Friday, June 14, 2013

Marx still threatening them!

திருவாளர் எஸ். குருமூர்த்தி மறைந்து போன மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்என்றொரு நூல் எழுதியிருக்கிறார். கிழக்குபதிப்பகத் தின் இந்த வெளியீட்டில், “அரசியல், பொருளாதார விமர்சகர்என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏதோ பொதுவான மனிதர் போன்ற பிம்பத்தைக் காட்டும் வார்த்தைகள்! உள்ளே தனது முன்னு ரையில் சுதேசி விழிப்புணர்வு இயக்க நண்பர்கள்பற்றிக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். அந்த இயக்கம் ஆர்.எஸ். எஸ்.சின் துணை அமைப்பு என்பதை அறிந்து கொண்டால் இவர் எப்படிப்பட்ட வர் என்பதைச் சட்டென்று புரிந்து கொள்ளலாம்.

மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூலின் முதல்பகுதியில் லெனின், ஸ்டா லின், சிலைகளைப் போல மார்க்சும் ஒரு பழமைச் சின்னமாகவும் பயன் ஒழிந்து போன மனிதராகவும் ஆகிவிட்டார்என்று உற்சாகமாகப் பிரகடனப்படுத்தியிருக் கிறார் மனிதர். அது மட்டுமா? இதற்கான காரணத்தையும் அரிய கண்டுபிடிப்பாய் வெளியிட்டிருக்கிறார். அது காரல் மார்க்ஸ் பழமையாகிப் பயனற்றுப் போன தற்கு மார்க்சைவிட மார்க்சிஸ்டுகளே காரணம்”. பயனற்றுப் போனவர் பற்றி இந்த அதிமேதாவி ஏனிப்படி வரிந்து கட் டிக்கொண்டு ஆங்கிலத்தில் நூல் எழுதி, அதை தமிழிலும் பெயர்த்து வெளியிட வேண்டும்? முடிந்தது கதை என்று வேறு வேலைக்குப் போயிருக்கலாம் அல்லவா? முடியவில்லை இவரால். அந்தப் பழமைச் சின்னமாகஆகிப் போனவர் இன்று இவரைப் புத்தம் புதிய ஆயுதமாய் மிரட்டிக் கொண்டே இருக்கிறார்.

அதனால் தான் தனது காட்டத்தையெல்லாம் அந்த மாமேதை மீது காட்டியிருக்கிறார். மார்க்ஸ் பயனற்றுப் போனதற்கு மார்க் சிஸ்டுகள் தாம் காரணமாம்! அடடா! அப்படியென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவரைக் காலமெல்லாம் போற்றி வந்தார்களா? அவரைப் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டுஎன்று புகழ்பாடி வந்தார்களோ? இவர் களது குருஜி கோல்வால்கர் தனது மூன்று எதிரிகளாக வருணித்தது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்அல் லவா? அவரைக் காலமெல்லாம் தூற்றி வந்தவர்கள் தாம் இப்போதும் தூற்று கிறார்கள் என்பதை மார்க்சிஸ்டுகள் நன்கு அறிவார்கள்.

மார்க்ஸ் நல்லவர், மார்க்சிஸ்டுகளே கெட்டவர்கள் - மாமரம் நல்லது, மாங்கனி களே கசப்பானவை - எனும் இந்த அர்த்த மற்ற வாதத்தை தொடர்ந்து பராமரிக்கவும் அவரால் முடியவில்லை. மார்க்சின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு துரோகம் செய் கிறவர்கள் மெய்யான மார்க்சிஸ்டுகள் அல்ல என்பதால் சட்டென்று மார்க் சையே நேரடியாகத் தாக்கத் துவங்குகிறார்.காரல் மார்க்சின் பொருள்முதல் வாதச் சித்தாந்தம் முழுவதும் கிறிஸ்தவ அனுபவங்களின் அடிப்படையிலும், அதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை யிலும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்சியச் சிந்த னைக் கட்டமைப்புக்கு கிறிஸ்துவ உல கைத் தவிர்த்து வெளியிலிருந்து குறிப் பிடும்படியான உள்ளீடுகள் ஏதும் கிடையாதுஎன்கிறார்.

மார்க்சியமானது கிறிஸ் துவத்தின் நீட்சியே என்பதாகவும், அதனால் இது முழு உலகத்திற்கும் பொருந் தாது என்பதாகவும் நிலைநிறுத்த மனிதர் துடியாத் துடித்திருக்கிறார்.இந்துத்துவாவாதிகளின் பிறமத வெறுப்பு உலகறிந்ததே. அதை மார்க்சியத் தைக் கொச்சைப்படுத்தவும் பயன்படுத்தி யிருப்பது தான் இந்த நூலாசிரியரின் தனித்துவம். மார்க்ஸ் வடித்தெடுத்த இயங்கியல் பொருள்முதல்வாதமானது கிறிஸ்துவத்திற்கு மட்டுமல்ல, சகல மதங்களின் ஆத்திகத் தத்துவங்களுக்கும் நேர் எதிரானது.

19ம் நூற்றாண்டிலேயே உலகம் சுருங்கிப் போனது. லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் உலக ஞானச் சுவடிகள் எல்லாம் இருந்தன. அவற்றையெல்லாம் உள்வாங்குகிற ஒரு தவத்தை மார்க்ஸ் மேற்கொண்டார் என் பதை அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். குருமூர்த்தி போல் நுனிப்புல் மேய்கிறவர்களுக்கு அது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.வினோதம் என்னவென்றால், மாமேதை மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி அறிவார், அது பற்றிய சில மதிப்பீடு களைத் தந்திருக்கிறார் என்பதையும் இவரால் மறைக்க முடியவில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் பயன்படுத்திய தகவல்களையே இந்திய நாகரிகத்தை மதிப்பிடுவதற்கான கருவியாகப் பயன் படுத்திக் கொண்டார்என்று அங்கும் தனது பிறமத வெறுப்பைக் கக்குகிறார்.

குரங்குகளையும், பசுமாடுகளையும் வணங்குவோர்என்று இந்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டார் என்று மனிதர் பொருமுகிறார். அது உண்மைதானே? இன்றைக்கும் கோமாதா அரசியல் நடத்து கிறவர்கள், இன்றைக்கும் பஜ்ரங்தள்என்று அனுமார் சேனை வைத்திருப் பவர்கள் அதற்காகக் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

உண்மையைக் கிறிஸ் தவர் சொன்னால் என்ன, இந்து சொன் னால் என்ன, நாத்திகர் சொன்னால் என்ன, உண்மை உண்மைதானே?ஆனால், மார்க்ஸ் இந்துக்கள் மத்தி யிலிருந்த இந்த விலங்கு வழிபாட்டை மட்டும் சுட்டிக்காட்டியவர் அல்ல. இந்த மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் எப்படிக் கொடூரமாகச் சுரண்டப் படுகிறார்கள் என்பதையும் அதே பிரிட்டனில் இருந்து கொண்டு உலக மன சாட்சியாய் முரசறைந்து சொன்னவர். பழைய உலகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஒரு புதிய உல கத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை என்றும் வருத்தப்பட்டவர். இங்குள்ள சாதிய கட்டுகள் பற்றிக் கவலைப்பட்டவர். அதை நவீனத் தொழிற்சாலைகளாவது தளர்த்தி விடாதா என்று ஏங்கியவர். அந்த மகத்தான மனிதாபிமானியை கிறிஸ்துவக் குடுவைக்குள் அடைக்கப் பார்க்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கின் வேலை எடுபடாது.

இந்தியா பற்றி மார்க்ஸ் எழுதியதை எல்லாம் சேர்த்துவைத்துப் படிக்கிற எவரும் இவரது பித்தலாட்ட வியாக்யானத்தை இடக்கையால் புறந்தள்ளுவார்.உபரி, லாபம் எனும் கருத்தியலே மார்க்சியப் பொருளாதாரத்தின் அஸ்தி வாரம். மார்க்சின் இந்தக் கருத்தியல் அஸ்திவாரம் அவர் அறிந்திருந்த திடச் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டிராத மிகப் பெரிய அறிவுசார் அமைப்பின் கீழ் புதையுண்டு விட்டதுஎன்று குருமூர்த்தியார் கொக்கரிக்கிறார்.அரசு வெளியிடும் காகிதப் பணம், அதுபோலத் தனியார்கள் தரும் உண்டி யல்கள் - காசோலைகள், கம்பெனிப் பங்குகள், அவற்றின் மீதான ஊக வணிகம் போன்றவற்றைக் காட்டி, இவை புரொஃ பெஷனல்கள் எனப்படும் நிபுணர்களால் இயக்கப்படுகிறதுஎன்பதைச் சுட்டிக் காட்டி, இவற்றில் மார்க்சின் பொருளா தாரக் கோட்பாடு திவாலாகிவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறார். இன்று இவை உலகப் பொருளாதாரத் தில் தீவிர செல்வாக்கை செலுத்துகின் றன என்பது உண்மையே என்றாலும், இவையெல்லாம் மார்க்ஸ் காலத்திலேயே துவங்கியவை தான். கிழக்கந்தியக் கம்பெனிஎன்று அவர் காலத்திலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் புறப்பட்டு, அவை உலக வர்த்தகத்தை ஆட்டிப் படைக்க முயன்றன. அவற்றின் பங்குகள் ஏற்ற இறக்கமாக எகிறுவதும் நடந்தது. பொருளாதாரத்தில் பண ஊடாட்டத்தின் முக்கியம் பற்றியும் மார்க்ஸ் பேசியிருக்கிறார்.ஆனால், இந்தக் காகிதப் பணங்களும், அவற்றின் மீதான ஊக வணிகங்களும், அவை நிபுணர்களின் துணை கொண்டு நடத்தப்படுவதும், எல்லாம் பொருள் உற்பத்தி எனும் திடச் சொத்து உருவாக் கத்தையே அஸ்திவாரமாகக் கொண்டுள் ளன என்பதையும் அவர் அறிவார். ஒரு சிமிண்ட் கம்பெனியின் பங்கு மதிப்பு ஊக வணிகத்தால் கூடலாம், குறையலாம். ஆனால் அந்தக் கம்பெனி தனது சிமிண்ட் உற்பத்தியைச் சுத்தமாக நிறுத்திவிட்டால் அந்தப் பங்கின் கதி அதோ கதிதான்.

அதன் மீது ஊக வணிகம் நடக்காது; போட்ட பணத்தில் எவ்வளவு திருப்பி வரும் எனும் கவலையே மிஞ்சி நிற்கும். இயக்கம்தான் ஊகத்திற்கு வாய்ப்புத் தருகிறது. உற்பத்திதான் ஊக வணிகத் திற்கு வாய்ப்புத் தருகிறது. பொருள் உற்பத்தி இல்லையென்றால், திடச் சொத்து உருவாக்கம் இல்லையென்றால் புரோஃபஷனல்களால் புனையப்பட்டபொருளாதாரம் என்கிறாரே அது இருக் கவே இருக்காது, மணல் வீடாய்க் கரைந்து போகும். முதலாளிகள் இல்லையென்றால் இந்தப் புரோஃபஷனல்களே கிடையாது.குருமூர்த்தியோ விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார். அதிலும் குரூர மான முறையில் சொல்கிறார். பராம்பரிய முதலாளித்துவ முறையில் எவ்வாறு உழைக்கும் வர்க்கம் சுரண்டப்பட்டதோ அதே வகையில் இன்று புதிய வடிவான அறிவுச் சக்தியினால் இயக்கப்படும் முத லாளித்துவத்தில் புரொஃபஷனல்கள் தான் முதலாளிகளை சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த வகை முதலாளித்துவத்தை மார்க்ஸ் கற் பனை கூடச் செய்து பார்க்கவில்லைஎன்கிறார் மகானுபாவர்.

முதலாளிகளிடம் சம்பளம் பெறும் மூளை உழைப்பாளர்களை - அந்த நிபு ணர்களை - சுரண்டல்காரர்கள் என்றும், மெய்யான சுரண்டலில் ஈடுபடும் முத லாளிகளை பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் என்றும் சித்தரிக்கும் இந்தக் குருமூர்த்தி களை மார்க்ஸ் கற்பனை செய்து பார்த் திருக்கமாட்டார் தான்! வக்கிர புத்தியின் வீச்சு இந்த அளவுக்குப் போகும் என்பது அந்த மகா ஞானியின் கற்பனைக்கும் எட்டாததுதான்.தகவல் தொடர்புத் தொழில் உள்ள நிபுணர்களை கார்ப்பரேட் முதலாளிகள் நினைத்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்களே - அந்த உரிமையோடே அவர்களை வேலைக்கு எடுக்கிறார்களே - இதற்குப் பெயர் புரோஃபஷனல்களின் சுரண்டலா?” எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிபுணர் என்றாலும் அவரது உழைப்பால் முத லாளிக்கு உபரி மதிப்பு கிடைத்தால் தான் அவரை அதே சம்பளத்திற்கு வைத்துக் கொள்வார். இல்லையெனில் சம்பளத்தை வெட்டுவார் அல்லது வெளியே அனுப்பு வார். இதுதான் இப்போதும் நடக்கிறது. இந்த மெய்மை நீடிக்கும் போது மார்க்ஸ் எப்படித் தோற்றுப் போவார்? அவரது கருத்தியல் எப்படிக் காலாவதியாகும்?பொருளுற்பத்தி தான், திடமான சொத்து உருவாக்கம் தான் சகல பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் அஸ்திவாரம் என்பதால், அதில் உபரி, லாபம் என்பது கிடைக்கும்போது தான் கார்ப் பரேட் நிறுவனங்கள அதைத் தொடரு கின்றன என்பதும் உண்மை.

லாபம் எனப் படுவது ஏதோ யதேச்சையாகக் கூடுதல் விலை கிடைப்பதால் உருவாவதல்ல. உற்பத்தியில் செலுத்தப்படும் உழைப்புக் கான ஊதியத்தைக் காட்டிலும் அதில் கூடுதல் மதிப்பு உருவாவதால் ஏற்படு வது. வேறு மாதிரியாகச் சொன்னால், கிடைத்த கூடுதல் மதிப்பைக் காட்டிலும் உழைப்பாளிகளுக்கு குறைந்த ஊதியத் தைக் கொடுத்ததால் ஏற்படுவது அது வெறும் புனைவு அல்ல, திடமான மெய்ப் பொருள்.இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கு எவ்வளவுதான் கூடுதல் விலை கிடைத்தாலும் உற்பத்திச் செலவு அதைவிடக் கூடுதலாக இருந்தால் லாபம் கிடைக்குமோ? கிடைக்காது அல்லவா. அதனால் குறைந்த உற்பத்திச் செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருளை உற்பத்தி செய்து வைத்துக் கொள்ளவே முயலுகிறார் ஒரு முதலாளி. அந்தப் பொருளுக்கு எதிர்பார்த்த விலையைக் காட்டிலும் கூடுதலான அல்லது குறை வான விலை கிடைப்பது வேறு சில வர்த்த கக் காரணங்களால் நடப்பது. அது அவருக்கு இரண்டாம் பட்சம். அடிப்படை விஷயம் குறைந்த செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருள். இல்லையென்hறல் உற்பத்தியை நிறுத்திவிடுவார். பல தொழிற் சாலைகள் அவ்வப்போது மூடுவிழா காண்பதற்கான காரணம் இதுதான்.முதலாளித்துவ பொருளாதாரத்தின் இந்த அடிப்படை இயங்குநிலை இப்போ தும் தொடரத்தானே செய்கிறது.

இப்போதும் மார்க்ஸ் கண்டறிந்து சொன்ன உபரி மதிப்பு எனும் மகத்தான கோட்பாடு செயல்பட்டுக் கொண்டுதானே இருக் கிறது. எங்கே அது புதையுண்டு போனது? பாவம், குருமூர்த்தி யார்! அப்படி அது புதை யுண்டு போக வேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால், உலகப் பொருளாதார வாழ்வியல் உண்மையோ வேறுமாதிரி யாக உள்ளது.மார்க்ஸ் மறைந்து ஐம்பது ஆண்டு களில்- 1930களில் - அமெரிக்காவில் மகாமந்தம்எனும் பொருளாதார நெருக் கடி வந்தது. அதற்குப் பிறகு முதலாளித் துவ உலகில் பெரிதும் சிறிதுமாக நெருக் கடிகள் அவ்வப்போது வந்து கொண்டே யிருக்கின்றன. இப்போது கூட கிரீஸ், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, நிதி நெருக்கடி, வங்கிகள் மூடல், கடன் சுமை, வெளிநாட்டு வர்த் தகத்தில் குளறுபடி, இதனால் நாடுகளி டையே உரசல்கள், உள்நாட்டு வாழ்வில் வர்க்கங்களிடையே கொடூரமான ஏற்றத் தாழ்வு - இவை இல்லாத முதலாளித்துவ நாடுகள் உண்டா?

இதற்கெல்லாம் மூல காரணம் முதலாளித்துவ அமைப்பானது சுரண்டலை அடிப்படையாகக் கொண் டது என்பதே.மார்க்ஸ் எனும் அந்தத் தாடிக்காரக் கிழவன் ஒரு முழு மனிதன், மகா தீர்க்க தரிசி. அவன் சொன்னது சரிதான், சரி தான்என்று வாழ்வின் ஒவ்வொரு கூறும் அடித்து அடித்துச் சொல்கிறது. அது சங்பரிவாரத்தினரின் காதுகளில் விழ வில்லையென்றால் அவர்கள் தூங்குவது போல நடிப்பவர்கள். சரித்திரம் அவர் களைத் தாண்டிச் செல்லும்.

எதிர்ப்பது மேற்கத்திய முதலாளித்துவத்தையே!

நூலின் முதல் பகுதியில் மறைந்து போன மார்க்சியம்பற்றிப் பேசிய எஸ். குருமூர்த்தி இரண்டாம் பகுதியில் மங்கி வரும் மார்க்கெட்டுபற்றி பேசுகிறார். முதலாளித்துவத்தைக் குறிக்கவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அது பொருத்தமானது அல்ல. மார்க்கெட்” - சந்தை - எனப்படுவது விற்கிறவரும், வாங்குகிறவரும் சந்திக்கும் இடம். அது முதலாளித்துவத்தின் கண்டு பிடிப்பு அல்ல. வெள்ளைக்காரர்கள் இங்கே வருவதற்கு முன்பே வாரச்சந்தை, மாதச் சந்தை என்று கூடியதை தமிழர் களாகிய நாமறிவோம்.

ஆண்டான் - அடிமை யுகம் காலத்திலிருந்து இருக்கக் கூடிய சந்தையை ஏதோ முதலாளித் துவத்தின் கண்டுபிடிப்பு போலச் சொல்லி, அதை மார்க்சியர்கள் இப்போது தான் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது போல எழுதிச் செல்கிறார். இரண்டுமே தவறு. முதலாளித்துவத்தின் தனித்தன்மை சந்தையில் இல்லை; அது ஆலைமுறை என்கிற புதிய உற்பத்தி முறையிலும், அதற் கான மூலதன உருவாக்கத்திலும்அதைத் தனியுடைமையாகக் கொண்ட முதலாளிகள் என்கிற புதிய வர்க்கம் பிறந்ததாலும், அதன் மறுபக்கமாக உழைப்பையே சொந்தமாகக் கொண்ட தொழிலாளர்கள் எனும் மற்றொரு புதிய வர்க்கம் உதயமானதிலும் உள்ளது. இப்படி இருவேறு முரண்பட்ட நலன்கள் கொண்ட வர்க்கங்கள் உருவாகி, அதனால் தவிர்க்க முடியாதபடி அவற்றுக்கிடையே போராட் டம் நடக்கிறது எனும் உண்மையை அங்கீ கரிக்க இவருக்கு மனமில்லை. அத னாலும் மார்க்கெட் ஆராய்ச்சிக்குள் தன்னை அடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.எனினும் அத்தகைய அலசலிலிருந் தும் அவர் வந்து சேர்ந்த முடிவு என்னவோ இதுதான்: “1930-களில் அமெரிக்கா சந் தித்த பெரும் பொருளாதாரச் தொய்வை விட மோசமானது (தற்போதைய நெருக் கடி) இது. வெறும் நிதி சார்ந்த அமைப்பின் வீழ்ச்சியல்ல இது; அவர்களுடைய முன் மாதிரியின் வீழ்ச்சி. அதாவது, ஆங்கிலோ சாக்சனிய கட்டற்ற சந்தை முன்மாதிரி யின் வீழ்ச்சி ஆகும்”.

அமெரிக்கா உரு வாக்கித் தந்துள்ள முதலாளித்துவமும் தோற்றுபோய் வருகிறது என்பது தான் குருமூர்த்தியின் கணிப்பு. முதலாளித்துவம் தோற்கத்தான் செய்யும், அதன் உள்முரண்கள் அவ்வளவு கடுமையானவை என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துக் காட்டியதில் தான் மார்க்சின் பெருமை உள்ளது. ஒருபுறம் மார்க்சின் சித்தாந்தம் புதைந்து போய்விட் டது என்று கெக்கலி கொட்டிச் சிரித்தவர், மறுபுறம் அமெரிக்க மாடல் முதலாளித் துவமும் சிதைந்து வருகிறது என்று சொல்லி கன்னத்தில் கை வைக்கிறார். கவனியுங்கள், எல்லா வகை முதலாளித் துவத்தையும் எதிர்க்கவில்லை, அமெரிக்க பாணியை மட்டும்தான் எதிர்க்கிறார்!அமெரிக்க பாணி மீது இவருக்கு என்ன இவ்வளவு கோபம்? “தனிமனிதர் களின் அதிகரித்து வரும் அரசுச் சார் பினால் குடும்பத்தின் கடமைகள் தேசிய மயமாக்கப்பட்டு மிகப்பெரிய பொதுக் கடமையான மக்களின் சமூகப் பாது காப்பு, பிற பாதுகாப்புகள் என்ற பெரும் சுமையை அரசு தன் மேல் ஏற்றிக் கொண் டுள்ளது” - என்பதில் தான் இவருக்கு ஏக வருத்தம்!

குருமூர்த்தியார் விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார். முதலாளித்துவ மானது குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கிறது என்பது உண்மை. சேமிப்பு என்பது இளையவர், முதியவரின் எதிர்காலப் பாது காப்புக்குத் தேவையாக இருந்தது. அவர் களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்கிற மனப்போக்கை உருவாக்கி, அதன் விளைவாக சேமிப்புப் பழக்கத்தை ஒழித் துக்கட்டி, ஊதியத்தை எல்லாம் நுகர் பொருளில் செலவழிக்கிற நுகர்வு கலாச் சாரத்தை உருவாக்கியது முதலாளித் துவம். இது இளையவரையும், முதியவரை யும் அனாதைகளாக்கியது. அந்தக் கட்டத் தில் அரசு தலையிட வேண்டிய அவசியம் உருவானது. அப்படித்தான் வேலையில் லாக் கால நிவாரணம், முதியோர் ஓய்வூதி யம், மருத்துவ மானியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அமெரிக்கா - ஐரோப்பாவில் தலையெடுத்தன. இங்கே சேர்த்துச் சொல்ல வேண்டிய விஷயம் அன்றைய சோவியத் ஒன்றியத்தின சோச லிசக் கட்டுமானம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் முன்னணியில் நின்றது. அமெரிக்கா - ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் அத்தகைய திட்டங்கள் வேண்டு மென்று போர்க்கொடி தூக்கிய போது வேறு வழியின்றி அரைகுறைமனதோடு சில திட்டங்களை மேற்குலக முதலாளித்துவ நாடுகளும் அமல்படுத்தின.சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக் குப் பிறகு இந்த சமூகப் பாதுகாப்புத் திட் டங்களையும் வெட்டத் துணிகின்றன முத லாளித்துவ அரசுகள். எஜமானனைக் காட்டிலும் அதிக எஜமான விசுவாசம் காட்டுகிற குருமூர்த்தியார் இந்தத் திட்டங் கள் தான் அமெரிக்க பாணி முதலாளித் துவத்தின் மிகப்பெரிய ஊனம் என்கிறார், அதனால்தான் அது வீழ்ந்து வருகிறது என்கிறார். முதலாளித்துவம் உருவாக்கிய குடும்பச் சீரழிவு காரணமாகவே சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வந்தன, இப் போதும் தேவைப்படுகின்றன என்பதை மறைத்து விட்டு, இந்தத் திட்டங்கள் காரணமாகத் தான் குடும்ப அமைப்பு சீரழி கிறது என்று பெரும் போடாகப் போடுகிறார்.இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங் களும் இல்லையென்றால் முதலாளித்துவ உலகில் பாட்டாளிகளின் வாழ்வு மேலும் பரிதாபமாகிப் போகும்.

அதைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அத னால் தீவிரமான வர்க்கப் போராட்டங் களும் சமூகப் பதட்டங்களும் ஏற்படும் என்பதை இந்த ஆர்.எஸ்.எஸ்.காரரைக் காட்டிலும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் நன்கு உணர்ந்துள்ளன. அத னால் தான் இந்தத் திட்டங்களை ஒழித் துக் கட்ட வேண்டுமென்று அவை உள் ளூர ஆசைப்பட்டாலும் அப்படிச் செய்யா மல், அவ்வப்போது வெட்டிச் சுருக்கவே முயலுகின்றன.ஜெர்மனியின் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் உர்சுலா வோன் டெர் லெயன் கூறுகிறார்: எங்களது சமூகப் பாதுகாப்புத் திட்டம் நிலைப்படுத்தும் கருவியாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓய்வூதியம், வேலையில்லாக் கால நிவாரணம் மற்றும் இதர உதவிகள் மக்களிடம் பணம் இருக்குமாறும், அதனால் சரக்குகளுக்கு உள்நாட்டில் தேவை இருக்குமாறும் பார்த் துக்கொள்கின்றன. எனவே, நெருக்கடியை நாங்கள் பெரிதாக உணரவில்லை” (டைம்ஸ் ஆப் இண்டியா, 7.6.2013)முதலாளித்துவ ஆட்சியாளர்களே சமூகப் பாதுகாப்புத்திட்டங்களின் தேவை யை இந்தப்படியாக உணர்ந்திருக்கும் போது குருமூர்த்தியார் குதர்க்கமாகச் சிந்திக்கிறார். அவற்றை அரசின் மீதான பெரும்சுமைஎன்று மிரட்டி, “இந்தச் சிதைவானது உண்மையில் தீவிரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு கலாச்சாரச் சீரழிவேஎன்று முத்தாய்ப்பு கொடுக்கிறார். சங்பரிவாரத் தினர் ஏழை, எளியவர்களின் நேர் எதிரி கள் என்பதை இதிலிருந்து சட்டென்று புரிந்து கொள்ளலாம்.முதலாளித்துவத்தில் குடும்ப அமைப்பு சீர்குலைவது பற்றி குருமூர்த்தி கவலைப்படுகிறாரே என்று தோன்றலாம். அவர் காப்பாற்ற விரும்புகிற குடும்ப அமைப்பு ஜனநாயகமயமானது அல்ல, மாறாக பழைய கட்டுப்பெட்டி அமைப்பு. 

அமெரிக்காவின் தற்போதைய நிலைமை யின் மோசமான அம்சங்கள் என்று இவர் பட்டியலிட்டிருப்பதில் இதுவும் ஒன்று; “1980ல் கூட ஆண்கள் வேலைக்குப் போவதும், பெண்கள் வீட்டில் இருப்பது மான முன்மாதிரியே பழக்கத்தில் இருந் தது. 2000 ஆண்டுவாக்கில் கணவன், மனைவி இருவருமே பணி புரியும் முன்மாதிரியே மேலாண்மை செலுத்து கிறது.முதலாளித்துவத்தின் சில நல்ல கூறுகளில் ஒன்று தனது பொருளாதாரத் தேவை கருதி பெண்களையும் சுதந்திரத் தொழிலாளர்களாக மாற்றியிருப்பது. நிலப் பிரபுத்துவம் பெண்களை அடுப்படியில் அடைத்துப் போட்டது என்றால் இது அவர்ளை ஆலைகளிலும் அலுவலகங் களிலும் வேலை பார்க்க வைத்தது. அத னால் அவர்கள் பொருளாதார ரீதியாகச் சொந்தக்காலில் நிற்க முடிந்து, காலங் காலமாகத் தொடர்ந்த ஆணாதிக்கப் போக்குகளை எதிர்த்துப் போராடும் சூழல் உருவானது. இது பொறுக்கவில்லை குருமூர்த்தியாருக்கு.

அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப் போவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் இந்தப் புத்திசாலி! ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமூக சீர்திருத்தத்தின் பிரதான எதிரிகள், ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் மகா விரோதிகள் என்பதை இது துல்லியமாக வெளிப்படுத்துகிறது.குடும்பங்களின் சேமிப்பு குறைந்து போன நிலையில், அந்தக் குறைந்த சேமிப்பையும் பங்குச் சந்தையில் போட அவை பயப்படுகின்றன. ஜெர்மனியிலும், ஜப்பானிலும் பங்குச் சந்தையில் குடும் பங்களின் முதலீடு மிகக் குறைவே. ஐந்து வருடச் சேமிப்புக் கணக்குக்கு 1 சதவீத வட்டியே கிடைக்கும் சூழலில் கூட ஜப்பானியர்கள் தாங்கள் சேமிப்பின் 56 சதவிகிதத்தை ஜப்பானிய வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர்என்கிறார் குருமூர்த்தி. இதற்கு நேர்மாறாக, அமெரிக் காவில் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கக் குடும்பங்கள் பங்குச் சந்தையின் முதலீடு செய்துள்ளனஎன்றும் கூறுகிறார்.

இதற்கு மூல காரணம் அமெரிக்காவில் பங்குச் சந்தை மட்டுமல்லாது வங்கிகளது நடவடிக்கைகளும் ஊக வணிகமாக இருப்பது. எந்த நேரத்தில் எந்த வங்கி மூழ் கும் என்று சொல்ல முடியாது. சமீபத்தில், கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் சில தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றில் பணம் போட்டவர்களின் கதி அதோ கதியானது. மறுபுறம் கடன்காரர் களை நெருக்கிப் பிடித்ததில் அவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு தெரு வோரம் நின்றிருந்த கார்களில் குடிபுகுந்த அவலமும் ஏற்பட்டது! பொருளாதாரம் தனியார்மயமான பிறகு அந்த வங்கிகளில் போடப்படும் தங்களது சேமிப்புக்கு பாதுகாப்பு இல்லை என் பதை அறியும் மத்திய தர வர்க்கம் பங்குச் சந்தைப் பக்கம் திரும்பியது. அங்கும் பாது காப்பு இல்லை. விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் எங்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான்.இதைத் தவிர்க்க வங்கி - இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங்களாவது பொதுத் துறையில் இருக்க வேண்டுமென்பது தான் இதிலிருந்து பெறப்படும் பாடம். இந் தியாவின் நிதி மேலாண்மை தற்போதைய உலக நெருக்கடியை ஓரளவு சமாளித்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் நமது பொதுத்துறை வங்கிகள் - ஈட்டுறுதி நிறுவனங்கள். இந்த உண்மையை ஒப்புக் கொண்டு நிதித்துறையைத் தனியார்மய மாக்காதே என்பாரா குருமூர்த்தியார்? அதுதான் இல்லை. அப்படியெல்லாம் தப்பித்தவறியும் சொல்லவில்லை. நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலமே முத லாளித் துவத்தின் உள்ளார்ந்த விதி எனும் உண்மையைப் போட்டு உடைக்கவோ, அதை ஓரளவாவது கட்டுக்குள் வைத் திருக்க அரசின் தலையீடு வேண்டுமென் பதை வலியுறுத்தவோ அவர் தயாராயில்லை. எனவே, பொதுத்துறையின் பெருமையை அல்ல, பழைய குடும்ப அமைப்பின் புனிதத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகிறார். அதை இழந்துவிட்ட அமெரிக்கா சகலத்தையும் இழந்து விட்டது என்கிறார். கம்யூனிசம் வீழ்ந்ததை விட வேகமாக முதலாளித் துவ மேற்கும் வீழ்ந்துவிடும்என்று உற் சாகமாகக் கூறுகிறார்.இந்த விஷயத்தில் அமெரிக்கபாணி முதலாளித்துவமே உலகின் இறுதி இலக்கு, அதை அடைந்துவிட்டதால் மனித குல வரலாறே முடிந்து போனது என்பதாக ஆணவத்தோடு முரசறைந்த ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் கருத்தை யும் மறுதலிக்கிறார்.

தனது சமீபத்திய நூல் ஒன்றில் கலாச்சாரத்திற்கு உள்ள பங் களிப்பைத் தான் புறக்கணித்துவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் கொஞ்சம் மகிழ்ந்து போகிறார். ஆகவே, கலாச்சாரத்தை - அதாவது புனித குடும் பத்தை - கைவிட்டுவிட்ட முதலாளித் துவ மேற்கு வீழத்தான் செய்யும் என்று ஆணையிட்டுச் சொல்கிறார்!அப்படியென்றால் அதனிடத்தில் என்ன வந்து உட்காரும்? உலகம் ஒரு மாற்றுப் பொருளாதார மாதிரியைத் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறதுஎன்கிறார். நமக்கு ஆர்வம் பிறக்கிறது. ஆஹா! ஆர்.எஸ்.எஸ். காரரும் மாற்றுப் பொருளா தாரம் பற்றிப் பேசுகிறாரே!ஆனால், கவனத்தில் வையுங்கள் முதலாளித்துவ மேற்கு வீழ்ந்து விடும்என்று தான் சொல்கிறாரே தவிர முத லாளித்துவமே வீழ்ந்து விடும் என்று சொல்லவில்லை. இவர் முன்வைக்கிற மாற்றுப் பொருளாதாரம் முதலாளித்துவ கிழக்குஆகும். அதுதான் இவரது நூலின் அபத்தமான உச்சக்கட்டம். அந்த மாற் றின் லட்சணத்தை, அதாவது அவலட் சணத்தை அடுத்துக் காண்போம்.

கிழக்கிந்திய முதலாளித்துவமும் கேடானதே!

நூலின் மூன்றாம் பகுதிக்கான தலைப்பே பரபரப்பானது. அது : மார்க்ச்சுக்கும், மார்க்கெட்டுக்கும் அப்பால் உலகத்துக்கான முன் மாதிரி”. இந்திய அரசியலில் மூன்றாவது மாற்று பற்றிப் பேசப்படுவது போல உலக சமூகக் கட்டமைப்பிற்கு ஒரு மூன்றாவது மாற்றைப் பரிந்துரைக்கிறார் எஸ்.குருமூர்த்தி. தலைப்பைப் பார்த்தால் இது சோசலிசமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல என்பது போலப்படும். ஆனால் முத்தாய்ப்பாக இவர் கூறுவது நமக்குத் தேவை முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய ஒரு சந்தை. அது மட்டுமே நிலைத்து நிற்கும்என்பதுதான். சந்தை என்று இவர் கூறுவது முதலாளித்துவத்தையே என்பதைக் கண்டு வந்தோம். அதிலே ஒரு வகையைத் தான் மனிதர் பரிந்துரைக்கிறார். ஆக, இது மூன் றாவது மாற்றே அல்ல. ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ அமைப்பில் ஒரு முக்கிய மாறுதலையே கோருகிறார்.அது என்னவெனில் முறைசாரா அமைப்பு களோடு இணைந்து செயலாற்றக்கூடியதன்மை முதலாளித்துவத்திற்கு வேண்டும். அதுதான் அமெரிக்க பாணி முதலாளித்துவத்திடம் இல்லை என்கிறார். அப்படியெனில், “முறைசாரா அமைப்புகள்என்று இவர் எவற் றைச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.மனிதர் இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

ஆதி காலத்தில் பல நூற்றாண்டுகளாகப் பொருளாதாரத்தில் ஓங்கி நின்றிருந்த இந்தியாவும், சீனா வும் பின்னர் தேங்கிப் போயின என்பதை ஒப் புக் கொள்கிறார். வணிகம் சார்ந்த முதலாளித் துவ அமைப்பு முறை மேற்கில் எழுந்து வந்த தால்தான் அது கிழக்கை முந்திப்போனது என் பதையும் ஏற்றுக் கொள்கிறார்.

நாகரிகத்தில் பெரிதும் செழித்திருந்ததாகச் சொல்லப்பட்ட ஆசியாவில் முதலாளித்துவம் தோன்றாமல் அது ஏன் ஐரோப்பாவில் தோன்றியது எனும் கேள்வி வரும்போது தான் மனிதர் குழம்பிப் போகிறார். அவரால் சத்தியத்தை நேருக்கு நேராய் தரிசிக்க முடியவில்லை.நவீன முதலாளித்துவம் என்பது புரா டெஸ்டன்ட் கிறித்துவ நெறிமுறைகளின் விளைபொருள்என்று மாக்ஸ் வெபர் எழுதி னார். ஆகையினால் கர்மா, மறுபிறப்பு ஆகி யவை மீது நம்பிக்கை கொண்டிருந்த இந்து மதம், பௌத்தம் போன்ற சமயங்கள் எல்லாம் நவீன முதலாளித்துவம் வளர உதவாது என் றும் அவர் சொன்னார்என்று வருத்தத்தோடு எழுதிச் செல்கிறார்.

முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கும், கத்தோலிக்க கிறித்துவத்திற்கு எதிராக ஐரோப்பாவில் கிளர்ந்தெழுந்த புராடெஸ்டன்ட் இயக்கத்தின் தோற்றத்திற்கும் இடையே பலத்த தொடர்பு உண்டு. கத்தோலிக்க கிறித்துவமானது நிலப்பிரபுத் துவத்தின் சித்தாந்த அடையாளம் மற்றும் மத ஸ்தாபனமாக இருந்தது. அதை எதிர்த்த இயக்கமானது தோற்றத்தில் மதச்சீர்திருத்த செயல்பாடாகவும், உள்ளுக்குள் புதிதாக எழுந்து வந்திருந்த முதலாளி வர்க்கத்தின் பொருளாதார- சித்தாந்த அபிலாஷைகளின் வெளிப்பாடாகவும் இருந்தது. கிறித்துவத்தின் சில அடிப்படை அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்ற கூறுகளை எல்லாம் பகுத்தறிவு நோக்கில் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இது முரட்டு நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி பகுத்தறிவுவாதத்தை முன்னுக்கு கொண்டு வந்தது. இது முடிவில் பரிசோத னை அடிப்படையிலான விஞ்ஞானத்தையும், புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளையும் ஐரோப்பாவுக்கு வழங்கியது. வேறு சில பௌதீக-பூகோள-வரலாற்றுக் காரணங்கள் இருந்தாலும் இந்தச் சித்தாந்தப் போராட்டம் ஒரு முக்கியமான பங்களிப்பை செலுத்தியது. இப்படியொரு எதிர்ப்பு இயக்கம் வைதீக இந்து மதத்திற்குள்ளோ அல்லது இஸ்லாமிற் குள்ளோ அல்லது பௌத்தத்திற்குள்ளோ நடக்கவில்லை.

ஆசியாவின் நிலப்பிரபுத்துவமும், அதன் சித்தாந்த அடையாளமான மதங் களும் இங்கே மூடுண்ட அமைப்புகளாகவே இருந்தன. பிரம்மத்தோடு ஒன்றுதல், பக்தி இயக்கங்கள், சரணாகதி தத்துவங்கள் என்ற பெயரில் இவை நம்பிக்கைவாதத்தையே தூக் கிப் பிடித்தன.

பகுத்தறிவு கீற்றுக்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. மனிதர்களை நம்பு ... நம்பு.... என்று வம்பு செய்தனவே தவிர, சுதந்திரமாக யோசி...யோசி என்று உற்சாகப் படுத்தவில்லை- குறிப்பாக இடைக்காலம் எனப்பட்ட நிலப்பிரபுத்துவ யுகத்தில். அதனால்தான் கிழக்கு பிந்தியது, மேற்கு முந்தியது- கூடவே வேறு சில காரணங்கள் இருந்த போதிலும்.இந்த வரலாற்று உண்மையை ஏற்க குரு மூர்த்தியாருக்கு மனமில்லை. அவருக்கு கோபம் கோபமாக வருகிறது. மாக்ஸ் வெபர் இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனையாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதன் விளைவாக இந்தியச் சிந்தனையாளர்கள் கர்மா, மறுபிறவி ஆகியவற் றின் மீதான நம்பிக்கை, இந்தியாவின் சாதி அமைப்பு ஆகியவையெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவை அழித்து விட்டது என்று முழுமை யாக நம்பினார்கள். ஆகவே இந்தியா இவற்றை யெல்லாம் துறந்தால் ஒழிய, அதாவது இந்தியா தன்னையே மறுதலித்தால் அன்றி முன்னேற வழியில்லை என்று நம்பினார்கள்என்று ஆத்திரத்தோடு எழுதுகிறார். பூனைக்குட்டி சாக்குப்பையிலிருந்து வெளியே வந்துவிட்டது.

இந்தியா என்றாலே கர்மா, மறுபிறவி, சாதி என்பதுதானாம்! அவற்றைக் கைவிடச் சொல்வது இந்தி யாவையே கைவிடுவதாம்! இந்தியா பின்தங் கிப் போனதற்கு வைதீக மதக்கோட்பாடுகளும் காரணமல்ல, சாதி எனும் சமூகக்கட்ட மைப்பும் காரணமல்ல, பிறகு எது காரணம்? அதற்குள் போகவில்லை குருமூர்த்தியார். வை தீக மதத்தையும், சாதியத்தையும் காத்து நிற் பதில் குறியாக இருக்கிறாரே தவிர, வேறு எது காரணமாக இருக்கும் என்று அலசவில்லை. அது பயனற்றது என்பதை அவர் அறிவார். உண்மையான காரணம் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. அதை மூடி மறைக்கிற வேலை மட்டுமே தங்களுக்கு இருப்பதை இவ ரைப் போன்ற பழமைவாதிகள் அறிவார்கள்.ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்து முடிவில் ஆட்சியையே பிடித்து விட்டார்கள், துலாக்கோல் பிடித்து வந்து முடிவில் செங்கோலைப் பிடித்து விட்டார்கள். இதற்கு மூலகாரணம் இங்கே இருந்த நிலப் பிரபுத்தவத்தை விட அவர்கள் வசம் முத லாளித்துவம் எனும் நவீன அமைப்பு இருந் தது. அவர்கள்தாம் அதை நமக்கு அறிமுகப் படுத்தினார்கள். அதன் பிறகுதான் இங்கே நவீன தொழில்வளர்ச்சி ஏறபட்டது. ஏகாதிபத் திய ஆடசி எனும் கெடுதலில் நமக்கு கிடைத்த ஒரு நன்மை அது.
இப்போதும் அந்த முதலாளித்துவம்தான் இங்கே பரவி வருகிறது - அதனுடைய சகல எதிர்மறைக் கூறுகளுடனும்.இங்கே ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார் குருமூர்த்தியார். அது : இந் தியா தன் சொந்தப் பொருளாதார முன்மாதிரி யை உருவாக்கிக் கொண்டிருக்கிறது....(இது) உயிர்த்துடிப்போடு இயங்கும் இந்திய சமு தாயத்தின் அங்கங்களான இந்தியக் குடும்பங் கள், சமூகங்கள், சாதிகள் எதையும் தனிமைப் படுததி அணுமயமாக்கவில்லை. எப்போதும் நம் மேட்டுக்குடி மக்களால், நம் ஜனநாயக அர சியல் சமுதாயம் சிதைவதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் சாதிய, சமூக அடிப்படையிலான அரசியல் கூட ஒரு வகையில் ஒத்திசைந்து போகக்கூடிய ஒரு வழிமுறைதான்.இந்திய முதலாளித்துவம் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணி அல்ல. அங்கே உருவான முதலாளித்துவமானது அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களை எல்லாம் சிதறடித்துவிட்டது. இங்கே உருவான முதலாளித்துவமோ அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களான குடும்பங்களை மட்டுமல்ல, “சமூகங்கள், சாதிகள்என்பவற்றையும் பாது காத்துக் கொண்டது, அவற்றோடு ஒத்தி சைந்து போனது, அதாவது, மேற்கத்திய முத லாளித்துவம் காலாவதியான நிலப்பிரபுத்துவத்தை முட்டி மோதி வீழ்த்தியது என்றால் இந்திய நிலப்பிரபுத்துவமோ அத்தோடு பல விஷயங்களில் சமரசம் செய்து கொண்டது. இதுதான் இந்திய முதலாளித்துவத்தின் தனிச் சிறப்பு. இதுவே குருமூர்த்தியாரின் கருத்து. இது நல்ல ஒப்புதல் வாக்குமூலம். இதை யொரு பெருமையான விஷயமாகக் கருதி, இங்கே முதலாளித்தவமானது சாதியத்தோடு எப்படி இசைந்து போகிறது, ஒட்டி உறவாடு கிறது என்பதற்கு உதாரணங்களையும் தரு கீறார் மனிதர்.

சில சாதிகளின் பெயர்களைச் சொல்லி, அந்த சாதியக் கட்டமைப்புக்குள்ளேயே அவர்கள் எப்படி சில தொழில்துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள் என்று பெருமிதத் தோடு குறிப்பிட்டிருக்கிறார். பிறகு இதை யொரு கருத்தியலாக இப்படி வடித்தெடுக்கிறார்: இந்தியாவில் சாதி, சமூகங்கள் எல்லாம் அண்டைப்புறம் தாண்டிச் செயல்படும் சமுதாய அமைப்புகளாகும். மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமாக்கத்தி னால் மக்களிடையே இருந்த அண்டைப் புற உறவுமுறைகள் குலைக்கப்பட்டன. ஆனால் நம் நாட்டின் சாதிய, சமூக அமைப்புகளால் தொழில் மயமாக்குதலின் பிரச்சனையை எளி தாகவும், செயலாற்றலுடனும் கையாள முடிந்தது.இந்திய முதலாளித்துவமானது மடிசஞ்சி நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டணி அமைத் திருப்பதைக் கொஞ்சி மகிழ்கிறார். இந்த நவீன காலத்தில் சாதியத்தை இப்படிப் பச்சையாக ஆதரிக்கிற ஓர் அறிவு ஜீவியை நீங்கள் கண் டதுண்டா? சங் பரிவாரத்தில்தான் அப்படிப் பட்ட ஆட்கள் இருப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது.முதலாளித்துவ வளர்ச்சிக்கு சாதியம் இடையூறாக இல்லை, மாறாக உதவியிருக் கிறது என்று கைநடுங்காமல் எழுதியிருக் கிறார். சுதந்திரம், சமத்தவம், சகோதரத்துவம்என்று ஐரோப்பாவில் முழங்கிப் புறப்பட்ட முதலாளித்துவம் இந்தியாவில் சாதியம் எனும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டில் மடங்கிப் போய் தனது கொள்கை முழக்கத் தைக் கைவிட்ட கொடுமையைச் சுத்தமாக மறைத்திருக்கிறார். அந்த அசிங்கத்தை அற்புதச் செயலாக வருணித்திருக்கிறார்.

கனடாவின் நார்தர்ன் பிரிட்டிஷ் கொலம் பியா பல்கலைக்கழகத்தைசார்ந்த மூன்று பேராசிரியர்கள் இந்தியக் கம்பெனிகளின் இயக்குனர் அவைகளில் சாதியம் எப்படி நிலவுகிறது என்பது பற்றி ஓர் ஆய்வு நடத்தி னார்கள்; அதன் முடிவுகளை எக்னாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லிஇதழில் (11-8-12) வெளியிட்டார்கள். தங்களது இந்த ஆய் வுக்காக இந்தியாவின் ஆயிரம் பெரிய கம்பெனி களை எடுத்துக் கொண்டார்கள். இந்தியாவின் அனைத்துக் கம்பெனிகளது மொத்த சந்தைப் படுத்தப்பட்ட மூலதனத்தின் ஐந்தில் நான்கு பங்கு இந்த ஆயிரம் கம்பெனிகளுக்குடையது. அப்படியென்றால் இவை எவ்வளவு பெரிய வை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அவர்களது ஆய்வு முடிவுகள் வருமாறு: இயக்குநர் அவை உறுப்பினர்களில் 93 சதவிகிதம் பேர் முன்னேறிய சாதியினர். 46 சதவிகிதம் பேர் வைசியர்கள், 44 சதவிகிதம் பேர் பிராமணர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் முறையே 3.8 சதவிகிதம் பேர் மற்றும் 3.5 சதவிகிதம் பேர். கிட்டத்தட்ட 65 சதவிகிதம் இந்தியக் கம்பெனிகளின் இயக் குநர் அவை ஒவ்வொன்றும் ஒரேயொரு முன் னேறிய சாதியினரைக் கொண்டுள்ளது.சரித்திர ரீதியான நியாயப்படி பார்த்தால் நிலப்பிரபுத்துவ சாதியத்தை முதலாளித்துவம் சிதைத்திருக்க வேண்டும். இந்தியாவிலோ அது சாதியத்தோடு சமரசம் செய்து கொண் டுள்ளது. இங்கே வர்க்கமும் சாதியமும் இன்ன மும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந் திய முதலாளித்துவத்தின் படுபிற்போக்குத் தனமான குணம் இது தான். இதைத்தான் குருமூர்த்தியார் ஏற்றிப் போற்றுகிறார்!இன்னும் சொல்லப்போனால், நம்நாட்டு முதலாளித்துவம், தாழ்த்தப்பட்ட - பழங்குடி யின - பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டுமல் லாது மதச் சிறுபான்மையினரான முஸ்லிம் களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. இந்தியப் பெரும் கம்பெனிகளில் - அவற்றின் இயக்குனர் அவைகளில் - இவர்கள் மிகச் சொற்பமே என்பதையும் இந்தப் புள்ளிவிபரங் கள் வெளிப்படுத்துவதை நோக்குங்கள். ஏற் கனவே இதுபற்றி சச்சார் குழுவும், மிஸ்ரா கமி சனும் பேசியிருக்கின்றன. இந்தியத் தொழில் துறையில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள் என்பதை உணர்ந்துதான் இவர் களுக்கென்றே தனி நிதி கார்ப்பரேசன் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலைமை இங்கே உள்ளது. ஆனால், குருமூர்த்தியாருக்கோ இதுவெல்லாம் இந்தியப் பெருமையாக உள்ளது.”“முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக்கூடிய ஒரு சந்தை.... அது மட்டுமே நிலைத்து நிற்கும்என்றாரே அது இப்படிப்பட்ட இந்திய முதலாளித்துவம் தான். சாதி மதப்பாகுபாடு காட்டிக் கொண்டே வளருகிற முதலாளித்துவம் தான். இதிலே பாலினப்பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும் கம்பெனிகளது நிர்வாகத் தில் பெண்களின் பங்கும் மிகமிகச் சொற்பமே. இதுபற்றி பெண்களுக்கான தேசிய கமிசன் தனது கவலையை அவ்வப்போது வெளி யிட்டு வருகிறது. மொத்தத்தில் இந்திய பாணி முதலாளித்துவமானது சாதியமும், ஆணாதிக் கமும் நிறைந்த வருணாசிரம முதலாளித் துவம். இதைத்தான் துதிக்கிறார் மனிதர்.இதைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், குலைத்து விடக்கூடாது என்றும் இப்படி வலி யுறுத்துகிறார். வளர்ந்து வரும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, குழந்தைகளின் உரிமை தொடங்கி பெரியவர்களின் உரிமை, பெண் ணுரிமை, ஒற்றைப்பாலினர் உரிமை வரை அனைத்துமே சமுதாயத்தைப் பிரிக்கவே உதவுகின்றன. இவை முறைசாரா அமைப்பு களையும், உறவுமுறைகளையும் வலுவிழக்கச் செய்துவிட்டன.பெண்ணுரிமை எல்லாம் பேசக்கூடாது, மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இருக்கக்கூடாது, அப்படி இல்லாமலாக்கியதுதான் பாரதத்தின் முறைசாரா அமைப்புகளும், உறவுமுறைகளும்! இவற்றைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டே இங்கே முதலாளித்துவம் வளருகிறது. ... அது தொடர வேண்டும் அது மட்டுமா? இதுவே அமெரிக்கப் பாணி முதலாளித்துவத்திற்கு சரியான மாற்று! இதை உலகம் முழுக்க ஏற்க வேண்டும், இந்திய வருணாசிரம முதலாளித் துவத்தை உலகம் முழுக்கக் கொண்டு வரப் பகற்கனவு காண்கிறது ஆர்எஸ்எஸ். அதையே எதிரொலிக்கிறார் இந்த பிரகஸ்பதி.

குருமூர்த்தியாருக்குச் சொல்லிக் கொள்வோம் - உங்கள் கனவு பலிக்காது. அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப்போவது உண்மை. ஆனால் அதனிடத்தில் கேடு கெட்ட இந்திய பாணி முதலாளித்துவம் வராது. மாறாக, சகல பாணி முதலாளித்துவமும் அழி யும். அதனிடத்தில் சோசலிச சமுதாயம் மல ரும்.

அதுவே முதலாளித்துவத்திற்கான மெய்யான மாற்று.மார்க்ஸ் இன்னும் வாழ்கிறார், தனது சீரிய விஞ்ஞானச் சிந்தனையால் வாழ்கிறார். அவரின் தேவையை உலக வாழ்வு நித்தம் நித்தம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. பூமிப் பந்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்ல, இந்த புண்ணிய பூமி”-க்கும் அவர் தேவைப்படு கிறார்.நிலப்பிரபுத்துவத்தின் சாதியத்தை ஒழிக்க வேண்டிய முதலாளித்துவம், அதனோடு கூட்டுச் சேர்ந்து கொண்ட அநீதி இங்கே நடந் திருக்கிறது. தனது எதிரி செய்து முடித்திருக்க வேண்டிய வேலையும் தனது தோள் மீது விழுந்திருப்பதை இந்தியப் பாட்டாளி வர்ககம் உணர்ந்திருக்கிறது. அது வருணாசிரமம், முதலாளித்துவம் இரண்டையும் ஒருசேர வீழ்த்தி இங்கும் சோசலிசத்தை உருவாக்கிக் காட்டும். அதற்கும் மாமேதை மார்க்சே வழி காட்டுவார். அந்த வெற்றி கீதத்தை குரு மூர்த்தியார் கேட்காமல் போகலாம்; ஆனால் அவரின் சந்ததியார் கண்டிப்பாகக் கேட்பார்கள்.

 அருணன்

No comments:

Post a Comment