தொழிலாளர்கள் பற்றி கார்ல் மார்க்ஸ்
தொழிலாளர்களின் இன்றைய நிலை என்ன? முன்பைவிட இப்போது அவர்களுடைய வாழ்நிலை உயர்ந்திருக்கிறதா? அவர்களுடைய பிரச்னைகள் குறைந்திருக்கின்றனவா? பணிச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையெனில் அவர்கள் என்ன செய்யவேண்டும்? ‘போராட வேண்டும்’ என்று பலரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் யாரை எதிர்த்து? எதை வேண்டி? எந்த லட்சியத்துடன்?
முதலில், தொழிலாளர்கள் எதற்காகப் போராட வேண்டும்? முதலாளிகள் அனுபவிக்கும் சுகங்களையும் செல்வத்தையும் தாம் அடைய வேண்டும் என்பதற்காகவா? உல்லாசமான கேளிக்கையான வாழ்வைப் பெறுவதற்காகவா? அல்ல என்கிறார் கார்ல் மார்க்ஸ். ’வர்க்கத் தனி உரிமைகளுக்கும் ஏகபோகங்களுக்கும் நடைபெறும் போராட்டம்’ அல்ல இது. ‘சமத்துவமான உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் எல்லா வகையான வர்க்க ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் நடைபெறுகின்ற போராட்டமே’ தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டமாகும்.
அதற்கு முன்னால், ஒரு தொழிலாளர் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரவேண்டும் அல்லவா? அதற்கு, தன்னுடைய நிலை என்ன என்பதை ஒரு தொழிலாளர் புரிந்துகொள்ளவேண்டும். எது அடிமைத்தனம்? ‘உழைப்புச் சாதனங்களை அதாவது வாழ்க்கையின் ஆதாரங்களை ஏகபோகமாக வைத்திருப்பவரிடம் உழைக்கும் மனிதன் பொருளாதார ரீதியில் கீழ்ப்பட்டிருப்பது.’ சமூகத் துன்பத்துக்கும் அறியாமைக்கும் அரசியல் அடிமைத்தனத்துக்கும் அடியில் இருப்பது இதுவே என்கிறார்.
எனவே, தொழிலாளர்களின் பிரச்னை என்பது குறிப்பிட்டதொரு பிரதேசத்தின் பிரச்னையல்ல. இது உலகம் தழுவிய சமூகப் பிரச்னை. அந்த வகையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் பிரிவு பிற நாடுகளில் உள்ள தொழிலாளர் பிரிவினருடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தொழிலாளர் வர்க்கத்தினரிடையே சகோதரப் பிணைப்பு இருந்தால் மட்டுமே அடிமைத்தனத்துக்கு எதிராகப் போரிடுவது சாத்தியமாகும் என்கிறார் மார்க்ஸ். அதே சமயம் இவ்வாறு தொழிலாளர்கள் ஒன்றுபடுவது இதுவரை சாத்தியமாகாமல் இருப்பதற்குக் காரணம் தொழிலாளர்களேதான்; அவர்களிடைய ஒன்றுமை இல்லாததுதான் என்றும் சொல்கிறார் மார்க்ஸ்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள சர்சதேசத் தொழிலாளர் சங்கத்துக்குச் சில விதிமுறைகளை மார்க்ஸ் உருவாக்கினார். 1871ம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த அந்தப் பிரசுரத்தில் காணப்படும் சில முக்கிய அம்சங்கள் கீழே.
- பிரசுரத்தின் தொடக்க வாசகங்கள். ‘இதில் சேர்கின்ற எல்லாச் சங்கங்களும் மற்றும் தனி நபர்களும் தங்களுக்கிடையேயும் எல்லா மனிதர்களுக்கு இடையிலும் நிறம், மதம், தேசிய இன வேறுபாடுகளைக் கடந்து உண்மை, நீதி, அறநெறி ஆகியவற்றைத் தம் நடத்தையின் அடிப்படையாகக் கொள்வர்.’
- கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை. உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை.
- தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்களுடைய லட்சியம் ஒன்றாக இருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கங்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் பரிபூரண விடுதலை.
- ஒரு தொழிலாளர் மற்ற பிரதேசங்களிலும் மற்ற நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களைப் பற்றியும் அவர்களுடைய பிரச்னைகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதற்குச் சர்வதேசச் சங்கம் உதவிட வேண்டும்.
- தொழிலாளர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்த ஆய்வறிக்கைகளை வைத்துக்கொண்டு தொழிலாளர்களுடன் சங்கம் உரையாடவேண்டும். பொதுநலன் சார்ந்த பிரச்னைகளை அனைவரும் விவாதிக்கவேண்டும்.
- சங்கத்தின் கிளைகள் ஒன்றிணைந்து ஒரு சர்வதேச அமைப்பாக ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
- ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் கோட்பாடுகளை அங்கீகரித்து, அவற்றைக் காத்து நிற்கும் ஒவ்வொருவரும் இதன் உறுப்பினராகத் தகுதியுடையவர். ஒவ்வொரு கிளையும் அது சேர்த்துக்கொள்ளும் உறுப்பினர்களுடைய நேர்மைக்குப் பொறுப்புடையதாகும்.’
- ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஒவ்வொரு உருப்பினரும் தன் குடியிருப்பை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மாற்றிக் கொள்ளும்பொழுது அங்கேயுள்ள இணைக்கப்பட்ட சங்கத் தொழிலாளர்களுடைய சகோதர ஆதரவைப் பெறுவர்.’
தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை மார்க்ஸ் வேறோரிடத்தில் குறிப்பிடுகிறார்.
- தொழிலாளி வர்க்கத்தின் முழுமையான விடுதலையை மாபெரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
- தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டும் அமைப்பாகவும் உணர்வுடன் செயலாற்றும் மையமாகவும் திகழவேண்டும்.
- இந்தத் திசையில் செல்ல விரும்பும் ஒவ்வொரு சமூக, அரசியல் இயக்கத்துக்கும் உதவிட வேண்டும்.
- ‘அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தம்மைக் கருதி அவ்விதமாகச் செயலாற்றும்பொழுது அவை, சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களைத் தங்கள் அணிகளில் சேர்க்குமாறு செய்யவேண்டும்.’
- ‘மிகவும் மோசமான கூலி கொடுக்கப்படுகின்ற தொழில்களை, உதாரணமாக, பாதகமான நிலைமைகளின் காரணமாக சக்தியில்லாதவர்களாக இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுடைய நலன்களுக்காக தொழிற்சங்கம் அதிகமான கவனத்துடன் பாடுபடவேண்டும்.’
- ‘தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் குறுகிய நோக்குடையவையோ அல்லது சுயநலமானவையோ அல்ல, கீழே மிதிக்கப்பட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையே அவற்றின் நோக்கம் என்பதை உலகத்தினர் நம்புகின்ற வகையில் அவை நடந்துகொள்ளவேண்டும்.’
தொழிலாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களையும் தொழிற்சங்கங்கள் கற்கவேண்டிய விஷயங்களையும் மார்க்ஸ் மீண்டும் மீண்டும் பல இடங்களில் பட்டியலிடுகிறார். ஓர் அமைப்பாக தொழிலாளர்கள் திரளவேண்டிய அவசியத்தையும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார். ’தொழிலாளி வர்க்கத்தினரின் விடுதலையைத் தொழிலாளி வர்க்கத்தினரே வென்றெடுத்துக்கொள்ளவேண்டும். ‘ என்கிறார்.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஒரு நாட்டின் தொழிலாளர் பிரிவுக்கு இன்னொரு நாட்டின் தொழிலாளர் பிரிவினரே தொழில்முறைப் போட்டியாளராக உருவாகியிருப்பதை நாம் காண்கிறோம். இது பற்றிய மார்க்ஸின் விவாதங்கள் முக்கியமானவை. சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகத் திரளவேண்டும் என்று மார்க்ஸ் சொன்னது ஏன் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது பற்றிய அவருடைய விவாதங்களை தேடிப்படித்து வாசிப்பதோடு அவற்றைத் தொழிலாளர்களிடமும் கொண்டு சென்று சேர்ப்பிக்கவேண்டும்.
ஒன்று நிச்சயம். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்காட்டிலும் சிக்கலானவை அல்ல மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சிந்தனைகள். எனவே இந்த மே தினத்தை அவர்களுடைய படைப்புகளை வாசிப்பதன்மூலம் தொடங்குவோம். நம் உலகையும் சக மனிதர்களையும் புரிந்துகொள்ள இதைக் காட்டிலும் பொருத்தமான வேறு வழிமுறை இல்லை.
மேலதிகம் வாசிக்க :
- சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் பொது விதிமுறைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்
- தற்காலிய மத்தியக் கவுன்சிலின் பிரதிநிதிகளுக்கு சில பிரச்னைகளைப் பற்றிய ஆணைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்
No comments:
Post a Comment