Monday, June 17, 2013

Cheguvara Motor Cycle Dairy Part Two (மோட்டார் சைக்கிள் டைரி)

பாலைவனப் பயணம்

உலகின் மொத்த தாமிர உற்பத்தியில் இருபது சதவிகிதிம் சிலியில் உற்பத்தியாகிறது. பயங்கரமான ராணுவ மோதல்கள் நடைபெறும் இடமாகவும், பல தொழிலாளர்களின் உயிரைக் குடித்த இடமாகவும், செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் இடமாகவும்கூட இந்தச் சுரங்கம் இருக்கிறது.
‘எனவே அதன் முக்கியத்துவம் இப்போது மிக மிக அதிகரித்திருக்கிறது. இங்கே, சுரங்கங்களைத் தேசியமயமாக்குவதை அதரிக்கின்ற இடதுசாரி மற்றும் தேசியவாதக் குழுக்கள் இருக்கின்றன. முழுமையான தனியார்மயமாக்கல் என்ற அடிப்படையில் சுரங்கங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படவேண்டும் (நிர்வகிப்பவர்கள் வெளிநாட்டவர்களாகக்கூட இருக்கலாம்), அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தின்கீழ் சுரங்கங்கள் இருக்கக்கூடாது என்று விரும்புவர்களும் இருக்கிறார்கள்.’
எர்னஸ்டோ தொடர்கிறார். ‘இவர்களுக்கு இடையில் பொருளாதார மற்றும் அரசியல்ரீதியிலான போராட்டம் ஒன்று இப்போது இந்த நாட்டில் நடைபெறுகிறது. சலுகைகளை அனுபவித்து வரும் நிறுவனங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீவிரமான அளவுக்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, தாமிர உற்பத்தி தொடர்பாக தேசியவாத அணுகுமுறை உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.’
இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எர்னஸ்டோவால் யூகிக்க முடியவில்லை. ஆனால் மிக அடிப்படையான ஒரு விஷயத்தில் அவர் தெளிவாக இருந்தார். ‘இந்தப் போராட்டத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மணல் சரிவினாலும், விஷமாகிவிட்ட வேலைச் சூழலினாலும், மலையின் கொடுமையான தட்பவெப்ப நிலையினாலும் பலியான எண்ணற்ற சுரங்கத் தொழிலாளர்களின் கல்லறைகளை நாம் மறந்துவிடக்கூடாது.’
சுரங்கத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டே சூச்சிகாமாட்டாவைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள் எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும். இரண்டு மணி நேரம் பாலைவனத்தை நடந்தே கடந்து ஒரு பெயர்ப்பலகைக்கு முன்பு நிழலுக்காக ஒதுங்கினார்கள். கையில் தண்ணீர் இல்லை. அந்தப் பெயர் பலகை கண்களுக்கு மட்டுமே நிழல் தந்தது. அதுவும் ஒருவர் மாற்றி இன்னொருவர் நிற்கும் அளவுக்கே நிழல் படிந்தது.
இந்தப் பயணத்தை என்னவென்று சொல்வது? பைத்தியக்காரத்தனம் என்பதைவிட பொருத்தமான வேறு பெயர் இருக்கமுடியுமா?
ஊர்க்காவலரின் அறையில் ஒதுங்கி, சிறிதளவு சாப்பிட்டுவிட்டு, லாரி ஒன்றைப் பிடித்தார்கள். குடிகாரர்களின் காரில் ஏறி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு நீண்ட நடை. வழியில் துணிகளைத் தொங்கவிட்டு ‘துருக்கிப் பாணி வியர்வை குளியல்’ முடித்துவிட்டு மீண்டும் நடந்தார்கள். கால்பந்து விøளாயட்டு வீரர்கள் சிலருடன் வழியில் இணைந்துகொண்டார்கள். அவர்களுடைய அணிக்காக விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இறைச்சியும் நீரும் தங்குமிடமும் தருபவர்களுக்காக விளையாடுவதில் தவறென்ன இருக்கமுடியும்?
இகிக், ஆரிகா ஆகிய நகரங்களுக்கு இடையிலான பாதையில் இப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். பள்ளத்தாக்குகளை நோக்கி அந்தப் பாதை அவர்களை இட்டுச்சென்றது. ‘முற்றிலுமாக வறண்டு கிடந்த இந்தச் சமவெளிகள் பகல்பொழுதில் மிகவும் வெம்மையாக இருந்தபோதிலும், எல்லாப் பாலைவனத் தட்பவெப்ப நிலைகளையும் போலவே இரவு நேரத்தில் கணிசமான அளவுக்குக் குளிர்ச்சியாக இருந்தன.’
Pedro de Valdivia
சிலியின் முதல் ராயல் கவர்னர், பெட்ரோ வால்டிவியாவின் (Pedro de Valdivia) நினைவு எர்னஸ்டோவுக்கு எழுந்தது. ‘தனது சிறிய படையுடன் வால்டிவியா இந்த வழியில்தான் வந்தார். வெயில் நேரத்தில் நிழலுக்கு ஒதுங்குவதற்கு ஒரு புதரோ, குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணீரோ கூடக் கிடைக்காத இந்தப் பிரதேசத்தில் அவர் ஐம்பது அல்லது அறுபது கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார் என்பதை நினைத்தாலே திகைப்பாக இருக்கிறது.’
இத்தாலி, ஃபிளாண்டர்ஸ் (பெல்ஜியம்), ராணுவத்தில் பணியாற்றிய வால்டிவியா 1534ல் லெஃப்டினெண்டாக தென் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 1540ல் 150 பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் சிலிக்குப் பயணமானார். அங்கு எதிரிகளை முறியடித்து, 1541ல் சாண்டியாகோ என்னும் நகரை உருவாக்கினார். பெருவையும் வீழ்த்தினார். எட்டு ஆண்டுகளில் சிலியின் கவர்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ‘சிலியையும் பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர்கள் கடந்து சென்ற இடத்தை நேரில் பார்க்கும்போது ஸ்பானியர்களின் காலனியப்படுத்தும் நடவடிக்கையின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாகவும், அமெரிக்கக் கண்டனத்தின் வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனையாகவும், வால்டிவியாவும் அவரது ஆட்களும் மேற்கொண்ட பயணத்தை மதிப்பிட வேண்டியிருக்கும்.’
விவால்டியாவின் வீரத்தையும் அவரது மரணத்தையும் பற்றி ஒரு மதிப்பீட்டை எர்னஸ்டோ உருவாக்கிவைத்திருந்தார். ‘வால்டியாவின் சாதனையானது, தன்னால் முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்த முடிகின்ற ஒரு இடத்தை அடையவேண்டும் என்ற வேட்கையின் குறியீடு… விரஞ்செறிந்த ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக ஆகிவிட்டதால் தனது மரணத்துக்கும் ஓர் அர்த்தம் உண்டு என்பதை அவர் உணர்ந்திருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஏனெனில், (சில சமயங்களில் தண்ணுணர்வின்றி) எல்லையற்ற அதிகாரத்தை அடைய விரும்பியதற்காகக் கொடுக்கும் விலையாகச் சிலரின் துயரம் அமைந்து விடுகிறது. மனிதகுலம் அவ்வப்போது பெற்றெடுக்கும் தனிச்சிறப்பான மனிதர்களில் ஒருவர்தான் வால்டிவியா.’
பெரு நாட்டு எல்லையை இப்போது அடைந்திருந்தார்கள். கடைசியாக ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் குளித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார்கள். உபசரிப்பில் சிறந்து விளங்கிய சிலி, இரு மருத்துவர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பிவைத்தது.
சிலியைப் பற்றிய தன் அனுபவங்களை, பயணம் முடிந்து ஓராண்டுக்குப் பிறகு பதிவு செய்தார் எர்னஸ்டோ. முதலில் மருத்துவத் துறை சார்ந்த விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். ‘சிலி நாட்டு சுகாதாரத்தின் பொதுவான நிலைமை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை (நான் அறிந்த பிற நாடுகளைவிட இங்கு நிலைமை பரவாயில்லை என்று பின்னர் அறிந்துகொண்டேன்), இலவச மருத்துவமனைகள் மிகச் சொற்பமாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. அந்த மருத்துவமனைகளில் இப்படியொரு அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. ‘இந்த மருத்துவமனையைப் பேணிப் பாதுகாப்பதற்கு நீங்கள் உதவாவிட்டால், உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் பற்றி நீங்கள் எப்படிப் புகார் செய்யமுடியும்?’ வடக்கில் மருத்துவ சிகிச்சை பொதுவாகவே இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கு…. மிகப் பெரும் தொகைகூட செலுத்தவேண்டியிருக்கலாம்.’
சிலியின் அறுவைச் சிகிச்சை அறைகள் அசிங்கமாக இருந்தன. போதுமான கருவிகள் இல்லை. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. சிலி நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் அர்ஜென்டைன மக்களின் வாழ்க்கைத்தரத்தைவடக் கீழாக இருப்பதை எர்னஸ்டோ கண்டுகொண்டார். தொழிலாளர்கள் தங்கள் நிறுவன நிர்வாகிகளிடம் இருந்து மிகவும் குறைவான சலுகைகளையே பெறுகிறார்கள். இந்தக் காரணங்களுக்காக பலர் அர்ஜென்டினாவுக்குச் சென்றுவிடுவதையும் அவர் கண்டார். இயற்கை வளங்கள் கொட்டிக்கிடந்து என்ன பயன்? மக்கள் நலன் கொண்ட அரசியலமைப்பு இல்லை. அரசியல் தலைமை இல்லை. ‘உள்ளூர் இடுகாட்டில் புதைக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்ற எனது கேள்விக்கு சூச்சிகாமாட்டா சுரங்கத்திலிருந்த ஒரு நிர்வாகி தோள்களைக் குலுக்கிக்கொண்டு எப்படிப் பதிலளித்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.


விடைபெறுகிறேன், சிலி!

Carlos Ibanez del Campo
பிப்ரவரி 14, 1952 அன்று சிலி வந்தடைந்த எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் மார்ச் 22 வரை அந்நாட்டில் தங்கியிருந்தனர். எர்னஸ்டோ சிலியில் இருந்த சமயம், குடியரசுத் தலைவர் தேர்தலில் நான்கு பேர் போட்டியிட்டிருந்தார்கள். இபனேஸ் என்பவர்தான் வெற்றிபெறுவார் என்பது எர்னஸ்டோவின் கணிப்பு. அப்படித்தான் நடந்தது. நவம்பர் 3, 1952 அன்று கார்லோஸ் இபனேஸ் டெல் காம்போ (Carlos Ibanez del Campo) சிலியின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராணுவ அதிகாரியாக இருந்து அரசியலுக்கு நுழைந்தவர் இபனேஸ். முன்னதாக 1927 தொடங்கி 1931 வரை ஒரு சர்வாதிகாரியாக சிலியை ஆண்டவர். ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய குழுவிடம் இருந்து இன்னொரு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர் இபனேஸ். ‘சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஓய்வுபெற்ற ராணுவச் சிப்பாய் அவர். ஏராளமான சிறு குழுக்களின் ஆதரவைப் பெற்ற மக்கள் சோஷலிஸ்ட் கட்சிதான் அவருடைய வலிமையான அடித்தளம்.’ என்கிறார் எர்னஸ்டோ.
இபனேஸின் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது. அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்க வங்கிகள் இபனேஸுக்கு நிறைய கடன் உதவிகள் செய்தன. அதை வைத்துக்கொண்டு சில பொதுப் பணிகளை இபனேஸ் மேற்கொண்டார். சிதறிக்கிடந்தவர்களை ஒன்றிணைத்த சிலியின் காவல்துறையை உருவாக்கியவர் அவரே. 1929 வரை மக்களிடையே இபனேஸுக்கு ஓரளவுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் சரிந்து விழுந்தபோது இவருக்கு வந்துகொண்டிருந்த கடன் உதவிகள் நின்றுபோயின. சிலியின் பொருளாதாரம் சரிந்தது. இபனேஸுக்கு எதிர்ப்புகள் வலுக்குத் தொடங்க, 1931ல் சிலியை விட்டே வெளியேறினார் இபனேஸ்.
1932 தேர்தலில் Arturo Alessandri என்பவர் வெற்றி பெற்றார். மறைந்துபோன இபனேஸ் தனது ஆதரவு வட்டத்தை சிறிது சிறிதாக விரிவாக்கிக்கொண்டு மீண்டும் சிலிக்குள் நுழைந்தார். நாஜிகள், ஃபாசிஸ்டுகள் ஆகியோரின் ஆதரவும் இவருக்குக் கிடைத்தது. தனது அடுத்த வாய்ப்புக்காக 1952 வரை காத்திருந்தார் இபனேஸ்.
இவருடைய தலைமை சிலியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? எர்னஸ்டோவின் கணிப்பு இது. ‘மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்காவை வெறுப்பவரைப் போல் இப்போது அவர் நடிக்கக்கூடும். தாமிரச் சுரங்கங்களையும் பிற சுரங்கங்களையும் நாட்டுடைமையாக்குதல், இருப்புப்பாதைகள் நாட்டுடைமையாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுதல், அர்ஜென்டினாவுக்கும் சிலிக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரித்தல் போன்றவற்றில் அவர் ஈடுபடக்கூடும். ஆனால், பெருவில் உடனடியாக உற்பத்தியைத் தொடங்குவதற்கு அமெரிக்கா பெருமளவில் முதலீடு செய்துள்ள நிலையில், சிலியில் உள்ள இந்தச் சுரங்கங்களை குறுகிய காலத்துக்காகவாவது நாட்டுடைமையாக்கும் திட்டம் சாத்தியமானதாகத் தெரியவில்லை.’
லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தனது அரசியல் மற்றும் பொருளாதார லாபங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டுவருவதை எர்னஸ்டோ நேரடியாகக் கண்டார். தனது பார்வையை குறிப்பேட்டில் பதிவு செய்தும் வைத்தார்.
‘ஒரு நாடு என்ற அளவில், உழைக்க விரும்பும் அனைவருக்கும் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கான வாய்ப்பை சிலி வழங்குகிறது. அவர்கள் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. மாறாக, கல்வித் தகுதியும் தொழில்நுட்ப அறிவும் மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை. சிலி நாட்டு மக்களுக்குத் தேவையான கால்நடைகள் (குறிப்பாக ஆடுகள்) மற்றும் போதுமான அளவு உணவு தானியங்களையும் சிலியே அவர்களுக்கு வழங்க முடியும். சிலி வலிமையான தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக ஆவதற்குத் தேவையான கனிம வளங்களான இரும்பு, தாமிரம், நிலக்கரி, வெள்ளீயம், தங்கம், வெள்ளி, மாங்கனீஸ், நைட்ரேட்கள் ஆகியவை அந்த நாட்டிலேயே ஏராளமான இருக்கின்றன. தொல்லை தருகின்ற அமெரிக்க நண்பனை அந்நாடு தன் முதுகிலிருந்து கீழே இறக்கி விடவேண்டும் என்பதுதான் முக்கியமானது. இந்தப் பணி, இச்சமயத்தில் மிகக் கடினமானதாக இருக்கலாம். ஏனெனில், அவர்கள் ஏராளமாக டாலர்களை அங்கே முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களின் நலன்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுமானால் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை அவர்களால் ஏற்படுத்த முடியும்.’
சிலிக்கு விடைகொடுத்துவிட்டு, பெருவை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்கள் எர்னஸ்டோவும் ஆல்பர்டோவும். பெருவில் டராட்டா என்னும் பகுதிக்கு முதலில் செல்லவேண்டும்.
வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. புல், பூண்டுகூட முளைக்காத மலைப்பகுதியைக் கடந்து நடந்துகொண்டிருந்தார்கள். ஏதேனும் ஒரு வாகனம் வராமலா போய்விடும்? நம்மை ஏற்றிக்கொள்ளாமலா கடந்துவிடும்? கப்பலிலேயே இலவசமாக பயணம் மேற்கொண்டாயிற்று. சாலையைக் கடப்பதிலா சிக்கல் வந்துவிடப்போகிறது?
விரைவில் லாரி ஒன்று இவர்களுக்கு அருகில் வந்து நின்றது. ஓட்டுனரிடம் பேசும் பொறுப்பை ஆல்பர்ட்டோ ஏற்றுக்கொண்டார். எங்களிடம் பணமில்லை, இலவசமாக ஏற்றிக்கொள்வீர்கள்தானே? ஓ,வாருங்கள் வாருங்கள், லாரியின் பின்னால் ஏறிக்கொள்ளுங்கள் என்று கத்தினார் ஓட்டுனர். இருவரும் தாவி குதித்து ஏறிக்கொண்டார்கள். அங்கே அமெரிக்க இந்தியர்கள் பலர் இருந்தனர். எர்னஸ்டோ உற்சாகம் கொள்வதற்குள் அந்த ஓட்டுநர் சொன்னார். ‘ஐந்து சோல்கள் (பெரு நாட்டு நாணயம்) தரவேண்டும்.’ அதே வேகத்தில் லாரியில் இருந்து இருவரும் குதித்தார்கள். இலவசம் என்று இவர்கள் சொன்னது ஓட்டுநனக்குப் புரியவில்லை போலும்.
நடக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் அது தவறான முடிவு என்பது விரைவில் தெரிந்துவிட்டது. இருட்டத் தொடங்கிய பிறகும் குடிசை எதுவும் கண்ணில் சிக்கவில்லை. உண்ணவும் அருந்தவும்கூட கையில் எதுவுமில்லை. மதியம் வெயில் வாட்டி எடுத்தது என்றால் இரவில் கடும் குளிர்.
சரி காலை எழுந்து பார்த்துக்கொள்ளலாம் என்று அப்படியே போர்வையை விரித்து படுத்துக்கொண்டார்கள். சிலி நிமிடங்கள்கூட கண்களை மூடமுடியவில்லை. ஆல்பர்டோ முதலிலும் இரண்டாவதாக எர்னஸ்டோவும் உறைந்துபோனார்கள். இப்படியே நீடித்தால் உயிர் பிழைக்கமுடியாது என்று தெரிந்து சுள்ளிகள் தேடத் தொடங்கினார்கள். அதிலும் வெற்றியில்லை. சில குச்சிகள் மட்டுமே கிடைத்தன. அவற்றைக் கொண்டு மூட்டப்பட்ட நெருப்பு சிறதளவு கதகதப்பையும் அளிக்கவில்லை. ‘பைகளை எடுத்துக்கொண்டு இருட்டிலேயே நாங்கள் நடந்து செல்லவேண்டியதாயிற்று. சூடேற்றிக் கொள்வதற்காக நாங்கள் வேகமாக நடந்தோம். ஆனால் விரைவிலேயே எங்களுக்கு மூச்சு முட்டியது. எனது சட்டைக்குள்ளே வியர்வை வழிவதை என்னால் உணரமுடிந்தது.’
கத்தி போல் குளிர் கிழித்துக்கொண்டிருந்தது. விடிவதற்கு இன்னும் 5 மணி நேரம் இருந்தது. நடுங்கியபடி சாலையை வந்தடைந்தார்கள். இவர்கள் எழுப்பிய பெரும் கூச்சலைக் காதில் போட்டுக்கொள்ளாமல் ஒரு லாரி கடந்து சென்றது. அதிகாலை ஆறு மணியளவில் மெல்லிதான வெளிச்சத்தின் கீற்றில் ஒரு குடிசை தென்பட்டது. மின்னல் போல் பாய்ந்து முன்னேறினார்கள். பிறகு நடந்ததை எர்னஸ்டோவே விவரிக்கிறார்.
‘எந்தவொரு உபசரிப்பும் இவ்வளவு நட்புணர்வோடு இருக்கவில்லை. அங்கிருந்தவர்கள் எங்களுக்கு விற்ற வெண்ணெய் தடவிய ரொட்டியைப் போன்ற சுவையோ, அந்த மேட் பானம் அளித்த உற்சாகமோ வேறு எதிலும் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று எங்களுக்குத் தோன்றியது. மருத்துவர் என்பதற்கான தனது சான்றிதழை ஆல்பர்டோ அவர்களிடம் காட்டினான். இந்த எளிய மனிதர்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இருவரும் கடவுளின் குமாரர்கள்.’ ஏன் அப்படி? ‘பணக்காரர்களும் ஏழைகளும் சமமாக மதிக்கப்படுகின்ற, இந்தியர்களைச் சுரண்டாத,பெரான் மற்றும் அவர் மனைவி ஈவிடா ஆகியோரின் அற்புதமான நாடான அர்ஜென்டினாவில் இருந்து நாங்கள் வருகிறோம்.’
அங்கிருந்து மதியம் கிளம்பி நடக்கத் தொடங்கியபோது இன்னொரு லாரி அவர்கள் அருகில் வந்து நின்றது. சென்ற முறை போல் இவர் பணம் கேட்பாரோ? ஆனால் குழப்பம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நட்புடன் அந்த ஓட்டுனர் இருவரையும் வரவேற்று அமர வைத்தார். எர்னஸ்டோவும் ஆல்பர்டோவும் நிம்மதி பெருமூச்சுடன் புன்னகைத்துக் கொண்டார்கள்.

அய்மாரா பழங்குடிகளுடன் எர்னஸ்டோ

டராட்டாவை நோக்கி இறங்கும் பள்ளத்தாக்கில் அவர்களுடைய லாரி சென்றுகொண்டிருந்தது. ‘இன்கா பழங்குடி மக்கள் தங்கள் அடிமைகளின் நன்மைக்காகக் கட்டியிருந்த பாசனக் கால்வாய்களில் பள்ளத்தாக்கின் அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்த வெள்ளம் ஆயிரக்கணக்கான சிறுசிறு அருவிகளாக மாறியது.’ கம்பளி மேலாடை அணிந்த பழங்குடிகள் பலர் வழியில் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி ஏறிக்கொண்டார்கள். பல்வேறு பயிர்கள் வழி நெடுகிலும் பயிரிடப்பட்டிருந்தன. சில பழங்குடிகளின் காலணிகள் டயரால் தயாரிக்கப்பட்டிருந்ததை எர்னஸ்டோ கண்டார். சில, கயிற்றினால் பின்னப்பட்டிருந்தன. அவர்களுடைய மொழியை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
டராட்டா (Torata) என்றால் மக்கள் ஒன்றுகூடும் இடம். அந்த நகரைச் சுற்றிச் சூழ்ந்து பாதுகாத்துக்கொண்டிருக்கும் மலைகள் ஆங்கில ‘வி’ வடிவத்தில் மிகப் பெரியதாக அமைந்திருக்கும் இடத்தில் நகரம் அமைந்திருந்ததால் அதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது எர்னஸ்டோவின் யூகம். பல நூற்றாண்டுகளாக எந்தவித மாற்றமும் இன்றி அந்தப் பகுதி அமைந்திருப்பதாகவும் அவருக்குத் தோன்றியது. குழந்தைகளை முதுகில் சுமந்தபடி செல்லும் இந்தியப் பெண்களையும் (தென் அமெரிக்கப் பழங்குடிகள்) பழமையான கிறிஸ்தவ தேவாலயத்தையும் குறுகலான தெருக்களையும் கண்டபோது வரலாறு உயிர்பெற்று எழுந்து நிற்பது போலவும் இருந்தது.
‘இன்காக்களின் ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது கிளர்ந்தெழுந்து, அவர்களுடைய ஆட்சிப் பரப்பின் எல்லைகளில் நிரந்தமான படையொன்றை நிறுத்தி வைக்கும்படி நிர்பந்தித்த பெருமைக்குரிய அதே இனத்தைச் சேர்ந்தவர்களல்ல இங்கே வாழும் மக்கள்.’ இப்போது அவர்கள் வெற்றிகெள்ளப்பட்டவர்கள். பணிவானவர்கள். புற உலகைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் ‘பழக்கத்தின் காரணமாக உயிர் வாழ்பவர்களாகவும்’ அவர்கள் இருந்தனர்.
தங்க இடமும் உணவும் கிடைத்தது.காவல் நிலையத்தில் படுத்து உறங்கி அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து புனோ என்னும் இடத்தை நோக்கி செல்லத் தொடங்கினார்கள். மீண்டும் லாரி. மீண்டும் கடுங்குளிர். போர்வைக்குள் எர்னஸ்டோவும் கிரானடோவும் ஒடுங்கிகிடந்தார்கள். மேடுகளில் ஏறும்போது விழுந்துவிடாமல் இருக்க அவ்வப்போது கைகளை எடுக்கும்போது உடல் நடுங்கியது. கிட்டத்தட்ட 5000 மீட்டர் உயரத்தில் அந்தச் சாலயிலேயே மிகவும் உயரமான ஓரிடத்தில் லாரி பழுதடைந்து நின்றுவிட்டது.
இன்னமும் விடியவில்லை என்பதால் குளிர் நீங்கியிருக்கவில்லை. இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். சில பழங்குடிகளும் அவர்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கியிருந்தனர். இளம் மருத்துவர்களைக் கண்டு அவர்களும் அவர்களைக் கண்டு இவர்களும் ஆச்சரியத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டே நடந்தனர். பழங்குடிகளின் ஆடைகள் ஏன் இப்படி இருக்கின்றன? அவர்களுக்குக் குளிரே இருக்காதா? லாமாக்களைப் போல் (தென் அமெரிக்க ஒட்டகம்) எப்படி இவர்களால் கவலையின்றி ஒருவர் பின் ஒருவராக அசைந்து அசைந்து நடக்க முடிகிறது? உடைந்த ஸ்பானிய மொழியில் பழங்குடிகள் எர்னஸ்டோவிடம் கண்களை விரித்து கேட்னர். அதென்ன விசித்திரப் பாத்திரம்? தண்ணீரை ஏன் அதில் ஊற்றி குடிக்கிறீர்கள்?
லாரி தயாரானதும் மீண்டும் பயணம் வேகம் அடைந்தது. அவ்வப்போது இளைப்பாற வண்டி ஆங்காங்கே நின்றது. ஒரு பழங்குடி தன் மகனுடன் எர்னஸ்டோவை நெருங்கி, பல கேள்விகளை எழுப்பினார். தனது பயணத்தைப் பற்றியும் வழியில் கண்ட அற்புதமான காட்சிகள் பற்றியும் எர்னஸ்டோ அவருக்கு விவரித்தார். பெரான் பற்றிச் சொல்லுங்கள், அவருடைய ஆட்சி எப்படிப்பட்டது என்று அவர் ஆவலுடன் கேட்டார். கற்பனைக்கு எட்டிய அளவுக்கு தனது ‘அர்ஜென்டினா தலைவர்’ பற்றி எர்னஸ்டோ நிறையயே அள்ளி விட்டார். உங்கள் நாடு எப்படிப்பட்டது என்று கேட்கப்பட்டபோதெல்லாம் இப்படித்தான் பல கதைகளை அவர் எடுத்துவிடுவது வழக்கம்.
பள்ளி ஆசிரியர் ஒருவர் (அவர் உடலில் பழங்குடிகளின் ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது) பெருவின் சிறப்புகளையும் தனது பூர்விகப் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் மிகவும் ஆர்வத்துடன் எர்னஸ்டோவிடம் பகிர்ந்துகொண்டார். ஒரு விசித்திரமான கதையையும் அவர் சொன்னார்.
பழங்குடிகளின் முக்கியமான இஷ்ட தெய்வங்களில் ஒன்று பூமித்தாயான பாச்சாமாமா. அடக்க முடியாத துயரம் தாக்கும்போது ஒரு அடையாளக் கல்லை பாச்சாமாமாவுக்கு அர்ப்பணித்து தங்கள் துயரத்தை அந்தக் கல்லில் அவர்கள் இறக்கிவிடுவார்களாம். பழங்குடிகளின் வாழ்வில் துன்பங்களுக்குக் குறைச்சலே இல்லை என்பதால் கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஒரு கட்டத்தில் பெரும் கற்குவியல் ஏற்பட்டுவிட்டது.
அந்தக் கற்குவியலை எர்னஸ்டோ சற்று முன்புதான் பார்த்திருந்தார். ‘ஆம், நீங்கள் சொல்லும் இடம் எனக்குத் தெரியும். மலை உச்சியில் நேற்றுதான் அதனை கடந்து வந்தேன். ஆனால், அங்கே ஒரு சிலுவை நடப்பட்டிருந்தது. அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது என்னுடன் லாரியில் வந்த சிலர் எச்சில் துப்பினார்கள். அது ஏன்?’
அந்தப் பள்ளி ஆசிரியர் விளக்கமளித்தார். ‘ஆம், உண்மைதான். ஸ்பானியர்கள் இந்தப் பிரதேசத்தை வென்றபோது பழங்குடிகளின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் அவர்கள் அழிக்க முயன்றார்கள். கிறிஸ்தவத்தையும் புகுத்த முயன்றார்கள். ஆனால் எவ்வளவு முயன்றும் பாதிரிகளால் பழங்குடி தெய்வங்களை ஒழிக்கமுடியவில்லை. வேறு வழியின்றி பூமித்தாயின் கற்குவியல்களுக்கு மேலே சிலுவையை நட்டுவிட்டார்கள். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இது நடந்தது. இப்போது யாரும் பழைய நம்பிக்கைகளை அப்படியே பின்பற்றுவதில்லை. கற்களை வைப்பதற்கு பதிலாக கோக்கோ மென்று துப்புகிறார்கள். அப்படி துப்பும்போது அவர்களுடைய துயரம் பூமித்தாய்க்குச் சென்று சேர்ந்துவிடும்.’
கொலம்பஸின் வருகைக்கு முன்பு, அதாவது 1438 முதல் 1533 வரை இன்கா சாம்ராஜ்ஜியம் தற்போதைய பெருவில் செழிப்புடன் இருந்தது. இப்போதைய பெரு, ஈக்வடாரின் பெரும் பகுதி, பொலிவியாவின் சில பகுதிகள், வடமேற்கு அர்ஜென்டினா, வடக்கு மற்றும் மத்திய சிலி, தெற்கு கொலம்பியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு இன்கா பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பலவந்தமாக நிலப்பரப்புகளை கையகப்படுத்தியபோது பூர்விகப் பழங்குடியினங்கள் பல இன்காவை எதிர்த்து நின்றன.
அவர்களில் அய்மாரா பழங்குடிகளும் அடங்கும். அவர்களைப் பற்றி சொல்லும்போது அந்தப் பள்ளி ஆசிரியரின் முகம் பெருமிதத்தால் மலர்ந்திருந்தது. அதே சமயம் அவர்களுடைய தற்போதைய நிலையை விவரிக்கும்போது அவர் குரலில் வேதனையே எஞ்சியிருந்தது. பிற மக்களைப் போல் அய்மாரா பழங்குடிகள் முன்னேறவேண்டும் என்னும் தன் விருப்பத்தை அவர் எர்னஸ்டோவிடம் பகிர்ந்துகொண்டார்.
‘ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உதவக்கூடிய பள்ளிகளை உருவாக்கவேண்டும்.’ ஆனால், தற்போதைய கல்விமுறை வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது என்பதால் குறிப்பிடத்தக்க முறையில் அதை மாற்றவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ‘இந்தக் கல்விமுறை அவர்களுக்கு அவமானத்தையும் வேதனைகளையும் அளிக்கிறது. சக இந்தியர்களுக்கு உதவ இயலாதவர்களாக அவர்களை மாற்றுகிறது. அவர்களை இழிவுபடுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.’
உடைந்த குரலில் அவர் சொன்னார். ‘நம்முடைய கனவை நம் குழந்தைகளாவது நிறைவேற்றுவார்கள் என்று அய்மாராக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையோடு அவர்கள் இறந்தும் விடுகிறார்கள். இந்தத் துயரமான மக்களின் தலைவிதி இப்படி.’
மார்ச் 26, 1952 அன்று எர்னஸ்டோவும் கிரானடோவும் புனோ என்னும் நகரை வந்தடைந்தார்கள். ராணுவக் குடியிருப்பு ஒன்றில் உணவும் தங்குவதற்கு இடமும் கிடைத்தது. ஆனால், இரவில் அங்கு தங்கமுடியாது என்று அதிகாரிகள் சொல்லிவிட்டதால் ஏரியை நோக்கி அவர்கள் நகர்ந்தார்கள்.
அங்கிருந்த மீனவர்கள் அய்மாரா பழங்குடிகளாக இருந்தனர். ஒரு படகில் இருவரும் ஏரியைச் சுற்றி வந்தனர். ஆனால் அவர்களுடன் உரையாட முடியவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் எந்தவொரு கேள்விக்கும் பதில் பெற்றுவிடமுடியாது என்பது தெரிந்தது. அவர்களில் சிலர் இதுவரை ஒரு வெள்ளையரைக்கூட பார்த்ததில்லை என்று ஒரு வழிகாட்டி பின்னர் சொன்னார். ‘ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அதே வழிமுறைகளைக் கொண்டு மீன் பிடிப்பவர்களாகவும், அதே உணவை உண்பவர்களாகவும், தங்கள் பழக்கவழக்கங்கள், சடங்குகள், மரபுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.’


மறைந்த வரலாறு

Sacsayhuamán
இன்கா மக்களின் தலைநகரமாக இருந்த குஸ்கோ (Cusco) பெருவில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நகரம். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக 1983ல் அறிவிக்கப்பட்ட குஸ்கோ, தற்போதைய பெருவின் வரலாற்றுத் தலைநகரமாகவும் திகழ்கிறது.
முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்நகரை வந்தடைந்த எர்னஸ்டோ முதல் பார்வையிலேயே தன் மனத்தை பறிகொடுத்துவிட்டார். ‘பல யுகங்களின் மாயப் புழுதி’ படிந்த தெருக்களில் உற்சாகமாக நடைபோட்டார் எர்னஸ்டோ. இன்கா மக்களின் படைப்புக் கடவுள் விராகோச்சா தனது மக்களுக்காகப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த பகுதி என்று இது நம்பப்படுகிறது. டவான்டின்சுயு (Tawantinsuyu)) என்னும் பெயரால் குறிக்கப்பட்ட இன்கா சாம்ராஜ்ஜியம், புதிய எல்லைகளைத் தேடி தன் பரப்பை அதிகரித்துக்கொண்ட போது, குஸ்கோவும் அதன் ஒரு பகுதியாக மாறியது.
12ம் நூற்றாண்டில் குஸ்கோவில் வசித்த மேய்ச்சல் நிலப் பகுதி மக்கள், மான்கோ கபாக் (Manco Capac) என்னும் தலைவரால் ஒன்றிணைக்கப்பட்டனர். குஸ்கோ அப்போது உருவான ஒரு நகரம். 1438ல் சாபா இன்கா என்பவர் (பூமியை உலுக்குபவர்) ஆட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினார். அவரும் அவருடைய மகன் டுபாக் என்பவரும் இணைந்து பெரும்பாலான ஆந்திய மலைப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
‘பல யுகங்களின் மாயப் புழுதி’ என்று எர்னஸ்டோ வர்ணித்திருந்ததற்குக் காரணம் அதன் பழைமை மட்டுமல்ல, பழைமையின் எச்சங்கள் இப்போதும் காணக்கிடைத்ததுதான். உலகத்தின் மையமாக, பூமியின் தொப்புளாக குஸ்கோ திகழ்வதாக மாயன் மக்கள் கருதினார்கள். கோட்டை, கொத்தளங்கள் கட்டி தங்கள் பேரரசை உருவாக்கினார்கள். பின்னாள்களில் வந்த ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் குஸ்கோ வசப்படுத்தப்பட்டது. அப்போது மாயன் மக்கள் உருவாக்கிய அடையாளங்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட நாகரிகங்கள் அனைத்தும் இப்படிப்பட்ட அழிவை உலகம் முழுவதிலும் சந்தித்துள்ளன. அனைத்து நவீன நகரங்களின் காலடியின்கீழும் முந்தைய தலைமுறைகளின் வரலாறு புதைந்திருக்கிறது. குஸ்கோவின் சோகக்குரல்‘சூறையாடப்பட்ட சிதிலமடைந்த கோயில்களிலும், கொள்ளையடிக்கப்பட்ட அரண்மனைகளிலும், மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்ட இந்தியர்களிடத்திலும்’ ஒலிக்கிறது என்கிறார் எர்னஸ்டோ.
தங்கள் நகரத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு மாபெரும் கோட்டையை (Sacsayhuamán) இன்கா பழங்குடிகள் உருவாக்கியிருந்தார்கள். நாடோடிகளாகத் திரிந்துகொண்டிருந்த பழங்குடிகள் நிலையான ஓரிடத்தில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்ள முடிவு செய்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்தக் கோட்டையை உருவாக்கியிருக்கவேண்டும். ஆக்கிரமிப்பாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட கோட்டையாக அது இருக்கமுடியாது என்கிறார் எர்னஸ்டோ. ‘ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்ட சுவர்களைப் பார்த்தால், எதிரிகள் தாக்கும்போது, அவர்ளை எதிர்த்து மூன்று புறங்களிலிருந்தும் திருப்பித் தாக்கமுடியும் என்பதும் இந்தப் பாதுகாப்பையும் உடைத்துக்கொண்டு எதிரிகள் உள்ளே ஊடுருவினால், இதே போன்ற இன்னொரு சுவரையும், அதற்கப்பால் மூன்றாவதாக ஒரு சுவரையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதும் நன்கு புலனாகிறது. தற்காப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய யுக்திகளை மேற்கொள்வதற்கும் எதிர்த்தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கும் இது உதவும்.’
கொச்சுவா பழங்குடிகள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று ஆச்சரியம் கொள்கிறார் எர்னஸ்டோ. இன்கா நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து.
குஸ்கோ மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வேறு வழியின்றி கோட்டையைவிட்டு வெளியேறி பள்ளத்தாக்கை நோக்கி மக்கள் நகர்ந்திருக்கவேண்டும். ‘தங்களுடைய பெருமைக்குரிய நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு மிக்கவர்களாக விளங்கிய அவர்கள் தங்கள் மேலாதிக்கத்துக்குக் கடந்த காலத்தில் விளக்கம் தேடத் தொடங்கினார்கள். எனவேதான், அந்தப் பிரதேசத்தில் அவர்களை வலிமை மிக்கவர்களாக மாற்றிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளைப் போற்றுவதற்காக கோயில்களையும் பூசாரிகளையும் அவர்கள் உருவாக்கினார்கள். கொச்சுவாக்களின் மேன்மைமை அவர்கள் வடித்த சிற்பங்களில் காணலாம். ஆகவேதான் குஸ்கோவின் தோற்றத்தால் கவரப்பட்ட ஸ்பானிய வீரர்கள் படிப்படியாக அதை வென்றார்கள்.’
ஸ்பானிய படையெடுப்பு இன்கா நாகரிகத்தின் பெருமிதங்களைத் தேடித்தேடித் தகர்த்தது. கோயில்கள் இடிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் கட்டியமைத்த கோட்டைகள் உறுதியாக நின்றன. ‘துயரமான இன்கா மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கும் இக்கடவுளுக்குப் பதிலாக, மகிழ்ச்சியான மக்களின் துயரமான கடவுள் சிலையை நிறுவுவதில் இவர்கள் குரூரமான மகிழ்ச்சி அடைந்தார்கள்… இன்கா மக்களின் நிலத்தைப் பறித்தவர்களுடைய கட்டடங்களுக்கு எத்தகைய பேரழிவு ஏற்பட்டபோதிலும், சூரியக் யோயிலின் ஒரு கற்பாளம்கூட அசையவில்லை.’
இன்கா ரோகா அரண்மனையைக் கட்டிய இந்தியர்களின் உழைப்பை நினைத்து பார்க்கிறார் எர்னஸ்டோ. ‘தனது கடவுளர்களின் பயங்கரமான பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்த இந்தியனோ, பெருமைக்குரிய கடந்தகாலம் ஒன்று இருந்ததற்கான தடயங்களை அழித்துவிட்டு புற்றீசல்கள் போல கிறிஸ்தவத் தேவாலயங்கள் உயர்ந்தெழுவதைக் கண்டான். காலனியாதிக்க வெற்றியாளர்கள் தங்கள் அரண்மனைகளின் அடித்தளங்களைப் பயன்படுத்திய இன்கா ரோகா அரண்மனையின் ஆறுமீட்டர் உயரச் சுவர்கள், தோல்வியடைந்த வீரர்களின் வேதனையையே அற்புதமாகப் பிரதிபலிக்கின்றன.’
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தை எர்னஸ்டோ ஆர்வத்துடன் சுற்றி வந்தார். வரலாற்றுப் பக்கங்கள் அவர் கண்முன்னால் உயிர்பெற்று எழுந்து நின்றன. குஸ்கோ இனியும் பூமியின் தொப்புள் அல்ல, அது ஒரு புள்ளி மட்டுமே. ‘அதன் புதையல்கள் கடல்வழியாகப் புதிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வேறு பேரரசர்களின் அரண்மனைகளை அலங்கரிக்கின்றன.’ ஆக்கிரமிப்புகளும் சூறையாடல்களும் குஸ்கோவைத் தொடர்ந்து அச்சுறுத்தின. பின்னாள்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்கள் குஸ்கோவில் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், குஸ்கோ இன்றளவும் சுரண்டப்படும் ஓரிடமாகவே இருந்ததை எர்னஸ்டோ கண்டார்.
மலைத்தொடர்களுக்கு நடுவே குஸ்கோவின் வெளிச்சம் தொலைந்துபோனது. சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் மங்கிய ஓர் அடையாளமாக அது மாறிப்போனது. ‘பெருவில் இருந்த வெளியேறிய செல்வங்கள்மீது இடைத்தரகர்கள் விதித்த வரிகளின்மூலம், லிமா என்னும் புதிய நகரம் குஸ்கோவுக்குப் போட்டியாக பசிபிக் கடற்கரையில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றத்தில் புரட்சிகரத் தன்மை எதுவும் இல்லாவிட்டாலும்கூட, இன்கா மக்களின் அற்புதமான தலைநகரம் படிப்படியாக கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாக மாறிப்போனது.’


பயணங்களின் உந்துசக்தி

இன்றைய லிமா
இன்கா நாகரிகம் குறித்து அவ்வளவாக பரிச்சயற்றிருந்த தனக்கு இந்தப் பயணம் கண்டுகளிப்பதாகவும் வரலாற்றை போதிப்பதாகவும் அமைந்திருந்தது என்கிறார் எர்னஸ்டோ. குஸ்கோவில் பதினைந்து தினங்களைக் கழித்தார் எர்னஸ்டோ. அங்கிருந்த அருங்காட்சியகம் தொலைந்துபோன குஸ்கோவின் செல்வங்களைச் சுட்டிக்காட்டும் நோக்கில் இருந்தன. ‘குஸ்கோவில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகம் சிறப்பானதல்ல. அங்கிருந்து கடத்தப்பட்ட செல்வங்களின் அளவு எப்பேர்ப்பட்டது என்று அதிகாரிகள் உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டது.’
ஹுவாம்போ என்னும் நகரில் உள்ள தொழுநோய் மருத்துவமனையையும் ஹுவாங்கராமா என்னும் நகரையும் காணும் நோக்கில் பயணம் தொடர்ந்தது. வழியில் நடைபெற்ற ஓர் உள்ளூர் திருவிழா எர்னஸ்டோவின் கவனத்தைக் கவர்ந்திருந்தது. ஆன்மிகப் பற்றோ கடவுள் பற்றோ அற்றிருந்த எர்னஸ்டோவுக்கு அங்கிருந்த பாதிரி ஒருவர் உரத்த குரலில் ஆற்றிக்கொண்டிருந்த மதப்பிரசாரம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே காட்சியளித்தது.
‘பரிதாபத்துக்குரிய அந்தப் பாதிரியார் மூன்று மணி நேரங்கள் உரை நிகழ்த்தவேண்டியிருந்தது. ஆனால் ஒன்றரை மணி நேரம் பாக்கியிருந்த நிலையில், அவரால் தனது பயனற்ற உரையைத் தொடரமுடியவில்லை. உடனே, ‘கவனியுங்கள் கவனியுங்கள்! தேவன் வந்துவிட்டார். தேவன் நம்மோடிருக்கிறார். தேவனின் ஆன்மா நம்மை வழிநடத்துகிறது’ என்றார்.’ எப்போதெல்லாம் உரைக்கான வாசகங்கள் சிக்கவில்லையோ அல்லது எப்போதெல்லாம் பார்வையாளர்களின் கவனம் திசைதிரும்புகிறதோ அப்போதெல்லாம் தேவனை அவர் பூலோகத்துக்கு அழைத்து வந்து காட்டினார். ‘ஐந்தாறுமுறை பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவின் பெயர் உச்சரிக்கப்பட்ட பிறகு, எங்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. நாங்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பினோம்.’
தொழுநோயாளிகளின் காலனி பரிதாபகரமாகக் காட்சியளித்தது. நீண்ட குதிரைச் சவாரிக்குப் பிறகு இங்கு வந்து சேர்ந்தார்கள். பொதுவில் யாரும் செய்யாத, பாராட்டத்தக்க பணிதான் என்றாலும் மருத்துவமனையின் தோற்றம் மோசமாக இருந்தது. முப்பத்தோரு நோயாளிகள் இருந்தார்கள். பெரு நாட்டு மக்களின் மனநிலையும் இதற்குக் காரணம் என்று எர்னஸ்டோவுக்குத் தோன்றியது. எது எப்படியிருந்தாலும் தொடர்ந்து வாழ்க்கையை முன்னகர்த்திச் செல்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். அசுத்தமும் நோயும் ஏழைமையும் வாட்டி வதைத்தபோதும், வாழவேண்டும் என்னும் வேட்கை அவர்களை விட்டகலவில்லை. அல்லது, இப்போதிருக்கும் நிலையைவிட உயர்வான ஒரு நிலையை அடையும் வழி அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.
‘அறுவை சிகிச்சைக்குத் தேவையான கருவிகள் அங்கே இல்லை. ஒரு பெரிய அறுவை சிகிச்சையைக்கூட அங்கிருந்த மருத்துவர் சமையலறை மேஜையில்தான் செய்யவேண்டியிருந்தது.’ புதிய மருத்துவமனைக்கு வந்து பாருங்கள் என்று அழைத்துச் சென்றார்கள். ஆனால் அதுவும் கிட்டத்தட்ட முந்தையதைப் போலவே இருந்தது.
அந்தப் பகுதியில் இருந்ததில் எர்னஸ்டோவுக்கு ஆஸ்துமா அதிகரிக்க, உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். பல கிராமங்களைக் கடந்து சென்றார்கள். உணவுக்கும் தங்குமிடத்துக்கும் பல கதைகளையும் சால்ஜாப்புகளையும் அவர்கள் சொல்லவேண்டியிருந்தது. பொதுவாக அவர்கள் கடைபிடிக்கும் வழி ஒன்று உண்டு. மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்தமாக இப்படிப் பேசுவார்கள். இன்று என்ன தேதி? என்பார் ஆல்பர்ட்டோ. எர்னஸ்டோ அப்போதுதான் தேதி நினைவு வந்தது போல் கொஞ்சம் யோசித்து சொல்வார். உடனே ஆல்பர்டோ துள்ளுவார். அடடா என்ன இது எர்னஸ்டோ, போன வருடம் இதே நாள் நம் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். இன்றோடு ஓராண்டு பூர்த்தியாகிறது. பெரிய விஷயம்! ஆனால் என்ன செய்வது, கொண்டாட நம்மிடம் பணம் இல்லையே. உடனே அருகில் இருப்பவர் இவர்களை நெருங்கி, நான் வேண்டுமானால் சிறிது தருகிறேனே என்று சொல்வார். அதெப்படி, முன்பின் தெரியாத உங்களிடம் உதவி வாங்குவது என்று இருவரும் பலமாக மறுப்பார்கள். பிறகு அரைச் சம்மதத்துடன் பெற்றுக்கொள்வார்கள்.
பெருவின் தலைநகரம் லிமாவை வந்தடைந்தபோது பயணத்தின் மிக முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. ‘எங்களிடம் சல்லிக்காசுகூட இல்லை. உடனடியாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழியும் இல்லை. எனினும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.’ இந்த விநோமான உணர்வுதான் இருவரின் பயணத்தைத் தொடங்கிவைத்தது. இந்த விநோதமான உணர்வுதான் அவர்களை இந்த நிமிடம் வரை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
அழகிய குடியிருப்புகளும் அகன்ற தெருக்களும் கடற்கரையோரத்து வீடுகளும் கொண்ட நகரமாக இருந்தது லிமா. குஸ்கோவை ஒப்பிடும்போது லிமா, தனது காலனியாதிக்க நினைவுகளை கொஞ்சம் மறந்துவிட்டது போலவும் புதிதாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டுவிட்டது போலவும் எர்னஸ்டோவுக்குத் தோன்றியது. லிமாவில் உள்ள தொல்லியல் மற்றும் மானுடவியல் அருங்காட்சியகம் எர்னஸ்டோவை அதிகம் கவர்ந்தது. கோட்டைகள், தேவாலயங்கள் என்று லிமாவின் கட்டடக்கலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் பகுதிகளில் சுற்றி வந்தார்கள். ஸ்பானிய காலனிகளில் இருந்ததைக் காட்டிலும் இங்குள்ள தேவாலயங்கள் ஊசி போல் மெல்லிதாக காணப்பட்டன. தங்கத்தாலான சிற்பங்கள் இருந்தன. ‘இப்படிப்பட்ட மாபெரும் செல்வத்தின் காரணமாகவே ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் ராணுவப் படைகளை எதிர்த்து இறுதி வரையில் போராடினர். ஒரு காலனியின் நிலப்பிரபுத்துவ நிலைமையை இன்னும் கடந்திராத பெருவின் முழுமையான பிரதிநிதியாக லிமா விளங்குகிறது. ரத்தம் சிந்தப்படும் ஒரு உண்மையான விடுதலைப் புரட்சிக்காக அது இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.’
நோவில்லாடா என்று அழைக்கப்படும் காளைச் சண்டையை ஒரு ஞாயிற்றுக் கிழமை இருவரும் கண்டு களித்தார்கள். அருங்காட்சியகம், காவல் நிலையம் (உணவுக்கு), தபால் அலுவலகம் என்று ஒவ்வொரு நாளும் ஓரிடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. எங்கு செல்வதாக இருந்தாலும் மறக்காமல் அவர்கள் காணும் ஓரிடம் தொழுநோய் மருத்துவமனை. முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையையும் சுற்றி வந்து, மருத்துவர்களிடம் பேசி, தெரிந்துகொண்ட விஷயங்களைத் தனது நோட்டு புத்தகத்தில் பதிவு செய்வது எர்னஸ்டோவின் வழக்கம். அனைத்து மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொழுநோய் மருத்துவமனையைச் சென்று பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் வேறு யார் இருக்கமுடியும்? அவ்வாறு செல்லும் இடங்களிலெல்லாம் மருத்துவர்களையும் மருத்துவமனை ஊழியர்களையும் நோயாளிகளையும் நண்பர்களாக்கிக்கொள்வது எர்னஸ்டோவின் வழக்கம்.
லிமாவிலும் அதுதான் நடந்தது. ‘மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் எளிமையாக எங்களை வழியனுப்பி வைத்தபோதிலும், லிமாவிலேயே எங்களை மிகவும் பாதித்த விஷயம் அதுதான். அவர்கள் எங்களுக்காகப் பணம் சேர்த்து ஒரு மிகப் பெரிய பாராட்டுக் கடிதத்துடன் சேர்த்து அன்பளிப்பாக வழங்கினார்கள். அதன் பிறகு அவர்களில் சிலர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் வந்து விடைகொடுத்தார்கள். நாங்கள் இங்கே வந்ததற்காகவும், அவர்களுடன் நேரத்தைக் கழித்ததற்காகவும், அவர்கள் அளித்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டதற்காகவும் எங்களுக்கு நன்றி கூறினார்கள். அப்போது சிலரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. தொழுநோயைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும்படி எங்களை உத்வேகளிக்கக்கூடிய ஒன்று உண்டென்றால், அது நாங்கள் போகிற இடங்களிலெல்லாம் எங்கள்மீது நோயாளிகள் காட்டும் அன்பாகத்தான் இருக்க முடியும்.’


மறக்கமுடியாத அத்தியாயம்

பெரு பயணம் நெடுகிலும் எர்னஸ்டோவை இம்சித்த இரு விஷயங்கள், கொசு மற்றும் ஆஸ்துமா. ‘எருதின் நீண்ட அலறலைப் போன்ற இளைப்பு நோயிலிருந்து’ விடுபடுவது சவாலான காரியமாக இருந்தது. ஒரு நாளைக்கு நான்கு முறை அட்ரினலின் ஊசி தனக்குத் தானே செலுத்திக்கொண்டபிறகும் மூச்சு வாங்குவது நிற்கவில்லை. சில சமயம் நாள் முழுவதும் படுக்கையில் பொழுதைக் கழிக்கவேண்டிய நிலை. சில சமயம், எழுந்து சிறிதளவு உண்ண முடியும், ஆனால் வெளியில் எங்கும் சுற்றிவரமுடியாது. குளிர்ந்த காற்று உடலில் படும் ஒவ்வொரு முறையும் உடல் நடுக்கம் கண்டது. நடுங்கும் உடலை கொசுக்களுக்கும் அர்ப்பணம் செய்யவேண்டியிருந்தது. ‘ஆஸ்துமாவும் கொசுக்களும் என் சிறகுகளைத் துண்டித்தன. (ஆனால்) இயற்கையின் அனைத்து ஆற்றல்களும் எனது வேட்கையை அதிகரித்தன.’
வறியவர்கள், நோயாளிகள், பழங்குடிகள், செல்வந்தர்கள், சீட்டுக்கட்டு விளையாடும் சீமான்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், பணக்காரர்கள், சுற்றுலாப் பயணிகள், மருத்துவர்கள், சாமானியர்கள் என்று பலரையும் தன் பயணத்தில் எர்னஸ்டோ எதிர்கொண்டார். இந்த மனிதர்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை எர்னஸ்டோவுக்கு ஏற்படுத்தினார்கள்? பெருவில் ஒரு கப்பல் பயணத்தின்போது தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பதிவு செய்யும்போது ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. ‘சாதாரண மாலுமிகளுடன் எங்களால் நன்றாகப் பழக முடிந்தது. ஆனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடன் — அவர்கள் பணக்காரர்களோ இல்லையோ – எங்களால் பழக முடியவில்லை.’
ஏன் முடியவில்லை? ‘கையில் காசின்றிப் பயணம் செய்யும் இருவரிடம் (எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும்) கவனத்தைச் செலுத்துவதைக் காட்டிலும் தங்கள் பழைய கதைகளைப் பேசுவதிலேயே அவர்கள் கவனமாக இருந்தார்கள். எல்லோரையும் போலவே அவர்களும் அறியாமை நிறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் வாழ்க்கையில் அவர்கள் பெற்ற சிறுசிறு வெற்றிகள்தான் அவர்களுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இவற்றால் அவர்கள் ஆதாயமடைந்ததால் ஏற்பட்ட மூர்க்கத்தனத்தின் விளைவாகவே அவர்கள் கீழான கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.’
ஜூன் 1, 1952 அன்று பெருவில் இக்யுடோஸ் (Iquitos) என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்து ஆறு தினங்கள் ஆஸ்துமாவால் தொடர்ந்து அவதிப்பட்டார் எர்னஸ்டோ. சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதும் சான் பாப்லோவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். கப்பலில் இரு தினங்கள் பயணம் செய்யவேண்டியிருந்தது. இந்தப் பயணத்தின்போதும் எர்னஸ்டோவைவிட்டு ஆஸ்துமா அகலவில்லை.
எர்னஸ்டோவுக்கு ஒரு வருத்தம் இருந்தது. புதிய இடங்களையும் புதிய மனிதர்களையும் காண முடிந்தது என்றாலும் நாகரிகத்தின் சுவடுகள் அற்ற பழங்குடிகளை அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சென்று காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில பழங்குடிகளை வழியில் காணமுடிந்தது என்றாலும் அவர்களுடைய இருப்பிடத்துக்கே நேரில் சென்று அவர்களோடு இயல்பாக பழகமுடியவில்லை. ஜூன் 4 அன்று தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தன் வருத்தத்தை அவர் பகிர்ந்துகொண்டார். போதுமான உணவில்லாமல் காட்டுப்பகுதிகளுக்குச் செல்வது ஆபத்தானது, குறிப்பாக ஆஸ்துமா தாக்குதல் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட பயணங்கள் சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.‘ஆற்றைப் பின்பற்றிக் காடுகளுக்குச் சென்றால் அவ்வளவு நாட்களுக்கு உண்ண உணவின்றி எங்களால் இருக்கமுடியாது. இத்தகைய இடங்களுக்குச் செல்வது அபாயகரமானது என்பது அல்ல காரணம். பணம் சேமிக்கவேண்டும். இப்படிச் சேமிக்கும் தொகை பின்னால் எனக்கு உதவிகரமாக இருக்கும்.’
ஒரே ஒரு திருப்தியும் இருந்தது. அது, தொழுநோய் மருத்துவமனைகளைச் சென்று பார்த்தது. ‘தொழுநோய் மருத்துவமனை ஊழியர்களைப் பொருத்தவரை எங்கள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறிவிட்டது. வருகை புரியும் இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு உரிய மரியாதையோடு அவர்கள் எங்களை நடத்துகிறார்கள். தொழுநோய் மருத்துவத்தில் எனக்கு உண்மையிலேயே ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்த ஆர்வம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.’
எர்னஸ்டோ தொடர்கிறார். ‘எங்களுடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்படி எங்களுக்கு உத்வேகமளிப்பதற்கு, லிமா மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பியதே போதுமானது… எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது அவர்களில் பலருடைய கண்களில் கண்ணீர் அரும்பியது. நாங்கள் மருத்துவர்க்குரிய முழு உடைகளையோ கையுறைகளையோ அணியவில்லை. எல்லோருடனும் கைகுலுக்குவது போலவே அவர்களுடனும் கைகுலுக்கினோம். அவர்களோடு உட்கார்ந்து எதைப் பற்றியாவது பேசிக்கொண்டிருப்போம். அவர்களோடு கால்பந்து விளையாடினோம். அவர்கள் எங்களைப் பாராட்டுவதற்குக் காரணம் இதுதான். இதெல்லாம் அர்த்தமற்ற துணிகரச் செயல்களாகக் கருதப்படலாம். ஆனால் எப்போதும் மிருகங்களைப் போலவே நடத்தப்பட்ட இந்தப் பரிதாபத்துக்குரிய மக்கள் சராசரி மனிதர்களாக நடத்தப்படுவதன் மூலம், அவர்களுக்குக் கிடைக்கும் மனநிறைவு அளவிட முடியாதது.’ இந்த மனநிறைவைவோடு ஒப்பிட்டால் நாங்கள் சந்தித்த ஆபத்துகளும் சிக்கல்களும் துன்பங்களும் ‘புறக்கணிக்கக்கூடிய அளவுக்கு மிகவும் சிறியவை’ என்கிறார் எர்னஸ்டோ.
சான் பாப்லோவிலும் தொழிநோயாளிகள் குடியிருப்பைக் காண்பதில்தான் எர்னஸ்டோ முதலில் ஆர்வம் செலுத்தினார். தொழுநோயாளிகளை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி ஓரிடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்த சமயம் அது. ஐந்து முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான மத்திய காலகட்டத்தில் ஐரோப்பாவில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. பல பகுதிகளில் அதற்குப் பிறகும் இவ்வாறு தனிமைப்படுத்தும் வழக்கம் தொடர்ந்தது. இப்படிப்பட்ட குடியிருப்புகளை கிறிஸ்தவத் துறவிகள் தலைமை தாங்கி நடத்துவது வழக்கம். தொழுநோய் குறித்து பல தவறான நம்பிக்கைகள் அப்போது இருந்தன. உடலை உருக்கி சிதைக்கும் கொடூரமான நோய் என்றும், எளிதில் பரவக்கூடிய வியாதி என்றும் இதனைக் குணப்படுத்தவே முடியாது என்றும் அவர்கள் நம்பினார்கள். எனவே சமூகத்தில் இருந்து தொழுநோயாளிகள் பிரித்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான குடியிருப்பை லாசரஸ் என்னும் புனிதரின் பெயரால் லாசர் வீடு என்று அழைத்தனர்.
இப்படிப்பட்ட குடியிருப்புகள் பொதுவாக மலைப்பாங்கான இடத்திலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்திலும் அமைக்கப்பட்டன. இந்தக் குடியிருப்புகளை நடத்த பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டன. இங்குள்ள நோயாளிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து வேதனையளிக்கும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தோல் வியாதிகள் கொண்டவர்களையும்கூட தொழுநோயாளிகள் என்று அழைத்து இப்படிப்பட்ட குடியிருப்புகளில் அடைத்துவிடும் வழக்கமும் இருந்திருக்கிறது.
சான் பாப்லோவில் உள்ள தொழுநோயாளிகளின் குடியிருப்பை நிர்வகித்து வந்தவரும் ஒரு கன்னியாஸ்திரிதான். நோயாளிகள் பிரிவு என்று அழைக்கப்பட்ட பகுதியில் குடிசைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைப் பற்றிய எர்னஸ்டோவின் முதல் விவரிப்பு இது. ‘காட்டுக் குடிசைகளில், தாங்கள் விரும்பியதைச் செய்தபடி, சில தனித்தன்மைகளோடு தனக்கே உரிய ஒரு வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஓர் அமைப்பில் தாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட வேலைகளில் ஈடுபட்டபடி, சுதந்தரமாக ஏறத்தாழ அறுநூறு நோயாளிகள் வசிந்து வந்தார்கள்.’
அந்தக் குடியிருப்புப் பகுதியில் ஒரு ஊராட்சித் தலைவரும் நீதிபதியும் காவல்துறை அதிகாரியும் இருந்தனர். டாக்டர் பிரெஸ்ஸியானி என்பவருக்கு அங்கே நல்ல செல்வாக்கு இருந்தது. நோயாளிகளின் உடல் உபாதைகளைக் கவனித்துக்கொள்தோடு அவ்வப்போது அவர்களுக்குள் எழும் சண்டை, சச்சரவுகளையும் தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. பிரெஸ்ஸியானியுடன் எர்னஸ்டோ விரிவாக உரையாடினார். நோயின் தீவிரம் குறித்தும் அளிக்கப்படும் சிசிச்சை முறைகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டார். சான் பாப்லோ அவர் வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயமாக மாறவிருந்தது.


காடுகளும் மனிதர்களும்

220px-CheOnRaft1952
டாக்டர் பிரெஸ்ஸியா சேகரித்து வைத்திருந்த ஆய்வுத் தகவல்கள் தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக எர்னஸ்டோ குறிப்பிடுகிறார். நானூறு நோயாளிகளைத் தொடர்ந்து பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்ததன் காரணமாக அவர் மருத்துவ அறிவு ஆழமடைந்திருந்தது. சான் பாப்லோ குடியிருப்பில் உள்ள பெரும்பாலான தொழுநோயாளிகளுக்கு நரம்பு மண்டலம் பாதிப்படைந்திருந்தது. குடியிருப்பில் வசித்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கும்கூட ஆரம்பக்கட்ட நரம்பியல் கோளாறுகள் இருக்கின்றவா என்பதை மருத்துவர்கள் பரிசோதித்துக்கொண்டிருந்தனர்.
எர்னஸ்டோ முன்பு கண்டிருந்த தொழுநோய் குடியிருப்பைப் போலவே இங்கும் அடிப்படை வசதிகள் காணப்படவில்லை. மின்சார விளக்குகள் இல்லை. குளிர்சாதனப் பெட்டி இல்லை. ஆய்வுக்கூடம் என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஒரு நல்ல நுண்ணோக்கி இல்லை. உதவியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லை. நரம்பு மண்டலப் பிரச்னைகள் அதிகம் இருந்தபோதிலும் இங்கு அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமில்லை.
மீன் பிடிப்பதற்கும் நீச்சலடிப்பதற்கும் இடையில் நேரம் கிடைத்தது. கால்பந்து விளையாடவும் மருத்துவரோடு சீட்டு விளையாடவும்கூட முடிந்தது. என்றாலும், எர்னஸ்டோவின் கவனம் திரும்பத் திரும்ப தொழுநோயாளிகளைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
சான் பாப்லோவையும் தொழுநோயாளிகள் குடியிருப்பையும் எர்னஸ்டோவால் மறக்கமுடியாமல் போனதற்கு இன்னொரு காரணம் அவருடைய பிறந்தநாள். ‘இன்னும் சிறுவனாகவே இருந்த எனக்கு 1952 ஜூன் 14ம் தேதி சனிக்கிழமை அன்று இருபத்து நான்கு வயது நிறைவடைந்தது.’ வாழ்வு தன்னை அந்த அளவுக்கு மோசமாக நடத்தியிருக்கவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றியது. வாழ்வின் கால் நூற்றாண்டின் சிகரம். இதுவரை செய்திருப்பது என்ன? இனி செய்யவிருப்பது என்ன?
டாக்டர் பிரஸ்ஸியானியின் வீட்டில் எர்னஸ்டோவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மிகுந்த அன்புடன் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தைக் கண்டு நெகிழ்ந்துபோனார் எர்னஸ்டோ. அங்கு அவர் சிறியதாக உரையாற்றினார்.
‘நாங்கள் ஏராளமான இடையூறுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் தற்போதைய நிலைமையில், எங்களால் வழங்க முடிந்ததெல்லாம் வார்த்தைகள்தான். எனவே அவற்றைப் பயன்படுத்தி என்னுடைய, என் நண்பனுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது என்றபோதும் அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல் என் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடித் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்… இன்னும் சில நாள்களில் நாங்கள் பெருவில் இருந்து கிளம்பிவிடுவோம். எனவே எனது உரை உங்களிடமிருந்து விடைபெறுவதாகவும் அமைகிறது. முதன்முதலாக நாங்கள் பெரு நாட்டின் டாக்னா என்னும் நகருக்குள் அடியெடுத்து வைத்தபோது எங்களிடம் தங்களுடைய விருந்தோம்பல பண்பையும் அன்பையும் வெளிப்படுத்திய இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ’
தனது பயணங்கள் வாயிலாகத் தான் கண்டுணர்ந்த சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார் எர்னஸ்டோ. ‘அமெரிக்கக் கண்டம் பல நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தப் பிரிவினைகள் நிலையற்றவை, மோசடியானவை. போலி நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய இந்த நம்பிக்கையை நாங்கள் மேற்கொண்ட பயணம் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனினும் இத்தகைய மேன்மையான லட்சியத்தின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய தகுதி எங்களுக்குக் கிடையாதுதான். நாம் அனைவரும் ஒரே மெஸ்டிஸோ இனத்தைச் சேர்ந்தவர்கள். மெக்ஸிகோவிலிருந்து மெகல்லன் நீர்ச்சந்தி வரையில் தனிச்சிறப்பான இனவரைவியல் ரீதியான ஒத்த தன்மைகள் நம்மிடம் இருக்கின்றன. எனவே, குறுகிய மனப்பான்மை கொண்ட பிரதேசவாதங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கான ஒரு முயற்சியாக, பெருவுக்கும் ஒன்றுபட்ட அமெரிக்கக் கண்டத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’
யாகுவா பழங்குடி மக்களைக் காண்பதற்காக ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிளம்பினார்கள். அது ஒரு குடிசைப் பகுதி. வைக்கோல், பலகைகள் இரண்டையும் கொண்டு இருப்பிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. எர்னஸ்டோ சந்தித்த பழங்குடி மக்கள் நவீன உடைகளையே உடுத்தியிருந்தனர். குழந்தைகளின் வயிறு பெருத்து காணப்பட்டது. ஆனால் வயதானவர்கள் குறைபாடுகள் இன்றி இருந்தனர். வாழைப்பழம், தென் அமெரிக்க நாடுகளில் விளையும் யக்கா எனப்படும் கிழங்கு வகை, ஈச்சம்பழம், விலங்குகள் ஆகியவை இந்த மக்களின் முக்கியமான உணவு வகைகள்.
சான் பாப்லோ தொழுநோய் குடியிருப்பைத் தொடர்ந்து சென்று பார்வையிட்டு வந்தார் எர்னஸ்டோ. மருத்துவர்களிடமும் தொழுநோய் நோயாளிகளிடமும் நெருங்கி பழகினார். அங்கேயே அவருக்குத் தங்குமிடம் வழங்கப்பட்டது. மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து தன்னால் இயன்ற அளவு உதவிகள் செய்தார். பிரார்த்தனை கூடத்துக்கு வருபவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று கன்னியாஸ்திரிகள் வலியுறுத்தியிருந்தனர். குடியிருப்பை நிர்வகிப்பவர்கள் அவர்கள்தாம் என்பதால் அவர்கள் இட்டதுதான் கட்டளை. எர்னஸ்டோவுக்கு தேவாலயம் செல்ல விருப்பமில்லை என்பதால் அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்றபோதும் வேறு வழியில் நண்பர்கள் தொடர்நது உணவு அனுப்பிக்கொண்டிருந்தனர். ‘இந்தச் சின்ன பனிப்போரைத் தவிர வாழ்க்கை மிக மிக இனிமையாகக் கழிந்தது.’
பிஸ்கோ என்னும் ஒருவித போதை அளிக்கும் மது வகையையும் எர்னஸ்டோ விட்டுவைக்கவில்லை. அமெரிக்க ஒற்றுமை குறித்து அவர் நிகழ்த்திய உரைக்கு இந்த பிஸ்கோவும் உரிய பங்களிப்பு செய்திருந்தது.
தங்கியிருந்த இடத்திலிருந்து மருத்துவமனை செல்ல மிதவைகள் பயன்படுத்தப்பட்டன. திடீரென்று அமேசான் நதியை நீந்தி கடக்கவேண்டும் என்னும் ஆவல் ஏற்பட, இரண்டு மணி நேரம் நீந்தி கரையேறினார் எர்னஸ்டோ. வழக்கம் போல் இங்கும் நோயாளிகள் எர்னஸ்டோவைக் கண்கலங்க விடைகொடுத்து அனுப்பிவைத்தார்கள்.
‘நாங்கள் கிளம்பவேண்டிய நாளான வெள்ளிக்கிழமையன்று நோயாளிகளிடம் விடைபெறுவதற்காகச் சென்றோம். சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்… மூன்று மணிக்கு அனைவரிடமும் விடைபெற்றோம். மூன்றரை மணிக்கு மம்போ டாங்கோ என்று பெயரிடப்பட்ட மிதவையுடன் கிளம்பினோம்… நெஞ்சை நெகிழவைக்கும் விதத்தில் உரை நிகழ்த்தினார்கள். எங்களை வழியனுப்பும் விதமாக படகுத்துறையில் ஒரு இசை நிகழ்ச்சியையும் நடத்தினார்கள்…’
இந்த இசை நிகழ்ச்சி குறித்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் எர்னஸ்டோ மேலும் விவரித்தார். ‘வலது கையில் ஒரு விரல்கூட இல்லாமல் அவற்றுக்குப் பதிலாக சில குச்சிகளைத் தனது மணிக்கட்டில் கட்டிக்கொண்டு அக்கார்டியன் வாசிக்கும் ஒரு கலைஞன்’ எர்னஸ்டோவை கவர்ந்துவிட்டான். பாடகனுக்குக் கண்பார்வை கிடையாது. இவை போக, நரம்பு மண்டல நோய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலர் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் முகம் விகாரமாக இருந்தது. ‘ஆற்று நீரில் பிரதிபலிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில், ஒரு திகில் படத்தில் வரும் காட்சியைப் போல இருந்தது அது.’
அனைத்துக்கும் அடித்தளத்தில் அன்பு நிரம்பியிருந்தது. நோயும் ஏழைமையும் நிறைந்திருந்த அந்தப் பகுதியில்தான் அளவிட முடியாத வளங்களும் காணக்கிடைத்தன. ‘ஆற்றின் நடுப்பகுதி வரையில் எங்களைக் கொண்டு வந்தவர்கள் (டாக்டர் பிரெஸ்ஸியானி உள்ளிட்டோர்) இனி எங்கள் பயணத்தை நாங்களே மேற்கொள்ளும்படி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.’ இப்போது அவர்கள் வெனிசூலாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தார்கள். ‘… சில பெசோக்கள் பற்றாக்குறையோடு வெனிசூலாவை நோக்கி கிளம்பிக்கொண்டிருக்கிறேன்… ’
ஜூலை 2, 1952. கொலம்பியாவில் உள்ள போகோடா (Bogata) என்னும் பகுதியை வந்தடைந்தபோது தனது பயணங்கள் குறித்து எர்னஸ்டோ தன் அம்மாவுக்கு விரிவாக எழுதினார். இந்தப் பயணம் தனது கனவைப் பலப்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. காட்டின் வளங்களும், இயற்கை அழகும் எர்னஸ்டோவை வசீகரித்திருந்தன என்றால் உதவி தேவைப்படும் மக்களின் நிலை அவரை மிகவும் பாதித்திருந்தது. ‘வழி நெடுகிலும் மருத்துவம் செய்துகொண்டே பராகுவே நதியிலிருந்து அமேசான் நதிவரை நீர் வழியாக மேட்டோ ரிõஸ்ஸோ பிரதேசத்தைக் கடக்கவேண்டும் என்று கனவு காணும்படி எங்களைத் தூண்டுபவை இவைதான்… என்றேனும் ஒரு நாள் வீடு கட்டவேண்டும் என்பதைப் போன்ற கனவு இது.’
கொலம்பியாவில் நிலவிய அரசியல் சூழலை எர்னஸ்டோ தனது கடிதத்தில் பதிவு செய்தார். ‘நாங்கள் இதுவரை சென்ற எல்லா நாடுகளையும்விட இங்கேதான் தனிமனித சுதந்தரம் தீவிரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது. போலிசார் துப்பாக்கிகள் ஏந்தியபடி தெருக்களில் வலம் வருகிறார்கள். அடிக்கடி பயண ஆவணங்களைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு படிக்க முயல்கிறார்கள். பதற்றமான சூழல். புரட்சி வெடிக்கலாம். கிராமப்புறங்களில் கலகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை அடக்குகின்ற வலிமை ராணுவத்துக்குக் கிடையாது. பழைமைவாதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமை இல்லை… சுருங்கச் சொன்னால், மூச்சுத் திணறவைக்கும் சூழல் இது. கொலம்பியர்கள் இந்தச் சூழலைச் சகித்துக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு வாழ்த்துகள்.’
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 18
நீண்ட நெடிய கேள்விகளும் விசாரணைகளும் ஆவணங்கள் பரிசீலனைகளும் முடிந்தபிறகு ஜூலை 14 என்று முத்திரை குத்தி எர்னஸ்டோவையும் ஆல்பர்டோவையும் அதிகாரிகள் அனுப்பிவைத்தார்கள். கொலம்பியா, வெனிசூலா இரு நாடுகளுக்கும் எல்லையாகத் திகழ்ந்த பாலத்தின் வழியாக இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சிடுசிடுப்பிலும் கடுமையிலும் கொலம்பிய அதிகாரிகளுக்கும் வெனிசூலா அதிகாரிகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.
மேற்கொண்டு முன்னேறுவதற்கு அனுமதி கிடைக்கும்வரை சான் அன்டோனியா டி டாச்சிரா என்னும் பகுதியில் இருவரும் காத்திருந்தார்கள். இங்கு அனுமதி என்பது அரசாங்க அனுமதி அல்ல. அதிகாரம் கையிலிருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அனுமதி வழங்கவும் மறுக்கவும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் சந்தேகிக்கும் நபர்களை அவர்களால் திருப்பியனுப்பமுடியும். சுங்கச்சாவடியில் பைகள் சோதனை செய்யப்பட்டன. எர்னஸ்டோ தனது ரிவால்வரை அழுக்கு மூட்டையில் வைத்திருந்ததால் அதிகாரிகள் அதைத் தீண்டவேயில்லை. ஆனால் மிகவும் சிரமப்பட்டு எர்னஸ்டோ பாதுகாத்த கத்தி சிக்கிக்கொண்டது.
வெனிசூலாவின் தலைநகரம் காரகாஸை அவர்கள் அடைந்தாகவேண்டும். தான் செல்லவிருந்த பகுதி குறித்து ஓரளவுக்கு அடிப்படையான தகவல்களையாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில் எர்னஸ்டோ ஆர்வமாக இருந்தார். அவ்வாறே அருகிலிருந்த நூலகத்துக்குச் சென்று வெனிசூலா குறித்து படிக்க ஆரம்பித்தார். இந்த முறையும் ஆஸ்துமா மீண்டும் தலைதூக்கியதோடு அதிகப்படியான சிரமத்தையும் அளிக்க ஆரம்பித்திருந்தது. பேருந்தில் மூன்று நாள் பயணமா அல்லது சிறிய ஊர்தியில் இரு நாள்களா என்னும் கேள்வி வந்தபோது பேருந்தை நிராகரித்தார் எர்னஸ்டோ. ஆஸ்துமாவை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது.
கையிருப்பு குறைவாக இருந்ததால், அடிக்கடி சாப்பிடவேண்டாம் என்று முடிவு செய்தார் எர்னஸ்டோ. ஒரு நிறுத்தத்தில், அனைவரும் வண்டியிலிருந்து இறங்க எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் மட்டும் வண்டியில் மூட்டைகளோடு அமர்ந்திருப்பதைக் கண்டு மனம் இறங்கிய ஓட்டுநர் இருவரையும் வரவேற்று தன் செலவில் நல்ல உணவு வாங்கிக்கொடுத்தார். தன்னிடம் இருந்த கடைசி மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு மூச்சு விடச் சிரமப்பட்டுக்கொண்டு எப்போது காரகாஸ் வரும் என்று காத்திருந்தார் எர்னஸ்டோ.
பொழுது புலரத் தொடங்கியபோது காரகாஸ் வந்து சேர்ந்தார்கள். களைப்பின் உச்சத்தில் இருந்தார் எர்னஸ்டோ. ‘அரை பொலிவார் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்த அறையிலிருந்த படுக்கையில் விழுந்தேன். ஆல்பர்ட்டோ எனக்குப் போட்ட அட்ரினலின் ஊசியின் துணையுடன் ஒரு பிணத்தைப் போல் தூங்கினேன்.’
காரகாஸில் எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பிரிய வேண்டியிருந்தது. எர்னஸ்டோ தன் மாமாவின் கார்கோ விமானத்தைப் பயன்படுத்தி மியாமிக்குச் செல்ல விரும்பினார். அங்கிருந்து பியூனஸ் ஏர்ஸ். ஆல்பர்ட்டோ காராகஸில் சிறிது காலம் தங்கியிருந்து, அருகிலுள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்ற விரும்பினார்.
பயணம் என்பது புதியனவற்றைக் கண்டுகொள்வது மட்டுமல்ல பயணம் என்பது விடைபெறுவது, விடைகொடுப்பது. மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்குவதற்கு முன்பு தன் காதலியிடம் இருந்தும் பயணத்தின்போது தனது மோட்டார் சைக்கிளிடம் இருந்தும் இறுதிகட்டத்தில் தன் நண்பனிடம் இருந்தும் எர்னஸ்டோ பிரியவேண்டியிருந்தது. ‘ஆல்பர்ட்டோ என்னுடன் இல்லாதது மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு கற்பனையான தாக்குதலில் என் இடுப்பு ஒடிந்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவனிடம் ஏதேனும் சொல்வதற்காக அடிக்கடி திரும்பினேன். அவன் அங்கே இல்லாததை பிறகுதான் என்னால் உணரமுடிந்தது… நாங்கள் இருவரும் இரண்டறக் கலந்திருந்து, ஒரே மாதிரியான நிலைமைகளில் ஒரே மாதிரியாகக் கனவு கண்டு வந்த பழக்கம் எங்களை மேலும் நெருக்கமானவர்களாக ஆக்கியிருந்தது.’
முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டுகொண்டே செல்லும் ஏதாவதொரு அம்சம் வாழ்வில் உண்டா? வீட்டுக்குப் போயாகவேண்டும். படிப்பைத் தொடரவேண்டும். பட்டம் பெற்று, மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவேண்டும். சேகரித்த அனுபவங்களின் துணைகொண்டு தொழுநோய் மருத்துவத்தில் சாதனை படைக்கவேண்டும். ‘எனினும் விடைபெறுவது என்ற எண்ணமே எனக்கு மகிழ்ச்சி தரவில்லை.’
காரகாஸ் மலைகளின்மீது ஏறி சிறிது நேரம் நடந்தார் எர்னஸ்டோ. நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு தெளிவாக எதிர்காலம் குறித்து சிந்திக்க முயற்சி செய்தார். மலைகளில் கல் வீடுகளைக் காணமுடியவில்லை. திரும்பும் திசையெங்கும் குடிசைகளே நிறைந்திருந்தன. ஒரு குடிசைக்குள் நுழைந்து பார்த்தார். ஏழைமையின் பிடியில் சிக்கியிருந்த ஒரு குடும்பம் அங்கே வசித்துக்கொண்டிருந்தது. உங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று எர்னஸ்டோ கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். படம் எடுத்ததும் எங்களுக்கு அதை முதலில் கொடுப்பதாக இருந்தால் சம்மதிக்கிறோம் என்றார்கள். அது சாத்தியமில்லை, கழுவிய பிறகே படம் கிடைக்கும் என்று எர்னஸ்டோ சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. மறைந்திருந்து ஒரு குழந்தையைப் படமெடுக்க முயன்றார் எர்னஸ்டோ. அந்தக் குழந்தை பயத்துடன் தடுமாறிவிழுந்துவிட, கண்டபடி திட்டியபடி அவர்கள் எர்னஸ்டோவைத் துரத்தத் தொடங்கினார்கள்.
கிரானாடோவிடம் இருந்தும் வெனிசூலாவிடம் இருந்தும் விடைபெற்றுக்கொண்டு எர்னஸ்டோ ஒரு சரக்கு விமானத்தில் ஜூலை 27, 1952 அன்று மியாமி சென்று சேர்ந்தார். ஒரு நாள் அங்கிருந்துவிட்டு, திரும்பவும் காரகாஸ் சென்று, பிறகு அங்கிருந்து அர்ஜென்டினா வந்து சேர்வதுதான் அந்த விமானத்தின் பயணத்திட்டம். ஆனால் விமானத்தின் எஞ்சின் ஒன்று பழுதடைந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் சரிசெய்யப்படும்வரை மியாமியில் இருந்து விமானம் கிளம்பவில்லை.
முடிவடையவிருந்த பயணத்தின் திடீர் நீட்சி என்று கொள்ளலாம்தான். ஆனால் எர்னஸ்டோவிடம் இருந்தது ஒரு டாலர் மட்டுமே. ஒரு சிறிய விடுதிக்குச் சென்று, ஊருக்குச் சென்றதும் பணம் அனுப்புகிறேன் என்று மன்றாடி ஓர் அறையைப் பிடித்துக்கொண்டார். மற்ற விஷயங்களை வீடு திரும்பியதும் தன் தந்தை எர்னஸ்டோ குவேரா லிஞ்சிடம் பகிர்ந்துகொண்டார். இனி வருபவை எர்னஸ்டோ சீனியரின் குறிப்புகள்.
‘பணம் எதுவும் இல்லாமல் எப்படி நாள்களைக் கழித்தான் என்று வீடு திரும்பியதுமே அவன் எங்களிடம் கூறினான்… ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் அவன் நகரத்தின் மையத்திலிருந்த தனது விடுதியில் இருந்து சுற்றுலாத் தலமான கடற்கரைக்கு நடந்து சென்றான். அவன் அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் அரிதாகவே ஏற்றிக்கொள்ளப்பட்டான். இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் பதினைந்து கிலே மீட்டர் என்பதாக எனக்கு நினைவு. ஆனால் அவன் தன்னால் இயன்ற அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தான். அமெரிக்காவை, அதன் ஒரு சிறு பகுதியைத்தான் என்றபோதும், அறிந்துகொள்ள முயன்றான்.’ எர்னஸ்டோவின் பயணங்களுக்கு உந்து சக்தி இந்த இரு அம்சங்கள்தாம். இயன்ற வரை மகிழ்ச்சியாக இருப்பது. புதிய சூழலை முடிந்தவரை தெரிந்துகொள்ள முயன்றது.
எர்னஸ்டோவின் பயணத்தில் கடைசி கட்டம்வரை சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஒரு மாத காலத்தை மியாமியில் கழித்துவிட்டு, எஞ்சின் பழுது பார்க்கப்பட்ட பிறகு விமானத்தில் ஏறி, அது பறக்கவும் தொடங்கிவிட்டது. உறக்கத்தில் இருந்த எர்னஸ்டோவை ஒரு சிறுவன் அவசரமாக எழுப்பினான். ஆபத்து, சக்கரங்கள் வெளியில் வர முடியாதபடி விமானத்தின் அடிப்பகுதி செயலிழந்துவிட்டது, எழுந்திருங்கள்! எர்னஸ்டோ அதை ஒரு வேடிக்கையாக நினைத்து, மீண்டும் தூங்கப்போய்விட்டார். பயணிகள் என்று பார்த்தால் பைலட் போக, எர்னஸ்டோவும் அந்த சிறுவனும்தான் (அவன் குதிரை லாயத்தைச் சேர்ந்தவன்) விமானத்தில் இருந்தனர். மற்றபடி பழக்கூடைகள் கொண்ட பெட்டிகளே அதிகம் நிறைந்திருந்தன.
விழிப்பு வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது லாரிகளும் கார்களும் தீயணைப்பு வண்டிகளும் விமானத்தைச் சுற்றி நின்றுகொண்டிருப்பதை எர்னஸ்டோ பார்த்தார். விமானத்தின் அடிப்பகுதி மெய்யாகவே செயலிழந்திருந்தது. ஆனால் எப்படியோ ஆபத்து எதுவுமின்றி விமானம் தரையிறக்கப்பட்டது.
பெரிய இடைவெளிக்குப் பிறகு தன் மகனைக் கண்ட அந்தத் தருணத்தை எர்னஸ்டோ சீனியரின் வார்த்தைகளில் பார்ப்போம்.
‘மியாமியிலிருந்து வரும் சரக்கு விமானம் ஒன்றில் எர்னஸ்டோ மாலையில் வரப்போவதாக ஒரு நாள் காலையில் பியூனஸ் ஏர்ஸிலிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. எட்டு மாதங்களாக, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று பயணம் முடிந்து கடைசியில் அவன் வீடு திரும்புகிறான்.
‘எஸேய்ஸா விமான நிலையத்தில் அவனை வரவேற்பதற்காகக் குடும்பத்தினர் அனைவரும் சென்றோம். அன்று பிற்பகலில் மழை வரும்போல் இருந்தது. மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் வெளிச்சமே இல்லை. சரக்கு விமானம் பிற்பகல் இரண்டு மணிக்கு வருவதாக இருந்தது. நாங்கள் இரண்டு மணி நேரம் முன்னதாகவே காத்திருந்தோம். விமானம் வந்து சேராததால் நாங்கள் எல்லோரும் பதற்றமடைந்தோம். கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் ஏதும் வரவில்லை. சரக்கு விமானங்கள் எப்போதும் குறித்த நேரத்துக்கு வருவது கிடையாது என்றும், அவற்றை யாரும் எதிர்பார்க்காதபோதுதான் ஓடுபாதையில் அவை இறங்குவது வழக்கம் என்றும் கூறி, அவர்கள் எங்களைச் சமாதானப்படுத்தினார்கள்.
‘அன்றும் அதுதான் நடந்தது. அந்த டக்ளஸ் விமானம் திடீரென்று தோன்றியது. மேகங்களினூடாகத் தாழ்வாகக் பறந்தது. விமான நிலையத்தை வட்டமிட்டுவிட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் தரையிறங்கியது. சில கணங்களுக்குப் பின்னர், மழைத் துளியில் நனைந்து விடாதவாறு மழைக்கோட்டு அணிந்தபடி, எர்னஸ்டோ விமானத்திலிருந்து வெளியில் வந்து, ஓடுபாதையின் எல்லையை நோக்கி ஓடிவந்தான். நான் மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்தேன். என் கைகளை வாயருகில் குவித்து, என்னால் முடிந்த அளவுக்கு உரக்கக் கத்தினேன். அந்த சப்தம் அவனுக்குக் கேட்டது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. பிறகு மேல்தளத்தில் நாங்கள் நின்றுகொண்டிருப்பதை அவன் கண்டுகொண்டான். எங்களைப் பார்த்து கையசைத்தபோது புன்னகையுடன் காட்சியளித்த அவனுடைய முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அது 1952ம் ஆண்டு செப்டெம்பர் மாதம்.
<முடிவு பெற்றது‍>

Cheguvara Motor Cycle Dairy Part one (மோட்டார் சைக்கிள் டைரி)

சே குவேரா : மோட்டார் சைக்கிள் டைரி

Becoming Che என்னும் நூலை எழுதிய கார்லோஸ் ‘கலிகா’ ஃபெரர் (Carlos ‘Calica’ Ferrer) முதல் முதலில் எர்னஸ்டோ குவேரா டிலா செர்னாவைச் சந்தித்தது ஒரு பிறந்தநாள் விழாவில். யாருடைய பிறந்த நாள் விழா, எங்கே, எப்போது போன்ற விவரங்கள் கலிகாவின் நினைவில் இல்லை. ‘எங்களைப் பிடித்து இழுத்துச் சென்று குளிப்பாட்டி, தலை சீவி, மடிப்பு கலையாத உடைகள் உடுத்தி வழக்கமாகக் கூட்டிச் செல்லும் ஒரு விழா அது… எர்னஸ்டோவையும் அப்படித்தான் அழைத்து வந்திருப்பார்கள். வா, டாக்டர் ஃபெரரின் மகனைப் பார்க்கப்போகிறாய், நீங்கள் இருவரும் நண்பர்களாகலாம் என்று அவனிடம் சொல்லியிருப்பார்கள். அப்போது அப்படித்தான். உங்கள் நண்பனின் பெற்றோரையும் நீங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளவேண்டும்.’
கலிகாவின் குடும்பமும் எர்னஸ்டோவின் குடும்பமும் நட்புடன் பழக ஆரம்பிப்பதற்கு கலிகாவின் அப்பா ஒரு ஆஸ்துமா நிபுணர் என்பதும் ஒரு காரணம். எர்னஸ்டோவைக் கவனித்துக்கொண்டவர் அவரே. ‘அவரது நல்ல சிகிச்சையாலோ அல்லது நல்ல வானிலை காரணமாகவோ எர்னஸ்டோ குணமாக ஆரம்பித்தான்.’
1932ல் அர்ஜென்டினாவில் கோர்டோபா மாகாணத்தில் அமைந்துள்ள ஆல்டா கிரேசியா என்னும் மலைப்பிரதேசத்துக்கு எர்னஸ்டோவின் குடும்பம் குடிபெயர்ந்தது. அப்போது எர்னஸ்டோவுக்கு நான்கு வயது. ஆஸ்துமாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த எர்னஸ்டோவைப் பரிசோதித்த பியூனஸ் ஏர்ஸ் மருத்துவர் சிறிது காலம் மலைப்பிரதேசமான கோர்டோபா சென்று தங்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். நான்கு மாதம் தங்கலாம் என்று முடிவு செய்துதான் அவர்கள் வந்திருந்தனர். ஆனால் அடுத்த 11 ஆண்டுகளை அவர்கள் அங்கேயே கழிக்கவேண்டியிருந்தது. கலிகா எர்னஸ்டோவோடு நெருங்கிப் பழங்கிய காலகட்டம் இது.
எர்னஸ்டோவின் அம்மா, செலியா (டி லா செர்னா) ஒரு ‘குடும்பத் தலைவியாக’ மட்டும் இல்லாமல், குழந்தைகளை வரவேற்று உபசரிப்பவராக, வலிமையானவராக, அறிவுபூர்வமாக விவாதிப்பவராக, நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்ததை கலிகா குறிப்பிடுகிறார்.
எர்னஸ்டோவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவனை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றிருக்கிறார் செலியா. குழந்தையைக் குளிக்க வைத்து, விளையாட்டு காட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். எர்னஸ்டோவை உடனே ஆஸ்துமா பிடித்துக்கொண்டுவிட்டது. இது பற்றி செலியாவின் கணவர் எர்னஸ்டோ சீனியர் (எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்) செலியாவைக் கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. எர்னஸ்டோவுக்கு ஆஸ்துமா வந்தது உன்னால்தான் என்று அவர் அடிக்கடி சண்டையிட்டதாகவும் சிலர் பதிவு செய்திருக்கிறார்கள்.
‘இது உண்மையா என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் வேறு ஒரு விஷயத்துக்காக எர்னஸ்டோ சீனியரும் செலியாவும் சண்டையிட்டுக்கொண்டதை நான் கண்டிருக்கிறேன்.’ என்று கீழ்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் கலிகா.
எர்னஸ்டோ வீட்டில் இல்லாத சமயம் அது. அவனைத் தேடி சலித்துப்போன எர்னஸ்டோ சீனியர் படபடவென்று வெடிக்க ஆரம்பித்தார்.
‘என்ன காரியம் செய்திருக்கிறான் பார்! எங்கும் அவனைக் காணவில்லை. எல்லாம் உன் வளர்ப்பில் உள்ள பிரச்னை.’
அதே வேகத்தில் செலியாவிடம் இருந்து பதில் புறப்பட்டு வந்தது.
‘பிறகு என்ன செய்யவேண்டும் என்கிறாய்? முட்டை ஓடு போல் கவனமாக அவனைப் பாதுகாக்கவேண்டுமா? அங்கே போகாதே, அதைச் செய்யாதே, கவனம் கவனம் என்று அவன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கவேண்டுமா?’
உறுதியான குரலில் சொன்னார் செலியா.
‘நான் முடிவுசெய்துவிட்டேன். அவன் மற்ற குழந்தைகளைப் போலத்தான் வளர்வான்.’
பொத்திப் பொத்தி வீட்டுக்குள் பூட்டி வைப்பது அவன் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை செலியா நன்றாகவே புரிந்துவைத்திருந்தார். தன் கணவரின் எதிர்ப்பை மீறி அவர் எடுத்த திடமான முடிவு இது. ‘இவரது முடிவு பொய்க்கவில்லை என்பதை எர்னஸ்டோவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.’ என்கிறார் கலிகா.
ஆஸ்துமாவைக் காரணம் காட்டி எந்தவொரு கடினமான சூழலில் இருந்தும் எர்னஸ்டோ தப்ப நினைத்ததில்லை. செலியாவிடம் இருந்த அதே மன உறுதி, அதே பாறை மனம் எர்னஸ்டோவிடமும் இருந்தது. விளையாட்டு, சண்டை, சாகசம் எதிலிருந்தும் எர்னஸ்டோ பின்வாங்கவில்லை.
பல சமயங்களில் எர்னஸ்டோவால் படுக்கையைவிட்டு அகலவே முடியாது போய்விடும். அப்போது நண்பர்கள் வீட்டுக்குச் சென்று அவனைப் பார்ப்பார்கள். எதிர்பாராத சமயத்தில் திடீரென்று சுவாசிக்க தடுமாறுவான். நண்பர்கள் உதவுவார்கள். இன்ஹேலர் கருவி எப்போதும் அவனுடன் இருக்கும்.
எப்போது சோர்வடைவான், எப்போது சுருண்டு படுப்பான், எப்போது துள்ளியெழுவான் என்று யாராலும் யூகிக்கமுடியாது. ஆனால், ஒன்று நிச்சயம். நீச்சல், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ஃப், மலையேற்றம் என்று எதையும் எர்னஸ்டோ விட்டுவைத்ததில்லை.
‘எர்னஸ்டோவின் பலம், விளையாட்டுகளில் உள்ள ஆர்வம்,பெண் சிநேகிதர்களை ஈர்ப்பதில் அவனுக்குள்ள ஆற்றல் அனைத்தும் சேர்த்து அவனை ஓர் இயல்பான தலைவனாக உருமாற்றியிருந்தன.’ என்று நினைவுகூர்கிறார் கலிகா.
செலியா குறிப்பிட்டதைப் போல் எர்னஸ்டோ மற்ற குழந்தைகளைப் போல இயல்பாகவே வளர விரும்பினான். விளையாடுவதையும், மூச்சு முட்ட மலையேறுவதையும், கட்டிப் புரண்டு பொய்ச் சண்டையிடுவதையும், வியர்க்க விறுவிறுக்க ஓடுவதையும் அவன் ஒரு மூர்க்கமான யுத்தமாகவே பாவித்து மேற்கொண்டிருக்கவேண்டும். தன்னை முடக்க நினைக்கும் ஆஸ்துமாவுக்கு எதிரான யுத்தம் அது.
ஒரு கட்டத்தில் இயல்பு வாழ்வுமேகூட எர்னஸ்டோவைச் சலிப்படைய வைத்துவிட்டது. புத்தகங்களைக் கடந்து, பெற்றோரின் அன்பைக் கடந்து, நண்பர்களைக் கடந்து, விளையாட்டுகளைக் கடந்து, பாதுகாப்பு வளையங்களைக் கடந்து விரிவாக உலகைக் காண விரும்பினான் எர்னஸ்டோ.
‘என்னால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அவனிடம் இருந்தன. அவற்றைக் காலப் போக்கில்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. பயணத்தின்மீது அவனுக்கு இருந்த வேட்கையானது புதியனவற்றைக் கண்டறிய வேண்டுமென்ற அவனுடைய விருப்பத்தின் இன்னொரு அம்சமே என்பதை அப்போது நான் உணரவில்லை.’ மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தன் மகன் குறித்து எர்னஸ்டோ சீனியர் பகிர்ந்துகொண்ட ஆச்சரியம் இது.
ராகுல் சாங்கிருத்யாயன் எர்னஸ்டோவுக்காகவே ஊர் சுற்றிப் புராணம் எழுதியது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ‘ஊர் சுற்றுவதைவிட மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை செய்வது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை… இந்த உலகமே ஊர் சுற்றிகளால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது…அஞ்சாமை உள்ளவன்தான் ஊர் சுற்றி விரதம் கொள்ளமுடியும்… நீங்கள் யார் பேச்சையும் கேட்காதீர்கள். தாயின் கலங்கிய கண்களிலிருந்து கொட்டும் கண்ணீரையோ தந்தையின் பயமுறுத்தலையோ தெரியாத்தனமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவியின் அழுகுரலையோ பொருட்படுத்தக்கூடாது…உலகில் மனிதப் பிறவி ஒரு தடவைதான் எடுக்கமுடியும். அதே போல் இளமையும் ஒரே தடவைதான் வருகிறது. அஞ்சாமை நிறைந்த இளைஞர்களும் யுவதிகளும் இந்தக் கிடைத்தற்கரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது .’
எர்னஸ்டோ ஊர் சுற்ற ஆசைப்பட்டான். பயணம் ஏற்படுத்திக் கொடுத்த ருசி, எர்னஸ்டோவை அவனது தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், காதலியிடம் இருந்தும் பிரித்து வைத்தது. எர்னஸ்டோ தனது எல்லைகளை விரிவாக்கிக்கொள்ள ஆரம்பித்தான். உலகம் எத்தனை பெரியது என்பதை பயணம் எர்னஸ்டோவுக்குக் கற்றுக்கொடுத்தது. ஒரு தெளிவான குறிக்கோளையும் அவனுக்குள் ஏற்படுத்தியது.
எர்னஸ்டோ சீனியரின் எழுத்துகளில் அதை வாசிக்கமுடிகிறது.
‘ஏழை மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் உலகம் முழுவதும் பயணம் செய்யவேண்டும். அதுவும் இயற்கைக் காட்சியை ரசித்தவாறு அழகான புகைப்படங்களை எடுப்பதற்காக நிற்கும் சுற்றுலாப் பயணியாக அல்ல. அவன் செய்ததைப் போல, சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் எதிர்கொள்ளும் மனிதர்களின் துயரத்தைப் பகிர்ந்துகொள்பவனாகவும் அந்தத் துயரத்துக்கான காரணங்களைக் கண்டறிய முயல்பவனாகவும் இருக்கவேண்டும்… அவனுடைய பயணங்கள் சமூக ஆய்வின் ஒரு வடிவமாக இருந்தன. எல்லாவற்றையும் தானே நேரில் காணவேண்டுமென்பதற்காக அவன் பயணம் செய்தான். அதே சமயத்தில் தன்னால் முடிந்த வரையில் மற்றவர்களின் துயரங்களைக் களைவதற்கு முயற்சி செய்தான்.’
எல்லாவற்றுக்கும் மேலாக, எர்னஸ்டோ குவேரா டிலா செர்னாவை பயணங்கள் சே குவேராவாக வளர்த்தெடுத்தன.

சே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை

பதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி சான்றிதழ், ‘வெரி குட்’, ‘அவுட்ஸ்டாண்டிங்’ போன்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், சகமாணவர்கள் எர்னஸ்டோவை அப்படியொன்றும் ஒரு பிரமாதமான படிப்பாளியாகக் காணவில்லை. விளையாட்டு, அரட்டை, கிண்டல், ஊர் சுற்றல் என்று மிக இயல்பான ஒரு எர்னஸ்டோவைத்தான் அவர்கள் அறிந்திருந்தனர். எப்பொழுதும் நம்முடன் சுற்றிக்கொண்டிருக்கும் எர்னஸ்டோ தேர்வுகளில் மட்டும் எப்படி நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுவிடுகிறான் என்று அவர்கள் வியந்திருக்கவேண்டும்.
வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் எர்னஸ்டோ புத்தகங்களை அபாரமாக நேசித்தார். செலியாவும் எர்னஸ்டோ சீனியரும் சேகரித்து வைத்திருந்த மூவாயிரத்து சொச்ச புத்தகங்கள் எர்னஸ்டோமீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆயிரத்தோரு இரவுகள், பாப்லோ நெருடாவின் கவிதைகள், பிராய்ட், ஜேக் லண்டன், அனடோல் பிரான்ஸ் என்று வாசிக்கத் தொடங்கினார். சுருக்கப்பட்ட கார்ல் மார்க்ஸின் மூலதனமும் கிடைத்தது. (ஆனால், அப்போது எனக்கு அதில் எதுவுமே புரியவில்லை!) எர்னஸ்டோவின் நண்பர் ஒருவர் நினைகூர்ந்தபடி, ‘பேரார்வத்துடன் எர்னஸ்டோ புத்தகங்களை அணுகினான். வயதுக்கு மீறிய கனமான தலைப்புகளை அவன் வாசிப்பது தெரிந்தது.’
எர்னஸ்டோ தனது முதல் ‘தத்துவ அகராதியை’ உருவாக்க ஆரம்பித்திருந்தார். 165 பக்க கையெழுத்துப் பிரதி அது. எழுத்தாளர்கள், தலைப்புகள் என்று வரிசைக்கிரமமாக விவரங்கள் திரட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் பக்க எண்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடவுள், இசை, பொன்மொழிகள், நம்பிக்கை, நீதி, மரணம், உல்லாசம், சாத்தான் என்று குறிப்புகள் விரிவடைகின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில், மார்க்சியம் பற்றிய குறிப்புகளை எர்னஸ்டோ, அடால்ஃப் ஹிட்லரின் மெயின் காம்ஃப் நூலில் இருந்து திரட்டியிருப்பதாக ஜான் லீ ஆண்டர்சன் தனது நூலில் (Che  Guevara – A Revolutionary Life) குறிப்பிடுகிறார். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ‘ஒன்றிணைந்து சதி வேலைகளில் ஈடுபடுவது’ பற்றிய ஹிட்லரின் குறிப்புகளை எர்னஸ்டோ தன் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார்.
ஹெச்.ஜி. வெல்ஸின் உலக வரலாற்றில் இருந்து அரிஸ்டாடில் மற்றும் புத்தர் பற்றிய குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறார். காதல், நேசம், தேசப்பற்று, பாலியல் அறம் ஆகியவற்றுக்கு பெட்ரண்ட் ரஸ்ஸல் (Old and New Sexual Morality) உதவியிருக்கிறார். நினைவாற்றல் பற்றிய பிராய்டின் கோட்பாடுகள் எர்னஸ்டோவைக் கவர்ந்திருக்கின்றன. சமூகம் பற்றி ஜேக் லண்டன் (லெனின் இறுதியாக ஜேக் லண்டனின் கதைகளையே வாசித்ததாக நதேஷ்தா குரூப்ஸ்கயா குறிப்பிடுகிறார்), மரணம் பற்றி நீட்ஷே எழுதியவற்றின் சாரம் எர்னஸ்டோவின் குறிப்பேட்டில் காணப்படுகிறது.
அடுத்த பத்தாண்டுகளில், எர்னஸ்டோ மேலும் ஆறு குறிப்பேடுகளை உருவாக்கினார். வாசிப்பு ஆழத்துக்கும் புதிய புரிதல்களுக்கும் ஏற்ப குறிப்புகள் திருத்தியமைக்கப்பட்டன. ஹிட்லரை நிராகரித்துவிட்டு, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படைப்புகள்மூலம் மார்க்சியத்தை அணுகத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஜவாஹர்லால் நேருவின் எழுத்துகளில் இருந்து சில பத்திகளையும் எர்னஸ்டோ குறித்து வைத்துக்கொண்டார்.
இலக்கியம், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் என்று எர்னஸ்டோவின் ஆர்வம் பரவியது. தன்னால் நேரில் காணமுடியாத நாடுகளையும் சந்திக்கமுடியாத மக்களையும் இலக்கியத்தின் மூலம் எர்னஸ்டோ தரிசித்தார். கண்கள் மூடி கனவு கண்டார். அவர் பார்க்க விரும்பியவை, புகை மூடிக் கிடக்கும் உல்லாசப் பிரயாணிகளுக்கான இடங்கள் அல்ல. மயக்கும் தொலைதூர தேசங்கள் அல்ல. அவர் கனவு கண்டது லத்தீன் அமெரிக்கா குறித்து.
பிடிநோஸ்ட் (Osvaldo Bidinost Payer) என்னும் நண்பர் குறிப்பிடுவது போல், எர்னஸ்டோவின் லத்தீன் அமெரிக்கக் கனவு விரிவடைந்ததற்கு மற்றொரு காரணம் அவர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினர்கள். பல்வேறு விதமான பின்னணி கொண்ட மனிதர்களையும் செலியா தன் வீட்டுக்கு வரவழைத்து, உபசரித்து, உரையாடி மகிழ்ந்தார். சில சமயம் ஈக்குவடாரில் இருந்து சில கவிஞர்கள் வந்திருப்பார்கள். கவிதைகள் பற்றிய சுவையான, காரசாரமான விவாதங்கள் நடைபெறும். சில சமயம், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து போவார்கள்.
எர்னஸ்டோ சீனியருக்கு இப்படிப்பட்ட ‘அறிவார்ந்த உரையாடல்களில்’ ஆர்வம் இருக்காது. தடதடக்கும் தனது இருசக்கர வாகனத்தை (La Pedorra) ஓட்டியபடி அவர் வெளியேறிவிடுவார். கலை, இலக்கியம், வரலாறு, சமூகம் என்று விரிவாக விவாதிக்கும் செலியாவின் ஆற்றலை எர்னஸ்டோ ரசித்துக்கொண்டிருப்பார். ‘அவர்களுடைய வீடு ஒரு மனித மிருகக்காட்சி சாலை போல் காட்சியளித்தது’ என்கிறார் பிடிநோஸ்ட். எப்பொழுது சென்றாலும் ஏதாவதொரு விவாதம், அனல் பறக்கும் சண்டை அல்லது கவிதை வாசிப்பு. அன்றைய தினம் உணவு மேஜையில் எத்தனை பேர் கூடுவார்கள், எத்தனை பேருக்கு உணவு பகிர்ந்தளிக்கப்படும், விவாதத்தின் திசை என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. ‘உலகத்தின் வரவேற்பறை போல் அந்த வீடு காட்சியளித்தது.’
சில சமயங்களில், விருந்தினர்களின் தொடர் வருகைகளால் எர்னஸ்டோவின் வாசிப்பு தடைபடுவதும் உண்டு. பொறுக்கமுடியாமல் குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு மணிக்கணக்கில் வாசித்துக்கொண்டிருப்பார். வாழ்க்கை முழுவதும் நீடித்த பழக்கமாக இது மாறிவிட்டது.
1946ல் எர்னஸ்டோவின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. ஜூன் மாதம் தனது பதினெட்டாவது பிறந்த நாளை எர்னஸ்டோ கொண்டாடினார். தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்துகொண்டே சாலை அமைக்கும் அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்யத் தொடங்கினார். மண்ணின் தரத்தை அறிவதில் எர்னஸ்டோ நிபுணத்துவம் பெற்றதைக் கண்ட நிறுவனம், தனியார் நிறுவனங்கள் சாலை அமைக்க பயன்படுத்தும் மண்ணைச் சோதனை செய்யும் பணியை எர்னஸ்டோவுக்கு ஒதுக்கியது. தன் மகன் ஒரு பொறியியலாளராக உருவெடுப்பார் என்று எர்னஸ்டோ சீனியர் திடமான நம்பிய காலகட்டம் அது. அவர் முன்னெடுத்துச் சென்ற கட்டுமான வேலை எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காததால் கையிருப்பு நிலம், வீடு என்று அடுத்தடுத்து சொத்துகளை விற்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவேராவின் குடும்பம் பியூனஸ் ஏர்ஸுக்குத் திரும்பிவந்தது.
ஆனால் எர்னஸ்டோவுக்கு வேறு கனவுகள் இருந்தன. அவர் ஒரு மருத்துவராக விரும்பினார். உண்மையில், ஒரு பொறியலாளராக மாறுவதற்கான படிப்பும் அனுபவமும்தான் அவரிடம் மிகுதியாக இருந்தன. இருந்தபோதும், ‘ஒரு புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளராக மாற விரும்பினேன். மனித குலத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றைக் கண்டறியவேண்டும் என்று கனவு கண்டேன்!’ உயிருக்குயிராக நேசித்த தனது பாட்டியைக் காப்பாற்ற நவீன மருத்துவம் தவறிவிட்டதால் அத்துறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க சாதனை புரியவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று எர்னஸ்டோவின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். தன்னை வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்துமாவுக்கு தீர்வு காணும் நோக்கிலும் அவர் இத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். எப்படியும் பொறியியல் துறையைக் காட்டிலும் மருத்துவமே அவருக்கு நெருக்கமானதாக இருந்தது.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே டாக்டர் சல்வடோர் பிசானி என்பவரின் மருத்துவமனையில் ஆஸ்துமா பிரிவில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஆஸ்துமா நோயாளிகளை எர்னஸ்டோ கவனித்துக்கொண்ட முறையிலும் ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் அவர் செலுத்திய ஆர்வத்தையும் கண்ட பிசானி, எர்னஸ்டோவை சம்பளம் இல்லாத ஆய்வாளராக தன்னுடன் இணைத்துக்கொண்டார். பிசானி தான் கண்டறிந்த ஒருவித தடுப்பூசியைப் பயன்படுத்தி தன் நோயாளிகளின் ஆஸ்துமா தொல்லைகளைப் போக்குவதில் ஓரளவு வெற்றி பெற்றவர். எர்னஸ்டோவுக்கும் அவரே சிகிச்சை அளித்திருக்கிறார். பிசானியின் மருத்துவப் புலமையால் கவரப்பட்ட எர்னஸ்டோ ஒவ்வாமை துறையில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில், எர்னஸ்டோ சீனியருக்கும் செலியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பிரிந்துசெல்லும் முடிவில் அவர்கள் இருந்தனர். மூத்த மகனாக, வீட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பும் எர்னஸ்டோவுக்கு இருந்தது. ஒரே வீட்டில் இருந்தாலும் தன் தந்தையும் தாயும் தனித்தனியே பிரிந்து வாழ்வது எர்னஸ்டோவைப் பாதித்தது. உணவு மேஜையில் தன் தந்தையைச் சந்திக்கும்போது கோபத்துடன் எர்னஸ்டோ சண்டையிடுவது வழக்கம்.‘அப்போது எங்களைப் பார்ப்பவர்ளகள் எங்களை விரோதிகள் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள். ஓயாமல் நாங்கள் விவாதித்துக்கொண்டும் முரண்பட்டும் கிடந்தோம். ஆனால் அடியாழத்தில் எங்களிடையே நட்பு இருந்தது.’ என்று நினைவுகூர்ந்தார் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்.
எர்னஸ்டோவை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் அவன் மருத்துவனாக விரும்புகிறான்? எனில், ஏன் அவன் இலக்கியமும் வரலாறும் வாசிக்கிறான்? ஏன் அவ்வப்போது பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறான்? அவன் கனவு என்ன? அவன் தன்னை எப்படிப் பார்த்துக்கொள்கிறான்? என்னவாக மாறவிரும்புகிறான்? ‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், எர்னஸ்டோவை மனதளவில் நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.


எர்னஸ்டோவின் முதல் பயணம்

ஒருமுறை பியூனஸ் அயர்ஸ் சுரங்க ரயிலில் தனது நண்பருடன் வீட்டுக்குத் திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. அவர்களிடம் துண்டிக்கப்பட்ட மனித கால் ஒன்று இருந்தது. ‘பரிசோதனை’ செய்யப்போகிறோம் என்று சொல்லி மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து எடுத்து வந்திருந்த ‘பொருள்’ அது. செய்தித்தாளில் இரண்டு சுற்று சுற்றி கொண்டு வந்திருந்தால், முழுவதுமாக மறைக்கமுடியவில்லை. இதைக் கவனித்த பிற பயணிகள் பயணம் நெடுக அச்சத்துடன் எர்னஸ்டோவைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கலக்கத்தை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தார் எர்னஸ்டோ.
ஒரே மாதிரியான அலுப்பூட்டும் வாழ்க்கைமுறையில் இருந்து விலகவேண்டும் என்றால் இப்படிப்பட்ட அனுபவங்கள் தேவை. வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி போகிறோமோ அந்த அளவுக்குச் சுதந்தரத்தை அனுபவிக்க இயலும். கோர்டோபாவில் இருந்த தன் உறவினரை எர்னஸ்டோ நேசித்ததற்குக் காரணம் அவர்களுடைய வீட்டை அடைய குறைந்தது 10 மணி நேரம் காரில் செல்லவேண்டும் என்பதுதான். இதே இடத்துக்கு இன்னொரு வழியிலும் செல்லலாம். சரக்கு வண்டிகளை இடைமறித்து உதவி கேட்டு ஏறி, வழியில் ஏதாவது சிறு வேலைகள் செய்து, ஆங்காங்கு ஓய்வெடுத்துச் செல்லவேண்டும். இதற்கு சில தினங்கள் பிடிக்கும். எர்னஸ்டோவுக்கு இந்த வழிதான் பிடிக்கும்.
மருத்துவக் கல்லூரியின் மூன்றாவது ஆண்டு நிறைவில், ஜனவரி 1, 1950 அன்று தனது முதல் பயணத்தை எர்னஸ்டோ மேற்கொண்டார். அர்ஜென்டினாவின் உட்புறங்களை அலைந்து திரிந்து தரிசிக்கவேண்டும் என்பது திட்டம். ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அதில் இத்தாலிய எஞ்சின் ஒன்றைப் பொருத்திக்கொண்டு தனியே புறப்பட்டுவிட்டார். கிளம்புவதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொப்பி, கண்ணாடியுடன் சைக்கிளில் அமர்ந்து, காலை நிலத்தில் பதித்தபடி படத்தில் காட்சியளிக்கிறார் எர்னஸ்டோ. கூடுதல் டயர் ஒன்றை கழுத்தில் மாலைபோல் மாட்டியிருக்கிறார். (ஜான் லீ ஆண்டெர்சனின் புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது).
கோர்டோபாவை அடைந்து, அங்கிருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள San Francisco del Chanar பகுதியை அடையவேண்டும். எர்னஸ்டோவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரானாடோ (Alberto Granado) அங்குள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு மருந்துகடையும் நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு சுற்று பயணத்தைத் திட்டமிடவேண்டும்.
மாலை நேரம் வீட்டைவிட்டு வெளியேறினார் எர்னஸ்டோ. மோட்டாரை இயக்கி, பெருத்த சத்தத்துடன் உற்சாகமாக சிறிது தூரம் கடந்துவிட்டு, வேகம் கைகூடியவுடன் வண்டியை மிதிக்கத் தொடங்கினார். விரைவிலேயே இன்னொரு மிதிவண்டிக்காரரின் சிநேகம் கிடைத்தது. இருவரும் விடியும்வரை வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டிருந்தனர். பிலார் என்னும் நகரத்தை அடையும்போது எர்னஸ்டோ பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டார். இந்த இடத்தைத் தாண்டி உன்னால் போகமுடியாது என்று வீட்டில் இருந்து கிளம்பும்போது சொல்லியிருந்தார்கள்.
வழியில் ஒரு காரை நிறுத்தி, கைக்கிளை அத்துடன் இணைத்து மணிக்கு 60 கிமீ வேகத்தில் பறக்கமுடிந்தது. திடீரென்று டயர் வெடிக்க, சாலையோரம் ஒதுங்கி, அங்கிருந்தவர்களுடன் சிநேகம் பிடித்து மனம் விட்டு உரையாட முடிந்தது. (மேட் பானம் கொடுத்தார்கள். ஆனால் பயங்கர தித்திப்பு.) வீட்டைவிட்டு வெளியேறி, ‘41 மணி நேரம், 17 நிமிடங்களுக்குப் பிறகு’ கிரானாடோவைச் சந்தித்தார் எர்னஸ்டோ. அவருடன் சில தினங்கள் தங்கியிருந்தார். கிரானாடோவின் சகோதரர்களுடன் இணைந்து அருகிலுள்ள ஒரு நீர் வீழ்ச்சிக்குச் சென்றார். பாறைகளில் தாவி, குன்றுகளின் மீதேறி, உயரத்தில் இருந்து குதித்து, தாற்காலிக வெள்ளம் ஒன்றில் அடித்துச் செல்லப்பட்டு…பரிபூரண சுதந்தரம்!
கிரானாடோ பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார் எர்னஸ்டோ. ரக்பி, புத்தகங்கள் போக இப்போது அவர்களுக்கு மருத்துவ ஆர்வமும் பொதுவாக இருந்ததால் ‘எதிர்கால மருத்துவக் கனவு’ குறித்து ஆர்வத்துடன் விவாதித்தார்கள். ‘எங்கள் இருவருக்குமே மருத்துவம் ஒரு பொதுவான எதிர்காலத்தை அளிக்கும் என்று நம்பினோம்’ என்று அந்தக் கணத்தை நினைவுகூர்ந்தார் கிரானாடோ. கிரானாடோவுடன் இணைந்து தொழுநோய் மருத்துவமனைக்கு சென்று வந்தார் எர்னஸ்டோ.
அடுத்த கட்ட பயணத்தை இரு நண்பர்களும் சேர்ந்து தொடங்க இருந்தனர். கிரானாடோ தனது மோட்டார் பைக் மூலம் எர்னஸ்டோவின் சைக்கிளை கயிறு கட்டி இழுத்துச் செல்லவேண்டும். ஆனால், அது சரி வரவில்லை என்பது தெரிந்ததும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார் எர்னஸ்டோ. அன்று இரவு, லொரெடோ என்னும் சிறு நகரத்தில் தங்க, காவல் துறையினர் இடம் கொடுத்தனர். எர்னஸ்டோ ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் என்பதைத் தெரிந்ததும் உள்ளூர் மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இன்னும் சில தினங்கள் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். எங்கள் நகரத்தின் ஒரே மருத்துவராக இங்கேயே இருந்துவிடுங்களேன் என்றும்கூட ஆசை காட்டினார்கள். Santiago del Estero என்னும் இடத்தில் ஓர் உள்ளூர் பத்திரிகை நிருபர் எர்னஸ்டோவைப் பேட்டி கண்டார். ‘என்னைப் பற்றி என் வாழ்நாளில் முதல் முறையாக வெளிவந்த கட்டுரை ’ அது.
ஒருமுறை தனது சைக்கிள் டயரை பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நபர் ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்தார். முந்தைய தினம் பத்திரிகை நிருபர் கேட்ட அதே கேள்விகள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? எதற்காக இந்தப் பயணம்? எர்னஸ்டோ அளித்த பதில் அவரைத் திகைக்கவைத்தது. ‘வீட்டைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். ஆனால் குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லையா?’ பல முறை யோசித்தும் எர்னஸ்டோவுக்கு விடை கிடைக்கவில்லை. ஆர்வமும் துடிதுடிப்பும் போதாதா, நோக்கம் என்றொன்று இருக்கவேண்டுமா என்ன?
சால்டா என்னும் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது ஒரு வனப்பகுதியைக் கடக்கவேண்டியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார். அடர்ந்த கானகம். நெருக்கமாக வளர்ந்திருக்கும் மரங்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மயக்கும் இயற்கை காட்சிகள். தன்னை மறந்து அப்படியே நின்றுகொண்டிருந்தார் எர்னஸ்டோ. ‘எனக்குள் உருவாகி, வளர்ந்துகொண்டிருந்த ஏதோ ஒரு விஷயம்… பக்குவமடைந்துவிட்டதை உணரமுடிந்தது.’ நகரத்தின் பெருத்த ஒலி, கால்களில் சக்கரம் பொருத்தியது போல் ஓடும் மனிதர்கள், இயந்திரத்தனமான வாழ்க்கை அனைத்தின்மீதும் சலிப்பு ஏற்பட்டது. இதுதான் அமைதி. நகரம், ‘அமைதிக்கு நேர் எதிரான நிலைகொண்டது.’
ஹார்லே டேவிட்சன் (அமெரிக்க இரு சக்கர வாகனம்) வண்டி ஓட்டிக்கொண்டு ஒருவர் எதிரில் வந்தார். வா, கயிறு போட்டு அழைத்துச் செல்கிறேன் என்று வரவேற்பும் அளித்தார். காற்று முகத்தில் அறைய, மோட்டார் வண்டியின் பின் பறந்து செல்வது சுகம்தான் என்றாலும் டயர் பஞ்சர் ஆகி முட்டுச் சந்தில் உட்கார்வதைத் தவிர்க்கவேண்டும் அல்லவா? மறுத்துவிட்டார். இருவரும் ஒன்றாக காபி அருந்தி, கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டார்கள்.
அருகிலுள்ள ஒரு நகரத்தை எர்னஸ்டோ வந்தடைந்தபோது, ஒரு பெரிய சரக்கு வண்டியில் இருந்து ஹார்லே டேவிட்சன் கீழிறக்கப்படுவதைக் கவனித்தார். சற்று முன் சந்தித்த நபரின் உடலும் அடுத்ததாக இறக்கிவைக்கப்பட்டது. அவன் ஒரு ‘தற்கொலைப் போராளி’ என்று நினைத்துக்கொண்டார் எர்னஸ்டோ. இவனுடைய பயண நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? ‘ஒரு சாலையின் திருப்பத்தில் மரணத்தைச் சந்தித்திருக்கும் இந்த வீரனை யார் அறிவர்களா?’
சால்டா வந்தடைந்தார். அன்றிரவு ஒரு லாரியில் அமர்ந்து உறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தோளில் தட்டி ஓட்டுனர் எழுப்பும்வரை நல்ல உறக்கம். இப்படியே சிறிது சிறிதாக முன்னேறி பொலிவியா வரை சென்றுவிடமுடியாதா என்ன? ஆசைதான். ஆனால் அது சாத்தியமில்லை என்பது தெரிந்தது. மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாதது பற்றி வருத்தத்துடன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். ‘வழியில் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்டேன். எரிமலையொன்று விழிப்புடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். நான் திரும்பிவிடுகிறேன்.’ இன்னும் சில வாரங்களில் நான்காம் ஆண்டு படிப்புத் தொடங்கவிருந்தது.
நினைவுகளை அசைபோட்டபடி திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. தொழுநோயாளிகள், மருத்துவர்கள், ஏழைகள், சாலையோரவாசிகள், விவசாயிகள் என்று எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை விதமான அனுபவங்கள்! பழங்குடிகளின் வாழ்க்கை முறையை எர்னஸ்டோ நேரில் கண்டது அதுவே முதல் முறை. அர்ஜென்டினாவின் நிஜமுகத்தைக்கூட முதல்முதலாக கண்டதுபோல் இருந்தது எர்னஸ்டோவுக்கு. நகரங்கள் முன்வைக்கும் தோற்றம் போலியானது. ஒரு நாட்டின் ஆன்மா வெளிப்படையாக தெரிவதில்லை. அதைத் தேடிப்போகவேண்டியிருக்கிறது. அர்ஜென்டினா மட்டுமல்ல மற்ற நாடுகளுமகூட இப்படித்தான் ‘இரட்டை வேடம்’ பூண்டிருக்கும் போலும்.
பயணம் முடிவுக்கு வந்தபோது, ஆறு வாரங்களில் 12 மாகாணங்களையும், 4000 கிமீ தூரத்தையும் எர்னஸ்டோ கடந்து சென்றிருந்தார். தனது சைக்கிளைப் பழுது பார்ப்பதற்காக மோட்டார் பொருத்தி கொடுத்த Amerimax Company-யைத் தொடர்பு கொண்டார் எர்னஸ்டோ. இவ்வளவு தூரம் மோட்டார் ஓடியிருக்கிறதா என்று வியந்த நிர்வாகம், எர்னஸ்டோவுக்குக் கடிதம் எழுதியது. இந்த விஷயத்தை எங்கள் விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனுமதித்தால் இலவசமாகவே வண்டியைச் சரிசெய்து தருவோம். எர்னஸ்டோ ஒப்புக்கொண்டு பதில் கடிதம் எழுதினார். ‘இந்த சைக்கிள் அபாரமான முறையில் என்னுடன் ஒத்துழைத்தது. கடைசியில்தான் கம்ப்ரெஷன் பழுதடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனவே இதனை உங்களிடம் அனுப்பிவைக்கிறேன்.’
வீட்டுக்குள் நுழையும்போதே எர்னஸ்டோ யோசிக்கத் தொடங்கிவிட்டார். அடுத்த பயணம் எப்போது?


பயணம் ஆரம்பம்

அடுத்த பயணம் குறித்து யோசிப்பதற்கு முன்பு காதல் குறுக்கிட்டுவிட்டது. சிச்சினா (முழுப்பெயர், Maria del Carmen ‘Chichina’ Ferreyra) எர்னஸ்டோவுக்கு முன்னரே அறிமுகமானவர் என்றாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திருமண விழாவில் பதினாறு வயது சிச்சினாவைக் கண்டபோது, எர்னஸ்டோவுக்கு விவரிக்கமுடியாத பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. உண்மையில் அது இரு தரப்பு ஈர்ப்பாகவே இருந்தது. சிச்சினாவின் வளமான செல்வப் பின்னணி, சமூக மதிப்பு, எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் அவளுடைய குடும்ப நிலை அனைத்தையும் மீறி இருவருக்கும் இடையில் காதல் துளிர்த்தது.
பிப்ரவரி 9, 1951 அன்று இரண்டாவது பயண வாய்ப்பு எர்னஸ்டோவைத் தேடிவந்தது. கப்பலில் செவிலியராகப் பணியாற்றுவதற்காக அரசுப் பொது சுகாதார நிலையம் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தது. பிரேசிலை நோக்கிச் செல்லும் Anna G என்னும் டாங்கர் கப்பலில் எர்னஸ்டோ இணைந்துகொண்டார். பேடகோனியா, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, பிரிட்டிஷ் கினியா, வெனிசுலா மற்றும் பிரேசிலிய துறைமுகங்களுக்கு இந்தக் கப்பல் அவரை இட்டுச் சென்றது.
எதிர்பார்த்ததைவிடவும் விரிவான, நீண்ட பயணம்தான். ஆனாலும் எர்னஸ்டோவுக்கு முழுத் திருப்தியில்லை. பல புதிய பகுதிகளில் கால் பதிக்க முடிந்தது மறக்கமுடியாத அனுபவம் என்றாலும் கால் பதிப்பதைத் தாண்டி வேறு எதுவும் செய்யமுடியவில்லை.
துறைமுகங்களில் கப்பல் ஒதுங்கும்போது, இறங்கிவந்து ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் அழைப்பு வந்துவிடும்.
மொத்தத்தில் நிலப்பரப்புகளில் சிறிதளவு நேரத்தையே செலவிடமுடிந்தது. ஜூன் மத்தியில் பியூனஸ் ஏர்ஸ் திரும்பிய எர்னஸ்டோ தனது கப்பல் கனவை அத்தோடு துறந்தார். திரும்பும்போது தன் தந்தைக்கு ஒரு வித்தியாசமான பரிசையும் கொண்டு வந்திருந்தார். ஒரு குறிப்பேடு. பயண அனுபவங்கள், பொன்மொழிகள், சிந்தனைகள் ஆகியவற்றால் அது நிரம்பியிருந்தது. சிறுகதை எழுதுவதற்கும்கூட முயற்சி செய்திருந்தார்.
ஜூன் இறுதியில் மீண்டும் மருத்துவப் பள்ளியில் இணைந்துகொண்டுவிட்டார். இப்போது எர்னஸ்டோவுக்கு 23 வயது நடந்துகொண்டிருந்தது. கல்லூரி போரடிக்க ஆரம்பித்துவிட்டது. முந்தைய சைக்கிள் பயணமும், அதிகம் காணமுடியாத கப்பல் பயணங்களும் அவரை இம்சித்துக்கொண்டிருந்தன. சிச்சினாவுடன் இணையமுடியுமா என்னும் கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. சிச்சினாவின் வீட்டில் இருந்து சம்மதம் பெறுவது சாத்தியமில்லை என்பது இருவருக்கும் தெரிந்திருந்தது.
அக்டோபர் 17ம் தேதி கோர்டோபாவுக்குச் சென்று கிரானோடோவைச் சந்தித்தார் எர்னஸ்டோ. திராட்சைக் கொடிகளுக்குக் கீழே, இனிப்பான மேட் பானத்தை (ஒருவித தேயிலையில் இருந்து தயாரிக்கப்படும் அர்ஜென்டினாவின் தேசிய பானம்) பருகியபடி, ‘ துயரமான வாழ்வின் சமீபகால நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தனர்.’ நார்ட்டன் 500 ரக மோட்டார் சைக்கிள், லா பாடெரோஸாவை (La Poderosa II, சக்திவாய்ந்தது என்று பொருள்) பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.
சென்ற முறை சந்தித்ததைவிடவும் அதிக சலிப்பு கொண்டவராக கிரானாடோ காட்சியளித்தார். தொழுநோய் மருத்துவமனையில் அவருக்குத் தரப்படும் ஊதியம் குறைவாக இருந்ததைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார். எர்னஸ்டோவும் தன் உள்ளத்தில் சுமந்துகொண்டிருந்த ஏக்கங்களை வெளிப்படுத்தினார். மருத்துவக் கல்லூரியும் பாடங்களும் அவரைச் சோர்வடைய வைத்திருந்தன. இவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால் செய்யவேண்டியது ஒன்றுதான். வெளியேறவேண்டும். ‘வெப்ப மண்டலக் கடல்களில் பயணம் செய்வது, ஆசியா முழுவதும் சுற்றித் திரிவது. தொலைதூரப் பிரதேசங்களுக்கு எங்களைக் கொண்டு சென்றன கனவுகள்.’
திடீரென்று அந்தக் கேள்வி எழுந்தது.
‘வட அமெரிக்காவுக்கு நாம் ஏன் போகக்கூடாது?’
‘எப்படி?’
‘லா பாடெரோஸாவில்தான்.’
தொடங்கி வைத்தவர் கிரானோடோ. எர்னஸ்டோவைக் காட்டிலும் அவருக்கே இந்தப் பயணம் அதிகம் தேவைப்பட்டது. முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த கிரானாடோ, இந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. எர்னஸ்டோ போன்ற ஒரு பயணத் தோழன் கிடைத்துவிட்டபிறகு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இன்னொன்று கிடைக்காமலேகூட போய்விடலாம்.
எர்னஸ்டோ உடனே ஒப்புக்கொண்டார். என்ன பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு வென்றுவிடுவது என்று பேசிக்கொண்டார்கள்.
உடனடியாக கனவு செயல்வடிவம் பெறத் தொடங்கியது. கடவுச் சீட்டுகள், சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பெறும் முயற்சிகளை இருவரும் தொடங்கினார்கள்.
எர்னஸ்டோ தன் விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். பிறகு நடந்ததை எர்னஸ்டோ சீனியர் நினைவுகூர்ந்தார்.
‘1951ல் நடந்தது அது. அப்போது கோர்டோபாவைச் சேர்ந்த ஒரு அழகான இளம் பெண்ணிடம் எர்னஸ்டோ நட்புகொண்டிருந்தான். அவன் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வான் என்றுதான் நானும் எனது குடும்பத்தினரும் நினைத்திருந்தோம்.
’நான் வெனிசூலாவுக்குச் செல்லப்போகிறேன் அப்பா!’ என்று எர்னஸ்டோ ஒருநாள் என்னிடம் கூறினான்.
‘எவ்வளவு நாள்களுக்கு நீ அங்கே இருக்கப் போகிறாய்?’ என்று நான் கேட்டேன். ஒரு வருடத்துக்கு என்று அவன் பதிலளித்தான். நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.
‘அப்படியானால் சிச்சினா?’ என்று நான் கேட்டேன்.
‘அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றால் காத்திருப்பாள்’ என்று பதில் வந்தது.
அவன் அப்பெண்ணை மிகவும் நேசித்ததை நான் அறிந்திருத்தால், புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற அவனது வேட்கைக்கு அது தடையாக இருக்கும் என்று நினைத்தேன். எர்னஸ்டோவை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.’
முடிந்தவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்வுகளை எடுத்து முடிக்கவேண்டும். இது எர்னஸ்டோவின் பணி. ஆல்பர்டோவின் வேலை, மோட்டார் சைக்கிளைத் தயார் செய்து வைப்பது. பிறகு, வழித்தடத்தைத் தெரிந்துகொள்வது.
வீட்டில் அனுமதி வாங்கியாகிவிட்டது. பயண ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. புறப்படவேண்டியதுதான் பாக்கி. எர்னஸ்டோ கனவு காண ஆரம்பித்துவிட்டார். ‘நாங்கள் மேற்கொள்ள இருந்த பயணத்தின் முழுப் பரிமாணமும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் விரிந்து கிடக்கும் புழுதி நிறைந்த சாலையும், வடக்கு நோக்கிய பயணத்தில் விரைந்து கொண்டிருந்த எங்களுடைய மோட்டார் சைக்கிளும்தான்.’
ஜனவரி 4, 1952 அன்று அட்லாண்டிக் கரையையொட்டி அவர்கள் பயணம் ஆரம்பமானது. போகும் வழியில் ஒரே ஒரு வேலை பாக்கியிருக்கிறது. சிச்சினாவிடம் இருந்து விடைபெறவேண்டும். மிராமரில் உள்ள ஒரு உல்லாச வீட்டில் சிச்சினா தன் அத்தையுடன் தங்கியிருந்தார் என்று தகவல் வந்ததும், அங்கு அவரைச் சந்திக்க முடிவு செய்தார் எர்னஸ்டோ. கிரானோடாவும் ஒப்புக்கொண்டார்.
எர்னஸ்டோவின் மாமா, காய்கறிகளும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும் கொடுத்தனுப்பியிருந்தார். வண்டியின் பின்பக்கத்தில் பாரம் அதிகமிருந்தது. சிறிது கவனம் குறைந்தாலும் சமநிலை குலைந்துவிடும் அபாயம் இருந்தது. என்றாலும் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பறந்துகொண்டிருந்தனர்.
எர்னஸ்டோ சிச்சினாவுக்காக ஒரு பரிசுப் பொருளைக் கையோடு எடுத்து வந்திருந்தார். அது ஒரு நாய்க்குட்டி. அதற்கு ஆங்கிலத்தில் ‘கம் பேக்’ என்று பெயரிட்டிருந்தார் எர்னஸ்டோ. பயணம் முடிந்ததும் மீண்டும் சிச்சினாவின் கரங்களுக்குத் திரும்பிவிடவேண்டும் என்பதால் அந்தப் பெயர். வழியில் இரண்டு முறை ‘திரும்புதல்’ கீழே விழுந்தது. ஒரு குதிரையின் காலில் சிக்கி மிதிப்பட்டது. தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.
எர்னஸ்டோவின் மனம் முழுக்க சிச்சினா. பயணம் முடியும்வரை சிச்சினா காத்திருப்பாளா? அவளுடன் ஒன்றிணைவது சாத்தியமா? ஆல்பர்டோவின் கவலையோ தன் பயண நண்பனின்மீதே இருந்தது. காதல்வசப்பட்டிருக்கும் இப்படியொரு இளைஞனை அழைத்துக்கொண்டு நீண்டதொரு பயணத்தை மேற்கொள்வது சாத்தியமா? தொடங்குவதற்குள் இந்தப் பயணம் முடிந்துவிடுமா? நான் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனா? ஒருவேளை தனியாகக் கிளம்பியிருக்கவேண்டுமோ? சிச்சினா, காதல், நாய்க்குட்டி போன்ற விவகாரங்கள் சிக்கீரம் முடிந்துவிடவேண்டும் என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார் கிரானோடோ.
சிச்சினா தங்கியிருந்த இடத்தில் இரு தினங்கள் தங்கியிருந்து அவளது உறுதிமொழியையும் அன்பையும் பெற்றுக்கொண்டு கிளம்பலாம் என்று எர்னஸ்டோ சொல்லியிருந்தார். ஆனால், இரு தினங்கள் எட்டு தினங்களாக வளர்ந்த நின்றது. கிரானோடா அமைதியாகக் காத்திருந்தார். அவ்வப்போது சீண்டிவிட்டுக்கொண்டும் இருந்தார். என்ன, பெருங்கவிஞரே உமது காதலியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாகிவிட்டதா?
எர்னஸ்டோ சிச்சினாவின் விரல்களில் விரல்கள் சேர்த்து, கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ‘பிரிவின் கசப்பு என் மூச்சோடு கலந்துவிட்டது. இறுதியாக, சாகசங்களை நோக்கி வீசும் காற்றால் வேறு உலகங்களை நோக்கி நான் தூக்கிச் செல்லப்பட்டேன்.’ விடைபெறும் தருணம் வந்துவிட்டது. சிச்சினா நான் திரும்பும்வரை காத்திருப்பாயா? சிச்சினா தலையசைத்தாள்.
எர்னஸ்டோ அளித்த ஜெர்மன் ஷெப்பர்டை சிச்சினா பெற்றுக்கொண்டார். பதினைந்து அமெரிக்க டாலரை எர்னஸ்டோவுக்கு அளித்தார். அமெரிக்காவில் இருந்து தலைக்கு ஸ்கார்ஃப் வாங்கி வருவதற்காக.
‘கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. குளிர்காற்று நிலத்தை நோக்கி வீசியது. இந்தக் கரையோடு என்னைப் பிணைத்ததோர் மடியில் என் தலை சாய்ந்திருந்தது. சூழலின் அமைதியில் என்னுள்ளே ஒலித்த குரலின் அதிர்வுகளின் லயத்தில், முழுப் பிரபஞ்சமும் மிதந்து கொண்டிருந்தது.’
எர்னஸ்டோ விடைபெற்றுக் கொண்டார்.


கொஞ்சம் உணவு, நிறைய கனவு

ஆல்பர்ட்டோவின் பல்கலைக்கழக நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது அவர் மனைவி குழுப்பத்துடன் அவர்களைப் பார்த்தார். புழுதி படிந்த ஆடைகளுடன் இரு ஜிப்ஸிகள் போல் அவர்கள் தோற்றமளித்தார்கள்.
‘இன்னும் ஒரு வருடத்தில் டாக்டர் பட்டம் கிடைத்துவிடும். எதற்கு இந்தத் தேவையற்ற பயணம்? எப்போது திரும்பப் போகிறீர்கள் என்பதே தெரியாமல் எதற்கு அநாவசியமாக உடலை இப்படி வருத்திக்கொள்கிறீர்கள்?’
மூன்று தினங்கள் அவர்களுடன் தங்கியிருந்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள். தெற்கில் உள்ள பாஹியா ப்ளாங்கா என்னும் துறைமுக நகரில் எர்னஸ்டோவின் நண்பர்கள் இருந்தனர். அவர்களுடன் இணைந்து நகரத்தைச் சுற்றி வந்தார்கள். வண்டியைப் பழுது பார்த்தார்கள். கையிருப்பில் இருந்த ரொட்டியும் இறைச்சியும் காலியாகிக்கொண்டிருந்தது. பணமும் கூடத்தான். கடைசியாக அவர்கள் நன்றாகச் செலவிட்டது இங்குதான்.  உணவு கிடைக்கும்போதெல்லாம் ஒட்டகம் போல் வயிறு முழுக்கச் சாப்பிட்டுவிட்டு பிறகு பட்டினி கிடக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார் எர்னஸ்டோ.
வண்டியின் பாரம் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக இருந்ததால் அவ்வப்போது வண்டி சாய்ந்தும் சரிந்தும் சென்றுகொண்டிருந்தது. போதும், இனி நான் ஓட்டுகிறேன் என்று சொல்லி எர்னஸ்டோ பொறுப்பேற்றுக்கொண்டார். ‘நேரம் வீணாகிப் போனதைச் சரிக்கட்டுவதற்காக வேகமாக ஓட்டினேன். ஒரு வளைவில் மணல். மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்தது. இந்தப் பயணத்திலேயே இதுதான் மோசமான விபத்து. ஆல்பர்ட்டோவுக்குக் காயமெதுவும் ஏற்படவில்லை. ஆனால் சிலிண்டரின் கீழ் என் கால் சிக்கி சூடுபட்டுப் புண்ணானது.’
மழை குறுக்கிடும்போது எஸ்டான்ஷியா என்று அழைக்கப்படும் பண்ணை நிலம் அல்லது கால்நடைப் பண்ணையில் ஒதுங்கிக்கொண்டார்கள். அல்லது ரயில் நிலையம் கண்ணில் பட்டால் மரக்கட்டை போல் படுத்து உறங்கினார்கள். ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருந்த வண்டி, சகதியில் சிக்கும்போதெல்லாம் விழுந்தது. சரளைக் கற்கள் நிரைந்த சாலையில் விழுந்து எழுவதும் வாடிக்கையாகிப் போனது.
அதிகாலை வேளை, உறக்கம் கலைந்து எழுந்ததும் எர்னஸ்டோ மேட் பானம் தயாரிப்பதற்காக நீர் கொண்டுவர சென்றார். திடீரென்று உடல் நடுங்கத் தொடங்கியது. ‘ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. பத்து நிமிடங்களில், நான் பேய் பிடித்தவனைப் போல் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு பயங்கரமாக நடுங்கத் தொடங்கினேன். குவினைன் மாத்திரைகளால் எந்தப் பலனுமில்லை. வினோதமான தாளங்கள் ஒலிக்கின்ற பறையைப் போல் எனது தலை விண்விண்னென்று தெறித்தது. வடிவமற்ற வண்ணங்கள் கண்முன் சுழன்றன. குமட்டல் ஏற்பட்டது. சிரமப்பட்டு பச்சை நிறத்தில் வாந்தியெடுத்தேன்… எதுவும் சாப்பிடமுடியவில்லை.’
மீண்டு எழுந்து, ஆல்பர்ட்டோவுக்குப் பின்னால் அமர்ந்து அவர்மீது தலையைச் சாய்த்து உறங்கியபடியே பயணத்தைத் தொடர்ந்தார் எர்னஸ்டோ. சோயலே சோயல் என்னும் இடத்தை அடைந்து அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றார். பென்சிலின் ஊசி போடப்பட்டது. அடுத்த நான்கு மணி நேரத்தில் காய்ச்சல் மறைந்தது. ஆனாலும் மருத்தவர் அவரை வெளியேற அனுமதிக்கவில்லை. அடுத்த சில தினங்களுக்கு நோயாளி உடையில் மெலிந்த தேகத்துடன் அசட்டு தாடியுடன் படுத்து கிடந்தார் எர்னஸ்டோ.
போகலாம் என்று மருத்துவர் இறுதியாக அனுமதி அளித்தபோது சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட உணர்வுடன் வெளியில் பறந்து வந்தார் எர்னஸ்டோ. ஏரிகளை நோக்கி வண்டி புறப்பட்டது. மேடுகளிலும் பள்ளங்களிலும் ஏறி இறங்கும்போதெல்லாம் வண்டியின் பாகங்கள் சத்தம் எழுப்பியபடி குலுங்கி ஆடின. ஆல்பர்ட்டோ ஒயர் கொண்டு சிலவற்றை இறுக கட்டியிருந்தார்.
இறைச்சி இப்போது முழுக்கவும் காலியாகியிருந்தது. இரவு நேரங்களில் வெட்டவெளியில்தான் தங்கியாகவேண்டும். கூடாரம் அமைத்து, தரையில் படுத்து தவழ்ந்தபடி உள்ளே நுழைந்துகொண்டார்கள். சிறு சத்தம் கேட்டாலும் வெளியில் வந்து ஒரு சுற்று சுற்றி வந்து ஆபத்து எதுவுமில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு, விட்ட இடத்திலிருந்து உறக்கத்தைத் தொடரவேண்டும்.
வருடிக்கொடுக்கும் தென்றல் காற்று எப்போது உலுக்கியெடுக்கும் சூறாவளியாக மாறும் என்று சொல்லமுடியாது. அடக்கமாக இருக்கும் கூடாரம் எப்போது பிய்த்துக்கொண்டு பறக்கும் என்று தெரியாது குளிரும் மழையும் வெய்யிலும் மாறிமாறித் தாக்கின.
San Martin de los Andes  நோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் இந்த முறை எர்னஸ்டோவே வண்டியை ஓட்டினார். மீண்டும் ஒரு திருப்பம் வந்தது. மீண்டும் ஒருமுறை வண்டி கீழே விழுந்தது. சலசலத்துச் செல்லும் நீரோடையில் விழுந்தார்கள். இந்த முறை வண்டி மிகுந்த சேதமடைந்தது. கூடுதலாகப் பின்பக்க டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பழுது பார்க்கும் வேலைதான். பின்பக்கத்தில் உள்ள அத்தனை பாரத்தையும் அகற்றி கீழே வைத்துவிட்டு நெம்புகோலால் டயரை விடுவித்து, ஒட்டி, மாட்டி முடிப்பதற்குள் அலுப்பும் சலிப்பும் ஆக்கிரமித்துக்கொண்டன. அன்றைய இரவை பண்ணைத் தொழிலாளர்களின் சமையலறையில் கழித்தார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கே பரவிய சமையல் புகை எர்னஸ்டோவை எழுப்பிவிட்டது. தொழிலாளர்களுடன் இணைந்து மேட் பானம் அருந்தினார். கசப்பான மேட் பருகிய தொழிலாளர்கள், எர்னஸ்டோவின் இனிப்பு மேட் பானத்தைக் கிண்டலடித்தார்கள். பெண்கள் மட்டுமே இனிப்பு சேர்த்து அருந்துவார்களாம். எர்னஸ்டோ அவர்களுடைய வாழ்நிலையைத் தெரிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அவர்கள் அவ்வளவு இலகுவாகப் பேசுபவர்களாக இல்லை. ‘அவர்கள் அதிகம் பேசவில்லை. ஆராகானிய (Aragon) இனத்தைச் சேர்ந்தவர்களின் பொதுவான பண்பு அது. கடந்த காலத்தில் அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்களும், இன்னும்கூட அவர்களைச் சுரண்டி வருபவர்களுமான வெள்ளையர்களைக் கண்டு அவர்கள் இப்போதும் அஞ்சினார்கள். நிலத்தைப் பற்றியும் அவர்களுடைய வேலைகளைப் பற்றியும் நாங்கள் கேட்டபோது, அவர்கள் தங்கள் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, தெரியாது என்றோ இருக்கலாம் என்றோ பதிலளித்தார்கள்.’
அருவருப்பான ஆடைகள் அணிந்து, கிடைத்ததை வாய் நிறைய அள்ளிப் போட்டுக்கொண்டு (எர்னஸ்டோவோடு ஒப்பிட்டால் ஆல்பர்ட்டோ கொஞ்சம் நாகரிகமாக உண்டார் என்று சொல்லலாம்) ஆங்காங்கு  ‘பன்றிகளைப் போல்’ திரிந்ததாக நினைவுகூர்கிறார் எர்னஸ்டோ. அவர்களை மருத்துவர்கள் என்று அழைக்க யாரும் இல்லை அங்கே. அவர்கள் சத்தியம் செய்திருந்தாலும் யாரும் நம்பத் தயாரில்லை.
ஆந்திய மலைத்தொடரின் அடுக்கடுக்கான குன்றுகளுக்கு இடையில் வளைந்து வளைந்து சென்ற சாலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். San Martin de los Andes  மரங்கள் அடர்ந்த மாபெரும் மலைகளால் சூழப்பட்டிருந்தது. ‘சுற்றுலாத் தலமாக மாறிய பிறகே இந்நகரத்தின் தட்பவெப்பநிலை மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. அந்நகர மக்களின் பிழைப்புக்கும் வழி கிடைத்தது.’
உள்ளூர் மருத்துவமனையில் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்குமிடம் வேண்டினார்கள். அருகில் தேசியப் பூங்கா அலுவலகம் இருக்கிறது, அங்கே உங்கள் தந்திரம் வேலை செய்கிறதா பாருங்கள் என்று சொல்லி திருப்பியனுப்பி விட்டார்கள். இங்கு அவர்களுக்கு இடம் கிடைத்தது. சமைத்துக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டது. வைக்கோலின் கதகதப்பில் நன்கு உறங்கினார்கள்.
நாகரிகத்தின் நிழல் படியாத அந்த நகரத்தைக் கண்டதும் எர்னஸ்டோ மயங்கினார். கனவு காணவும் ஆரம்பித்துவிட்டார். ‘ஒரு ஆய்வுக்கூடத்தை அமைக்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். அந்த ஆய்வுக்கூடத்தில் ஏரியை நோக்கிய பெரிய ஜன்னல் இருக்கும். குளிர்காலத்தில் அனைத்தும் பனியால் மூடப்பட்டிருக்கும்போது, ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்வதற்கு ஒரு ஹெலிகாப்டர் இருக்கும். அங்கே நாங்கள் படகில் சென்று மீன் பிடிப்போம். காட்டுக்குள் எண்ணற்ற முறை பயணம் செய்வோம்.’
ஒரு ஓட்டை வண்டியும் அன்றைய தினம் வாங்கிய சிறிதளவு மாட்டிறைச்சியும் உடன் ஒரு நண்பனும் மட்டுமே இருந்தபோதிலும் கனவுகளில் ஹெலிகாப்டர்கள் சத்தமிட்டபடி வளைய வந்தன. ஆந்திய மலைத்தொடர் எர்னஸ்டோவை வசீகரித்திருந்தது. இப்படியொரு அழகு பிரதேசம் இருக்கும்போது யார் வீடு திரும்புவார்கள்? பேசாமல் இங்குள்ள ஏரிக்கரையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டால் என்ன?


துப்பாக்கி வெடித்தது

ஏரிக்கரைகளைக் கடந்து அவர்கள் யூனின் டி லாஸ் ஆண்டிஸ் (Junin de los Andes) என்னும் கிராமத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். காருவே (Curruhué) கிராண்ட் ஏரியைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று எர்னஸ்டோ விரும்பினார். பச்சை நிறத்தில் படர்ந்திருந்த அந்த ஏரியை மோட்டார் சைக்கிளில் கடக்கமுடியாது என்பதால் அருகிலுள்ள ஒரு வனக் காப்பாளரின் அறையில் வண்டியைப் போட்டுவிட்டு கரடுமுரடான பாதையில் இருவரும் நடக்கத் தொடங்கினர்.

ஏரிக்கு மேலே ஒரு வாத்து பறந்துசென்றது. ஆல்பர்ட்டோ சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். யாருமில்லை. பசிக்கு இதைவிட நல்ல விருந்து கிடைத்துவிடுமா என்ன? குறி பார்த்துச் சுட்டார். வாத்து ஏரியில் விழுந்தது. ஏரியில் இறங்கி வாத்தைக் கொண்டு வரும் வேலை எர்னஸ்டோவிடம் வந்து சேர்ந்தது. குளிர்ந்த நீர் அலைகளில் 20 மீட்டர் நீந்தி திணறியபடியே வாத்துடன் கரை ஒதுங்கினார் எர்னஸ்டோ. ‘எனினும் வாத்து வறுவல் சுவையாக இருந்தது.’
உணவு ஆனதும், மலையேறத் தொடங்கிவிட்டனர். பூச்சிகள் வட்டமிட்டபடி கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. மலையேறுவதற்குத் தேவையான உபகரணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இருந்தும் பின்வாங்காமல் தொடர்ந்து பல மணிநேரம் ஏறி, உச்சியை அடைந்தனர். சிறிது நேரம் பனியில் விளையாடிவிட்டு, இருட்டுவதற்குள் இறங்க ஆரம்பித்தனர்.
‘இறங்கி வருவது தொடக்கத்தில் எளிதாக இருந்தது. ஆனால் பின்னர், நாங்கள் பின்தொடர்ந்து வந்த ஓடை ஒரு காட்டாறாக மாறியது. இருபுறங்களிலும் வழுக்குப் பாறைகள். நடப்பது சிரமமாக இருந்தது. ஓரத்திலிருந்து மூங்கில்காட்டின் ஊடாகத்தான் நாங்கள் இறங்கிவரவேண்டியிருந்தது.’ அதற்குள் இருட்டத் தொடங்கிவிட்டது. ஆல்பர்ட்டோவின் இரவு நேரக் கண்ணாடி தொலைந்துவிட்டது. எர்னஸ்டோவின் காற்சட்டையின் கால்கள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. பாதாளத்தில் இறங்குவது போல் இருந்தது எர்னஸ்டோவுக்கு.
அடர்த்தியான குளிரில் ஓடையைக் கடந்து வனக் காப்பாளரின் அறைக்குச் சென்றார்கள். அவர் இருவரையும் வரவேற்று மேட் பானம் கொடுத்து, கிழே விரித்துப் படுக்க ஆட்டுத் தோலும் கொடுத்தார்.
ஜனவரி 1952. எர்னஸ்டோ தன் தாயாருக்கு கடிதம் எழுதினார். ‘அன்புள்ள அம்மாவுக்கு, நாங்கள் சந்தித்த அனுபவங்களையெல்லாம் அப்படியே உனக்குச் சொன்னால், இந்த சில வரிகளின் நோக்கத்துக்கே அது எதிராகப் போய்விடும்… வழியில் எனக்குக் கடும் காய்ச்சல். ஒரு நாள் படுக்கையில் கிடந்தேன்… அதற்குப் பிறகு, பல பிரச்னைகளைச் சந்தித்த நாங்கள் திறமையாக அவற்றையெல்லாம் சமாளித்துவிட்டு, அடர்த்தியான காடுகளுக்கு மத்தியில், ஒரு அழகான ஏரிக்கருகில் இருக்கும் சான் மார்ட்டின் டி லாஸ் ஆண்டிஸை அடைந்தோம். நீங்களும் பார்க்கவேண்டிய இடம் அது. எங்கள் முகம் கறுத்துப் போய்விட்டன. சாலையோரத்தில் தோட்டத்துடன் வீடு தென்பட்டால், அந்த வீடுகளுக்குச் சென்று உணவு கேட்பதும், அங்கேயே தங்கிவிடுவதும் எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது… உன்னை மிகவும் நேசிக்கும் மகன் அன்போடு உன்னை அணைத்துக்கொள்கிறான்.’
ஏழு ஏரிகள் வழியாக, பாரிலோஷே (Bariloche) என்னும் பகுதியை இருவரும் வந்தடைந்தனர். ஒரு ஆஸ்திரியர் காலிக் கொட்டகை ஒன்றில் அவர்களைத் தங்கவைத்தார். எங்கு சென்றாலும், ‘வண்டி பழுதாகிவிட்டது, இன்றிரவு இங்கே தங்கிக்கொள்ள இடம் கிடைக்குமா?’ என்பதுதான் இந்த இருவரின் வாடிக்கையான விண்ணப்பமாக இருக்கும். பெரும்பாலும் அனைவரும் பாவப்பட்டு ஏதாவதொரு மூலையைச் சுட்டிக் காட்டுவார்கள். இந்த முறை கிடைத்தது கொட்டகை. கூடவே, ஓர் எச்சரிக்கையும் கிடைத்தது. ‘கவனமாகக் கதவைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். இங்கே ஒரு அபாயகரமான சிறுத்தை சுற்றிக்கொண்டிருக்கிறது.’
பிரச்னை என்னவென்றால், அந்தக் கொட்டகை குதிரை லாயம் போல் இருந்ததால் கதவின் கீழ் பகுதியை மட்டுமே சாத்திக்கொள்ள முடிந்தது. மிகச் சரியாக ஒரு சிறுத்தையால் தாண்டி வந்துவிடக்கூடிய அளவுக்கே அந்தக் கதவு இருந்தது. பிறகு எங்கிருந்து நிம்மதியாகத் தூங்குவது? ‘விடிந்துகொண்டிருந்தபோது கதவை ஏதோ பிறாண்டும் சப்தம் கேட்டது. பயத்தால் பேச்சிழந்தவனாக என்னருகில் ஆல்பர்ட்டோ. என் கையில் துப்பாக்கி தயாராக இருந்தது. மரங்களிடையே இருந்து ஒளிரும் இரண்டு கண்கள் எங்களை வெறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.’ சிறிது நேரத்தில், ‘கருப்பு உடல் ஒன்று கதவைத் தாண்டி வந்தது. அப்போது உள்ளுணர்வுதான் செயல்பட்டது. அறிவு பொய்த்துவிட்டது. எனது தற்காப்புணர்வு ரிவால்வரின் விசையை அழுத்தியது. வெடியோசை ஒரு கணம் அதிர்ந்து ஒலித்தது.’
கதவருகே கையில் விளக்கோடு யாரோ நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அச்சுறுத்லாக இருந்த சிறுத்தை செத்தொழிந்துவிட்டதா? எனில் இது மெய்யாகவே ஒரு பெரிய உபகாரம் அல்லவா? ஆனால், நடந்தது வேறு. ‘ஆஸ்திரியரின் கனத்த குரலிலிருந்தும், அவர் மனைவியின் அழுகையிலிருந்தும் நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்பதைத் தெரிந்துகொண்டோம். அவர்களுடைய அழுக்குச் செல்லநாய் பாபியை நாங்கள் கொன்றுவிட்டோம்.’ கொலைகாரர்களாக அங்கே படுத்து உறங்கமுடியாது என்பதால் மிச்ச பொழுதை வெட்டவெளியில் கழிக்கவேண்டியிருந்தது.
பிறகு, கால்வாய் வெட்டும் வேலை செய்துவந்த ஒருவரின் வீட்டில் இடம் கிடைத்தது. தனது வீட்டின் சமையலறையில் மற்றொரு நண்பருடன் இரவைக் கழிக்க அவர் அனுமதி அளித்தார். அங்கும் ஒரு பிரச்னை. ‘தலையணையாக நாங்கள் பயன்படுத்திய ஆட்டுத்தோலின் நெடி எரிச்சலைத் தந்ததால், இன்ஹேலரைப் பயன்படுத்தலாம் என்றிருந்தேன். குழலிலிருந்து மூச்சிழுக்கும்போது, எனக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்தவர் விழித்துக்கொண்டார். மூச்சிழுக்கும் சத்தம் கேட்டதுமே சட்டென அசைந்த அவர் பிறகு அசையாமல் படுத்துக்கொண்டார். போர்வைக்கடியில் ஒரு கத்தியைப் பிடித்தவாறு விறைப்பாக, மூச்சை அடக்கிக்கொண்டு அவர் படுத்திருந்ததை நான் உணர்ந்தேன். முந்தைய இரவின் அனுபவத்தின் காரணமாக, கத்தியால் குத்தப்பட்டுவிடுவேனோ என்று பயத்தில் அப்படியே அசையாமல் இருந்தேன்.’ எர்னஸ்டோவைப் போலவே அந்த நபரும் சிறுத்தை பயத்தில் இருந்திருக்கிறார். அவர் இன்ஹேலர் இழுக்கும் ஓசை அவருக்குச் சிறுத்தையின் உறுமலாகத் தெரிந்திருக்கிறது. இன்னொருமுறை எர்னஸ்டோ இன்ஹேலரை இழுத்திருந்தால், அந்த நபர் நிச்சயம் தனது கத்தியைப் பிரயோகித்திருப்பார்.
அர்ஜென்டினா மண்ணில் அது கடைசி நாள். அவர்கள் சிலியின் எல்லையை நோக்கி இப்போது புறப்பட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள் படகில் ஏற்றப்பட்டது. ஏரிகளையும், சுங்கவரி அலுவலகத்தையும், மலைத்தொடரையும் கடந்து முன்னேறிக்கொண்டிருந்தார்கள். படகில் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக வியர்வை பொங்க அவர்கள் உழைத்தார்கள். அங்கிருந்த பல மருத்துவர்கள் எர்னஸ்டோ சந்தித்தார். சிலியில் தொழுநோய் இல்லை என்பதால் தொழுநோய் மருத்துவமனை குறித்து எர்னஸ்டோ பகிர்ந்துகொண்ட அனுபவங்களை (‘அவ்வப்போது அது பற்றி மிகைப்படுத்தியும் பேசினோம்!’) அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டார்கள். ஈஸ்டர் தீவில் ஒரு தொழுநோய் மருத்துவமனை இருப்பதையும், அந்தத் தீவு மிகவும் அழகானது என்றும் அவர்கள் சொன்னதால் அங்கும் சென்று பார்த்துவிடுவது என்று முடிவுசெய்துகொண்டார்கள்.
பெட்ரோஹுவே என்னும் நகரில் இருந்து ஓஸோர்னோ என்னும் பகுதிக்கு ஒரு வேன் செல்வதாக இருந்தது. அதில் இடம் கிடைக்குமா என்று விசாரித்தபோது அங்கிருந்தவர் ஒரு யோசனை கூறினார். எங்களுக்கு ஒரு டிரைவர் தேவைப்படுகிறார், உங்களால் ஓட்டமுடிந்தால் நீங்களும் வரலாம். ஆல்பர்ட்டோ அவசர அவசரமாக எர்னஸ்டோவுக்கு வகுப்பெடுத்தார். பிரேக், க்ளட்ச், கியர், முதல் கியர், இரண்டாவது கியர் என்று தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவர் சொல்ல ஆரம்பித்தார். முன்னால் மோட்டார் சைக்கிளில் அவர் செல்வார். எர்னஸ்டோ பின்தொடரவேண்டும்.
‘நான் வேனைத் தாறுமாறாக ஓட்டினேன். ஒவ்வொரு வளைவையும் சமாளிப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது… கம்பீரமாக நின்றுகொண்டிருநத ஓஸோர்னோ எரிமலைக்குக் கீழே, ஓஸோர்னோ ஏரியையொட்டி அழகான நாட்டுப்புறப் பகுதியில் வளைந்து வளைந்து சென்றது சாலை. ஆனால் விபத்துகள் நிகழ்வதற்கு அதிகமான வாய்ப்புகள் நிறைந்த இந்தச் சாலையில் இயற்கைக் காட்சியைக் கண்டு ரசிக்கக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை.’
எந்தவித சம்பவமும் நிகழாமல் அந்தப் பயணம் முடிவடைந்தது. குறுக்கே ஓடிய ஒரே ஒரு பன்றிக்குட்டிக்கு மட்டும் அடிபட்டுவிட்டது.


மதுவும் மயக்கமும்

சிலி நாட்டு கிராமப்புறங்கள் வழியாகப் பயணம் தொடர்ந்தது. ‘தரிசாகக் கிடந்த எங்கள் நாட்டின் தென்பகுதியைப் போலன்றி, நிலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டு நிலத்திலும் விவசாயம் செய்யப்பட்டிருந்தது. நட்புணர்வு மிகுந்த சிலி மக்கள் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களை வரவேற்றார்கள்.’ சிலியின் விருந்தோம்பல் பண்பு எர்னஸ்டோவை வெகுவாகக் கவர்ந்தது.
கெண்டைக்கால் வரை நீளும் கால்சட்டை ஒன்றை ஒருவர் எர்னஸ்டோவுக்கு அளித்தார். இன்னொரு வீட்டில் நல்ல இருப்பிடம் கிடைத்தது. உறங்குவதற்கு நல்ல போர்வையும் உண்பதற்கு நல்ல உணவும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அது பாப்லோ நெரூதாவின் நாடு. எல் ஆஸ்ட்ரால் என்னும் பத்திரிகைக்கு எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பேட்டியளித்தனர். அர்ஜென்டினா செய்தித்தாள்கள் போலில்லாமல் சிலியின் தாள்கள் ஏராளமான பக்கங்களைக் கொண்டிருந்தன. இரண்டாவது பக்கத்தில் இப்படியொரு குறிப்பு இடம்பெற்றிருந்தது. ‘இரண்டு அர்ஜென்டைன தொழுநோய் மருத்துவ வல்லுநர்கள் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பயணம். அவர்கள் இப்பொழுது டெமுகோவில் இருக்கிறார்கள். ராபா நூயிக்குப் போக விரும்புகிறார்கள்.’ எர்னஸ்டோ எந்த அளவுக்குத் தன்னைப் பற்றி சவடால் அடித்துக்கொண்டிருந்தால் இப்படியொரு செய்தியும் ‘வல்லுநர்’ என்னும் பட்டமும் கிடைத்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்!
அவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கும்கூட சிலியில் நல்ல மரியாதை கிடைத்தது. வழக்கம் போல் டயர் பஞ்சர் ஆனபோது, அறிமுகமற்றவர்கள்கூட சிரித்த முகத்துடன் உதவிக்கு வந்தனர். எல்லாம் செய்தித்தாள் செய்த மாயம்! ஒரு மருத்துவ வல்லுநருக்கு உதவி செய்யும் பொன்னான வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுமா என்ன? தயவு செய்து எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று வருந்தி அழைத்து இறைச்சியும் ஒயினும் அளித்து மகிழ்ந்தார்கள்.
இப்படித்தான் ஒருமுறை பிரச்னையாகிவிட்டது. மது அருந்துவதற்காகச் சில நண்பர்கள் எர்னஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் வரவேற்றபோது இருவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். சிலி நாட்டு ஒயின் எர்னஸ்டோவை மிகவும் கவர்ந்திருந்தது. கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகம் போல் நிறைய புட்டிகளை அவர் காலி செய்தார். முடித்த கையோடு ஒரு கிராம நடன நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
அதற்குப் பிறகு நடந்ததை எர்னஸ்டோவே பதிவு செய்கிறார். ‘அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எங்கள் வயிற்றிலும் மனதிலும் ஒயினே நிறைந்திருந்தது. பணிமனையில் இருந்த, நன்றாகப் பழகிய மெக்கானிக் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் தன்னுடைய மனைவியுடன் நடனமாடும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். அவனுடைய மனைவி உற்சாகமான மனநிலையிலும் எதற்கும் தயாராகவும் இருந்தாள்.’
மது சாமானியர்களை மட்டுமல்ல வல்லுநர்களையும்கூட மாற்றிவிடுகிறது, தன்னிலை மறக்கச் செய்துவிடுகிறது. ‘மதுவை நிறைய குடித்திருந்த நான் அவள் கையைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றேன். எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவள் என் பின்னால் வந்தாள். ஆனால் தன் கணவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து தன் மனதை மாற்றிக்கொண்டாள்.’
எர்னஸ்டோவால் தன் நிலையை மாற்றிக்கொள்ளமுடியவில்லை. ‘எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. நடன நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் சிறு சச்சரவு ஏற்பட்டது. எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க, நான் அவளை ஒரு கதவை நோக்கி இழுத்தேன். அவள் என்னை உதைக்க முயன்றாள். நான் அவளை இழுக்கவே, அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.’
அதற்குப் பிறகு நடன அரங்கில் இருந்தவர்கள் மருத்துவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள். தப்பினால் போதும் என்று எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் கிராமத்தை நோக்கி ஓடினார்கள். அதிகாலையில் நினைவு திரும்பியபோது எர்னஸ்டோ தனது முந்தைய இரவு சம்பவத்தைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?
ஆனால் அந்தப் பத்திரிகை செய்திக்கு இன்னமும் பலன் இருந்தது என்பதை எர்னஸ்டோ மறுநாள் தெரிந்துகொண்டார். ஒரு புதிய விபத்துக்குப் பிறகு (இந்த முறை ஒரு பசுமாட்டின் கால் மீது வண்டியை சறுக்கி விழுந்தது) சில ஜெர்மானியர்களின் வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது.
வண்டி இன்னமும் சரியாகவில்லை. மேட்டின்மீது ஏறும் ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பாகம் விலகி விழுந்தது. அல்லது வெறுமனே மூச்சு வாங்கியபடி நின்றது. அல்லது உருண்டு விழுந்தது. அமெரிக்கக் கண்டங்களிலேயே உயரமானது என்று சிலியர்களால் அழைக்கப்படும் மாலேகோ என்னும் இடத்தை நோக்கி ஏறத் தொடங்கியபோது, வண்டி மீண்டும் செயலிழந்தது. ஏதாவதொரு வண்டியில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றிச் செல்லவேண்டும் என்பதால் ஒரு நாள் முழுவதும் சாலையிலேயே காத்துக்கிடந்தார்கள். பிறகே வண்டி கிடைத்தது.
குல்லிபுல்லி என்ற ஊரில் தங்கினார்கள். ‘அந்தச் சாலையில் பல செங்குத்தான மேடுகள் இருந்தன. முதலாவது மேட்டில் ஏறத்தொடங்கியதும், லா பாடெரோஸோ உயிரை விட்டுவிட்டது. ஒரு லாரியில் ஏறி லாஸ் ஏஞ்சலஸ் என்னும் நகரை அடைந்தோம். அங்கே மோட்டார் சைக்கிளை ஒரு தீயணைப்புப் படை நிலையத்தில் விட்டுவிட்டு, சிலி ராணுவ லெஃப்டினென்ட் ஒருவரின் வீட்டில் தங்கினோம்… மோட்டார் சைக்கிளில் நாங்கள் சவாரி செய்த கடைசி நாள் அதுதான். மோட்டார் சைக்கிள் இல்லாமல் பயணம் செய்யும் அடுத்த கட்டம் இதைவிடக் கடினமாக இருக்கும் என்று தோன்றியது.’
அந்த அதிகாரி ஒருமுறை அர்ஜென்டினா வந்திருந்தபோது, அவருக்கு அங்கு சிறப்பான வரவற்பு கிடைத்தால், தன்னை உபசரித்த நாட்டில் இருந்து வந்திருந்த இரு மருத்துவர்களைத் தக்கமுறையில் பதில் உபசாரம் செய்யவேண்டும் என்று விரும்பினார். எர்னஸ்டோ அவரிடம் விரிவாக உரையாடினார். தீயணைப்புத் தொழில் குறித்து சில அடிப்படைகளையும் தெரிந்துகொண்டார். தனது குறிப்பேட்டில் பதிவும் செய்துவைத்தார்.
‘எனக்குத் தெரிந்த வரையில், சிலியில் தீயணைப்புப் பணியை பொதுச் சேவையாகத்தான் செய்து வந்தார்கள். இது சிறந்த சேவையாகும். இப்படிப்பட்ட தீயணைப்புப் படைகள் செயல்படும் ஊர்களிலோ அல்லது வட்டாரங்களிலோ, மிகவும் திறமை வாய்ந்த மனிதர்களும்கூட அப்படைக்குத் தலைமை தாங்குவதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள். தீயணைப்புப் படைகளுக்கு வேலையே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள். தெற்கில் தீ விபத்துகள் ஏராளமாக ஏற்படுவதுண்டு. பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் கட்டப்பட்டவை என்பதாலோ, மக்கள் மிகவும் ஏழைகளாகவும் சிறந்த கல்வியறிவைப் பெறாதவர்களாகவும் இருப்பதாலோ, வேறு காரணங்களாலோ, அல்லது இவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததாலோ, தீ விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமாக இருந்தன. தீயணைப்புப் படை நிலையத்தில் நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களில் இரண்டு பெரிய தீவிபத்துகளும், ஒரு சிறிய விபத்தும் ஏற்பட்டன.’
அதிகாரியின் வீட்டில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் தீயணைப்புப் படை நிலையத்துக்குச் சென்று பார்வையிடவேண்டும் என்று எர்னஸ்டோ விரும்பினார். எப்படி தீயணைப்பு வீரர்கள் செயல்படுகிறார்கள், தீயைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை நேரில் காண அவர் விரும்பினார். ஆனால் வழக்கம் போல், பிணங்களைப் போல் அன்றிரவைத் தூங்கி கழித்ததால், அபாயச் சங்கு ஒலிப்பதை அவரால் கேட்கமுடியவில்லை. பணியில் இருந்த ஊழியர்களும் இவர்கள் உறங்குவதை மறந்துவிட்டு, வண்டியுடன் விரைந்துவிட்டனர்.
‘நாங்களோ காலையில் நீண்டநேரம் வரையில் தூங்கிக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகுதான், நடந்தது என்னவென்றே எங்களுக்குத் தெரிந்தது. அடுத்த தீ விபத்தின்போது கண்டிப்பாக எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள்.


நம்பிக்கையற்ற தருணம்

‘லாஸ் ஏஞ்சல்ஸ் எங்களிடமிருந்து விடைபெற்றது. சிறிய ‘சே’வும் பெரிய ‘சே’வும் (அதாவது ஆல்பர்ட்டோவும் நானும்) வருத்தத்துடன் நண்பர்களின் கைகளைக் கடைசி முறையாகக் குலுக்கி விடைபெற்றோம். லாரி சாண்டியாகோவுக்குக் கிளம்பியது. அதன் பின்பகுதியில் லா பாடெரோஸாவின் பிணம்.’
அர்ஜென்டினாவில் சே என்பதன் பொருள் நண்பர், தோழர் என்பதாகும். ஸ்பானிய மொழி பேசுபவர்கள் பிற நாட்டினரை சே என்று அழைக்கும் வழக்கம் இருந்தது. எர்னஸ்டோ குவரோவுக்கு சே என்னும் பெயர் இப்படித்தான் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும்.
இருவரும் சாண்டியாகோவை அடைந்தனர். அங்கு தூதரக அதிகாரி ஒருவரின் அலுவலகத்தில் ஒதுங்கிக்கொள்ள இடம் கிடைத்தது. கோர்டோபாவைப் போல் காட்சியளித்தது சாண்டியாகோ. ‘பரபரப்பான வாழ்க்கை. போக்குவரத்து அதிகம். ஆனால் நிலத்தால் சூழப்பட்ட எங்களுடைய சொந்த நகரத்தையே நினைவுபடுத்தக்கூடிய கட்டிடங்கள், தெருக்கள், தட்பவெப்பநிலை, மக்கள்.’
எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் இப்போது பெருவுக்குச் சென்றாகவேண்டும். பெரு செல்ல அர்ஜென்டைன அயலுறவு அதிகாரியின் கடிதம் தேவை. அந்தக் கடிதத்தைக் கொண்டுதான் விசா வாங்கவேண்டும். ஆனால், அந்த அதிகாரி கடிதம் எழுதித் தர மறுத்துவிட்டார். மோட்டார் சைக்கிளில் பெருவுக்குச் செல்லும் திட்டம் அவரைக் கவரவில்லை போலும். இறுதியில் 400 சிலிய பெஸோக்கள் செலுத்தி கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
‘கடைசியாக, அந்த முக்கியமான நாளும் வந்தது. அன்று ஆல்பர்ட்டோவின் கண்களில் கண்ணீர் பெருக, லா பாடெரோஸாவிடமிருந்து விடைபெற்றோம்.’ உணர்ச்சிபூர்வமான உறவுமுறை என்பதைத் தாண்டி அந்த மோட்டார் சைக்கிள் பல வழிகளில் அவர்களுக்கு உபயோகமாக இருந்தது. பஞ்சர் ஆன டயரை உருட்டியபடி, ஐயா எங்களுக்குத் தங்க இடம் கிடைக்குமா, சிறிது உணவு கிடைக்குமா என்று கேட்டால் யார்தான் மறுப்பார்கள்? வண்டி இல்லை என்றானபிறகு எப்படி பிறருடைய அனுதாபத்தைச் சம்பாதிப்பது?
சாகசப் பயணத்தில் அது ஒரு புதிய கட்டம் என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. ‘காலங்காலமாகத் தொடர்ந்து வரும் பயணிகள் என்ற மரபில் வந்தவர்கள் நாங்கள். நாங்கள் வாங்கியிருந்த பட்டங்கள் மக்களிடமிருந்து எங்களுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்தன. இப்போது நாங்கள் அந்த மரபைச் சேர்ந்தவர்கள் இல்லை. மேட்டுக்குடித் தோற்றம் எங்களிடமிருந்து மறைந்துவிட்டது.’
முதுகில் பையோடு தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சோர்வு அதிகரித்துக்கொண்டே சென்றது. லா ஜியோகோண்டா (La Gioconda) என்னும் நகரத்தில் உள்ள சந்து,பொந்துகள் எதையும் விட்டுவைக்கவில்லை எர்னஸ்டோ. அதிகாலையே சுற்றியலையத் தொடங்கிவிட்டார். கடலை நோக்கி இறங்கும் மலைச்சரிவில் வளைகுடாவை நோக்கி அந்நகரம் அமைந்திருந்தது. தகரக் கட்டடங்கள் அடுக்கடுக்காக அமைந்திருந்தன. இருண்ட தெருக்களில் காணப்பட்ட பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து பேசினார். ‘துர்நாற்றமும் புகையும் மண்டியிருந்த தெருக்களில் நடந்தோம். ஒரு குரூரமான தீவிரத்தோடு வறுமையை உணர முயன்றோம். நகரத்தின் ஆழத்தை அறிய முயற்சித்தோம்.’
ஒரு வயதான ஆஸ்துமா நோயாளியை அவள் இல்லத்துக்குச் சென்று சந்தித்தார் எர்னஸ்டோ. ‘பரிதாபத்துக்குரிய அந்தப் பெண் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். வியர்வை நாற்றமும் சேறுபடிந்த கால்களுமாக அவள் காட்சியளித்தாள். துர்நாற்றம் நிறைந்த அறையில் அடைந்து கிடந்தாள். அவளுடைய அறையிலிருந்த ஆடம்பரப் பொருட்கள் இரண்டு நாற்காலிகள்தாம்.’
சற்றுமுன்னால்தான் ஈஸ்டர் தீவுகள் குறித்த கற்பனையில் ஆழ்ந்துபோயிருந்தார் எர்னஸ்டோ. அழகான நகரம், அழகான பெண்கள், வேலையே செய்யவேண்டியதில்லை, முழுமுற்றான உல்லாசம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட அந்தச் சொர்க்கத்தைக் கண்டுவிட துடித்துக்கொண்டிருந்தார் எர்னஸ்டோ. கப்பல்கள் ஏதேனும் செல்கின்றனவா என்று விசாரித்தபோது, அடுத்த ஆறு மாதங்களுக்குச் சாத்தியமில்லை என்று பதில் வந்தது. சொர்க்கத்தைத்தான் அரும்பாடுபட்டு தேட வேண்டியிருக்கிறது. நரகம் எங்கும் வியாபித்திருக்கிறது. அந்தப் பெண்மணியைக் கண்டபோது, எர்னஸ்டோ சொர்க்கத்தை மறந்துபோனார்.
‘அவளுக்கு ஆஸ்துமா மட்டுமின்றி இதய நோயும் இருந்தது. ஒரு மருத்துவர் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று உணரும் இத்தகைய தருணங்களில்தான் மாற்றம் நிகழவேண்டும் என்று விரும்புகிறார்… ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாள் அந்தப் பெண். அவள் வாழ்ந்து வந்த அந்த சமூக அமைப்பின் அநீதியை ஒழித்துக்கட்டக்கூடிய ஒரு மாற்றம் வரவேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்புகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான், அடிப்படைச் செலவுகளைக்கூடச் சமாளிக்க முடியாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மறைக்க முடியாத மனக் கசப்புக்கு நடுவில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அதன் பிறகு தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரியாகவோ இருப்பதில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் முழுமையான எதிர்மறை சக்திகளாக மாறிவிடுகிறார்கள்.’
வருத்தும் நோய், ஏழைமை, கையாலாகாத்தனம் ஆகியவற்றுடன் சேர்த்து புறக்கணிப்பும் நிகழ்ந்துவிடுவதைக் கண்டு துடித்துப் போனார் எர்னஸ்டோ. ‘இவர்களை ஆதரிக்க வேண்டியிருப்பவர்கள் இவர்களின் நோய்கள் தனிப்பட்ட அவமானங்கள்தான் என்று கருதுகிறார்கள். இத்தகைய ஆரோக்கியமான மனிதர்களால் வெறுத்து ஒதுக்கப்படக்கூடியவர்களாகவும் இவர்கள் ஆகிவிடுகிறார்கள். கண்ணுக்குத் தென்படும் அடிவானமாக மறுநாளை மட்டுமே கொண்டுள்ள இந்த மக்களது வாழ்வில்தான் உலகத் தொழிலாளி வர்க்க வாழ்வின் ஆழமான அவலத்தை நம்மால் காணமுடியும்.’
அந்தப் பெண்மணிக்கு எப்படி உதவுவது? எப்படிப்பட்ட ஆறுதலை அளிப்பது? எர்னஸ்டோ திகைத்து நின்றார். ‘அந்தக் கண்களில் மன்னிப்பை இறைஞ்சும் தாழ்மையான வேண்டுகோள் தெரிகிறது… இன்னும் சிறிது நேரத்தில் கரைந்துவிடப்போகின்ற அவர்களின் உடல்களைப் போலவே, ஆறுதலைக் கேட்டு அடிக்கடி மன்றாடும் பயனற்ற வேண்டுதல்களும் வெற்றிடத்தில் கரைந்துபோய்விடுகின்றன.’
எனில், மாற்றம் என்பது சாத்தியமற்றதா? இந்நிலையை யார் மாற்றுவது? யாருக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது? அவர்கள் என்ன செய்கிறார்கள்? இப்படிப்பட்டவர்கள் தவிர்க்கவியலாதவர்கள் என்று அவர்கள் சொல்லப்போகிறார்களா? பிச்சைக்காரர்களும் நோயாளிகளும் இல்லாத இடமே இல்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்ளப் போகிறார்களா? ‘அபத்தனமான ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் அமைந்த இந்த நியதி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. ஆனால் அரசாங்கம் தனது படைகளைப் பெருக்குவதில் செலவிடுகின்ற நேரத்தைக் குறைத்துக்கொண்டு, சமூகரீதியாகப் பயன் தருகின்ற பணிகளில் அதிகப் பணத்தை, மிக மிக அதிகமான பணத்தைச் செலவிழக்க வேண்டிய நேரம் இது.’
வாடிக் கிடந்த அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அளிக்க எர்னஸ்டோவிடம் எதுவுமில்லை. எப்படிப்பட்ட உணவை உட்கொள்ளவேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகள் கூறினார். சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். தன்னிடம் இருந்த சில மாத்திரைகளை அளித்தார். பணிவான குரலில் அவள் நன்றி தெரிவித்தாள். குடும்பத்தினர் எர்னஸ்டோவுக்கு விடைகொடுத்தனர். அவர்களது பார்வையை எர்னஸ்டோவால் மறக்கமுடியவில்லை. ஒரு சொட்டு நம்பிக்கையும் இல்லாமல் வெறித்துப் போயிருந்தது அவர்கள் முகம்.


ஒரு கம்யூனிஸ்ட் தம்பதி

ஈஸ்டர் தீவு இன்னமும் கனவாகவே நீடித்துக்கொண்டிருந்தது. அங்கே செல்வதற்கான அத்தனை சாத்தியங்களும் மறுக்கப்பட்ட நிலையில் அனைவரும் அந்த இடத்தைப் பற்றியே சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தது எர்னஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் தவிக்க வைத்தது. திடீரென்று ஆல்பர்ட்டோ கேட்டார். ‘கப்பல் அதிகாரியின் அனுமதி கிடைக்காவிட்டால் என்ன? யாருக்கும் தெரியாமல் கப்பலுக்குள் சென்று ஒளிந்துகொண்டால் என்ன?’ மாலுமியிடம் மட்டும் சொல்லிவிட்டு கப்பலுக்குள் ஒளிந்துகொண்டுவிடலாம் என்னும் ஆல்பர்ட்டோவின் திட்டம் எர்னஸ்டோவுக்கும் பிடித்துப்போனது.
துறைமுகம் நோக்கி இருவரும் நடந்தார்கள். முதலில் சுங்கவரி அலுவலகம்தான் அவர்களை வரவேற்றது. சிரமம் எதுவுமின்றி கடந்து சென்றார்கள். ஸான் அன்டோனியோ கப்பல் தயாராக இருந்தது. இவர்களும் தயாராகவே இருந்தனர். கப்பல் கரையோரம் ஒதுங்கியது. ஷிப்ட் முடிந்து மேற்பார்வையாளர் உள்ளே நுழைந்தார். ஒவ்வொருவரையும் கவனமாகப் பரிசோதித்து உள்ளே அனுமதிக்கும் அந்த நபரைப் பார்க்கும்போதே தெரிந்தது. கடுமையானவர், உதவக்கூடியவர் அல்லர்.
உடனடியாக ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கிரேன் ஓட்டுநரிடம் உரையாடி அவரை நண்பராக்கிக்கொண்டார்கள். அவர் இவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டார். அன்றைய இரவு முழுவதும் இருவரும் கிரேனுக்குள் காத்திருந்தார்கள். அவர் சைகை கொடுத்ததும் சட்டென்று கப்பலுக்குள் நுழைந்து அதிகாரிகளுக்கான கழிப்பறையில் பதுங்கிக்கொண்டார்கள். வாகான நேரம் அமையும்போது அவர்கள் வெளியில் வரவேண்டும் என்பது திட்டம். ஆனால் அப்படியானவொரு சமயம் வருவதாகவே இல்லை. எவ்வளவு நேரம்தான் கழிப்பறைக்குள் அடங்கியிருப்பது? நாற்றமும் குமட்டலும் அலைகழிக்க, இதற்கு மேலும் பொறுக்கமுடியாது என்று கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்கள்.
கேப்டன் முன்னால் சென்று நின்றார்கள். ‘கப்பலில் ஏறி குதித்துவிட்டால் போதும், எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டாயா?’ இருவருக்கும் உணவு கொண்டு வரச்சொன்னார் கேப்டன். சாப்பிட்டு முடித்ததும் வேலையும் கொடுக்கப்பட்டது. ஆல்பர்ட்டோ உருளைக் கிழங்கு உரிக்கவேண்டும். எர்னஸ்டோ, கழிப்பறையைச் சுத்தம் செய்யவேண்டும். ஆல்பர்ட்டோ புன்சிரிப்புடன் நகர்ந்து செல்ல, எர்னஸ்டோ தலைமீது கை வைத்து உட்கார்ந்துகொண்டார். இதற்கு கழிப்பறையிலேயே அடைந்து கிடந்திருக்கலாமோ!
கோபத்தையும் சலிப்பையும் ஒழித்துக்கட்டிவிட்டு வேலையை செய்துமுடித்தார் எர்னஸ்டோ. அடுத்தடுத்து பல காரியங்களை அவர் செய்யவேண்டியிருந்தது. மண்ணெண்ணெய் விட்டு கப்பலைத் துடைக்கவேண்டும். கூட்டிப் பெருக்கவேண்டும். இடையிடையே உறக்கம், உணவு, ஓய்வு. முடிந்ததும் மீண்டும் வேலை. கப்பல் கட்டணத்துக்கு இணையாக வேலைகள் செய்துகொடுத்துவிடவேண்டும் என்றுதான் எர்னஸ்டோவும் நினைத்தார் என்றாலும், அதற்கும் அதிகமாக வேலை வாங்கிக்கொள்கிறார்களோ என்னும் எண்ணமும் எழுந்துகொண்டே இருந்தது.
அவ்வப்போது எர்னஸ்டோவு யோசனையில் ஆழ்ந்துவிடுவதுண்டு. எதற்காக இந்தப் பயணம்? எதற்காக இந்தக் கழிவறையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்? இதிலிருந்து எனக்குக் கிடைக்கப்போவது என்ன? என்ன தெரிந்துகொள்ளபோகிறேன்? இந்த அனுபவங்கள் எப்படி எனக்குப் பயனளிக்கப்போகிறது? ‘எப்போதும் ஆர்வம் மிக்கவர்களாகவும் காணும் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்பவர்களாகவும் இருந்த நாங்கள் மூலை முடுக்குகளிலெல்லாம் நுழைந்தோம். ஆனால் எதிலும் ஒட்டாதவர்களாக, எங்கும் நிலையாகத் தங்காதவர்களாக, விஷயங்களின் ஆழத்தில் இருப்பது என்ன என்று அறியும் முயற்சியில் நாட்களை வீணாக்காதவர்களாக இருந்தோம். எதையும் மேலோட்டமாக அறிந்துகொள்வதே போதுமானதாக இருந்தது.’
கப்பல் பயணம் முடிவுக்கு வந்தது. மாலுமிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்கள். இப்போது தாமிரச் சுரங்கமான சூக்கிகாமாட்டாவை (Chuquicamata) நோக்கி அவர்கள் இப்போது நடந்துகொண்டிருந்தனர். சுரங்கத்துக்குச் செல்வதானால் அதிகாரிகளின் அனுமதியைப் பெறவேண்டும். அதற்காக ஒரு நாள் காத்திருக்கவேண்டியிருந்தது. பிறகு ஒரு வேன் பிடித்து பாக்தானோ என்னும் ஊருக்குச் சென்றார்கள். வழியில் அந்தத் தம்பதியைச் சந்தித்தார் எர்னஸ்டோ. சிலியத் தொழிலாளர்களாக இருந்த அவர்கள் கம்யூனிஸ்டுகளாகவும் இருந்தார்கள்.
‘மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், மேட் பானத்தைக் குடித்தவாறும், ரொட்டித் துண்டையும் பாலாடைக்கட்டியையும் சாப்பிட்டவாறும் காட்சியளித்த அந்த மனிதனின் சுருக்கங்கள் நிறைந்த முகம் ஒரு புதிரான, துயரமான உணர்வை ஏற்படுத்தியது. தான் சிறையில் கழித்த மூன்று மாதங்களைப் பற்றியும், பட்டினியால் வாடியபோதிலும் அசாதாரணமான விசுவாசத்துடன் தன்னைப் பின்தொடர்ந்த தனது மனைவியைப் பற்றியும், கனிவான அண்டை வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் இருக்கும் தனது குழந்தைகளைப் பற்றியும், வேலைதேடி தான் மேற்கொண்ட பயனற்ற பயணங்கள் பற்றியும், புதிரான விதத்தில் காணாமல் போனவர்களும் கடலில் மூழ்கி விட்டதாகக் கருதப்பட்டவர்களுமான தனது தோழர்களைப் பற்றியும் தெளிவாக, சாதாரண மொழியில் அவர் எங்களிடம் விவரித்தார்.’
எர்னஸ்டோ அந்தக் கம்யூனிஸ்ட் தம்பதியை ஆச்சரியத்துடன் கவனித்தார். ‘பாலைவன இரவில், குளிரில் ஒருவரோடொருவர் நெருங்கி அமர்ந்திருந்த அந்த ஜோடி உலகத் தொழிலாளி வர்க்கத்தின் வாழும் பிரதிநிதிகள். அவர்களிடம் போர்த்திக்கொள்வதற்கு ஒரு போர்வைகூட இல்லை. அவர்களுக்கு எங்களுடைய போர்வை ஒன்றைக் கொடுத்துவிட்டு, மற்றொரு போர்வையை ஆல்பர்ட்டோவும் நானும் போர்த்திக்கொண்டோம். என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகக் குளிரான நாள் அது. அதுமட்டுமல்ல, (எனக்கு) வினோதமாகத் தோன்றிய இந்த மனிதர்களுடன் மிக நெருக்கமாக இருந்து நான் கழித்த ஓர் இரவும் அதுதான்.’
அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு மலைகளில் இருந்த கந்தகச் சுரங்கங்களை நோக்கி புறப்பட்டனர். அசாதாரணமானதாக இருந்தது அந்தப் பகுதி. ‘அந்த மலைகளின் தட்பபெப்ப நிலை மிகவும் மோசமானது. அங்கே ஒருவருடைய அரசியல் ஈடுபாடு எப்படிப்பட்டது என்று யாரும் கேட்பதில்லை. வேலை செய்வதற்கான அனுமதிச் சீட்டு உங்களிடம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அங்கே வாழ்வது அந்த அளவுக்கு மோசமானது. சில ரொட்டித் துண்டுகளுக்காக தொழிலாளி தனது உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் வேலை செய்யத் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.’
பல மைல்கள் கடந்து வந்த பிறகும் எர்னஸ்டோவால் அந்தக் கம்யூனிஸ்ட் தம்பதியை மறக்கமுடியவில்லை. அவர்களும் என்னைப்போலத்தான் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள். என்னைப் போலத்தான் உலகைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். என்னைவிடவும் குறைவான உடைமைகள் அவர்களிடம். இருந்தும் ஏதோவொரு அம்சம் அவர்களை என்னிடம் இருந்து பிரித்து காட்டுகிறது. அந்த அம்சம் எது?
‘வாருங்கள் தோழர்களே, வந்து எங்களோடு சாப்பிடுங்கள். நானும் ஒரு நாடோடிதான்’ என்று அந்தக் கம்யூனிஸ்ட் அழைத்தது நினைவுக்கு வந்தது. அவரோடு ஒப்பிடும்போது தன் பயணம் மிகவும் சாதாரணமானது என்று எர்னஸ்டோவுக்குத் தோன்றியது. தனது வீரதீர சாகசங்கள் ஒன்றுமேயில்லை என்பதும் புரிந்தது. ‘அவருடைய வார்த்தைகள் எங்கள் இலக்கற்ற பயணத்தை ஒட்டுண்ணித்தனமானது என்று அவர் ஏளனம் செய்கிறார் என்பதை உணர்த்தியது.’
தனது வாசிப்பையும் இதுவரையில் தனக்குக் கிடைத்த பயண அனுபவங்களையும் ஒன்றுதிரட்டி, ஒன்றின்மீது ஒன்றைப் பொருத்தி ஆராய்ந்து பார்த்தார். தான் சந்தித்த அந்தக் கம்யூனிஸ்ட் தம்பதி ஏன் சமூகத்தால் எதிர்க்கப்படுகிறார்கள் என்பதை அலசினார். ‘இப்படிப்பட்ட மனிதர்களின்மீதுதான் அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது என்பதை நினைத்தாலே உள்ளம் பதறுகிறது.’ ஆனால், எதிர்ப்பையும்மீறி அவர்கள் எதற்காக கம்யூனிச தத்துவத்தின்மீது இவ்வளவு பிடிப்புடன் இருக்கிறார்கள் என்பதையும் யோசித்தார். எந்தவொரு தத்துவமும் ஒரு சாராருக்குப் பிடித்தனமானதாகவும் இன்னொரு சாராருக்கு விருப்பமற்றதாகவும் திகழ்கிறது. யாருக்கு எது பிடித்திருக்கிறது, ஏன் என்பதைக் கண்டறிந்தால்தான் அந்தத் தத்துவத்தின் உண்மைத்தன்மையை எடைபோடமுடியும்.
கம்யூனிசம் இங்கு யாரால் அபாயமாகப் பார்க்கப்படுகிறது? யாரால் உயிருக்கு உயிரானதாகத் தழுவப்படுகிறது? ‘ஒரு சமூகத்தின் ‘ஆரோக்கியமான’ வாழ்வுக்கு ‘கம்யூனிசப் புழு’ அபாயத்தை ஏற்படுத்துகிறதா அல்லது ஏற்படுத்துவதில்லையா என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், தொடரும் பட்டினிக்கு எதிரான ஒரு விருப்பமாக கம்யூனிசம் இங்கு இயல்பாக எழுகிறது.’
கற்பதற்குக் கடினமாக இருக்கும் ஒரு தத்துவம் ஒரு சாராரால் மிக எளிமையாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ளப்படுகிறது. புரிந்துகொள்ளவேண்டிய அவசியம்கூட இல்லாமல் அந்தத் தத்துவம் அவர்களால் நேசிக்கப்படுகிறது. விநோதமான, வெகுளித்தனமான முறையில் அந்தத் தத்துவம் அவர்களுக்கு நம்பிக்கையும் ஊட்டுகிறது. ‘தங்களால் புரிந்துகொள்ளமுடியாத அந்தக் கோட்பாட்டை இந்த மனிதர்கள் நேசிக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அதன் அர்த்தம் ‘ஏழைகளுக்கு உணவு’ என்பதுதான். இந்த அர்த்தம் அவர்களால் புரிந்து கொள்ளப்படக் கூடியது. அவர்களின் வாழ்வை நிரப்பக்கூடியது.’


லாபங்களும் இழப்புகளும்

சூச்சிகாமாட்டா சுரங்கத்தை நெருங்க நெருங்க மூச்சு முட்டுவது போல் இருந்தது. மாபெரும் தாமிர வளம் நிறைந்த பகுதி அது. இருபது மீட்டர் உயரமுள்ள அடுக்குத் தளங்கள் சுரங்கத்தில் அமைந்திருந்தன. தாதுவை எளிதாகக் கொண்டு செல்வதற்கான இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், ‘கவர்ச்சியோ உணர்ச்சியோ அற்றதாக, ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக’ அந்தச் சுரங்கம் அமைந்திருந்தது போல் இருந்தது எர்னஸ்டோவுக்கு.
செல்வத்தை அள்ளித்தரும் இடமாக சுரங்கம் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ‘திறந்தவெளியில்தான் தாது எடுக்கப்படுகிறது என்பதையும், டன் ஒன்றுக்கு ஒரு சதவீதம் தாமிரத்தைக் கொண்டு கனிமவளம் பெருமளவில் சுரண்டப்படுகிறது என்பதையும் போக்குவரத்தின் தனிச்சிறப்பான அமைப்பே புலப்படுத்துகிறது.’
எந்த இயற்கையைத் தேடி அலைந்து வந்தாரோ அந்த இயற்கை இங்கே வெடிவைத்து சிதறடிக்கப்படுவதை அவர் கண்கொண்டு பார்த்தார். ‘ஒவ்வொரு நாள் காலையிலும் மலையில் வெடிவைக்கப்படுகிறது.’ தொழில்நுட்ப விவரங்கள் உள்பட அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விரிவாக தன் நோட் புத்தகத்தில் குறித்துக்கொண்டார் எர்னஸ்டோ. தகர்க்கப்பட்ட கனிமக் கற்கள் ராட்சத இயந்திர வாகனப் பெட்டிகளில் ஏற்றப்படுகின்றன. கற்கள் இயந்திரத்தை அடைகின்றன. அங்கே கற்கள் நொறுக்கப்படுகின்றன. நடுத்தர அளவுள்ள சரளைக் கற்கள் உடைக்கப்படுகின்றன. பிறகு கந்தக அமிலக் கரைசலில் போடப்படுகின்றன. வேதியியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன. திரவத்தில் மின்சாரம் தொடர்ச்சியாக செலுத்தப்படுகிறது. தாமிரம் மெல்லிய தாமிரத் தகடுகளில் ஒட்டிக்கொள்கிறது. ஐந்து அல்லது ஆறு நாள்களுக்குப் பிறகு இந்தத் தகடுகள் உருக்கும் உலைக்கு அனுப்பப்பட ஏற்ற நிலையைப் பெற்றுவிடும். தக்க முறையில் 12 மணி நேரம் உருக்கப்பட்ட பிறகு இந்தத் தகடுகளில் இருந்து ‘350 பவுண்ட் எடையுள்ள தாமிர வார்ப்புப் பாளங்களைப் பெறமுடியும். ஒவ்வொரு நாள் இரவும் நாற்பத்தைந்து லாரிகளில் ஒவ்வொன்றிலும் இருபது டன் தாமிரம் வீதம் வரிசையில் எடுத்துச் செல்லப்படும். ஒருநாள் உழைப்பின் பலன் இது.’
எறத்தாழ மூவாயிரம் பேர் ஈடுபடும் உற்பத்தி நடவடிக்கை பற்றிய சுருக்கமான எளிய விவரணை இது என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. இந்த உற்பத்தி நடவடிக்கையால் யாருக்குப் பலன்? அந்தப் பலனை யார் அனுபவிக்கிறார்கள்? சுரங்கத்தில் பணியாற்றும் மூவாயிரம் சொச்சம் பேர் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? சுரங்கத்தின் கதி என்ன?
‘நைட்ரேட் தாது நிறைந்த, புல் பூண்டுகூட முளைக்காத இந்த மலைகள் காற்று, மழை ஆகியவற்றின் தாக்குதலுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அற்றவையாக இருக்கின்றன. இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் உரிய காலத்துக்கு முன்பே மூப்படைந்து தங்களது சாம்பல் நிற முதுகெலும்போடு காட்சியளிக்கின்றன. அவற்றின் சுருக்கங்கள் அவற்றின் உண்மையான புவியியல் ரீதியான வயதைப் பற்றிய தவறான கருத்தை உருவாக்குகின்றன. இந்த இடத்தைச் சூழ்ந்துள்ள எத்தனை மலைகள் இதேபோன்று மிகப் பெரும் வளங்களைத் தங்கள் மடிகளில் மறைத்து வைத்துள்ளனவோ… தங்கள் வயிற்றுக்குள் மண்வாரி இயந்திரங்களின் வெற்றுக் கைகளை அனுமதிக்கக் காத்திருக்கின்றனவோ…’
சுரங்கத் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமை எர்னஸ்டோவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அரை மணி நேரம் சுற்றி வருவதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ‘இது சுற்றுலாத் தலமல்ல, சுற்றிப் பார்த்தவுடன் நீங்கள் வெளியே போய்விடுவது நல்லது. எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன!’ என்று சுரங்கத்தின் கங்காணிகள் கண்டிப்பான குரலில் எர்னஸ்டோவுக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அவர்கள் திறன்மிக்கவர்களாகத் தோற்றமளித்த அதே நேரம், திமிரானவர்களாகவும் இருந்தார்கள். இவர்களிடம் வேலை செய்யும் பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்குமோ?
விரைவில் சுரங்கத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெறுவதாக இருந்ததை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக இருந்த ஒருவரிடம் (அவர் ஒரு கவிஞரும்கூட) உரையாடும்போது மேலதிக விவரங்கள் கிடைத்தன. சுரங்கத்தின் செயல்பாடுகள், பணியாளர்களின் நிலைமை, வேலை நிறுத்தத்துக்கான காரணங்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்று பலவற்றையும் கேட்டறிந்துகொண்டார் எர்னஸ்டோ. இறுதியாக அவர் கேட்ட கேள்வி இது. ‘இந்தச் சுரங்கம் எத்தனை பேரை பலி வாங்கியிருக்கிறது?’
அவர் ஆச்சரியமடைந்தார்.‘இந்தப் புகழ்பெற்ற சுரங்கங்கள் இங்கே இருக்கிற தாமிரம் முழுவதையும் சுத்தமாகச் சுரண்டியெடுத்துவிடும். உங்களைப் போன்றவர்கள் என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் இதற்காக எத்தனை உயிர்கள் பலியாக்கப்பட்டன என்று யாருமே இதுவரை கேட்டதில்லை. இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது, மருத்துவர்களே. ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி.’
எர்னஸ்டோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. ‘உணர்ச்சியற்ற ஆற்றலும் கையாலாகாத கசப்புணர்வும் இந்த மாபெரும் சுரங்கத்தில் கைகோர்த்துச் செல்கின்றன. உயிர் வாழவேண்டும் என்ற நெருக்கடியால் ஏற்பட்ட வெறுப்பும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் முனைப்பும் எதிரெதிராக இருந்தபோதிலும், அதையும் மீறி இவ்விரு பண்புகளும் இணைந்திருக்கின்றன.’
மிக முக்கியமான ஒரு பார்வை இது. கொள்ளை லாபம் அடிக்கத் துடிப்பவர்களும் ஒருவேளை உணவுக்கு உடலையும் உள்ளத்தையும் உயிரையும் பணயம் வைக்கத் துடிப்பவர்களும் கைகோர்க்கும் அதிசயத்தையும் அவலத்தையும் எர்னஸ்டோ இந்தச் சுரங்கத்தில் தரிசித்தார். லாபம், மேலும் லாபம் என்னும் துடிப்பு இயற்கையை மட்டுமின்றி மனிதர்களையும் சேர்த்தே அழிக்கிறது என்பதை எர்னஸ்டோ உணர்ந்துகொண்ட தருணம் இது.
‘வெறும் உணவைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட எத்தனை மனித உயிர்களை இவை (சுரங்கங்கள்) குடித்தனவோ… இந்த யுத்தத்தில் தனது புதையல்களைப் பாதுகாப்பதற்காக இயற்கைஏற்படுத்தியுள்ள ஆயிரக்கணக்கான மரணக்குழிகளில் துயரமான மரணத்தைச் சந்தித்தவர்கள் எத்தனை பேரோ… காவியங்களில் இடம் பெறாத இத்தகைய ஏழை வீரர்களின் எத்தனை உயிர்களை (தவிர்க்க இயலாமல்) இவை குடித்தனவோ…’
சிலி நில ஆய்வு நிறுவனம் சல்ஃபேட் தாதுவைச் சுரண்டுவதற்கு இன்னொரு ஆலையை அமைத்து வருவதை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். ‘உலகத்திலேயே மிகப் பெரியதாக விளங்கப் போகின்ற இந்த ஆலையின் 96 மீட்டர் உயரப் புகைப்போக்கிகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழு உற்பத்தியும் இந்த ஆலையிலேயே நடைபெறப் போகிறது. அதே சமயத்தில், ஆக்ஸைடு தாதுவளம் தீர்ந்து வருவதால் பழைய ஆலையின் உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைந்து முற்றிலுமாக நின்றுவிடும். புதிய உருக்காலைக்குத் தேவையான கச்சாப் பொருள்கள் ஏற்கெனவே பிரம்மாண்டமான அளவுக்குத் தயாராக உள்ளன. 1954ம் ஆண்டு ஆலை திறக்கப்பட்டவுடன் உடனடியாக உற்பத்தியும் தொடங்கிவிடும்.’
ஆனால் இதை எப்படி வரையறுப்பது? வளர்ச்சி என்றா? பழைய ஆலையா, புதிய ஆலையா என்பதா இங்கு முக்கியம்? எவ்வளவு நவீனமாக ஓர் ஆலை இயங்குகிறது என்பதா அதை மதிப்பிடுவதற்கான அளவுகோல்? ஓர் ஆலையின் கட்டுமானத்தைவிட, உற்பத்தித் திறனைவிட, இயந்திரங்களைவிட, லாபத்தைவிட பணியாளர்கள் முக்கியம் அல்லவா? அவர்களுடைய வாழ்நிலை முக்கியமல்லவா?
மிக அடிப்படையான ஒரு கேள்வியும் எர்னஸ்டோவுக்கு எழுந்தது. ஆலைகளை யார் நிர்வகிக்கவேண்டும்? தனியார் நிறுவனங்களா அல்லது அரசாங்கமா?
<Part 2>