Monday, June 17, 2013

Lenin and the Indian independence (லெனினும் இந்திய விடுதலையும்)

லெனினும் இந்திய விடுதலையும்

ஜூலை 1, 1905 அன்று இந்தியன் ஒப்பீனியன் ஏட்டில் காந்தி இப்படி எழுதினார். ‘ரஷ்ய மக்கள் வெற்றி பெற்றால், ரஷ்யாவில் இந்தப் புரட்சியானது இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாகக் கருதப்படும். நாங்களும்கூட கொடுங்கோன்மைக்கு எதிராக ரஷ்யாவின் பாதையைப் பின்பற்றலாம்.’ புரட்சி வெற்றிபெற்ற பிறகு, 1928ல் காந்தி இவ்வாறு எழுதினார். ‘போல்ஷ்விக் பதாகைக்குப் பின்னர் எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்கள் லட்சியத்துக்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனின் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது.’
1917 ரஷ்யப் புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி எழுதிய லெனினும் இந்திய விடுதலையும் என்னும் நூல் இந்தப் பணியைச் சீராகத் தொடங்கிவைத்தது.
ரஷ்யப் புரட்சியைக் கண்டு பிரிட்டிஷ் இந்தியா சினமும் அச்சமும் கொண்டிருந்த காலகட்டம் அது. அவ்வாறு அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்பது காந்தியின் கருத்து. போல்ஷ்விக் புரட்சியை அவர் அபாயம் என்று கருதவில்லை. யங் இந்தியாவில் 1920ல் காந்தி எழுதியது.‘போல்ஷ்விக் அபாயம் என்பதை நான் ஒருபோதும் நம்பியதில்லை. ரஷ்ய போல்ஷ்விக் அபாயம் அல்லது வேறு எந்தவொரு அபாயம் குறித்து இந்திய அரசாங்கம் ஏன் பயன்படவேண்டும்?’
ஆனால், பிரிட்டிஷ் இந்தியா நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது. ரஷ்யர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியை இங்கே அரங்கேற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? லெனினையும் அவரது போல்ஷ்விக் கட்சியையும் முன்னுதாரணமாகக் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜார் அரசுக்கு ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?
ஓர் உபாயத்தைக் கையாண்டது பிரிட்டன். போல்ஷ்விக் புரட்சி பற்றியும் குறிப்பாக லெனின் பற்றியும் செய்திகள் எதுவும் பரவாதபடி தடை செய்தது. ரஷ்யாவிலிருந்து ஆவணங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. கிடைத்தவையெல்லாம் எதிர்மறையான செய்திகள்தாம். லெனினின் சர்வாதிகாரம் பற்றிய, போல்ஷ்விக்குகளின் வன்முறை செயல்பாடுகள் பற்றிய செய்திகளே பிரிட்டனால் வரலாறு என்னும் போர்வையில் பரப்பப்பட்டன. கம்யூனிசம் மனித குலத்துக்கு விரோதமான ஒரு தத்துவம் என்பது தீவிரமாக வாதிடப்பட்டது. கம்யூனிசத்தைப் பின்பற்றுவது அல்ல, அவ்வாறு நினைப்பதும்கூட சமூக விரோதமான செயல் என்று அறிவுறுத்தப்பட்டது. லெனின் ஒரு கொடூரமான கொலைகாரன் என்றும், ரத்தக் காட்டேரி என்றும் மண்டையோட்டு மாலை போட்டுக்கொண்டு வலம் வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
ஆனால், அனைத்து தடைகளையும் மீறி, ஆங்கிலேயர்களின் கட்டுக்கதைகளை உடைத்து, லெனினை இந்தியர்கள் தரிசித்தார்கள். நேரு, காந்தி, திலகர் போன்ற இந்திய தேசியவாதத் தலைவர்களையும் இந்திய மக்களையும் போல்ஷ்விக் தத்துவம் ஒருசேரப் பற்றிக்கொண்டது. உண்மையில், போல்ஷ்விக்குகள் பற்றிய பிரிட்டனின் தவறான பிரசாரமே, பல மக்களை லெனினை நோக்கித் திருப்பியது என்றும் சொல்லலாம். அப்படி என்ன ஆபத்தான சித்தாந்தம் என்னும் ஆர்வக் குறுகுறுப்புடன் பலர் சோவியத் நோக்கி நகரத் தொடங்கினர்.
இது குறித்து எஸ்.ஏ. டாங்கே இவ்வாறு எழுதுகிறார். ‘போல்ஷ்வியம் என்பது ரஷ்யாவின் தலைவன் ஆனபின், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அரசாங்கங்களும் அதை பேய்த்தனமானது, அட்டூழியமானது மற்றும் சர்வாதிகாரமானது என்று சித்தரித்து மக்களின் சிந்தனையில் அவை குறித்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் செயல்பாடு என்று லேசான சாயல் உள்ள ஒவ்வொரு முயற்சியும் ஒடுக்கப்படுகிறது என்பதுடன் எந்தவொரு நாட்டிலுமுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்தும் மக்கள் துண்டிக்கப்படுகிறார்கள்…போல்ஷ்விக்குகளின் உறுதியான சர்வதேச கொள்கையில் இதற்கான காரணம் பொதிந்துள்ளது.’
அந்தக் கொள்கை இதுதான். அடிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காலனி நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சோவியத் ஆதரவு அளிக்கும் என்று லெனின் குறிப்பிட்டிருந்தார். மக்களை காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
காந்தியின் அமைதி வழியிலான போராட்டம் இந்திய சுதந்தரத்தைப் பெற்றுத்தராது, ரஷ்யாவில் நடைபெற்றதைப் போன்ற புரட்சி மூலமே ஆங்கில ஆதிக்கத்தை உடைக்கமுடியும் என்னும் கருத்தாக்கம் உருபெற ஆரம்பித்தது. எஸ்.ஏ. டாங்கேயின் எழுத்துகளில் இந்த உண்மை காணக்கிடைக்கிறது.
‘ஒரே ஒரு பரிகாரம்தான் உள்ளது… அது இந்தியத் தொழிலாளரின் கரங்களில் உள்ளது. பயங்கரப் போக்கில் ஈடுபடும் ராணுவச் செயல்பாடுகளும், அவற்றின் வெற்றியும் சிப்பாய்களை ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்துக்கு வேகமாகக் கொண்டுசெல்வதிலும், ராணுவத்திற்கான உணவுப் பொருட்கள் வெடிபொருட்களை கொண்டுசெல்வதிலும் பிரதானமாகச் சார்ந்துள்ளன. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளிகளால் செய்யப்படுகின்றன. முக்கியமான தருணத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஒட்டுமொத்தமாக வேலை செய்ய மறுத்தால், ரயில்வேத் தொழிலாளிகள், தந்தி ஊழியர்கள், கூலிகள் மற்றுமிதர வகைப்பட்ட தொழிலாளிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்தால், அதாவது சதிவேலை என்றழைக்கப்படுவதை ஏற்பாடு செய்தால் நம்முடைய வெற்றி நிச்சயம். அரசாங்க பயங்கரப் போக்கு என்பதன் முழுச் செயல்பாடும் முடக்கப்படும் என்பதுடன் அது பணிந்தே தீரவேண்டும்.’
மராத்தி மொழியில் லெனினின் முதல் வாழ்க்கை வரலாறு 1922ல் வெளியிடப்பட்டது. ‘நிகோலய் லெனின் : ரஷ்ய ஜனநாயகத்தின் நிறுவனருடைய வரலாறு’ என்னும் இந்நூலை எழுதியவர், ராம்கிருஷ்ண கோபால் பிடே என்பவர். ஏன் லெனினின் வாழ்க்கை வரலாறை அவர் எழுதத் துணிந்தார் என்பதற்கான காரணம் முன்னுரையில் காணப்படுகிறது.
‘அது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொடிகட்டிப் பறந்த நாட்களாகும். இந்தியர்களாகிய நாங்கள் சுதந்தரத்திற்கான எங்களுடைய போராட்டத்திற்கான ஆதர்சனத்தைப் பெற தெரிந்த ஒவ்வொரு ஆதாரத்தையும் நாடினோம். லெனின் மற்றும் அவருடைய போல்ஷ்விக் ரஷ்யாவைவிட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்கமுடியும்? ஆனால் அந்நாட்களில் இந்த ஆதாரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாது. எனவே புரிபடாமல் இருந்தது. அந்தக் காரணத்திற்காகவே அது எங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. லெனினுடையதானது ஒரு இணையற்ற தத்துவத்தோடு கூடிய புரட்சியின் ஒரு முற்றிலும் புதிய பரிசோதனை என்று நாங்கள் உணர்ந்தோம். அது நம்முடைய பண்டைக்கால தத்துவம் புகுந்திருந்த எங்களுடைய சிந்தனைக்கு ஒரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.’
லெனின் பற்றிய விவாதங்கள் இங்கே மும்முரமாக தொடங்கின. பால கங்காதர திலகர் நடத்திய கேசரி பத்திரிகை அலுவலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஆங்கில மாத ஏடுகள் இருந்தன என்றும் அலுவலக நூலகத்தில் சில புத்தகங்கள் இருந்தன என்றும் தெரியவருகிறது. (லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி).
சம்ஹதி (ஒற்றுமை) என்னும் வங்கமொழிப் பத்திரிகை 1923ம் ஆண்டு ஜிதேன் குப்தா என்னும் ஏழை அச்சுத் தொழிலாளியால் தொடங்கப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் கிடந்து துவள நேரிட்டபோதும்கூட கடைசி வரை பத்திரிகையை அவர் நடத்தி வந்தார். ரஷ்யப் புரட்சி குறித்து சம்ஹதி என்ன சொல்லியிருக்கிறது? ‘எவ்வாறாயினும் மேல்தட்டு வர்க்கங்கள் தாம் உலகில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தின. தற்பொழுது கீழ்மட்ட வர்க்கங்கள் விழித்துக்கொண்டுவிட்டன என்பதுடன் அவற்றை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. இன்று பேய்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் புதிய மகிழ்ச்சியானது மிக்க வேதனைகள் மூலம் வருகிறது. உருவாக்கத்திற்கு இத்தகைய வேதனைகள் தேவைப்படுகின்றன.’
ஜனவரி 30, 1925ல் முகம்மதி என்னும் இஸ்லாமிய ஏட்டிய வெளிவந்த கருத்து இது. ‘லெனின் ரஷ்யாவை மட்டும் விடுதலை செய்தார் என்று கூறுவது உண்மையைக் குறைத்துச் சொல்வதாகும். செயலற்றிருந்த மனித குலத்தை சுதந்தரப் பாடலுடன் ஒருவர் கிளர்ந்தெழச் செய்தானென்றால், லட்சோப லட்சம் மக்களுக்கு மகிழ்ச்சி என்று எதிர்பால ராஜ்யத்தின் கதவை ஒருவர் திறந்தானென்றால், துன்பதுயரமும், வறுமையும் நிறைந்த இவ்வுலகில் ஒருவர் சாந்தப்படுத்தும் அமிர்தத்தை விநியோகித்தாரென்றால் அவர்தான் லெனின்.’
இங்கு சிறு கலகம் ஏற்பட்டாலும், சிறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் லெனினை நோக்கி கை நீட்டியது பிரிட்டிஷ் இந்தியா. காந்தியும்கூட லெனினின் சித்தாந்தத்தால் கவரப்பட்டுவிட்டார் என்றும் இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் குற்றச்சம்சாட்டினார்கள். ஸ்வராஜ்யா புனா, மராத்தி வார இதழில் மார்ச் 30, 1920 அன்று இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு வெளியானது. ‘இந்தியா மீது போல்ஷ்விக் திட்டங்கள் குறித்தும் போல்ஷ்விக்குகளுடன் திரு. காந்தியின் தொடர்புகள் குறித்தும் செய்திகள் எங்கும் பரவியுள்ளன. ஆனால், உண்மையில் இத்தகைய செய்திகள் அனைத்தும் தவறானவையாகும். போல்ஷ்விக் பிரசாரம் இல்லாமலேயே இந்தியாவில் அதிருப்தி நிலவுகிறது. நாட்டின் பொருளாதார திவால் நிலைமையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையும்தான் போல்ஷ்வியத்தை தோன்றச் செய்துள்ளது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் உலகம் முழுவதும் அதிகாரத்தைச் செலுத்த ஆசை கொண்டுள்ளனர். அவ்வாறிருக்கும்போது, ஏன் போல்ஷ்விக்குகள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது?…நான்கு ஆண்டுகளுக்கு 90 கோடி ரூபாய்க்கு குறையாத பற்றாக்குறைக்கு பொறுப்பான நிர்வாக முறையின் விளைவுதானே போல்ஷ்வியமாக இருக்கமுடியும்?’
காங்கிரஸ் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலைப் போராட்டம் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் தன் திசைவழியை மாற்றிக்கொண்டது என்கிறது ஜூலை 26, 1922 அன்று வெளிவந்த ஆத்ம சுத்தி என்னும் இந்தி இதழ். ‘ஏழைகள் பிரச்சினை இதுவரை காங்கிரஸில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியானது நடுத்தர வர்க்க மனிதர்களின் கரங்களில் உள்ளது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போகும்போது அதிகாரம் தங்கள் கரங்களில் வருமென்று அவர்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களும் வர்த்தகர்களுமாவர். சுயராஜ்ஜியம் வரும்பொழுது அன்னியப் பொருள்களுக்கு வரி விதிப்பதன் மூலம் லாபம் பெற வர்த்தகர்கள் விரும்புகிறார்கள். வழக்கறிஞர்கள் அப்பொழுது உயர் பதவிகள் கிடைக்குமென்று கருதுகின்றர். எனவே, சாதாரண மக்கள் காங்கிரஸ் குறித்து அக்கறை காட்டவில்லை.’
காஸி இஸ்லாம் தூமகேது, டிசம்பர் 15, 1922 இதழில் இந்தக் கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். ‘ஒரு நாட்டின் சுதந்திரமானது, மக்களால் உதவிடப் பெறாத ஒரு சில படித்த மனிதர்களைக் கொண்டு மட்டும் அடையப் பெற்றுவிடாது என்ற மகத்தான உண்மை இயக்கத் தலைவர்களுக்குத் தோன்றவில்லை. துவக்கத்தில் நாம் செய்த தவறை இன்று நாம் கண்டுபிடித்து விட்டோம். அனைத்து அதிகாரங்களும் ஒரு சில படித்த தலைவர்களின் பிடியில் இருப்பது மட்டும் சுதந்திரமல்ல. சுய பாதுகாப்பிற்காக நமது நாட்டை நாம் பலப்படுத்த விரும்பினால் நாம் இதயபூர்வமாக ஆன்மாபூர்வமாக மக்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.’
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல உலக மக்களுக்கும் லெனினும் ரஷ்யப் புரட்சியும் கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். மக்களிடம், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திடம் ஒன்றுகலக்காமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல் எதிலும் எப்போதும் வெற்றிபெறமுடியாது.

No comments:

Post a Comment