுத்தும். பலாத்காரமே புதிய சமுதாயம் பிறப்பதற்கான மருத்துவச்சியாக இருக்கிறது.

***** 

No comments:

Post a Comment