Monday, June 17, 2013

Cheguvara Motor Cycle Dairy Part one (மோட்டார் சைக்கிள் டைரி)

சே குவேரா : மோட்டார் சைக்கிள் டைரி

Becoming Che என்னும் நூலை எழுதிய கார்லோஸ் ‘கலிகா’ ஃபெரர் (Carlos ‘Calica’ Ferrer) முதல் முதலில் எர்னஸ்டோ குவேரா டிலா செர்னாவைச் சந்தித்தது ஒரு பிறந்தநாள் விழாவில். யாருடைய பிறந்த நாள் விழா, எங்கே, எப்போது போன்ற விவரங்கள் கலிகாவின் நினைவில் இல்லை. ‘எங்களைப் பிடித்து இழுத்துச் சென்று குளிப்பாட்டி, தலை சீவி, மடிப்பு கலையாத உடைகள் உடுத்தி வழக்கமாகக் கூட்டிச் செல்லும் ஒரு விழா அது… எர்னஸ்டோவையும் அப்படித்தான் அழைத்து வந்திருப்பார்கள். வா, டாக்டர் ஃபெரரின் மகனைப் பார்க்கப்போகிறாய், நீங்கள் இருவரும் நண்பர்களாகலாம் என்று அவனிடம் சொல்லியிருப்பார்கள். அப்போது அப்படித்தான். உங்கள் நண்பனின் பெற்றோரையும் நீங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளவேண்டும்.’
கலிகாவின் குடும்பமும் எர்னஸ்டோவின் குடும்பமும் நட்புடன் பழக ஆரம்பிப்பதற்கு கலிகாவின் அப்பா ஒரு ஆஸ்துமா நிபுணர் என்பதும் ஒரு காரணம். எர்னஸ்டோவைக் கவனித்துக்கொண்டவர் அவரே. ‘அவரது நல்ல சிகிச்சையாலோ அல்லது நல்ல வானிலை காரணமாகவோ எர்னஸ்டோ குணமாக ஆரம்பித்தான்.’
1932ல் அர்ஜென்டினாவில் கோர்டோபா மாகாணத்தில் அமைந்துள்ள ஆல்டா கிரேசியா என்னும் மலைப்பிரதேசத்துக்கு எர்னஸ்டோவின் குடும்பம் குடிபெயர்ந்தது. அப்போது எர்னஸ்டோவுக்கு நான்கு வயது. ஆஸ்துமாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த எர்னஸ்டோவைப் பரிசோதித்த பியூனஸ் ஏர்ஸ் மருத்துவர் சிறிது காலம் மலைப்பிரதேசமான கோர்டோபா சென்று தங்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். நான்கு மாதம் தங்கலாம் என்று முடிவு செய்துதான் அவர்கள் வந்திருந்தனர். ஆனால் அடுத்த 11 ஆண்டுகளை அவர்கள் அங்கேயே கழிக்கவேண்டியிருந்தது. கலிகா எர்னஸ்டோவோடு நெருங்கிப் பழங்கிய காலகட்டம் இது.
எர்னஸ்டோவின் அம்மா, செலியா (டி லா செர்னா) ஒரு ‘குடும்பத் தலைவியாக’ மட்டும் இல்லாமல், குழந்தைகளை வரவேற்று உபசரிப்பவராக, வலிமையானவராக, அறிவுபூர்வமாக விவாதிப்பவராக, நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்ததை கலிகா குறிப்பிடுகிறார்.
எர்னஸ்டோவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவனை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றிருக்கிறார் செலியா. குழந்தையைக் குளிக்க வைத்து, விளையாட்டு காட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். எர்னஸ்டோவை உடனே ஆஸ்துமா பிடித்துக்கொண்டுவிட்டது. இது பற்றி செலியாவின் கணவர் எர்னஸ்டோ சீனியர் (எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்) செலியாவைக் கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. எர்னஸ்டோவுக்கு ஆஸ்துமா வந்தது உன்னால்தான் என்று அவர் அடிக்கடி சண்டையிட்டதாகவும் சிலர் பதிவு செய்திருக்கிறார்கள்.
‘இது உண்மையா என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் வேறு ஒரு விஷயத்துக்காக எர்னஸ்டோ சீனியரும் செலியாவும் சண்டையிட்டுக்கொண்டதை நான் கண்டிருக்கிறேன்.’ என்று கீழ்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் கலிகா.
எர்னஸ்டோ வீட்டில் இல்லாத சமயம் அது. அவனைத் தேடி சலித்துப்போன எர்னஸ்டோ சீனியர் படபடவென்று வெடிக்க ஆரம்பித்தார்.
‘என்ன காரியம் செய்திருக்கிறான் பார்! எங்கும் அவனைக் காணவில்லை. எல்லாம் உன் வளர்ப்பில் உள்ள பிரச்னை.’
அதே வேகத்தில் செலியாவிடம் இருந்து பதில் புறப்பட்டு வந்தது.
‘பிறகு என்ன செய்யவேண்டும் என்கிறாய்? முட்டை ஓடு போல் கவனமாக அவனைப் பாதுகாக்கவேண்டுமா? அங்கே போகாதே, அதைச் செய்யாதே, கவனம் கவனம் என்று அவன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கவேண்டுமா?’
உறுதியான குரலில் சொன்னார் செலியா.
‘நான் முடிவுசெய்துவிட்டேன். அவன் மற்ற குழந்தைகளைப் போலத்தான் வளர்வான்.’
பொத்திப் பொத்தி வீட்டுக்குள் பூட்டி வைப்பது அவன் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை செலியா நன்றாகவே புரிந்துவைத்திருந்தார். தன் கணவரின் எதிர்ப்பை மீறி அவர் எடுத்த திடமான முடிவு இது. ‘இவரது முடிவு பொய்க்கவில்லை என்பதை எர்னஸ்டோவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.’ என்கிறார் கலிகா.
ஆஸ்துமாவைக் காரணம் காட்டி எந்தவொரு கடினமான சூழலில் இருந்தும் எர்னஸ்டோ தப்ப நினைத்ததில்லை. செலியாவிடம் இருந்த அதே மன உறுதி, அதே பாறை மனம் எர்னஸ்டோவிடமும் இருந்தது. விளையாட்டு, சண்டை, சாகசம் எதிலிருந்தும் எர்னஸ்டோ பின்வாங்கவில்லை.
பல சமயங்களில் எர்னஸ்டோவால் படுக்கையைவிட்டு அகலவே முடியாது போய்விடும். அப்போது நண்பர்கள் வீட்டுக்குச் சென்று அவனைப் பார்ப்பார்கள். எதிர்பாராத சமயத்தில் திடீரென்று சுவாசிக்க தடுமாறுவான். நண்பர்கள் உதவுவார்கள். இன்ஹேலர் கருவி எப்போதும் அவனுடன் இருக்கும்.
எப்போது சோர்வடைவான், எப்போது சுருண்டு படுப்பான், எப்போது துள்ளியெழுவான் என்று யாராலும் யூகிக்கமுடியாது. ஆனால், ஒன்று நிச்சயம். நீச்சல், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ஃப், மலையேற்றம் என்று எதையும் எர்னஸ்டோ விட்டுவைத்ததில்லை.
‘எர்னஸ்டோவின் பலம், விளையாட்டுகளில் உள்ள ஆர்வம்,பெண் சிநேகிதர்களை ஈர்ப்பதில் அவனுக்குள்ள ஆற்றல் அனைத்தும் சேர்த்து அவனை ஓர் இயல்பான தலைவனாக உருமாற்றியிருந்தன.’ என்று நினைவுகூர்கிறார் கலிகா.
செலியா குறிப்பிட்டதைப் போல் எர்னஸ்டோ மற்ற குழந்தைகளைப் போல இயல்பாகவே வளர விரும்பினான். விளையாடுவதையும், மூச்சு முட்ட மலையேறுவதையும், கட்டிப் புரண்டு பொய்ச் சண்டையிடுவதையும், வியர்க்க விறுவிறுக்க ஓடுவதையும் அவன் ஒரு மூர்க்கமான யுத்தமாகவே பாவித்து மேற்கொண்டிருக்கவேண்டும். தன்னை முடக்க நினைக்கும் ஆஸ்துமாவுக்கு எதிரான யுத்தம் அது.
ஒரு கட்டத்தில் இயல்பு வாழ்வுமேகூட எர்னஸ்டோவைச் சலிப்படைய வைத்துவிட்டது. புத்தகங்களைக் கடந்து, பெற்றோரின் அன்பைக் கடந்து, நண்பர்களைக் கடந்து, விளையாட்டுகளைக் கடந்து, பாதுகாப்பு வளையங்களைக் கடந்து விரிவாக உலகைக் காண விரும்பினான் எர்னஸ்டோ.
‘என்னால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அவனிடம் இருந்தன. அவற்றைக் காலப் போக்கில்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. பயணத்தின்மீது அவனுக்கு இருந்த வேட்கையானது புதியனவற்றைக் கண்டறிய வேண்டுமென்ற அவனுடைய விருப்பத்தின் இன்னொரு அம்சமே என்பதை அப்போது நான் உணரவில்லை.’ மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தன் மகன் குறித்து எர்னஸ்டோ சீனியர் பகிர்ந்துகொண்ட ஆச்சரியம் இது.
ராகுல் சாங்கிருத்யாயன் எர்னஸ்டோவுக்காகவே ஊர் சுற்றிப் புராணம் எழுதியது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ‘ஊர் சுற்றுவதைவிட மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை செய்வது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை… இந்த உலகமே ஊர் சுற்றிகளால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது…அஞ்சாமை உள்ளவன்தான் ஊர் சுற்றி விரதம் கொள்ளமுடியும்… நீங்கள் யார் பேச்சையும் கேட்காதீர்கள். தாயின் கலங்கிய கண்களிலிருந்து கொட்டும் கண்ணீரையோ தந்தையின் பயமுறுத்தலையோ தெரியாத்தனமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவியின் அழுகுரலையோ பொருட்படுத்தக்கூடாது…உலகில் மனிதப் பிறவி ஒரு தடவைதான் எடுக்கமுடியும். அதே போல் இளமையும் ஒரே தடவைதான் வருகிறது. அஞ்சாமை நிறைந்த இளைஞர்களும் யுவதிகளும் இந்தக் கிடைத்தற்கரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது .’
எர்னஸ்டோ ஊர் சுற்ற ஆசைப்பட்டான். பயணம் ஏற்படுத்திக் கொடுத்த ருசி, எர்னஸ்டோவை அவனது தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், காதலியிடம் இருந்தும் பிரித்து வைத்தது. எர்னஸ்டோ தனது எல்லைகளை விரிவாக்கிக்கொள்ள ஆரம்பித்தான். உலகம் எத்தனை பெரியது என்பதை பயணம் எர்னஸ்டோவுக்குக் கற்றுக்கொடுத்தது. ஒரு தெளிவான குறிக்கோளையும் அவனுக்குள் ஏற்படுத்தியது.
எர்னஸ்டோ சீனியரின் எழுத்துகளில் அதை வாசிக்கமுடிகிறது.
‘ஏழை மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் உலகம் முழுவதும் பயணம் செய்யவேண்டும். அதுவும் இயற்கைக் காட்சியை ரசித்தவாறு அழகான புகைப்படங்களை எடுப்பதற்காக நிற்கும் சுற்றுலாப் பயணியாக அல்ல. அவன் செய்ததைப் போல, சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் எதிர்கொள்ளும் மனிதர்களின் துயரத்தைப் பகிர்ந்துகொள்பவனாகவும் அந்தத் துயரத்துக்கான காரணங்களைக் கண்டறிய முயல்பவனாகவும் இருக்கவேண்டும்… அவனுடைய பயணங்கள் சமூக ஆய்வின் ஒரு வடிவமாக இருந்தன. எல்லாவற்றையும் தானே நேரில் காணவேண்டுமென்பதற்காக அவன் பயணம் செய்தான். அதே சமயத்தில் தன்னால் முடிந்த வரையில் மற்றவர்களின் துயரங்களைக் களைவதற்கு முயற்சி செய்தான்.’
எல்லாவற்றுக்கும் மேலாக, எர்னஸ்டோ குவேரா டிலா செர்னாவை பயணங்கள் சே குவேராவாக வளர்த்தெடுத்தன.

சே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை

பதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி சான்றிதழ், ‘வெரி குட்’, ‘அவுட்ஸ்டாண்டிங்’ போன்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், சகமாணவர்கள் எர்னஸ்டோவை அப்படியொன்றும் ஒரு பிரமாதமான படிப்பாளியாகக் காணவில்லை. விளையாட்டு, அரட்டை, கிண்டல், ஊர் சுற்றல் என்று மிக இயல்பான ஒரு எர்னஸ்டோவைத்தான் அவர்கள் அறிந்திருந்தனர். எப்பொழுதும் நம்முடன் சுற்றிக்கொண்டிருக்கும் எர்னஸ்டோ தேர்வுகளில் மட்டும் எப்படி நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுவிடுகிறான் என்று அவர்கள் வியந்திருக்கவேண்டும்.
வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் எர்னஸ்டோ புத்தகங்களை அபாரமாக நேசித்தார். செலியாவும் எர்னஸ்டோ சீனியரும் சேகரித்து வைத்திருந்த மூவாயிரத்து சொச்ச புத்தகங்கள் எர்னஸ்டோமீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆயிரத்தோரு இரவுகள், பாப்லோ நெருடாவின் கவிதைகள், பிராய்ட், ஜேக் லண்டன், அனடோல் பிரான்ஸ் என்று வாசிக்கத் தொடங்கினார். சுருக்கப்பட்ட கார்ல் மார்க்ஸின் மூலதனமும் கிடைத்தது. (ஆனால், அப்போது எனக்கு அதில் எதுவுமே புரியவில்லை!) எர்னஸ்டோவின் நண்பர் ஒருவர் நினைகூர்ந்தபடி, ‘பேரார்வத்துடன் எர்னஸ்டோ புத்தகங்களை அணுகினான். வயதுக்கு மீறிய கனமான தலைப்புகளை அவன் வாசிப்பது தெரிந்தது.’
எர்னஸ்டோ தனது முதல் ‘தத்துவ அகராதியை’ உருவாக்க ஆரம்பித்திருந்தார். 165 பக்க கையெழுத்துப் பிரதி அது. எழுத்தாளர்கள், தலைப்புகள் என்று வரிசைக்கிரமமாக விவரங்கள் திரட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் பக்க எண்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடவுள், இசை, பொன்மொழிகள், நம்பிக்கை, நீதி, மரணம், உல்லாசம், சாத்தான் என்று குறிப்புகள் விரிவடைகின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில், மார்க்சியம் பற்றிய குறிப்புகளை எர்னஸ்டோ, அடால்ஃப் ஹிட்லரின் மெயின் காம்ஃப் நூலில் இருந்து திரட்டியிருப்பதாக ஜான் லீ ஆண்டர்சன் தனது நூலில் (Che  Guevara – A Revolutionary Life) குறிப்பிடுகிறார். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ‘ஒன்றிணைந்து சதி வேலைகளில் ஈடுபடுவது’ பற்றிய ஹிட்லரின் குறிப்புகளை எர்னஸ்டோ தன் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார்.
ஹெச்.ஜி. வெல்ஸின் உலக வரலாற்றில் இருந்து அரிஸ்டாடில் மற்றும் புத்தர் பற்றிய குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறார். காதல், நேசம், தேசப்பற்று, பாலியல் அறம் ஆகியவற்றுக்கு பெட்ரண்ட் ரஸ்ஸல் (Old and New Sexual Morality) உதவியிருக்கிறார். நினைவாற்றல் பற்றிய பிராய்டின் கோட்பாடுகள் எர்னஸ்டோவைக் கவர்ந்திருக்கின்றன. சமூகம் பற்றி ஜேக் லண்டன் (லெனின் இறுதியாக ஜேக் லண்டனின் கதைகளையே வாசித்ததாக நதேஷ்தா குரூப்ஸ்கயா குறிப்பிடுகிறார்), மரணம் பற்றி நீட்ஷே எழுதியவற்றின் சாரம் எர்னஸ்டோவின் குறிப்பேட்டில் காணப்படுகிறது.
அடுத்த பத்தாண்டுகளில், எர்னஸ்டோ மேலும் ஆறு குறிப்பேடுகளை உருவாக்கினார். வாசிப்பு ஆழத்துக்கும் புதிய புரிதல்களுக்கும் ஏற்ப குறிப்புகள் திருத்தியமைக்கப்பட்டன. ஹிட்லரை நிராகரித்துவிட்டு, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படைப்புகள்மூலம் மார்க்சியத்தை அணுகத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஜவாஹர்லால் நேருவின் எழுத்துகளில் இருந்து சில பத்திகளையும் எர்னஸ்டோ குறித்து வைத்துக்கொண்டார்.
இலக்கியம், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் என்று எர்னஸ்டோவின் ஆர்வம் பரவியது. தன்னால் நேரில் காணமுடியாத நாடுகளையும் சந்திக்கமுடியாத மக்களையும் இலக்கியத்தின் மூலம் எர்னஸ்டோ தரிசித்தார். கண்கள் மூடி கனவு கண்டார். அவர் பார்க்க விரும்பியவை, புகை மூடிக் கிடக்கும் உல்லாசப் பிரயாணிகளுக்கான இடங்கள் அல்ல. மயக்கும் தொலைதூர தேசங்கள் அல்ல. அவர் கனவு கண்டது லத்தீன் அமெரிக்கா குறித்து.
பிடிநோஸ்ட் (Osvaldo Bidinost Payer) என்னும் நண்பர் குறிப்பிடுவது போல், எர்னஸ்டோவின் லத்தீன் அமெரிக்கக் கனவு விரிவடைந்ததற்கு மற்றொரு காரணம் அவர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினர்கள். பல்வேறு விதமான பின்னணி கொண்ட மனிதர்களையும் செலியா தன் வீட்டுக்கு வரவழைத்து, உபசரித்து, உரையாடி மகிழ்ந்தார். சில சமயம் ஈக்குவடாரில் இருந்து சில கவிஞர்கள் வந்திருப்பார்கள். கவிதைகள் பற்றிய சுவையான, காரசாரமான விவாதங்கள் நடைபெறும். சில சமயம், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து போவார்கள்.
எர்னஸ்டோ சீனியருக்கு இப்படிப்பட்ட ‘அறிவார்ந்த உரையாடல்களில்’ ஆர்வம் இருக்காது. தடதடக்கும் தனது இருசக்கர வாகனத்தை (La Pedorra) ஓட்டியபடி அவர் வெளியேறிவிடுவார். கலை, இலக்கியம், வரலாறு, சமூகம் என்று விரிவாக விவாதிக்கும் செலியாவின் ஆற்றலை எர்னஸ்டோ ரசித்துக்கொண்டிருப்பார். ‘அவர்களுடைய வீடு ஒரு மனித மிருகக்காட்சி சாலை போல் காட்சியளித்தது’ என்கிறார் பிடிநோஸ்ட். எப்பொழுது சென்றாலும் ஏதாவதொரு விவாதம், அனல் பறக்கும் சண்டை அல்லது கவிதை வாசிப்பு. அன்றைய தினம் உணவு மேஜையில் எத்தனை பேர் கூடுவார்கள், எத்தனை பேருக்கு உணவு பகிர்ந்தளிக்கப்படும், விவாதத்தின் திசை என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. ‘உலகத்தின் வரவேற்பறை போல் அந்த வீடு காட்சியளித்தது.’
சில சமயங்களில், விருந்தினர்களின் தொடர் வருகைகளால் எர்னஸ்டோவின் வாசிப்பு தடைபடுவதும் உண்டு. பொறுக்கமுடியாமல் குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு மணிக்கணக்கில் வாசித்துக்கொண்டிருப்பார். வாழ்க்கை முழுவதும் நீடித்த பழக்கமாக இது மாறிவிட்டது.
1946ல் எர்னஸ்டோவின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. ஜூன் மாதம் தனது பதினெட்டாவது பிறந்த நாளை எர்னஸ்டோ கொண்டாடினார். தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்துகொண்டே சாலை அமைக்கும் அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்யத் தொடங்கினார். மண்ணின் தரத்தை அறிவதில் எர்னஸ்டோ நிபுணத்துவம் பெற்றதைக் கண்ட நிறுவனம், தனியார் நிறுவனங்கள் சாலை அமைக்க பயன்படுத்தும் மண்ணைச் சோதனை செய்யும் பணியை எர்னஸ்டோவுக்கு ஒதுக்கியது. தன் மகன் ஒரு பொறியியலாளராக உருவெடுப்பார் என்று எர்னஸ்டோ சீனியர் திடமான நம்பிய காலகட்டம் அது. அவர் முன்னெடுத்துச் சென்ற கட்டுமான வேலை எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காததால் கையிருப்பு நிலம், வீடு என்று அடுத்தடுத்து சொத்துகளை விற்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவேராவின் குடும்பம் பியூனஸ் ஏர்ஸுக்குத் திரும்பிவந்தது.
ஆனால் எர்னஸ்டோவுக்கு வேறு கனவுகள் இருந்தன. அவர் ஒரு மருத்துவராக விரும்பினார். உண்மையில், ஒரு பொறியலாளராக மாறுவதற்கான படிப்பும் அனுபவமும்தான் அவரிடம் மிகுதியாக இருந்தன. இருந்தபோதும், ‘ஒரு புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளராக மாற விரும்பினேன். மனித குலத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றைக் கண்டறியவேண்டும் என்று கனவு கண்டேன்!’ உயிருக்குயிராக நேசித்த தனது பாட்டியைக் காப்பாற்ற நவீன மருத்துவம் தவறிவிட்டதால் அத்துறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க சாதனை புரியவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று எர்னஸ்டோவின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். தன்னை வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்துமாவுக்கு தீர்வு காணும் நோக்கிலும் அவர் இத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். எப்படியும் பொறியியல் துறையைக் காட்டிலும் மருத்துவமே அவருக்கு நெருக்கமானதாக இருந்தது.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே டாக்டர் சல்வடோர் பிசானி என்பவரின் மருத்துவமனையில் ஆஸ்துமா பிரிவில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஆஸ்துமா நோயாளிகளை எர்னஸ்டோ கவனித்துக்கொண்ட முறையிலும் ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் அவர் செலுத்திய ஆர்வத்தையும் கண்ட பிசானி, எர்னஸ்டோவை சம்பளம் இல்லாத ஆய்வாளராக தன்னுடன் இணைத்துக்கொண்டார். பிசானி தான் கண்டறிந்த ஒருவித தடுப்பூசியைப் பயன்படுத்தி தன் நோயாளிகளின் ஆஸ்துமா தொல்லைகளைப் போக்குவதில் ஓரளவு வெற்றி பெற்றவர். எர்னஸ்டோவுக்கும் அவரே சிகிச்சை அளித்திருக்கிறார். பிசானியின் மருத்துவப் புலமையால் கவரப்பட்ட எர்னஸ்டோ ஒவ்வாமை துறையில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில், எர்னஸ்டோ சீனியருக்கும் செலியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பிரிந்துசெல்லும் முடிவில் அவர்கள் இருந்தனர். மூத்த மகனாக, வீட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பும் எர்னஸ்டோவுக்கு இருந்தது. ஒரே வீட்டில் இருந்தாலும் தன் தந்தையும் தாயும் தனித்தனியே பிரிந்து வாழ்வது எர்னஸ்டோவைப் பாதித்தது. உணவு மேஜையில் தன் தந்தையைச் சந்திக்கும்போது கோபத்துடன் எர்னஸ்டோ சண்டையிடுவது வழக்கம்.‘அப்போது எங்களைப் பார்ப்பவர்ளகள் எங்களை விரோதிகள் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள். ஓயாமல் நாங்கள் விவாதித்துக்கொண்டும் முரண்பட்டும் கிடந்தோம். ஆனால் அடியாழத்தில் எங்களிடையே நட்பு இருந்தது.’ என்று நினைவுகூர்ந்தார் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்.
எர்னஸ்டோவை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் அவன் மருத்துவனாக விரும்புகிறான்? எனில், ஏன் அவன் இலக்கியமும் வரலாறும் வாசிக்கிறான்? ஏன் அவ்வப்போது பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறான்? அவன் கனவு என்ன? அவன் தன்னை எப்படிப் பார்த்துக்கொள்கிறான்? என்னவாக மாறவிரும்புகிறான்? ‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், எர்னஸ்டோவை மனதளவில் நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.


எர்னஸ்டோவின் முதல் பயணம்

ஒருமுறை பியூனஸ் அயர்ஸ் சுரங்க ரயிலில் தனது நண்பருடன் வீட்டுக்குத் திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. அவர்களிடம் துண்டிக்கப்பட்ட மனித கால் ஒன்று இருந்தது. ‘பரிசோதனை’ செய்யப்போகிறோம் என்று சொல்லி மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து எடுத்து வந்திருந்த ‘பொருள்’ அது. செய்தித்தாளில் இரண்டு சுற்று சுற்றி கொண்டு வந்திருந்தால், முழுவதுமாக மறைக்கமுடியவில்லை. இதைக் கவனித்த பிற பயணிகள் பயணம் நெடுக அச்சத்துடன் எர்னஸ்டோவைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கலக்கத்தை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தார் எர்னஸ்டோ.
ஒரே மாதிரியான அலுப்பூட்டும் வாழ்க்கைமுறையில் இருந்து விலகவேண்டும் என்றால் இப்படிப்பட்ட அனுபவங்கள் தேவை. வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி போகிறோமோ அந்த அளவுக்குச் சுதந்தரத்தை அனுபவிக்க இயலும். கோர்டோபாவில் இருந்த தன் உறவினரை எர்னஸ்டோ நேசித்ததற்குக் காரணம் அவர்களுடைய வீட்டை அடைய குறைந்தது 10 மணி நேரம் காரில் செல்லவேண்டும் என்பதுதான். இதே இடத்துக்கு இன்னொரு வழியிலும் செல்லலாம். சரக்கு வண்டிகளை இடைமறித்து உதவி கேட்டு ஏறி, வழியில் ஏதாவது சிறு வேலைகள் செய்து, ஆங்காங்கு ஓய்வெடுத்துச் செல்லவேண்டும். இதற்கு சில தினங்கள் பிடிக்கும். எர்னஸ்டோவுக்கு இந்த வழிதான் பிடிக்கும்.
மருத்துவக் கல்லூரியின் மூன்றாவது ஆண்டு நிறைவில், ஜனவரி 1, 1950 அன்று தனது முதல் பயணத்தை எர்னஸ்டோ மேற்கொண்டார். அர்ஜென்டினாவின் உட்புறங்களை அலைந்து திரிந்து தரிசிக்கவேண்டும் என்பது திட்டம். ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அதில் இத்தாலிய எஞ்சின் ஒன்றைப் பொருத்திக்கொண்டு தனியே புறப்பட்டுவிட்டார். கிளம்புவதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொப்பி, கண்ணாடியுடன் சைக்கிளில் அமர்ந்து, காலை நிலத்தில் பதித்தபடி படத்தில் காட்சியளிக்கிறார் எர்னஸ்டோ. கூடுதல் டயர் ஒன்றை கழுத்தில் மாலைபோல் மாட்டியிருக்கிறார். (ஜான் லீ ஆண்டெர்சனின் புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது).
கோர்டோபாவை அடைந்து, அங்கிருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள San Francisco del Chanar பகுதியை அடையவேண்டும். எர்னஸ்டோவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரானாடோ (Alberto Granado) அங்குள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு மருந்துகடையும் நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு சுற்று பயணத்தைத் திட்டமிடவேண்டும்.
மாலை நேரம் வீட்டைவிட்டு வெளியேறினார் எர்னஸ்டோ. மோட்டாரை இயக்கி, பெருத்த சத்தத்துடன் உற்சாகமாக சிறிது தூரம் கடந்துவிட்டு, வேகம் கைகூடியவுடன் வண்டியை மிதிக்கத் தொடங்கினார். விரைவிலேயே இன்னொரு மிதிவண்டிக்காரரின் சிநேகம் கிடைத்தது. இருவரும் விடியும்வரை வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டிருந்தனர். பிலார் என்னும் நகரத்தை அடையும்போது எர்னஸ்டோ பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டார். இந்த இடத்தைத் தாண்டி உன்னால் போகமுடியாது என்று வீட்டில் இருந்து கிளம்பும்போது சொல்லியிருந்தார்கள்.
வழியில் ஒரு காரை நிறுத்தி, கைக்கிளை அத்துடன் இணைத்து மணிக்கு 60 கிமீ வேகத்தில் பறக்கமுடிந்தது. திடீரென்று டயர் வெடிக்க, சாலையோரம் ஒதுங்கி, அங்கிருந்தவர்களுடன் சிநேகம் பிடித்து மனம் விட்டு உரையாட முடிந்தது. (மேட் பானம் கொடுத்தார்கள். ஆனால் பயங்கர தித்திப்பு.) வீட்டைவிட்டு வெளியேறி, ‘41 மணி நேரம், 17 நிமிடங்களுக்குப் பிறகு’ கிரானாடோவைச் சந்தித்தார் எர்னஸ்டோ. அவருடன் சில தினங்கள் தங்கியிருந்தார். கிரானாடோவின் சகோதரர்களுடன் இணைந்து அருகிலுள்ள ஒரு நீர் வீழ்ச்சிக்குச் சென்றார். பாறைகளில் தாவி, குன்றுகளின் மீதேறி, உயரத்தில் இருந்து குதித்து, தாற்காலிக வெள்ளம் ஒன்றில் அடித்துச் செல்லப்பட்டு…பரிபூரண சுதந்தரம்!
கிரானாடோ பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார் எர்னஸ்டோ. ரக்பி, புத்தகங்கள் போக இப்போது அவர்களுக்கு மருத்துவ ஆர்வமும் பொதுவாக இருந்ததால் ‘எதிர்கால மருத்துவக் கனவு’ குறித்து ஆர்வத்துடன் விவாதித்தார்கள். ‘எங்கள் இருவருக்குமே மருத்துவம் ஒரு பொதுவான எதிர்காலத்தை அளிக்கும் என்று நம்பினோம்’ என்று அந்தக் கணத்தை நினைவுகூர்ந்தார் கிரானாடோ. கிரானாடோவுடன் இணைந்து தொழுநோய் மருத்துவமனைக்கு சென்று வந்தார் எர்னஸ்டோ.
அடுத்த கட்ட பயணத்தை இரு நண்பர்களும் சேர்ந்து தொடங்க இருந்தனர். கிரானாடோ தனது மோட்டார் பைக் மூலம் எர்னஸ்டோவின் சைக்கிளை கயிறு கட்டி இழுத்துச் செல்லவேண்டும். ஆனால், அது சரி வரவில்லை என்பது தெரிந்ததும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார் எர்னஸ்டோ. அன்று இரவு, லொரெடோ என்னும் சிறு நகரத்தில் தங்க, காவல் துறையினர் இடம் கொடுத்தனர். எர்னஸ்டோ ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் என்பதைத் தெரிந்ததும் உள்ளூர் மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இன்னும் சில தினங்கள் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். எங்கள் நகரத்தின் ஒரே மருத்துவராக இங்கேயே இருந்துவிடுங்களேன் என்றும்கூட ஆசை காட்டினார்கள். Santiago del Estero என்னும் இடத்தில் ஓர் உள்ளூர் பத்திரிகை நிருபர் எர்னஸ்டோவைப் பேட்டி கண்டார். ‘என்னைப் பற்றி என் வாழ்நாளில் முதல் முறையாக வெளிவந்த கட்டுரை ’ அது.
ஒருமுறை தனது சைக்கிள் டயரை பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நபர் ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்தார். முந்தைய தினம் பத்திரிகை நிருபர் கேட்ட அதே கேள்விகள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? எதற்காக இந்தப் பயணம்? எர்னஸ்டோ அளித்த பதில் அவரைத் திகைக்கவைத்தது. ‘வீட்டைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். ஆனால் குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லையா?’ பல முறை யோசித்தும் எர்னஸ்டோவுக்கு விடை கிடைக்கவில்லை. ஆர்வமும் துடிதுடிப்பும் போதாதா, நோக்கம் என்றொன்று இருக்கவேண்டுமா என்ன?
சால்டா என்னும் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது ஒரு வனப்பகுதியைக் கடக்கவேண்டியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார். அடர்ந்த கானகம். நெருக்கமாக வளர்ந்திருக்கும் மரங்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மயக்கும் இயற்கை காட்சிகள். தன்னை மறந்து அப்படியே நின்றுகொண்டிருந்தார் எர்னஸ்டோ. ‘எனக்குள் உருவாகி, வளர்ந்துகொண்டிருந்த ஏதோ ஒரு விஷயம்… பக்குவமடைந்துவிட்டதை உணரமுடிந்தது.’ நகரத்தின் பெருத்த ஒலி, கால்களில் சக்கரம் பொருத்தியது போல் ஓடும் மனிதர்கள், இயந்திரத்தனமான வாழ்க்கை அனைத்தின்மீதும் சலிப்பு ஏற்பட்டது. இதுதான் அமைதி. நகரம், ‘அமைதிக்கு நேர் எதிரான நிலைகொண்டது.’
ஹார்லே டேவிட்சன் (அமெரிக்க இரு சக்கர வாகனம்) வண்டி ஓட்டிக்கொண்டு ஒருவர் எதிரில் வந்தார். வா, கயிறு போட்டு அழைத்துச் செல்கிறேன் என்று வரவேற்பும் அளித்தார். காற்று முகத்தில் அறைய, மோட்டார் வண்டியின் பின் பறந்து செல்வது சுகம்தான் என்றாலும் டயர் பஞ்சர் ஆகி முட்டுச் சந்தில் உட்கார்வதைத் தவிர்க்கவேண்டும் அல்லவா? மறுத்துவிட்டார். இருவரும் ஒன்றாக காபி அருந்தி, கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டார்கள்.
அருகிலுள்ள ஒரு நகரத்தை எர்னஸ்டோ வந்தடைந்தபோது, ஒரு பெரிய சரக்கு வண்டியில் இருந்து ஹார்லே டேவிட்சன் கீழிறக்கப்படுவதைக் கவனித்தார். சற்று முன் சந்தித்த நபரின் உடலும் அடுத்ததாக இறக்கிவைக்கப்பட்டது. அவன் ஒரு ‘தற்கொலைப் போராளி’ என்று நினைத்துக்கொண்டார் எர்னஸ்டோ. இவனுடைய பயண நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? ‘ஒரு சாலையின் திருப்பத்தில் மரணத்தைச் சந்தித்திருக்கும் இந்த வீரனை யார் அறிவர்களா?’
சால்டா வந்தடைந்தார். அன்றிரவு ஒரு லாரியில் அமர்ந்து உறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தோளில் தட்டி ஓட்டுனர் எழுப்பும்வரை நல்ல உறக்கம். இப்படியே சிறிது சிறிதாக முன்னேறி பொலிவியா வரை சென்றுவிடமுடியாதா என்ன? ஆசைதான். ஆனால் அது சாத்தியமில்லை என்பது தெரிந்தது. மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாதது பற்றி வருத்தத்துடன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். ‘வழியில் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்டேன். எரிமலையொன்று விழிப்புடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். நான் திரும்பிவிடுகிறேன்.’ இன்னும் சில வாரங்களில் நான்காம் ஆண்டு படிப்புத் தொடங்கவிருந்தது.
நினைவுகளை அசைபோட்டபடி திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. தொழுநோயாளிகள், மருத்துவர்கள், ஏழைகள், சாலையோரவாசிகள், விவசாயிகள் என்று எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை விதமான அனுபவங்கள்! பழங்குடிகளின் வாழ்க்கை முறையை எர்னஸ்டோ நேரில் கண்டது அதுவே முதல் முறை. அர்ஜென்டினாவின் நிஜமுகத்தைக்கூட முதல்முதலாக கண்டதுபோல் இருந்தது எர்னஸ்டோவுக்கு. நகரங்கள் முன்வைக்கும் தோற்றம் போலியானது. ஒரு நாட்டின் ஆன்மா வெளிப்படையாக தெரிவதில்லை. அதைத் தேடிப்போகவேண்டியிருக்கிறது. அர்ஜென்டினா மட்டுமல்ல மற்ற நாடுகளுமகூட இப்படித்தான் ‘இரட்டை வேடம்’ பூண்டிருக்கும் போலும்.
பயணம் முடிவுக்கு வந்தபோது, ஆறு வாரங்களில் 12 மாகாணங்களையும், 4000 கிமீ தூரத்தையும் எர்னஸ்டோ கடந்து சென்றிருந்தார். தனது சைக்கிளைப் பழுது பார்ப்பதற்காக மோட்டார் பொருத்தி கொடுத்த Amerimax Company-யைத் தொடர்பு கொண்டார் எர்னஸ்டோ. இவ்வளவு தூரம் மோட்டார் ஓடியிருக்கிறதா என்று வியந்த நிர்வாகம், எர்னஸ்டோவுக்குக் கடிதம் எழுதியது. இந்த விஷயத்தை எங்கள் விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனுமதித்தால் இலவசமாகவே வண்டியைச் சரிசெய்து தருவோம். எர்னஸ்டோ ஒப்புக்கொண்டு பதில் கடிதம் எழுதினார். ‘இந்த சைக்கிள் அபாரமான முறையில் என்னுடன் ஒத்துழைத்தது. கடைசியில்தான் கம்ப்ரெஷன் பழுதடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனவே இதனை உங்களிடம் அனுப்பிவைக்கிறேன்.’
வீட்டுக்குள் நுழையும்போதே எர்னஸ்டோ யோசிக்கத் தொடங்கிவிட்டார். அடுத்த பயணம் எப்போது?


பயணம் ஆரம்பம்

அடுத்த பயணம் குறித்து யோசிப்பதற்கு முன்பு காதல் குறுக்கிட்டுவிட்டது. சிச்சினா (முழுப்பெயர், Maria del Carmen ‘Chichina’ Ferreyra) எர்னஸ்டோவுக்கு முன்னரே அறிமுகமானவர் என்றாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திருமண விழாவில் பதினாறு வயது சிச்சினாவைக் கண்டபோது, எர்னஸ்டோவுக்கு விவரிக்கமுடியாத பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. உண்மையில் அது இரு தரப்பு ஈர்ப்பாகவே இருந்தது. சிச்சினாவின் வளமான செல்வப் பின்னணி, சமூக மதிப்பு, எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் அவளுடைய குடும்ப நிலை அனைத்தையும் மீறி இருவருக்கும் இடையில் காதல் துளிர்த்தது.
பிப்ரவரி 9, 1951 அன்று இரண்டாவது பயண வாய்ப்பு எர்னஸ்டோவைத் தேடிவந்தது. கப்பலில் செவிலியராகப் பணியாற்றுவதற்காக அரசுப் பொது சுகாதார நிலையம் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தது. பிரேசிலை நோக்கிச் செல்லும் Anna G என்னும் டாங்கர் கப்பலில் எர்னஸ்டோ இணைந்துகொண்டார். பேடகோனியா, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, பிரிட்டிஷ் கினியா, வெனிசுலா மற்றும் பிரேசிலிய துறைமுகங்களுக்கு இந்தக் கப்பல் அவரை இட்டுச் சென்றது.
எதிர்பார்த்ததைவிடவும் விரிவான, நீண்ட பயணம்தான். ஆனாலும் எர்னஸ்டோவுக்கு முழுத் திருப்தியில்லை. பல புதிய பகுதிகளில் கால் பதிக்க முடிந்தது மறக்கமுடியாத அனுபவம் என்றாலும் கால் பதிப்பதைத் தாண்டி வேறு எதுவும் செய்யமுடியவில்லை.
துறைமுகங்களில் கப்பல் ஒதுங்கும்போது, இறங்கிவந்து ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் அழைப்பு வந்துவிடும்.
மொத்தத்தில் நிலப்பரப்புகளில் சிறிதளவு நேரத்தையே செலவிடமுடிந்தது. ஜூன் மத்தியில் பியூனஸ் ஏர்ஸ் திரும்பிய எர்னஸ்டோ தனது கப்பல் கனவை அத்தோடு துறந்தார். திரும்பும்போது தன் தந்தைக்கு ஒரு வித்தியாசமான பரிசையும் கொண்டு வந்திருந்தார். ஒரு குறிப்பேடு. பயண அனுபவங்கள், பொன்மொழிகள், சிந்தனைகள் ஆகியவற்றால் அது நிரம்பியிருந்தது. சிறுகதை எழுதுவதற்கும்கூட முயற்சி செய்திருந்தார்.
ஜூன் இறுதியில் மீண்டும் மருத்துவப் பள்ளியில் இணைந்துகொண்டுவிட்டார். இப்போது எர்னஸ்டோவுக்கு 23 வயது நடந்துகொண்டிருந்தது. கல்லூரி போரடிக்க ஆரம்பித்துவிட்டது. முந்தைய சைக்கிள் பயணமும், அதிகம் காணமுடியாத கப்பல் பயணங்களும் அவரை இம்சித்துக்கொண்டிருந்தன. சிச்சினாவுடன் இணையமுடியுமா என்னும் கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. சிச்சினாவின் வீட்டில் இருந்து சம்மதம் பெறுவது சாத்தியமில்லை என்பது இருவருக்கும் தெரிந்திருந்தது.
அக்டோபர் 17ம் தேதி கோர்டோபாவுக்குச் சென்று கிரானோடோவைச் சந்தித்தார் எர்னஸ்டோ. திராட்சைக் கொடிகளுக்குக் கீழே, இனிப்பான மேட் பானத்தை (ஒருவித தேயிலையில் இருந்து தயாரிக்கப்படும் அர்ஜென்டினாவின் தேசிய பானம்) பருகியபடி, ‘ துயரமான வாழ்வின் சமீபகால நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தனர்.’ நார்ட்டன் 500 ரக மோட்டார் சைக்கிள், லா பாடெரோஸாவை (La Poderosa II, சக்திவாய்ந்தது என்று பொருள்) பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.
சென்ற முறை சந்தித்ததைவிடவும் அதிக சலிப்பு கொண்டவராக கிரானாடோ காட்சியளித்தார். தொழுநோய் மருத்துவமனையில் அவருக்குத் தரப்படும் ஊதியம் குறைவாக இருந்ததைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார். எர்னஸ்டோவும் தன் உள்ளத்தில் சுமந்துகொண்டிருந்த ஏக்கங்களை வெளிப்படுத்தினார். மருத்துவக் கல்லூரியும் பாடங்களும் அவரைச் சோர்வடைய வைத்திருந்தன. இவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால் செய்யவேண்டியது ஒன்றுதான். வெளியேறவேண்டும். ‘வெப்ப மண்டலக் கடல்களில் பயணம் செய்வது, ஆசியா முழுவதும் சுற்றித் திரிவது. தொலைதூரப் பிரதேசங்களுக்கு எங்களைக் கொண்டு சென்றன கனவுகள்.’
திடீரென்று அந்தக் கேள்வி எழுந்தது.
‘வட அமெரிக்காவுக்கு நாம் ஏன் போகக்கூடாது?’
‘எப்படி?’
‘லா பாடெரோஸாவில்தான்.’
தொடங்கி வைத்தவர் கிரானோடோ. எர்னஸ்டோவைக் காட்டிலும் அவருக்கே இந்தப் பயணம் அதிகம் தேவைப்பட்டது. முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த கிரானாடோ, இந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. எர்னஸ்டோ போன்ற ஒரு பயணத் தோழன் கிடைத்துவிட்டபிறகு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இன்னொன்று கிடைக்காமலேகூட போய்விடலாம்.
எர்னஸ்டோ உடனே ஒப்புக்கொண்டார். என்ன பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு வென்றுவிடுவது என்று பேசிக்கொண்டார்கள்.
உடனடியாக கனவு செயல்வடிவம் பெறத் தொடங்கியது. கடவுச் சீட்டுகள், சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பெறும் முயற்சிகளை இருவரும் தொடங்கினார்கள்.
எர்னஸ்டோ தன் விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். பிறகு நடந்ததை எர்னஸ்டோ சீனியர் நினைவுகூர்ந்தார்.
‘1951ல் நடந்தது அது. அப்போது கோர்டோபாவைச் சேர்ந்த ஒரு அழகான இளம் பெண்ணிடம் எர்னஸ்டோ நட்புகொண்டிருந்தான். அவன் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வான் என்றுதான் நானும் எனது குடும்பத்தினரும் நினைத்திருந்தோம்.
’நான் வெனிசூலாவுக்குச் செல்லப்போகிறேன் அப்பா!’ என்று எர்னஸ்டோ ஒருநாள் என்னிடம் கூறினான்.
‘எவ்வளவு நாள்களுக்கு நீ அங்கே இருக்கப் போகிறாய்?’ என்று நான் கேட்டேன். ஒரு வருடத்துக்கு என்று அவன் பதிலளித்தான். நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.
‘அப்படியானால் சிச்சினா?’ என்று நான் கேட்டேன்.
‘அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றால் காத்திருப்பாள்’ என்று பதில் வந்தது.
அவன் அப்பெண்ணை மிகவும் நேசித்ததை நான் அறிந்திருத்தால், புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற அவனது வேட்கைக்கு அது தடையாக இருக்கும் என்று நினைத்தேன். எர்னஸ்டோவை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.’
முடிந்தவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்வுகளை எடுத்து முடிக்கவேண்டும். இது எர்னஸ்டோவின் பணி. ஆல்பர்டோவின் வேலை, மோட்டார் சைக்கிளைத் தயார் செய்து வைப்பது. பிறகு, வழித்தடத்தைத் தெரிந்துகொள்வது.
வீட்டில் அனுமதி வாங்கியாகிவிட்டது. பயண ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. புறப்படவேண்டியதுதான் பாக்கி. எர்னஸ்டோ கனவு காண ஆரம்பித்துவிட்டார். ‘நாங்கள் மேற்கொள்ள இருந்த பயணத்தின் முழுப் பரிமாணமும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் விரிந்து கிடக்கும் புழுதி நிறைந்த சாலையும், வடக்கு நோக்கிய பயணத்தில் விரைந்து கொண்டிருந்த எங்களுடைய மோட்டார் சைக்கிளும்தான்.’
ஜனவரி 4, 1952 அன்று அட்லாண்டிக் கரையையொட்டி அவர்கள் பயணம் ஆரம்பமானது. போகும் வழியில் ஒரே ஒரு வேலை பாக்கியிருக்கிறது. சிச்சினாவிடம் இருந்து விடைபெறவேண்டும். மிராமரில் உள்ள ஒரு உல்லாச வீட்டில் சிச்சினா தன் அத்தையுடன் தங்கியிருந்தார் என்று தகவல் வந்ததும், அங்கு அவரைச் சந்திக்க முடிவு செய்தார் எர்னஸ்டோ. கிரானோடாவும் ஒப்புக்கொண்டார்.
எர்னஸ்டோவின் மாமா, காய்கறிகளும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும் கொடுத்தனுப்பியிருந்தார். வண்டியின் பின்பக்கத்தில் பாரம் அதிகமிருந்தது. சிறிது கவனம் குறைந்தாலும் சமநிலை குலைந்துவிடும் அபாயம் இருந்தது. என்றாலும் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பறந்துகொண்டிருந்தனர்.
எர்னஸ்டோ சிச்சினாவுக்காக ஒரு பரிசுப் பொருளைக் கையோடு எடுத்து வந்திருந்தார். அது ஒரு நாய்க்குட்டி. அதற்கு ஆங்கிலத்தில் ‘கம் பேக்’ என்று பெயரிட்டிருந்தார் எர்னஸ்டோ. பயணம் முடிந்ததும் மீண்டும் சிச்சினாவின் கரங்களுக்குத் திரும்பிவிடவேண்டும் என்பதால் அந்தப் பெயர். வழியில் இரண்டு முறை ‘திரும்புதல்’ கீழே விழுந்தது. ஒரு குதிரையின் காலில் சிக்கி மிதிப்பட்டது. தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.
எர்னஸ்டோவின் மனம் முழுக்க சிச்சினா. பயணம் முடியும்வரை சிச்சினா காத்திருப்பாளா? அவளுடன் ஒன்றிணைவது சாத்தியமா? ஆல்பர்டோவின் கவலையோ தன் பயண நண்பனின்மீதே இருந்தது. காதல்வசப்பட்டிருக்கும் இப்படியொரு இளைஞனை அழைத்துக்கொண்டு நீண்டதொரு பயணத்தை மேற்கொள்வது சாத்தியமா? தொடங்குவதற்குள் இந்தப் பயணம் முடிந்துவிடுமா? நான் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனா? ஒருவேளை தனியாகக் கிளம்பியிருக்கவேண்டுமோ? சிச்சினா, காதல், நாய்க்குட்டி போன்ற விவகாரங்கள் சிக்கீரம் முடிந்துவிடவேண்டும் என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார் கிரானோடோ.
சிச்சினா தங்கியிருந்த இடத்தில் இரு தினங்கள் தங்கியிருந்து அவளது உறுதிமொழியையும் அன்பையும் பெற்றுக்கொண்டு கிளம்பலாம் என்று எர்னஸ்டோ சொல்லியிருந்தார். ஆனால், இரு தினங்கள் எட்டு தினங்களாக வளர்ந்த நின்றது. கிரானோடா அமைதியாகக் காத்திருந்தார். அவ்வப்போது சீண்டிவிட்டுக்கொண்டும் இருந்தார். என்ன, பெருங்கவிஞரே உமது காதலியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாகிவிட்டதா?
எர்னஸ்டோ சிச்சினாவின் விரல்களில் விரல்கள் சேர்த்து, கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ‘பிரிவின் கசப்பு என் மூச்சோடு கலந்துவிட்டது. இறுதியாக, சாகசங்களை நோக்கி வீசும் காற்றால் வேறு உலகங்களை நோக்கி நான் தூக்கிச் செல்லப்பட்டேன்.’ விடைபெறும் தருணம் வந்துவிட்டது. சிச்சினா நான் திரும்பும்வரை காத்திருப்பாயா? சிச்சினா தலையசைத்தாள்.
எர்னஸ்டோ அளித்த ஜெர்மன் ஷெப்பர்டை சிச்சினா பெற்றுக்கொண்டார். பதினைந்து அமெரிக்க டாலரை எர்னஸ்டோவுக்கு அளித்தார். அமெரிக்காவில் இருந்து தலைக்கு ஸ்கார்ஃப் வாங்கி வருவதற்காக.
‘கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. குளிர்காற்று நிலத்தை நோக்கி வீசியது. இந்தக் கரையோடு என்னைப் பிணைத்ததோர் மடியில் என் தலை சாய்ந்திருந்தது. சூழலின் அமைதியில் என்னுள்ளே ஒலித்த குரலின் அதிர்வுகளின் லயத்தில், முழுப் பிரபஞ்சமும் மிதந்து கொண்டிருந்தது.’
எர்னஸ்டோ விடைபெற்றுக் கொண்டார்.


கொஞ்சம் உணவு, நிறைய கனவு

ஆல்பர்ட்டோவின் பல்கலைக்கழக நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது அவர் மனைவி குழுப்பத்துடன் அவர்களைப் பார்த்தார். புழுதி படிந்த ஆடைகளுடன் இரு ஜிப்ஸிகள் போல் அவர்கள் தோற்றமளித்தார்கள்.
‘இன்னும் ஒரு வருடத்தில் டாக்டர் பட்டம் கிடைத்துவிடும். எதற்கு இந்தத் தேவையற்ற பயணம்? எப்போது திரும்பப் போகிறீர்கள் என்பதே தெரியாமல் எதற்கு அநாவசியமாக உடலை இப்படி வருத்திக்கொள்கிறீர்கள்?’
மூன்று தினங்கள் அவர்களுடன் தங்கியிருந்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள். தெற்கில் உள்ள பாஹியா ப்ளாங்கா என்னும் துறைமுக நகரில் எர்னஸ்டோவின் நண்பர்கள் இருந்தனர். அவர்களுடன் இணைந்து நகரத்தைச் சுற்றி வந்தார்கள். வண்டியைப் பழுது பார்த்தார்கள். கையிருப்பில் இருந்த ரொட்டியும் இறைச்சியும் காலியாகிக்கொண்டிருந்தது. பணமும் கூடத்தான். கடைசியாக அவர்கள் நன்றாகச் செலவிட்டது இங்குதான்.  உணவு கிடைக்கும்போதெல்லாம் ஒட்டகம் போல் வயிறு முழுக்கச் சாப்பிட்டுவிட்டு பிறகு பட்டினி கிடக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார் எர்னஸ்டோ.
வண்டியின் பாரம் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக இருந்ததால் அவ்வப்போது வண்டி சாய்ந்தும் சரிந்தும் சென்றுகொண்டிருந்தது. போதும், இனி நான் ஓட்டுகிறேன் என்று சொல்லி எர்னஸ்டோ பொறுப்பேற்றுக்கொண்டார். ‘நேரம் வீணாகிப் போனதைச் சரிக்கட்டுவதற்காக வேகமாக ஓட்டினேன். ஒரு வளைவில் மணல். மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்தது. இந்தப் பயணத்திலேயே இதுதான் மோசமான விபத்து. ஆல்பர்ட்டோவுக்குக் காயமெதுவும் ஏற்படவில்லை. ஆனால் சிலிண்டரின் கீழ் என் கால் சிக்கி சூடுபட்டுப் புண்ணானது.’
மழை குறுக்கிடும்போது எஸ்டான்ஷியா என்று அழைக்கப்படும் பண்ணை நிலம் அல்லது கால்நடைப் பண்ணையில் ஒதுங்கிக்கொண்டார்கள். அல்லது ரயில் நிலையம் கண்ணில் பட்டால் மரக்கட்டை போல் படுத்து உறங்கினார்கள். ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருந்த வண்டி, சகதியில் சிக்கும்போதெல்லாம் விழுந்தது. சரளைக் கற்கள் நிரைந்த சாலையில் விழுந்து எழுவதும் வாடிக்கையாகிப் போனது.
அதிகாலை வேளை, உறக்கம் கலைந்து எழுந்ததும் எர்னஸ்டோ மேட் பானம் தயாரிப்பதற்காக நீர் கொண்டுவர சென்றார். திடீரென்று உடல் நடுங்கத் தொடங்கியது. ‘ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. பத்து நிமிடங்களில், நான் பேய் பிடித்தவனைப் போல் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு பயங்கரமாக நடுங்கத் தொடங்கினேன். குவினைன் மாத்திரைகளால் எந்தப் பலனுமில்லை. வினோதமான தாளங்கள் ஒலிக்கின்ற பறையைப் போல் எனது தலை விண்விண்னென்று தெறித்தது. வடிவமற்ற வண்ணங்கள் கண்முன் சுழன்றன. குமட்டல் ஏற்பட்டது. சிரமப்பட்டு பச்சை நிறத்தில் வாந்தியெடுத்தேன்… எதுவும் சாப்பிடமுடியவில்லை.’
மீண்டு எழுந்து, ஆல்பர்ட்டோவுக்குப் பின்னால் அமர்ந்து அவர்மீது தலையைச் சாய்த்து உறங்கியபடியே பயணத்தைத் தொடர்ந்தார் எர்னஸ்டோ. சோயலே சோயல் என்னும் இடத்தை அடைந்து அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றார். பென்சிலின் ஊசி போடப்பட்டது. அடுத்த நான்கு மணி நேரத்தில் காய்ச்சல் மறைந்தது. ஆனாலும் மருத்தவர் அவரை வெளியேற அனுமதிக்கவில்லை. அடுத்த சில தினங்களுக்கு நோயாளி உடையில் மெலிந்த தேகத்துடன் அசட்டு தாடியுடன் படுத்து கிடந்தார் எர்னஸ்டோ.
போகலாம் என்று மருத்துவர் இறுதியாக அனுமதி அளித்தபோது சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட உணர்வுடன் வெளியில் பறந்து வந்தார் எர்னஸ்டோ. ஏரிகளை நோக்கி வண்டி புறப்பட்டது. மேடுகளிலும் பள்ளங்களிலும் ஏறி இறங்கும்போதெல்லாம் வண்டியின் பாகங்கள் சத்தம் எழுப்பியபடி குலுங்கி ஆடின. ஆல்பர்ட்டோ ஒயர் கொண்டு சிலவற்றை இறுக கட்டியிருந்தார்.
இறைச்சி இப்போது முழுக்கவும் காலியாகியிருந்தது. இரவு நேரங்களில் வெட்டவெளியில்தான் தங்கியாகவேண்டும். கூடாரம் அமைத்து, தரையில் படுத்து தவழ்ந்தபடி உள்ளே நுழைந்துகொண்டார்கள். சிறு சத்தம் கேட்டாலும் வெளியில் வந்து ஒரு சுற்று சுற்றி வந்து ஆபத்து எதுவுமில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு, விட்ட இடத்திலிருந்து உறக்கத்தைத் தொடரவேண்டும்.
வருடிக்கொடுக்கும் தென்றல் காற்று எப்போது உலுக்கியெடுக்கும் சூறாவளியாக மாறும் என்று சொல்லமுடியாது. அடக்கமாக இருக்கும் கூடாரம் எப்போது பிய்த்துக்கொண்டு பறக்கும் என்று தெரியாது குளிரும் மழையும் வெய்யிலும் மாறிமாறித் தாக்கின.
San Martin de los Andes  நோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் இந்த முறை எர்னஸ்டோவே வண்டியை ஓட்டினார். மீண்டும் ஒரு திருப்பம் வந்தது. மீண்டும் ஒருமுறை வண்டி கீழே விழுந்தது. சலசலத்துச் செல்லும் நீரோடையில் விழுந்தார்கள். இந்த முறை வண்டி மிகுந்த சேதமடைந்தது. கூடுதலாகப் பின்பக்க டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பழுது பார்க்கும் வேலைதான். பின்பக்கத்தில் உள்ள அத்தனை பாரத்தையும் அகற்றி கீழே வைத்துவிட்டு நெம்புகோலால் டயரை விடுவித்து, ஒட்டி, மாட்டி முடிப்பதற்குள் அலுப்பும் சலிப்பும் ஆக்கிரமித்துக்கொண்டன. அன்றைய இரவை பண்ணைத் தொழிலாளர்களின் சமையலறையில் கழித்தார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கே பரவிய சமையல் புகை எர்னஸ்டோவை எழுப்பிவிட்டது. தொழிலாளர்களுடன் இணைந்து மேட் பானம் அருந்தினார். கசப்பான மேட் பருகிய தொழிலாளர்கள், எர்னஸ்டோவின் இனிப்பு மேட் பானத்தைக் கிண்டலடித்தார்கள். பெண்கள் மட்டுமே இனிப்பு சேர்த்து அருந்துவார்களாம். எர்னஸ்டோ அவர்களுடைய வாழ்நிலையைத் தெரிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அவர்கள் அவ்வளவு இலகுவாகப் பேசுபவர்களாக இல்லை. ‘அவர்கள் அதிகம் பேசவில்லை. ஆராகானிய (Aragon) இனத்தைச் சேர்ந்தவர்களின் பொதுவான பண்பு அது. கடந்த காலத்தில் அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்களும், இன்னும்கூட அவர்களைச் சுரண்டி வருபவர்களுமான வெள்ளையர்களைக் கண்டு அவர்கள் இப்போதும் அஞ்சினார்கள். நிலத்தைப் பற்றியும் அவர்களுடைய வேலைகளைப் பற்றியும் நாங்கள் கேட்டபோது, அவர்கள் தங்கள் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, தெரியாது என்றோ இருக்கலாம் என்றோ பதிலளித்தார்கள்.’
அருவருப்பான ஆடைகள் அணிந்து, கிடைத்ததை வாய் நிறைய அள்ளிப் போட்டுக்கொண்டு (எர்னஸ்டோவோடு ஒப்பிட்டால் ஆல்பர்ட்டோ கொஞ்சம் நாகரிகமாக உண்டார் என்று சொல்லலாம்) ஆங்காங்கு  ‘பன்றிகளைப் போல்’ திரிந்ததாக நினைவுகூர்கிறார் எர்னஸ்டோ. அவர்களை மருத்துவர்கள் என்று அழைக்க யாரும் இல்லை அங்கே. அவர்கள் சத்தியம் செய்திருந்தாலும் யாரும் நம்பத் தயாரில்லை.
ஆந்திய மலைத்தொடரின் அடுக்கடுக்கான குன்றுகளுக்கு இடையில் வளைந்து வளைந்து சென்ற சாலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். San Martin de los Andes  மரங்கள் அடர்ந்த மாபெரும் மலைகளால் சூழப்பட்டிருந்தது. ‘சுற்றுலாத் தலமாக மாறிய பிறகே இந்நகரத்தின் தட்பவெப்பநிலை மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. அந்நகர மக்களின் பிழைப்புக்கும் வழி கிடைத்தது.’
உள்ளூர் மருத்துவமனையில் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்குமிடம் வேண்டினார்கள். அருகில் தேசியப் பூங்கா அலுவலகம் இருக்கிறது, அங்கே உங்கள் தந்திரம் வேலை செய்கிறதா பாருங்கள் என்று சொல்லி திருப்பியனுப்பி விட்டார்கள். இங்கு அவர்களுக்கு இடம் கிடைத்தது. சமைத்துக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டது. வைக்கோலின் கதகதப்பில் நன்கு உறங்கினார்கள்.
நாகரிகத்தின் நிழல் படியாத அந்த நகரத்தைக் கண்டதும் எர்னஸ்டோ மயங்கினார். கனவு காணவும் ஆரம்பித்துவிட்டார். ‘ஒரு ஆய்வுக்கூடத்தை அமைக்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். அந்த ஆய்வுக்கூடத்தில் ஏரியை நோக்கிய பெரிய ஜன்னல் இருக்கும். குளிர்காலத்தில் அனைத்தும் பனியால் மூடப்பட்டிருக்கும்போது, ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்வதற்கு ஒரு ஹெலிகாப்டர் இருக்கும். அங்கே நாங்கள் படகில் சென்று மீன் பிடிப்போம். காட்டுக்குள் எண்ணற்ற முறை பயணம் செய்வோம்.’
ஒரு ஓட்டை வண்டியும் அன்றைய தினம் வாங்கிய சிறிதளவு மாட்டிறைச்சியும் உடன் ஒரு நண்பனும் மட்டுமே இருந்தபோதிலும் கனவுகளில் ஹெலிகாப்டர்கள் சத்தமிட்டபடி வளைய வந்தன. ஆந்திய மலைத்தொடர் எர்னஸ்டோவை வசீகரித்திருந்தது. இப்படியொரு அழகு பிரதேசம் இருக்கும்போது யார் வீடு திரும்புவார்கள்? பேசாமல் இங்குள்ள ஏரிக்கரையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டால் என்ன?


துப்பாக்கி வெடித்தது

ஏரிக்கரைகளைக் கடந்து அவர்கள் யூனின் டி லாஸ் ஆண்டிஸ் (Junin de los Andes) என்னும் கிராமத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். காருவே (Curruhué) கிராண்ட் ஏரியைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று எர்னஸ்டோ விரும்பினார். பச்சை நிறத்தில் படர்ந்திருந்த அந்த ஏரியை மோட்டார் சைக்கிளில் கடக்கமுடியாது என்பதால் அருகிலுள்ள ஒரு வனக் காப்பாளரின் அறையில் வண்டியைப் போட்டுவிட்டு கரடுமுரடான பாதையில் இருவரும் நடக்கத் தொடங்கினர்.

ஏரிக்கு மேலே ஒரு வாத்து பறந்துசென்றது. ஆல்பர்ட்டோ சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். யாருமில்லை. பசிக்கு இதைவிட நல்ல விருந்து கிடைத்துவிடுமா என்ன? குறி பார்த்துச் சுட்டார். வாத்து ஏரியில் விழுந்தது. ஏரியில் இறங்கி வாத்தைக் கொண்டு வரும் வேலை எர்னஸ்டோவிடம் வந்து சேர்ந்தது. குளிர்ந்த நீர் அலைகளில் 20 மீட்டர் நீந்தி திணறியபடியே வாத்துடன் கரை ஒதுங்கினார் எர்னஸ்டோ. ‘எனினும் வாத்து வறுவல் சுவையாக இருந்தது.’
உணவு ஆனதும், மலையேறத் தொடங்கிவிட்டனர். பூச்சிகள் வட்டமிட்டபடி கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. மலையேறுவதற்குத் தேவையான உபகரணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இருந்தும் பின்வாங்காமல் தொடர்ந்து பல மணிநேரம் ஏறி, உச்சியை அடைந்தனர். சிறிது நேரம் பனியில் விளையாடிவிட்டு, இருட்டுவதற்குள் இறங்க ஆரம்பித்தனர்.
‘இறங்கி வருவது தொடக்கத்தில் எளிதாக இருந்தது. ஆனால் பின்னர், நாங்கள் பின்தொடர்ந்து வந்த ஓடை ஒரு காட்டாறாக மாறியது. இருபுறங்களிலும் வழுக்குப் பாறைகள். நடப்பது சிரமமாக இருந்தது. ஓரத்திலிருந்து மூங்கில்காட்டின் ஊடாகத்தான் நாங்கள் இறங்கிவரவேண்டியிருந்தது.’ அதற்குள் இருட்டத் தொடங்கிவிட்டது. ஆல்பர்ட்டோவின் இரவு நேரக் கண்ணாடி தொலைந்துவிட்டது. எர்னஸ்டோவின் காற்சட்டையின் கால்கள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. பாதாளத்தில் இறங்குவது போல் இருந்தது எர்னஸ்டோவுக்கு.
அடர்த்தியான குளிரில் ஓடையைக் கடந்து வனக் காப்பாளரின் அறைக்குச் சென்றார்கள். அவர் இருவரையும் வரவேற்று மேட் பானம் கொடுத்து, கிழே விரித்துப் படுக்க ஆட்டுத் தோலும் கொடுத்தார்.
ஜனவரி 1952. எர்னஸ்டோ தன் தாயாருக்கு கடிதம் எழுதினார். ‘அன்புள்ள அம்மாவுக்கு, நாங்கள் சந்தித்த அனுபவங்களையெல்லாம் அப்படியே உனக்குச் சொன்னால், இந்த சில வரிகளின் நோக்கத்துக்கே அது எதிராகப் போய்விடும்… வழியில் எனக்குக் கடும் காய்ச்சல். ஒரு நாள் படுக்கையில் கிடந்தேன்… அதற்குப் பிறகு, பல பிரச்னைகளைச் சந்தித்த நாங்கள் திறமையாக அவற்றையெல்லாம் சமாளித்துவிட்டு, அடர்த்தியான காடுகளுக்கு மத்தியில், ஒரு அழகான ஏரிக்கருகில் இருக்கும் சான் மார்ட்டின் டி லாஸ் ஆண்டிஸை அடைந்தோம். நீங்களும் பார்க்கவேண்டிய இடம் அது. எங்கள் முகம் கறுத்துப் போய்விட்டன. சாலையோரத்தில் தோட்டத்துடன் வீடு தென்பட்டால், அந்த வீடுகளுக்குச் சென்று உணவு கேட்பதும், அங்கேயே தங்கிவிடுவதும் எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது… உன்னை மிகவும் நேசிக்கும் மகன் அன்போடு உன்னை அணைத்துக்கொள்கிறான்.’
ஏழு ஏரிகள் வழியாக, பாரிலோஷே (Bariloche) என்னும் பகுதியை இருவரும் வந்தடைந்தனர். ஒரு ஆஸ்திரியர் காலிக் கொட்டகை ஒன்றில் அவர்களைத் தங்கவைத்தார். எங்கு சென்றாலும், ‘வண்டி பழுதாகிவிட்டது, இன்றிரவு இங்கே தங்கிக்கொள்ள இடம் கிடைக்குமா?’ என்பதுதான் இந்த இருவரின் வாடிக்கையான விண்ணப்பமாக இருக்கும். பெரும்பாலும் அனைவரும் பாவப்பட்டு ஏதாவதொரு மூலையைச் சுட்டிக் காட்டுவார்கள். இந்த முறை கிடைத்தது கொட்டகை. கூடவே, ஓர் எச்சரிக்கையும் கிடைத்தது. ‘கவனமாகக் கதவைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். இங்கே ஒரு அபாயகரமான சிறுத்தை சுற்றிக்கொண்டிருக்கிறது.’
பிரச்னை என்னவென்றால், அந்தக் கொட்டகை குதிரை லாயம் போல் இருந்ததால் கதவின் கீழ் பகுதியை மட்டுமே சாத்திக்கொள்ள முடிந்தது. மிகச் சரியாக ஒரு சிறுத்தையால் தாண்டி வந்துவிடக்கூடிய அளவுக்கே அந்தக் கதவு இருந்தது. பிறகு எங்கிருந்து நிம்மதியாகத் தூங்குவது? ‘விடிந்துகொண்டிருந்தபோது கதவை ஏதோ பிறாண்டும் சப்தம் கேட்டது. பயத்தால் பேச்சிழந்தவனாக என்னருகில் ஆல்பர்ட்டோ. என் கையில் துப்பாக்கி தயாராக இருந்தது. மரங்களிடையே இருந்து ஒளிரும் இரண்டு கண்கள் எங்களை வெறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.’ சிறிது நேரத்தில், ‘கருப்பு உடல் ஒன்று கதவைத் தாண்டி வந்தது. அப்போது உள்ளுணர்வுதான் செயல்பட்டது. அறிவு பொய்த்துவிட்டது. எனது தற்காப்புணர்வு ரிவால்வரின் விசையை அழுத்தியது. வெடியோசை ஒரு கணம் அதிர்ந்து ஒலித்தது.’
கதவருகே கையில் விளக்கோடு யாரோ நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அச்சுறுத்லாக இருந்த சிறுத்தை செத்தொழிந்துவிட்டதா? எனில் இது மெய்யாகவே ஒரு பெரிய உபகாரம் அல்லவா? ஆனால், நடந்தது வேறு. ‘ஆஸ்திரியரின் கனத்த குரலிலிருந்தும், அவர் மனைவியின் அழுகையிலிருந்தும் நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்பதைத் தெரிந்துகொண்டோம். அவர்களுடைய அழுக்குச் செல்லநாய் பாபியை நாங்கள் கொன்றுவிட்டோம்.’ கொலைகாரர்களாக அங்கே படுத்து உறங்கமுடியாது என்பதால் மிச்ச பொழுதை வெட்டவெளியில் கழிக்கவேண்டியிருந்தது.
பிறகு, கால்வாய் வெட்டும் வேலை செய்துவந்த ஒருவரின் வீட்டில் இடம் கிடைத்தது. தனது வீட்டின் சமையலறையில் மற்றொரு நண்பருடன் இரவைக் கழிக்க அவர் அனுமதி அளித்தார். அங்கும் ஒரு பிரச்னை. ‘தலையணையாக நாங்கள் பயன்படுத்திய ஆட்டுத்தோலின் நெடி எரிச்சலைத் தந்ததால், இன்ஹேலரைப் பயன்படுத்தலாம் என்றிருந்தேன். குழலிலிருந்து மூச்சிழுக்கும்போது, எனக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்தவர் விழித்துக்கொண்டார். மூச்சிழுக்கும் சத்தம் கேட்டதுமே சட்டென அசைந்த அவர் பிறகு அசையாமல் படுத்துக்கொண்டார். போர்வைக்கடியில் ஒரு கத்தியைப் பிடித்தவாறு விறைப்பாக, மூச்சை அடக்கிக்கொண்டு அவர் படுத்திருந்ததை நான் உணர்ந்தேன். முந்தைய இரவின் அனுபவத்தின் காரணமாக, கத்தியால் குத்தப்பட்டுவிடுவேனோ என்று பயத்தில் அப்படியே அசையாமல் இருந்தேன்.’ எர்னஸ்டோவைப் போலவே அந்த நபரும் சிறுத்தை பயத்தில் இருந்திருக்கிறார். அவர் இன்ஹேலர் இழுக்கும் ஓசை அவருக்குச் சிறுத்தையின் உறுமலாகத் தெரிந்திருக்கிறது. இன்னொருமுறை எர்னஸ்டோ இன்ஹேலரை இழுத்திருந்தால், அந்த நபர் நிச்சயம் தனது கத்தியைப் பிரயோகித்திருப்பார்.
அர்ஜென்டினா மண்ணில் அது கடைசி நாள். அவர்கள் சிலியின் எல்லையை நோக்கி இப்போது புறப்பட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள் படகில் ஏற்றப்பட்டது. ஏரிகளையும், சுங்கவரி அலுவலகத்தையும், மலைத்தொடரையும் கடந்து முன்னேறிக்கொண்டிருந்தார்கள். படகில் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக வியர்வை பொங்க அவர்கள் உழைத்தார்கள். அங்கிருந்த பல மருத்துவர்கள் எர்னஸ்டோ சந்தித்தார். சிலியில் தொழுநோய் இல்லை என்பதால் தொழுநோய் மருத்துவமனை குறித்து எர்னஸ்டோ பகிர்ந்துகொண்ட அனுபவங்களை (‘அவ்வப்போது அது பற்றி மிகைப்படுத்தியும் பேசினோம்!’) அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டார்கள். ஈஸ்டர் தீவில் ஒரு தொழுநோய் மருத்துவமனை இருப்பதையும், அந்தத் தீவு மிகவும் அழகானது என்றும் அவர்கள் சொன்னதால் அங்கும் சென்று பார்த்துவிடுவது என்று முடிவுசெய்துகொண்டார்கள்.
பெட்ரோஹுவே என்னும் நகரில் இருந்து ஓஸோர்னோ என்னும் பகுதிக்கு ஒரு வேன் செல்வதாக இருந்தது. அதில் இடம் கிடைக்குமா என்று விசாரித்தபோது அங்கிருந்தவர் ஒரு யோசனை கூறினார். எங்களுக்கு ஒரு டிரைவர் தேவைப்படுகிறார், உங்களால் ஓட்டமுடிந்தால் நீங்களும் வரலாம். ஆல்பர்ட்டோ அவசர அவசரமாக எர்னஸ்டோவுக்கு வகுப்பெடுத்தார். பிரேக், க்ளட்ச், கியர், முதல் கியர், இரண்டாவது கியர் என்று தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவர் சொல்ல ஆரம்பித்தார். முன்னால் மோட்டார் சைக்கிளில் அவர் செல்வார். எர்னஸ்டோ பின்தொடரவேண்டும்.
‘நான் வேனைத் தாறுமாறாக ஓட்டினேன். ஒவ்வொரு வளைவையும் சமாளிப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது… கம்பீரமாக நின்றுகொண்டிருநத ஓஸோர்னோ எரிமலைக்குக் கீழே, ஓஸோர்னோ ஏரியையொட்டி அழகான நாட்டுப்புறப் பகுதியில் வளைந்து வளைந்து சென்றது சாலை. ஆனால் விபத்துகள் நிகழ்வதற்கு அதிகமான வாய்ப்புகள் நிறைந்த இந்தச் சாலையில் இயற்கைக் காட்சியைக் கண்டு ரசிக்கக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை.’
எந்தவித சம்பவமும் நிகழாமல் அந்தப் பயணம் முடிவடைந்தது. குறுக்கே ஓடிய ஒரே ஒரு பன்றிக்குட்டிக்கு மட்டும் அடிபட்டுவிட்டது.


மதுவும் மயக்கமும்

சிலி நாட்டு கிராமப்புறங்கள் வழியாகப் பயணம் தொடர்ந்தது. ‘தரிசாகக் கிடந்த எங்கள் நாட்டின் தென்பகுதியைப் போலன்றி, நிலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டு நிலத்திலும் விவசாயம் செய்யப்பட்டிருந்தது. நட்புணர்வு மிகுந்த சிலி மக்கள் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களை வரவேற்றார்கள்.’ சிலியின் விருந்தோம்பல் பண்பு எர்னஸ்டோவை வெகுவாகக் கவர்ந்தது.
கெண்டைக்கால் வரை நீளும் கால்சட்டை ஒன்றை ஒருவர் எர்னஸ்டோவுக்கு அளித்தார். இன்னொரு வீட்டில் நல்ல இருப்பிடம் கிடைத்தது. உறங்குவதற்கு நல்ல போர்வையும் உண்பதற்கு நல்ல உணவும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அது பாப்லோ நெரூதாவின் நாடு. எல் ஆஸ்ட்ரால் என்னும் பத்திரிகைக்கு எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பேட்டியளித்தனர். அர்ஜென்டினா செய்தித்தாள்கள் போலில்லாமல் சிலியின் தாள்கள் ஏராளமான பக்கங்களைக் கொண்டிருந்தன. இரண்டாவது பக்கத்தில் இப்படியொரு குறிப்பு இடம்பெற்றிருந்தது. ‘இரண்டு அர்ஜென்டைன தொழுநோய் மருத்துவ வல்லுநர்கள் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பயணம். அவர்கள் இப்பொழுது டெமுகோவில் இருக்கிறார்கள். ராபா நூயிக்குப் போக விரும்புகிறார்கள்.’ எர்னஸ்டோ எந்த அளவுக்குத் தன்னைப் பற்றி சவடால் அடித்துக்கொண்டிருந்தால் இப்படியொரு செய்தியும் ‘வல்லுநர்’ என்னும் பட்டமும் கிடைத்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்!
அவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கும்கூட சிலியில் நல்ல மரியாதை கிடைத்தது. வழக்கம் போல் டயர் பஞ்சர் ஆனபோது, அறிமுகமற்றவர்கள்கூட சிரித்த முகத்துடன் உதவிக்கு வந்தனர். எல்லாம் செய்தித்தாள் செய்த மாயம்! ஒரு மருத்துவ வல்லுநருக்கு உதவி செய்யும் பொன்னான வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுமா என்ன? தயவு செய்து எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று வருந்தி அழைத்து இறைச்சியும் ஒயினும் அளித்து மகிழ்ந்தார்கள்.
இப்படித்தான் ஒருமுறை பிரச்னையாகிவிட்டது. மது அருந்துவதற்காகச் சில நண்பர்கள் எர்னஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் வரவேற்றபோது இருவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். சிலி நாட்டு ஒயின் எர்னஸ்டோவை மிகவும் கவர்ந்திருந்தது. கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகம் போல் நிறைய புட்டிகளை அவர் காலி செய்தார். முடித்த கையோடு ஒரு கிராம நடன நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
அதற்குப் பிறகு நடந்ததை எர்னஸ்டோவே பதிவு செய்கிறார். ‘அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எங்கள் வயிற்றிலும் மனதிலும் ஒயினே நிறைந்திருந்தது. பணிமனையில் இருந்த, நன்றாகப் பழகிய மெக்கானிக் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் தன்னுடைய மனைவியுடன் நடனமாடும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். அவனுடைய மனைவி உற்சாகமான மனநிலையிலும் எதற்கும் தயாராகவும் இருந்தாள்.’
மது சாமானியர்களை மட்டுமல்ல வல்லுநர்களையும்கூட மாற்றிவிடுகிறது, தன்னிலை மறக்கச் செய்துவிடுகிறது. ‘மதுவை நிறைய குடித்திருந்த நான் அவள் கையைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றேன். எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவள் என் பின்னால் வந்தாள். ஆனால் தன் கணவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து தன் மனதை மாற்றிக்கொண்டாள்.’
எர்னஸ்டோவால் தன் நிலையை மாற்றிக்கொள்ளமுடியவில்லை. ‘எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. நடன நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் சிறு சச்சரவு ஏற்பட்டது. எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க, நான் அவளை ஒரு கதவை நோக்கி இழுத்தேன். அவள் என்னை உதைக்க முயன்றாள். நான் அவளை இழுக்கவே, அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.’
அதற்குப் பிறகு நடன அரங்கில் இருந்தவர்கள் மருத்துவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள். தப்பினால் போதும் என்று எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் கிராமத்தை நோக்கி ஓடினார்கள். அதிகாலையில் நினைவு திரும்பியபோது எர்னஸ்டோ தனது முந்தைய இரவு சம்பவத்தைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?
ஆனால் அந்தப் பத்திரிகை செய்திக்கு இன்னமும் பலன் இருந்தது என்பதை எர்னஸ்டோ மறுநாள் தெரிந்துகொண்டார். ஒரு புதிய விபத்துக்குப் பிறகு (இந்த முறை ஒரு பசுமாட்டின் கால் மீது வண்டியை சறுக்கி விழுந்தது) சில ஜெர்மானியர்களின் வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது.
வண்டி இன்னமும் சரியாகவில்லை. மேட்டின்மீது ஏறும் ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பாகம் விலகி விழுந்தது. அல்லது வெறுமனே மூச்சு வாங்கியபடி நின்றது. அல்லது உருண்டு விழுந்தது. அமெரிக்கக் கண்டங்களிலேயே உயரமானது என்று சிலியர்களால் அழைக்கப்படும் மாலேகோ என்னும் இடத்தை நோக்கி ஏறத் தொடங்கியபோது, வண்டி மீண்டும் செயலிழந்தது. ஏதாவதொரு வண்டியில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றிச் செல்லவேண்டும் என்பதால் ஒரு நாள் முழுவதும் சாலையிலேயே காத்துக்கிடந்தார்கள். பிறகே வண்டி கிடைத்தது.
குல்லிபுல்லி என்ற ஊரில் தங்கினார்கள். ‘அந்தச் சாலையில் பல செங்குத்தான மேடுகள் இருந்தன. முதலாவது மேட்டில் ஏறத்தொடங்கியதும், லா பாடெரோஸோ உயிரை விட்டுவிட்டது. ஒரு லாரியில் ஏறி லாஸ் ஏஞ்சலஸ் என்னும் நகரை அடைந்தோம். அங்கே மோட்டார் சைக்கிளை ஒரு தீயணைப்புப் படை நிலையத்தில் விட்டுவிட்டு, சிலி ராணுவ லெஃப்டினென்ட் ஒருவரின் வீட்டில் தங்கினோம்… மோட்டார் சைக்கிளில் நாங்கள் சவாரி செய்த கடைசி நாள் அதுதான். மோட்டார் சைக்கிள் இல்லாமல் பயணம் செய்யும் அடுத்த கட்டம் இதைவிடக் கடினமாக இருக்கும் என்று தோன்றியது.’
அந்த அதிகாரி ஒருமுறை அர்ஜென்டினா வந்திருந்தபோது, அவருக்கு அங்கு சிறப்பான வரவற்பு கிடைத்தால், தன்னை உபசரித்த நாட்டில் இருந்து வந்திருந்த இரு மருத்துவர்களைத் தக்கமுறையில் பதில் உபசாரம் செய்யவேண்டும் என்று விரும்பினார். எர்னஸ்டோ அவரிடம் விரிவாக உரையாடினார். தீயணைப்புத் தொழில் குறித்து சில அடிப்படைகளையும் தெரிந்துகொண்டார். தனது குறிப்பேட்டில் பதிவும் செய்துவைத்தார்.
‘எனக்குத் தெரிந்த வரையில், சிலியில் தீயணைப்புப் பணியை பொதுச் சேவையாகத்தான் செய்து வந்தார்கள். இது சிறந்த சேவையாகும். இப்படிப்பட்ட தீயணைப்புப் படைகள் செயல்படும் ஊர்களிலோ அல்லது வட்டாரங்களிலோ, மிகவும் திறமை வாய்ந்த மனிதர்களும்கூட அப்படைக்குத் தலைமை தாங்குவதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள். தீயணைப்புப் படைகளுக்கு வேலையே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள். தெற்கில் தீ விபத்துகள் ஏராளமாக ஏற்படுவதுண்டு. பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் கட்டப்பட்டவை என்பதாலோ, மக்கள் மிகவும் ஏழைகளாகவும் சிறந்த கல்வியறிவைப் பெறாதவர்களாகவும் இருப்பதாலோ, வேறு காரணங்களாலோ, அல்லது இவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததாலோ, தீ விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமாக இருந்தன. தீயணைப்புப் படை நிலையத்தில் நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களில் இரண்டு பெரிய தீவிபத்துகளும், ஒரு சிறிய விபத்தும் ஏற்பட்டன.’
அதிகாரியின் வீட்டில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் தீயணைப்புப் படை நிலையத்துக்குச் சென்று பார்வையிடவேண்டும் என்று எர்னஸ்டோ விரும்பினார். எப்படி தீயணைப்பு வீரர்கள் செயல்படுகிறார்கள், தீயைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை நேரில் காண அவர் விரும்பினார். ஆனால் வழக்கம் போல், பிணங்களைப் போல் அன்றிரவைத் தூங்கி கழித்ததால், அபாயச் சங்கு ஒலிப்பதை அவரால் கேட்கமுடியவில்லை. பணியில் இருந்த ஊழியர்களும் இவர்கள் உறங்குவதை மறந்துவிட்டு, வண்டியுடன் விரைந்துவிட்டனர்.
‘நாங்களோ காலையில் நீண்டநேரம் வரையில் தூங்கிக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகுதான், நடந்தது என்னவென்றே எங்களுக்குத் தெரிந்தது. அடுத்த தீ விபத்தின்போது கண்டிப்பாக எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள்.


நம்பிக்கையற்ற தருணம்

‘லாஸ் ஏஞ்சல்ஸ் எங்களிடமிருந்து விடைபெற்றது. சிறிய ‘சே’வும் பெரிய ‘சே’வும் (அதாவது ஆல்பர்ட்டோவும் நானும்) வருத்தத்துடன் நண்பர்களின் கைகளைக் கடைசி முறையாகக் குலுக்கி விடைபெற்றோம். லாரி சாண்டியாகோவுக்குக் கிளம்பியது. அதன் பின்பகுதியில் லா பாடெரோஸாவின் பிணம்.’
அர்ஜென்டினாவில் சே என்பதன் பொருள் நண்பர், தோழர் என்பதாகும். ஸ்பானிய மொழி பேசுபவர்கள் பிற நாட்டினரை சே என்று அழைக்கும் வழக்கம் இருந்தது. எர்னஸ்டோ குவரோவுக்கு சே என்னும் பெயர் இப்படித்தான் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும்.
இருவரும் சாண்டியாகோவை அடைந்தனர். அங்கு தூதரக அதிகாரி ஒருவரின் அலுவலகத்தில் ஒதுங்கிக்கொள்ள இடம் கிடைத்தது. கோர்டோபாவைப் போல் காட்சியளித்தது சாண்டியாகோ. ‘பரபரப்பான வாழ்க்கை. போக்குவரத்து அதிகம். ஆனால் நிலத்தால் சூழப்பட்ட எங்களுடைய சொந்த நகரத்தையே நினைவுபடுத்தக்கூடிய கட்டிடங்கள், தெருக்கள், தட்பவெப்பநிலை, மக்கள்.’
எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் இப்போது பெருவுக்குச் சென்றாகவேண்டும். பெரு செல்ல அர்ஜென்டைன அயலுறவு அதிகாரியின் கடிதம் தேவை. அந்தக் கடிதத்தைக் கொண்டுதான் விசா வாங்கவேண்டும். ஆனால், அந்த அதிகாரி கடிதம் எழுதித் தர மறுத்துவிட்டார். மோட்டார் சைக்கிளில் பெருவுக்குச் செல்லும் திட்டம் அவரைக் கவரவில்லை போலும். இறுதியில் 400 சிலிய பெஸோக்கள் செலுத்தி கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
‘கடைசியாக, அந்த முக்கியமான நாளும் வந்தது. அன்று ஆல்பர்ட்டோவின் கண்களில் கண்ணீர் பெருக, லா பாடெரோஸாவிடமிருந்து விடைபெற்றோம்.’ உணர்ச்சிபூர்வமான உறவுமுறை என்பதைத் தாண்டி அந்த மோட்டார் சைக்கிள் பல வழிகளில் அவர்களுக்கு உபயோகமாக இருந்தது. பஞ்சர் ஆன டயரை உருட்டியபடி, ஐயா எங்களுக்குத் தங்க இடம் கிடைக்குமா, சிறிது உணவு கிடைக்குமா என்று கேட்டால் யார்தான் மறுப்பார்கள்? வண்டி இல்லை என்றானபிறகு எப்படி பிறருடைய அனுதாபத்தைச் சம்பாதிப்பது?
சாகசப் பயணத்தில் அது ஒரு புதிய கட்டம் என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. ‘காலங்காலமாகத் தொடர்ந்து வரும் பயணிகள் என்ற மரபில் வந்தவர்கள் நாங்கள். நாங்கள் வாங்கியிருந்த பட்டங்கள் மக்களிடமிருந்து எங்களுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்தன. இப்போது நாங்கள் அந்த மரபைச் சேர்ந்தவர்கள் இல்லை. மேட்டுக்குடித் தோற்றம் எங்களிடமிருந்து மறைந்துவிட்டது.’
முதுகில் பையோடு தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சோர்வு அதிகரித்துக்கொண்டே சென்றது. லா ஜியோகோண்டா (La Gioconda) என்னும் நகரத்தில் உள்ள சந்து,பொந்துகள் எதையும் விட்டுவைக்கவில்லை எர்னஸ்டோ. அதிகாலையே சுற்றியலையத் தொடங்கிவிட்டார். கடலை நோக்கி இறங்கும் மலைச்சரிவில் வளைகுடாவை நோக்கி அந்நகரம் அமைந்திருந்தது. தகரக் கட்டடங்கள் அடுக்கடுக்காக அமைந்திருந்தன. இருண்ட தெருக்களில் காணப்பட்ட பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து பேசினார். ‘துர்நாற்றமும் புகையும் மண்டியிருந்த தெருக்களில் நடந்தோம். ஒரு குரூரமான தீவிரத்தோடு வறுமையை உணர முயன்றோம். நகரத்தின் ஆழத்தை அறிய முயற்சித்தோம்.’
ஒரு வயதான ஆஸ்துமா நோயாளியை அவள் இல்லத்துக்குச் சென்று சந்தித்தார் எர்னஸ்டோ. ‘பரிதாபத்துக்குரிய அந்தப் பெண் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். வியர்வை நாற்றமும் சேறுபடிந்த கால்களுமாக அவள் காட்சியளித்தாள். துர்நாற்றம் நிறைந்த அறையில் அடைந்து கிடந்தாள். அவளுடைய அறையிலிருந்த ஆடம்பரப் பொருட்கள் இரண்டு நாற்காலிகள்தாம்.’
சற்றுமுன்னால்தான் ஈஸ்டர் தீவுகள் குறித்த கற்பனையில் ஆழ்ந்துபோயிருந்தார் எர்னஸ்டோ. அழகான நகரம், அழகான பெண்கள், வேலையே செய்யவேண்டியதில்லை, முழுமுற்றான உல்லாசம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட அந்தச் சொர்க்கத்தைக் கண்டுவிட துடித்துக்கொண்டிருந்தார் எர்னஸ்டோ. கப்பல்கள் ஏதேனும் செல்கின்றனவா என்று விசாரித்தபோது, அடுத்த ஆறு மாதங்களுக்குச் சாத்தியமில்லை என்று பதில் வந்தது. சொர்க்கத்தைத்தான் அரும்பாடுபட்டு தேட வேண்டியிருக்கிறது. நரகம் எங்கும் வியாபித்திருக்கிறது. அந்தப் பெண்மணியைக் கண்டபோது, எர்னஸ்டோ சொர்க்கத்தை மறந்துபோனார்.
‘அவளுக்கு ஆஸ்துமா மட்டுமின்றி இதய நோயும் இருந்தது. ஒரு மருத்துவர் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று உணரும் இத்தகைய தருணங்களில்தான் மாற்றம் நிகழவேண்டும் என்று விரும்புகிறார்… ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாள் அந்தப் பெண். அவள் வாழ்ந்து வந்த அந்த சமூக அமைப்பின் அநீதியை ஒழித்துக்கட்டக்கூடிய ஒரு மாற்றம் வரவேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்புகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான், அடிப்படைச் செலவுகளைக்கூடச் சமாளிக்க முடியாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மறைக்க முடியாத மனக் கசப்புக்கு நடுவில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அதன் பிறகு தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரியாகவோ இருப்பதில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் முழுமையான எதிர்மறை சக்திகளாக மாறிவிடுகிறார்கள்.’
வருத்தும் நோய், ஏழைமை, கையாலாகாத்தனம் ஆகியவற்றுடன் சேர்த்து புறக்கணிப்பும் நிகழ்ந்துவிடுவதைக் கண்டு துடித்துப் போனார் எர்னஸ்டோ. ‘இவர்களை ஆதரிக்க வேண்டியிருப்பவர்கள் இவர்களின் நோய்கள் தனிப்பட்ட அவமானங்கள்தான் என்று கருதுகிறார்கள். இத்தகைய ஆரோக்கியமான மனிதர்களால் வெறுத்து ஒதுக்கப்படக்கூடியவர்களாகவும் இவர்கள் ஆகிவிடுகிறார்கள். கண்ணுக்குத் தென்படும் அடிவானமாக மறுநாளை மட்டுமே கொண்டுள்ள இந்த மக்களது வாழ்வில்தான் உலகத் தொழிலாளி வர்க்க வாழ்வின் ஆழமான அவலத்தை நம்மால் காணமுடியும்.’
அந்தப் பெண்மணிக்கு எப்படி உதவுவது? எப்படிப்பட்ட ஆறுதலை அளிப்பது? எர்னஸ்டோ திகைத்து நின்றார். ‘அந்தக் கண்களில் மன்னிப்பை இறைஞ்சும் தாழ்மையான வேண்டுகோள் தெரிகிறது… இன்னும் சிறிது நேரத்தில் கரைந்துவிடப்போகின்ற அவர்களின் உடல்களைப் போலவே, ஆறுதலைக் கேட்டு அடிக்கடி மன்றாடும் பயனற்ற வேண்டுதல்களும் வெற்றிடத்தில் கரைந்துபோய்விடுகின்றன.’
எனில், மாற்றம் என்பது சாத்தியமற்றதா? இந்நிலையை யார் மாற்றுவது? யாருக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது? அவர்கள் என்ன செய்கிறார்கள்? இப்படிப்பட்டவர்கள் தவிர்க்கவியலாதவர்கள் என்று அவர்கள் சொல்லப்போகிறார்களா? பிச்சைக்காரர்களும் நோயாளிகளும் இல்லாத இடமே இல்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்ளப் போகிறார்களா? ‘அபத்தனமான ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் அமைந்த இந்த நியதி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. ஆனால் அரசாங்கம் தனது படைகளைப் பெருக்குவதில் செலவிடுகின்ற நேரத்தைக் குறைத்துக்கொண்டு, சமூகரீதியாகப் பயன் தருகின்ற பணிகளில் அதிகப் பணத்தை, மிக மிக அதிகமான பணத்தைச் செலவிழக்க வேண்டிய நேரம் இது.’
வாடிக் கிடந்த அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அளிக்க எர்னஸ்டோவிடம் எதுவுமில்லை. எப்படிப்பட்ட உணவை உட்கொள்ளவேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகள் கூறினார். சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். தன்னிடம் இருந்த சில மாத்திரைகளை அளித்தார். பணிவான குரலில் அவள் நன்றி தெரிவித்தாள். குடும்பத்தினர் எர்னஸ்டோவுக்கு விடைகொடுத்தனர். அவர்களது பார்வையை எர்னஸ்டோவால் மறக்கமுடியவில்லை. ஒரு சொட்டு நம்பிக்கையும் இல்லாமல் வெறித்துப் போயிருந்தது அவர்கள் முகம்.


ஒரு கம்யூனிஸ்ட் தம்பதி

ஈஸ்டர் தீவு இன்னமும் கனவாகவே நீடித்துக்கொண்டிருந்தது. அங்கே செல்வதற்கான அத்தனை சாத்தியங்களும் மறுக்கப்பட்ட நிலையில் அனைவரும் அந்த இடத்தைப் பற்றியே சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தது எர்னஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் தவிக்க வைத்தது. திடீரென்று ஆல்பர்ட்டோ கேட்டார். ‘கப்பல் அதிகாரியின் அனுமதி கிடைக்காவிட்டால் என்ன? யாருக்கும் தெரியாமல் கப்பலுக்குள் சென்று ஒளிந்துகொண்டால் என்ன?’ மாலுமியிடம் மட்டும் சொல்லிவிட்டு கப்பலுக்குள் ஒளிந்துகொண்டுவிடலாம் என்னும் ஆல்பர்ட்டோவின் திட்டம் எர்னஸ்டோவுக்கும் பிடித்துப்போனது.
துறைமுகம் நோக்கி இருவரும் நடந்தார்கள். முதலில் சுங்கவரி அலுவலகம்தான் அவர்களை வரவேற்றது. சிரமம் எதுவுமின்றி கடந்து சென்றார்கள். ஸான் அன்டோனியோ கப்பல் தயாராக இருந்தது. இவர்களும் தயாராகவே இருந்தனர். கப்பல் கரையோரம் ஒதுங்கியது. ஷிப்ட் முடிந்து மேற்பார்வையாளர் உள்ளே நுழைந்தார். ஒவ்வொருவரையும் கவனமாகப் பரிசோதித்து உள்ளே அனுமதிக்கும் அந்த நபரைப் பார்க்கும்போதே தெரிந்தது. கடுமையானவர், உதவக்கூடியவர் அல்லர்.
உடனடியாக ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கிரேன் ஓட்டுநரிடம் உரையாடி அவரை நண்பராக்கிக்கொண்டார்கள். அவர் இவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டார். அன்றைய இரவு முழுவதும் இருவரும் கிரேனுக்குள் காத்திருந்தார்கள். அவர் சைகை கொடுத்ததும் சட்டென்று கப்பலுக்குள் நுழைந்து அதிகாரிகளுக்கான கழிப்பறையில் பதுங்கிக்கொண்டார்கள். வாகான நேரம் அமையும்போது அவர்கள் வெளியில் வரவேண்டும் என்பது திட்டம். ஆனால் அப்படியானவொரு சமயம் வருவதாகவே இல்லை. எவ்வளவு நேரம்தான் கழிப்பறைக்குள் அடங்கியிருப்பது? நாற்றமும் குமட்டலும் அலைகழிக்க, இதற்கு மேலும் பொறுக்கமுடியாது என்று கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்கள்.
கேப்டன் முன்னால் சென்று நின்றார்கள். ‘கப்பலில் ஏறி குதித்துவிட்டால் போதும், எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டாயா?’ இருவருக்கும் உணவு கொண்டு வரச்சொன்னார் கேப்டன். சாப்பிட்டு முடித்ததும் வேலையும் கொடுக்கப்பட்டது. ஆல்பர்ட்டோ உருளைக் கிழங்கு உரிக்கவேண்டும். எர்னஸ்டோ, கழிப்பறையைச் சுத்தம் செய்யவேண்டும். ஆல்பர்ட்டோ புன்சிரிப்புடன் நகர்ந்து செல்ல, எர்னஸ்டோ தலைமீது கை வைத்து உட்கார்ந்துகொண்டார். இதற்கு கழிப்பறையிலேயே அடைந்து கிடந்திருக்கலாமோ!
கோபத்தையும் சலிப்பையும் ஒழித்துக்கட்டிவிட்டு வேலையை செய்துமுடித்தார் எர்னஸ்டோ. அடுத்தடுத்து பல காரியங்களை அவர் செய்யவேண்டியிருந்தது. மண்ணெண்ணெய் விட்டு கப்பலைத் துடைக்கவேண்டும். கூட்டிப் பெருக்கவேண்டும். இடையிடையே உறக்கம், உணவு, ஓய்வு. முடிந்ததும் மீண்டும் வேலை. கப்பல் கட்டணத்துக்கு இணையாக வேலைகள் செய்துகொடுத்துவிடவேண்டும் என்றுதான் எர்னஸ்டோவும் நினைத்தார் என்றாலும், அதற்கும் அதிகமாக வேலை வாங்கிக்கொள்கிறார்களோ என்னும் எண்ணமும் எழுந்துகொண்டே இருந்தது.
அவ்வப்போது எர்னஸ்டோவு யோசனையில் ஆழ்ந்துவிடுவதுண்டு. எதற்காக இந்தப் பயணம்? எதற்காக இந்தக் கழிவறையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்? இதிலிருந்து எனக்குக் கிடைக்கப்போவது என்ன? என்ன தெரிந்துகொள்ளபோகிறேன்? இந்த அனுபவங்கள் எப்படி எனக்குப் பயனளிக்கப்போகிறது? ‘எப்போதும் ஆர்வம் மிக்கவர்களாகவும் காணும் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்பவர்களாகவும் இருந்த நாங்கள் மூலை முடுக்குகளிலெல்லாம் நுழைந்தோம். ஆனால் எதிலும் ஒட்டாதவர்களாக, எங்கும் நிலையாகத் தங்காதவர்களாக, விஷயங்களின் ஆழத்தில் இருப்பது என்ன என்று அறியும் முயற்சியில் நாட்களை வீணாக்காதவர்களாக இருந்தோம். எதையும் மேலோட்டமாக அறிந்துகொள்வதே போதுமானதாக இருந்தது.’
கப்பல் பயணம் முடிவுக்கு வந்தது. மாலுமிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்கள். இப்போது தாமிரச் சுரங்கமான சூக்கிகாமாட்டாவை (Chuquicamata) நோக்கி அவர்கள் இப்போது நடந்துகொண்டிருந்தனர். சுரங்கத்துக்குச் செல்வதானால் அதிகாரிகளின் அனுமதியைப் பெறவேண்டும். அதற்காக ஒரு நாள் காத்திருக்கவேண்டியிருந்தது. பிறகு ஒரு வேன் பிடித்து பாக்தானோ என்னும் ஊருக்குச் சென்றார்கள். வழியில் அந்தத் தம்பதியைச் சந்தித்தார் எர்னஸ்டோ. சிலியத் தொழிலாளர்களாக இருந்த அவர்கள் கம்யூனிஸ்டுகளாகவும் இருந்தார்கள்.
‘மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், மேட் பானத்தைக் குடித்தவாறும், ரொட்டித் துண்டையும் பாலாடைக்கட்டியையும் சாப்பிட்டவாறும் காட்சியளித்த அந்த மனிதனின் சுருக்கங்கள் நிறைந்த முகம் ஒரு புதிரான, துயரமான உணர்வை ஏற்படுத்தியது. தான் சிறையில் கழித்த மூன்று மாதங்களைப் பற்றியும், பட்டினியால் வாடியபோதிலும் அசாதாரணமான விசுவாசத்துடன் தன்னைப் பின்தொடர்ந்த தனது மனைவியைப் பற்றியும், கனிவான அண்டை வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் இருக்கும் தனது குழந்தைகளைப் பற்றியும், வேலைதேடி தான் மேற்கொண்ட பயனற்ற பயணங்கள் பற்றியும், புதிரான விதத்தில் காணாமல் போனவர்களும் கடலில் மூழ்கி விட்டதாகக் கருதப்பட்டவர்களுமான தனது தோழர்களைப் பற்றியும் தெளிவாக, சாதாரண மொழியில் அவர் எங்களிடம் விவரித்தார்.’
எர்னஸ்டோ அந்தக் கம்யூனிஸ்ட் தம்பதியை ஆச்சரியத்துடன் கவனித்தார். ‘பாலைவன இரவில், குளிரில் ஒருவரோடொருவர் நெருங்கி அமர்ந்திருந்த அந்த ஜோடி உலகத் தொழிலாளி வர்க்கத்தின் வாழும் பிரதிநிதிகள். அவர்களிடம் போர்த்திக்கொள்வதற்கு ஒரு போர்வைகூட இல்லை. அவர்களுக்கு எங்களுடைய போர்வை ஒன்றைக் கொடுத்துவிட்டு, மற்றொரு போர்வையை ஆல்பர்ட்டோவும் நானும் போர்த்திக்கொண்டோம். என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகக் குளிரான நாள் அது. அதுமட்டுமல்ல, (எனக்கு) வினோதமாகத் தோன்றிய இந்த மனிதர்களுடன் மிக நெருக்கமாக இருந்து நான் கழித்த ஓர் இரவும் அதுதான்.’
அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு மலைகளில் இருந்த கந்தகச் சுரங்கங்களை நோக்கி புறப்பட்டனர். அசாதாரணமானதாக இருந்தது அந்தப் பகுதி. ‘அந்த மலைகளின் தட்பபெப்ப நிலை மிகவும் மோசமானது. அங்கே ஒருவருடைய அரசியல் ஈடுபாடு எப்படிப்பட்டது என்று யாரும் கேட்பதில்லை. வேலை செய்வதற்கான அனுமதிச் சீட்டு உங்களிடம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அங்கே வாழ்வது அந்த அளவுக்கு மோசமானது. சில ரொட்டித் துண்டுகளுக்காக தொழிலாளி தனது உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் வேலை செய்யத் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.’
பல மைல்கள் கடந்து வந்த பிறகும் எர்னஸ்டோவால் அந்தக் கம்யூனிஸ்ட் தம்பதியை மறக்கமுடியவில்லை. அவர்களும் என்னைப்போலத்தான் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள். என்னைப் போலத்தான் உலகைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். என்னைவிடவும் குறைவான உடைமைகள் அவர்களிடம். இருந்தும் ஏதோவொரு அம்சம் அவர்களை என்னிடம் இருந்து பிரித்து காட்டுகிறது. அந்த அம்சம் எது?
‘வாருங்கள் தோழர்களே, வந்து எங்களோடு சாப்பிடுங்கள். நானும் ஒரு நாடோடிதான்’ என்று அந்தக் கம்யூனிஸ்ட் அழைத்தது நினைவுக்கு வந்தது. அவரோடு ஒப்பிடும்போது தன் பயணம் மிகவும் சாதாரணமானது என்று எர்னஸ்டோவுக்குத் தோன்றியது. தனது வீரதீர சாகசங்கள் ஒன்றுமேயில்லை என்பதும் புரிந்தது. ‘அவருடைய வார்த்தைகள் எங்கள் இலக்கற்ற பயணத்தை ஒட்டுண்ணித்தனமானது என்று அவர் ஏளனம் செய்கிறார் என்பதை உணர்த்தியது.’
தனது வாசிப்பையும் இதுவரையில் தனக்குக் கிடைத்த பயண அனுபவங்களையும் ஒன்றுதிரட்டி, ஒன்றின்மீது ஒன்றைப் பொருத்தி ஆராய்ந்து பார்த்தார். தான் சந்தித்த அந்தக் கம்யூனிஸ்ட் தம்பதி ஏன் சமூகத்தால் எதிர்க்கப்படுகிறார்கள் என்பதை அலசினார். ‘இப்படிப்பட்ட மனிதர்களின்மீதுதான் அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது என்பதை நினைத்தாலே உள்ளம் பதறுகிறது.’ ஆனால், எதிர்ப்பையும்மீறி அவர்கள் எதற்காக கம்யூனிச தத்துவத்தின்மீது இவ்வளவு பிடிப்புடன் இருக்கிறார்கள் என்பதையும் யோசித்தார். எந்தவொரு தத்துவமும் ஒரு சாராருக்குப் பிடித்தனமானதாகவும் இன்னொரு சாராருக்கு விருப்பமற்றதாகவும் திகழ்கிறது. யாருக்கு எது பிடித்திருக்கிறது, ஏன் என்பதைக் கண்டறிந்தால்தான் அந்தத் தத்துவத்தின் உண்மைத்தன்மையை எடைபோடமுடியும்.
கம்யூனிசம் இங்கு யாரால் அபாயமாகப் பார்க்கப்படுகிறது? யாரால் உயிருக்கு உயிரானதாகத் தழுவப்படுகிறது? ‘ஒரு சமூகத்தின் ‘ஆரோக்கியமான’ வாழ்வுக்கு ‘கம்யூனிசப் புழு’ அபாயத்தை ஏற்படுத்துகிறதா அல்லது ஏற்படுத்துவதில்லையா என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், தொடரும் பட்டினிக்கு எதிரான ஒரு விருப்பமாக கம்யூனிசம் இங்கு இயல்பாக எழுகிறது.’
கற்பதற்குக் கடினமாக இருக்கும் ஒரு தத்துவம் ஒரு சாராரால் மிக எளிமையாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ளப்படுகிறது. புரிந்துகொள்ளவேண்டிய அவசியம்கூட இல்லாமல் அந்தத் தத்துவம் அவர்களால் நேசிக்கப்படுகிறது. விநோதமான, வெகுளித்தனமான முறையில் அந்தத் தத்துவம் அவர்களுக்கு நம்பிக்கையும் ஊட்டுகிறது. ‘தங்களால் புரிந்துகொள்ளமுடியாத அந்தக் கோட்பாட்டை இந்த மனிதர்கள் நேசிக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அதன் அர்த்தம் ‘ஏழைகளுக்கு உணவு’ என்பதுதான். இந்த அர்த்தம் அவர்களால் புரிந்து கொள்ளப்படக் கூடியது. அவர்களின் வாழ்வை நிரப்பக்கூடியது.’


லாபங்களும் இழப்புகளும்

சூச்சிகாமாட்டா சுரங்கத்தை நெருங்க நெருங்க மூச்சு முட்டுவது போல் இருந்தது. மாபெரும் தாமிர வளம் நிறைந்த பகுதி அது. இருபது மீட்டர் உயரமுள்ள அடுக்குத் தளங்கள் சுரங்கத்தில் அமைந்திருந்தன. தாதுவை எளிதாகக் கொண்டு செல்வதற்கான இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், ‘கவர்ச்சியோ உணர்ச்சியோ அற்றதாக, ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக’ அந்தச் சுரங்கம் அமைந்திருந்தது போல் இருந்தது எர்னஸ்டோவுக்கு.
செல்வத்தை அள்ளித்தரும் இடமாக சுரங்கம் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ‘திறந்தவெளியில்தான் தாது எடுக்கப்படுகிறது என்பதையும், டன் ஒன்றுக்கு ஒரு சதவீதம் தாமிரத்தைக் கொண்டு கனிமவளம் பெருமளவில் சுரண்டப்படுகிறது என்பதையும் போக்குவரத்தின் தனிச்சிறப்பான அமைப்பே புலப்படுத்துகிறது.’
எந்த இயற்கையைத் தேடி அலைந்து வந்தாரோ அந்த இயற்கை இங்கே வெடிவைத்து சிதறடிக்கப்படுவதை அவர் கண்கொண்டு பார்த்தார். ‘ஒவ்வொரு நாள் காலையிலும் மலையில் வெடிவைக்கப்படுகிறது.’ தொழில்நுட்ப விவரங்கள் உள்பட அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விரிவாக தன் நோட் புத்தகத்தில் குறித்துக்கொண்டார் எர்னஸ்டோ. தகர்க்கப்பட்ட கனிமக் கற்கள் ராட்சத இயந்திர வாகனப் பெட்டிகளில் ஏற்றப்படுகின்றன. கற்கள் இயந்திரத்தை அடைகின்றன. அங்கே கற்கள் நொறுக்கப்படுகின்றன. நடுத்தர அளவுள்ள சரளைக் கற்கள் உடைக்கப்படுகின்றன. பிறகு கந்தக அமிலக் கரைசலில் போடப்படுகின்றன. வேதியியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன. திரவத்தில் மின்சாரம் தொடர்ச்சியாக செலுத்தப்படுகிறது. தாமிரம் மெல்லிய தாமிரத் தகடுகளில் ஒட்டிக்கொள்கிறது. ஐந்து அல்லது ஆறு நாள்களுக்குப் பிறகு இந்தத் தகடுகள் உருக்கும் உலைக்கு அனுப்பப்பட ஏற்ற நிலையைப் பெற்றுவிடும். தக்க முறையில் 12 மணி நேரம் உருக்கப்பட்ட பிறகு இந்தத் தகடுகளில் இருந்து ‘350 பவுண்ட் எடையுள்ள தாமிர வார்ப்புப் பாளங்களைப் பெறமுடியும். ஒவ்வொரு நாள் இரவும் நாற்பத்தைந்து லாரிகளில் ஒவ்வொன்றிலும் இருபது டன் தாமிரம் வீதம் வரிசையில் எடுத்துச் செல்லப்படும். ஒருநாள் உழைப்பின் பலன் இது.’
எறத்தாழ மூவாயிரம் பேர் ஈடுபடும் உற்பத்தி நடவடிக்கை பற்றிய சுருக்கமான எளிய விவரணை இது என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. இந்த உற்பத்தி நடவடிக்கையால் யாருக்குப் பலன்? அந்தப் பலனை யார் அனுபவிக்கிறார்கள்? சுரங்கத்தில் பணியாற்றும் மூவாயிரம் சொச்சம் பேர் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? சுரங்கத்தின் கதி என்ன?
‘நைட்ரேட் தாது நிறைந்த, புல் பூண்டுகூட முளைக்காத இந்த மலைகள் காற்று, மழை ஆகியவற்றின் தாக்குதலுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அற்றவையாக இருக்கின்றன. இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் உரிய காலத்துக்கு முன்பே மூப்படைந்து தங்களது சாம்பல் நிற முதுகெலும்போடு காட்சியளிக்கின்றன. அவற்றின் சுருக்கங்கள் அவற்றின் உண்மையான புவியியல் ரீதியான வயதைப் பற்றிய தவறான கருத்தை உருவாக்குகின்றன. இந்த இடத்தைச் சூழ்ந்துள்ள எத்தனை மலைகள் இதேபோன்று மிகப் பெரும் வளங்களைத் தங்கள் மடிகளில் மறைத்து வைத்துள்ளனவோ… தங்கள் வயிற்றுக்குள் மண்வாரி இயந்திரங்களின் வெற்றுக் கைகளை அனுமதிக்கக் காத்திருக்கின்றனவோ…’
சுரங்கத் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமை எர்னஸ்டோவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அரை மணி நேரம் சுற்றி வருவதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ‘இது சுற்றுலாத் தலமல்ல, சுற்றிப் பார்த்தவுடன் நீங்கள் வெளியே போய்விடுவது நல்லது. எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன!’ என்று சுரங்கத்தின் கங்காணிகள் கண்டிப்பான குரலில் எர்னஸ்டோவுக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அவர்கள் திறன்மிக்கவர்களாகத் தோற்றமளித்த அதே நேரம், திமிரானவர்களாகவும் இருந்தார்கள். இவர்களிடம் வேலை செய்யும் பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்குமோ?
விரைவில் சுரங்கத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெறுவதாக இருந்ததை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக இருந்த ஒருவரிடம் (அவர் ஒரு கவிஞரும்கூட) உரையாடும்போது மேலதிக விவரங்கள் கிடைத்தன. சுரங்கத்தின் செயல்பாடுகள், பணியாளர்களின் நிலைமை, வேலை நிறுத்தத்துக்கான காரணங்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்று பலவற்றையும் கேட்டறிந்துகொண்டார் எர்னஸ்டோ. இறுதியாக அவர் கேட்ட கேள்வி இது. ‘இந்தச் சுரங்கம் எத்தனை பேரை பலி வாங்கியிருக்கிறது?’
அவர் ஆச்சரியமடைந்தார்.‘இந்தப் புகழ்பெற்ற சுரங்கங்கள் இங்கே இருக்கிற தாமிரம் முழுவதையும் சுத்தமாகச் சுரண்டியெடுத்துவிடும். உங்களைப் போன்றவர்கள் என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் இதற்காக எத்தனை உயிர்கள் பலியாக்கப்பட்டன என்று யாருமே இதுவரை கேட்டதில்லை. இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது, மருத்துவர்களே. ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி.’
எர்னஸ்டோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. ‘உணர்ச்சியற்ற ஆற்றலும் கையாலாகாத கசப்புணர்வும் இந்த மாபெரும் சுரங்கத்தில் கைகோர்த்துச் செல்கின்றன. உயிர் வாழவேண்டும் என்ற நெருக்கடியால் ஏற்பட்ட வெறுப்பும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் முனைப்பும் எதிரெதிராக இருந்தபோதிலும், அதையும் மீறி இவ்விரு பண்புகளும் இணைந்திருக்கின்றன.’
மிக முக்கியமான ஒரு பார்வை இது. கொள்ளை லாபம் அடிக்கத் துடிப்பவர்களும் ஒருவேளை உணவுக்கு உடலையும் உள்ளத்தையும் உயிரையும் பணயம் வைக்கத் துடிப்பவர்களும் கைகோர்க்கும் அதிசயத்தையும் அவலத்தையும் எர்னஸ்டோ இந்தச் சுரங்கத்தில் தரிசித்தார். லாபம், மேலும் லாபம் என்னும் துடிப்பு இயற்கையை மட்டுமின்றி மனிதர்களையும் சேர்த்தே அழிக்கிறது என்பதை எர்னஸ்டோ உணர்ந்துகொண்ட தருணம் இது.
‘வெறும் உணவைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட எத்தனை மனித உயிர்களை இவை (சுரங்கங்கள்) குடித்தனவோ… இந்த யுத்தத்தில் தனது புதையல்களைப் பாதுகாப்பதற்காக இயற்கைஏற்படுத்தியுள்ள ஆயிரக்கணக்கான மரணக்குழிகளில் துயரமான மரணத்தைச் சந்தித்தவர்கள் எத்தனை பேரோ… காவியங்களில் இடம் பெறாத இத்தகைய ஏழை வீரர்களின் எத்தனை உயிர்களை (தவிர்க்க இயலாமல்) இவை குடித்தனவோ…’
சிலி நில ஆய்வு நிறுவனம் சல்ஃபேட் தாதுவைச் சுரண்டுவதற்கு இன்னொரு ஆலையை அமைத்து வருவதை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். ‘உலகத்திலேயே மிகப் பெரியதாக விளங்கப் போகின்ற இந்த ஆலையின் 96 மீட்டர் உயரப் புகைப்போக்கிகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழு உற்பத்தியும் இந்த ஆலையிலேயே நடைபெறப் போகிறது. அதே சமயத்தில், ஆக்ஸைடு தாதுவளம் தீர்ந்து வருவதால் பழைய ஆலையின் உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைந்து முற்றிலுமாக நின்றுவிடும். புதிய உருக்காலைக்குத் தேவையான கச்சாப் பொருள்கள் ஏற்கெனவே பிரம்மாண்டமான அளவுக்குத் தயாராக உள்ளன. 1954ம் ஆண்டு ஆலை திறக்கப்பட்டவுடன் உடனடியாக உற்பத்தியும் தொடங்கிவிடும்.’
ஆனால் இதை எப்படி வரையறுப்பது? வளர்ச்சி என்றா? பழைய ஆலையா, புதிய ஆலையா என்பதா இங்கு முக்கியம்? எவ்வளவு நவீனமாக ஓர் ஆலை இயங்குகிறது என்பதா அதை மதிப்பிடுவதற்கான அளவுகோல்? ஓர் ஆலையின் கட்டுமானத்தைவிட, உற்பத்தித் திறனைவிட, இயந்திரங்களைவிட, லாபத்தைவிட பணியாளர்கள் முக்கியம் அல்லவா? அவர்களுடைய வாழ்நிலை முக்கியமல்லவா?
மிக அடிப்படையான ஒரு கேள்வியும் எர்னஸ்டோவுக்கு எழுந்தது. ஆலைகளை யார் நிர்வகிக்கவேண்டும்? தனியார் நிறுவனங்களா அல்லது அரசாங்கமா?
<Part 2>

Lenin and the Indian independence (லெனினும் இந்திய விடுதலையும்)

லெனினும் இந்திய விடுதலையும்

ஜூலை 1, 1905 அன்று இந்தியன் ஒப்பீனியன் ஏட்டில் காந்தி இப்படி எழுதினார். ‘ரஷ்ய மக்கள் வெற்றி பெற்றால், ரஷ்யாவில் இந்தப் புரட்சியானது இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாகக் கருதப்படும். நாங்களும்கூட கொடுங்கோன்மைக்கு எதிராக ரஷ்யாவின் பாதையைப் பின்பற்றலாம்.’ புரட்சி வெற்றிபெற்ற பிறகு, 1928ல் காந்தி இவ்வாறு எழுதினார். ‘போல்ஷ்விக் பதாகைக்குப் பின்னர் எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்கள் லட்சியத்துக்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனின் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது.’
1917 ரஷ்யப் புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி எழுதிய லெனினும் இந்திய விடுதலையும் என்னும் நூல் இந்தப் பணியைச் சீராகத் தொடங்கிவைத்தது.
ரஷ்யப் புரட்சியைக் கண்டு பிரிட்டிஷ் இந்தியா சினமும் அச்சமும் கொண்டிருந்த காலகட்டம் அது. அவ்வாறு அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்பது காந்தியின் கருத்து. போல்ஷ்விக் புரட்சியை அவர் அபாயம் என்று கருதவில்லை. யங் இந்தியாவில் 1920ல் காந்தி எழுதியது.‘போல்ஷ்விக் அபாயம் என்பதை நான் ஒருபோதும் நம்பியதில்லை. ரஷ்ய போல்ஷ்விக் அபாயம் அல்லது வேறு எந்தவொரு அபாயம் குறித்து இந்திய அரசாங்கம் ஏன் பயன்படவேண்டும்?’
ஆனால், பிரிட்டிஷ் இந்தியா நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது. ரஷ்யர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியை இங்கே அரங்கேற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? லெனினையும் அவரது போல்ஷ்விக் கட்சியையும் முன்னுதாரணமாகக் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜார் அரசுக்கு ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?
ஓர் உபாயத்தைக் கையாண்டது பிரிட்டன். போல்ஷ்விக் புரட்சி பற்றியும் குறிப்பாக லெனின் பற்றியும் செய்திகள் எதுவும் பரவாதபடி தடை செய்தது. ரஷ்யாவிலிருந்து ஆவணங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. கிடைத்தவையெல்லாம் எதிர்மறையான செய்திகள்தாம். லெனினின் சர்வாதிகாரம் பற்றிய, போல்ஷ்விக்குகளின் வன்முறை செயல்பாடுகள் பற்றிய செய்திகளே பிரிட்டனால் வரலாறு என்னும் போர்வையில் பரப்பப்பட்டன. கம்யூனிசம் மனித குலத்துக்கு விரோதமான ஒரு தத்துவம் என்பது தீவிரமாக வாதிடப்பட்டது. கம்யூனிசத்தைப் பின்பற்றுவது அல்ல, அவ்வாறு நினைப்பதும்கூட சமூக விரோதமான செயல் என்று அறிவுறுத்தப்பட்டது. லெனின் ஒரு கொடூரமான கொலைகாரன் என்றும், ரத்தக் காட்டேரி என்றும் மண்டையோட்டு மாலை போட்டுக்கொண்டு வலம் வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
ஆனால், அனைத்து தடைகளையும் மீறி, ஆங்கிலேயர்களின் கட்டுக்கதைகளை உடைத்து, லெனினை இந்தியர்கள் தரிசித்தார்கள். நேரு, காந்தி, திலகர் போன்ற இந்திய தேசியவாதத் தலைவர்களையும் இந்திய மக்களையும் போல்ஷ்விக் தத்துவம் ஒருசேரப் பற்றிக்கொண்டது. உண்மையில், போல்ஷ்விக்குகள் பற்றிய பிரிட்டனின் தவறான பிரசாரமே, பல மக்களை லெனினை நோக்கித் திருப்பியது என்றும் சொல்லலாம். அப்படி என்ன ஆபத்தான சித்தாந்தம் என்னும் ஆர்வக் குறுகுறுப்புடன் பலர் சோவியத் நோக்கி நகரத் தொடங்கினர்.
இது குறித்து எஸ்.ஏ. டாங்கே இவ்வாறு எழுதுகிறார். ‘போல்ஷ்வியம் என்பது ரஷ்யாவின் தலைவன் ஆனபின், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அரசாங்கங்களும் அதை பேய்த்தனமானது, அட்டூழியமானது மற்றும் சர்வாதிகாரமானது என்று சித்தரித்து மக்களின் சிந்தனையில் அவை குறித்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் செயல்பாடு என்று லேசான சாயல் உள்ள ஒவ்வொரு முயற்சியும் ஒடுக்கப்படுகிறது என்பதுடன் எந்தவொரு நாட்டிலுமுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்தும் மக்கள் துண்டிக்கப்படுகிறார்கள்…போல்ஷ்விக்குகளின் உறுதியான சர்வதேச கொள்கையில் இதற்கான காரணம் பொதிந்துள்ளது.’
அந்தக் கொள்கை இதுதான். அடிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காலனி நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சோவியத் ஆதரவு அளிக்கும் என்று லெனின் குறிப்பிட்டிருந்தார். மக்களை காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
காந்தியின் அமைதி வழியிலான போராட்டம் இந்திய சுதந்தரத்தைப் பெற்றுத்தராது, ரஷ்யாவில் நடைபெற்றதைப் போன்ற புரட்சி மூலமே ஆங்கில ஆதிக்கத்தை உடைக்கமுடியும் என்னும் கருத்தாக்கம் உருபெற ஆரம்பித்தது. எஸ்.ஏ. டாங்கேயின் எழுத்துகளில் இந்த உண்மை காணக்கிடைக்கிறது.
‘ஒரே ஒரு பரிகாரம்தான் உள்ளது… அது இந்தியத் தொழிலாளரின் கரங்களில் உள்ளது. பயங்கரப் போக்கில் ஈடுபடும் ராணுவச் செயல்பாடுகளும், அவற்றின் வெற்றியும் சிப்பாய்களை ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்துக்கு வேகமாகக் கொண்டுசெல்வதிலும், ராணுவத்திற்கான உணவுப் பொருட்கள் வெடிபொருட்களை கொண்டுசெல்வதிலும் பிரதானமாகச் சார்ந்துள்ளன. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளிகளால் செய்யப்படுகின்றன. முக்கியமான தருணத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஒட்டுமொத்தமாக வேலை செய்ய மறுத்தால், ரயில்வேத் தொழிலாளிகள், தந்தி ஊழியர்கள், கூலிகள் மற்றுமிதர வகைப்பட்ட தொழிலாளிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்தால், அதாவது சதிவேலை என்றழைக்கப்படுவதை ஏற்பாடு செய்தால் நம்முடைய வெற்றி நிச்சயம். அரசாங்க பயங்கரப் போக்கு என்பதன் முழுச் செயல்பாடும் முடக்கப்படும் என்பதுடன் அது பணிந்தே தீரவேண்டும்.’
மராத்தி மொழியில் லெனினின் முதல் வாழ்க்கை வரலாறு 1922ல் வெளியிடப்பட்டது. ‘நிகோலய் லெனின் : ரஷ்ய ஜனநாயகத்தின் நிறுவனருடைய வரலாறு’ என்னும் இந்நூலை எழுதியவர், ராம்கிருஷ்ண கோபால் பிடே என்பவர். ஏன் லெனினின் வாழ்க்கை வரலாறை அவர் எழுதத் துணிந்தார் என்பதற்கான காரணம் முன்னுரையில் காணப்படுகிறது.
‘அது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொடிகட்டிப் பறந்த நாட்களாகும். இந்தியர்களாகிய நாங்கள் சுதந்தரத்திற்கான எங்களுடைய போராட்டத்திற்கான ஆதர்சனத்தைப் பெற தெரிந்த ஒவ்வொரு ஆதாரத்தையும் நாடினோம். லெனின் மற்றும் அவருடைய போல்ஷ்விக் ரஷ்யாவைவிட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்கமுடியும்? ஆனால் அந்நாட்களில் இந்த ஆதாரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாது. எனவே புரிபடாமல் இருந்தது. அந்தக் காரணத்திற்காகவே அது எங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. லெனினுடையதானது ஒரு இணையற்ற தத்துவத்தோடு கூடிய புரட்சியின் ஒரு முற்றிலும் புதிய பரிசோதனை என்று நாங்கள் உணர்ந்தோம். அது நம்முடைய பண்டைக்கால தத்துவம் புகுந்திருந்த எங்களுடைய சிந்தனைக்கு ஒரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.’
லெனின் பற்றிய விவாதங்கள் இங்கே மும்முரமாக தொடங்கின. பால கங்காதர திலகர் நடத்திய கேசரி பத்திரிகை அலுவலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஆங்கில மாத ஏடுகள் இருந்தன என்றும் அலுவலக நூலகத்தில் சில புத்தகங்கள் இருந்தன என்றும் தெரியவருகிறது. (லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி).
சம்ஹதி (ஒற்றுமை) என்னும் வங்கமொழிப் பத்திரிகை 1923ம் ஆண்டு ஜிதேன் குப்தா என்னும் ஏழை அச்சுத் தொழிலாளியால் தொடங்கப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் கிடந்து துவள நேரிட்டபோதும்கூட கடைசி வரை பத்திரிகையை அவர் நடத்தி வந்தார். ரஷ்யப் புரட்சி குறித்து சம்ஹதி என்ன சொல்லியிருக்கிறது? ‘எவ்வாறாயினும் மேல்தட்டு வர்க்கங்கள் தாம் உலகில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தின. தற்பொழுது கீழ்மட்ட வர்க்கங்கள் விழித்துக்கொண்டுவிட்டன என்பதுடன் அவற்றை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. இன்று பேய்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் புதிய மகிழ்ச்சியானது மிக்க வேதனைகள் மூலம் வருகிறது. உருவாக்கத்திற்கு இத்தகைய வேதனைகள் தேவைப்படுகின்றன.’
ஜனவரி 30, 1925ல் முகம்மதி என்னும் இஸ்லாமிய ஏட்டிய வெளிவந்த கருத்து இது. ‘லெனின் ரஷ்யாவை மட்டும் விடுதலை செய்தார் என்று கூறுவது உண்மையைக் குறைத்துச் சொல்வதாகும். செயலற்றிருந்த மனித குலத்தை சுதந்தரப் பாடலுடன் ஒருவர் கிளர்ந்தெழச் செய்தானென்றால், லட்சோப லட்சம் மக்களுக்கு மகிழ்ச்சி என்று எதிர்பால ராஜ்யத்தின் கதவை ஒருவர் திறந்தானென்றால், துன்பதுயரமும், வறுமையும் நிறைந்த இவ்வுலகில் ஒருவர் சாந்தப்படுத்தும் அமிர்தத்தை விநியோகித்தாரென்றால் அவர்தான் லெனின்.’
இங்கு சிறு கலகம் ஏற்பட்டாலும், சிறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் லெனினை நோக்கி கை நீட்டியது பிரிட்டிஷ் இந்தியா. காந்தியும்கூட லெனினின் சித்தாந்தத்தால் கவரப்பட்டுவிட்டார் என்றும் இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் குற்றச்சம்சாட்டினார்கள். ஸ்வராஜ்யா புனா, மராத்தி வார இதழில் மார்ச் 30, 1920 அன்று இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு வெளியானது. ‘இந்தியா மீது போல்ஷ்விக் திட்டங்கள் குறித்தும் போல்ஷ்விக்குகளுடன் திரு. காந்தியின் தொடர்புகள் குறித்தும் செய்திகள் எங்கும் பரவியுள்ளன. ஆனால், உண்மையில் இத்தகைய செய்திகள் அனைத்தும் தவறானவையாகும். போல்ஷ்விக் பிரசாரம் இல்லாமலேயே இந்தியாவில் அதிருப்தி நிலவுகிறது. நாட்டின் பொருளாதார திவால் நிலைமையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையும்தான் போல்ஷ்வியத்தை தோன்றச் செய்துள்ளது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் உலகம் முழுவதும் அதிகாரத்தைச் செலுத்த ஆசை கொண்டுள்ளனர். அவ்வாறிருக்கும்போது, ஏன் போல்ஷ்விக்குகள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது?…நான்கு ஆண்டுகளுக்கு 90 கோடி ரூபாய்க்கு குறையாத பற்றாக்குறைக்கு பொறுப்பான நிர்வாக முறையின் விளைவுதானே போல்ஷ்வியமாக இருக்கமுடியும்?’
காங்கிரஸ் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலைப் போராட்டம் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் தன் திசைவழியை மாற்றிக்கொண்டது என்கிறது ஜூலை 26, 1922 அன்று வெளிவந்த ஆத்ம சுத்தி என்னும் இந்தி இதழ். ‘ஏழைகள் பிரச்சினை இதுவரை காங்கிரஸில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியானது நடுத்தர வர்க்க மனிதர்களின் கரங்களில் உள்ளது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போகும்போது அதிகாரம் தங்கள் கரங்களில் வருமென்று அவர்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களும் வர்த்தகர்களுமாவர். சுயராஜ்ஜியம் வரும்பொழுது அன்னியப் பொருள்களுக்கு வரி விதிப்பதன் மூலம் லாபம் பெற வர்த்தகர்கள் விரும்புகிறார்கள். வழக்கறிஞர்கள் அப்பொழுது உயர் பதவிகள் கிடைக்குமென்று கருதுகின்றர். எனவே, சாதாரண மக்கள் காங்கிரஸ் குறித்து அக்கறை காட்டவில்லை.’
காஸி இஸ்லாம் தூமகேது, டிசம்பர் 15, 1922 இதழில் இந்தக் கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். ‘ஒரு நாட்டின் சுதந்திரமானது, மக்களால் உதவிடப் பெறாத ஒரு சில படித்த மனிதர்களைக் கொண்டு மட்டும் அடையப் பெற்றுவிடாது என்ற மகத்தான உண்மை இயக்கத் தலைவர்களுக்குத் தோன்றவில்லை. துவக்கத்தில் நாம் செய்த தவறை இன்று நாம் கண்டுபிடித்து விட்டோம். அனைத்து அதிகாரங்களும் ஒரு சில படித்த தலைவர்களின் பிடியில் இருப்பது மட்டும் சுதந்திரமல்ல. சுய பாதுகாப்பிற்காக நமது நாட்டை நாம் பலப்படுத்த விரும்பினால் நாம் இதயபூர்வமாக ஆன்மாபூர்வமாக மக்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.’
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல உலக மக்களுக்கும் லெனினும் ரஷ்யப் புரட்சியும் கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். மக்களிடம், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திடம் ஒன்றுகலக்காமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல் எதிலும் எப்போதும் வெற்றிபெறமுடியாது.

About Workers : Karl Marx (தொழிலாளர்கள் பற்றி கார்ல் மார்க்ஸ்)

தொழிலாளர்கள் பற்றி கார்ல் மார்க்ஸ்


Karl-Marxதொழிலாளர்களின் இன்றைய நிலை என்ன? முன்பைவிட இப்போது அவர்களுடைய வாழ்நிலை உயர்ந்திருக்கிறதா? அவர்களுடைய பிரச்னைகள் குறைந்திருக்கின்றனவா? பணிச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையெனில் அவர்கள் என்ன செய்யவேண்டும்? ‘போராட வேண்டும்’ என்று பலரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் யாரை எதிர்த்து? எதை வேண்டி? எந்த லட்சியத்துடன்?
முதலில், தொழிலாளர்கள் எதற்காகப் போராட வேண்டும்? முதலாளிகள் அனுபவிக்கும் சுகங்களையும் செல்வத்தையும் தாம் அடைய வேண்டும் என்பதற்காகவா? உல்லாசமான கேளிக்கையான வாழ்வைப் பெறுவதற்காகவா? அல்ல என்கிறார் கார்ல் மார்க்ஸ். ’வர்க்கத் தனி உரிமைகளுக்கும் ஏகபோகங்களுக்கும் நடைபெறும் போராட்டம்’ அல்ல இது. ‘சமத்துவமான உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் எல்லா வகையான வர்க்க ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் நடைபெறுகின்ற போராட்டமே’ தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டமாகும்.
அதற்கு முன்னால், ஒரு தொழிலாளர் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரவேண்டும் அல்லவா? அதற்கு, தன்னுடைய நிலை என்ன என்பதை ஒரு தொழிலாளர் புரிந்துகொள்ளவேண்டும். எது அடிமைத்தனம்? ‘உழைப்புச் சாதனங்களை அதாவது வாழ்க்கையின் ஆதாரங்களை ஏகபோகமாக வைத்திருப்பவரிடம் உழைக்கும் மனிதன் பொருளாதார ரீதியில் கீழ்ப்பட்டிருப்பது.’ சமூகத் துன்பத்துக்கும் அறியாமைக்கும் அரசியல் அடிமைத்தனத்துக்கும் அடியில் இருப்பது இதுவே என்கிறார்.
எனவே, தொழிலாளர்களின் பிரச்னை என்பது குறிப்பிட்டதொரு பிரதேசத்தின் பிரச்னையல்ல. இது உலகம் தழுவிய சமூகப் பிரச்னை. அந்த வகையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் பிரிவு பிற நாடுகளில் உள்ள தொழிலாளர் பிரிவினருடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தொழிலாளர் வர்க்கத்தினரிடையே சகோதரப் பிணைப்பு இருந்தால் மட்டுமே அடிமைத்தனத்துக்கு எதிராகப் போரிடுவது சாத்தியமாகும் என்கிறார் மார்க்ஸ். அதே சமயம் இவ்வாறு தொழிலாளர்கள் ஒன்றுபடுவது இதுவரை சாத்தியமாகாமல் இருப்பதற்குக் காரணம் தொழிலாளர்களேதான்; அவர்களிடைய ஒன்றுமை இல்லாததுதான் என்றும் சொல்கிறார் மார்க்ஸ்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள சர்சதேசத் தொழிலாளர் சங்கத்துக்குச் சில விதிமுறைகளை மார்க்ஸ் உருவாக்கினார். 1871ம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த அந்தப் பிரசுரத்தில் காணப்படும் சில முக்கிய அம்சங்கள் கீழே.
  • பிரசுரத்தின் தொடக்க வாசகங்கள். ‘இதில் சேர்கின்ற எல்லாச் சங்கங்களும் மற்றும் தனி நபர்களும் தங்களுக்கிடையேயும் எல்லா மனிதர்களுக்கு இடையிலும் நிறம், மதம், தேசிய இன வேறுபாடுகளைக் கடந்து உண்மை, நீதி, அறநெறி ஆகியவற்றைத் தம் நடத்தையின் அடிப்படையாகக் கொள்வர்.’
  • கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை. உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை.
  • தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்களுடைய லட்சியம் ஒன்றாக இருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கங்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் பரிபூரண விடுதலை.
  • ஒரு தொழிலாளர் மற்ற பிரதேசங்களிலும் மற்ற நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களைப் பற்றியும் அவர்களுடைய பிரச்னைகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதற்குச் சர்வதேசச் சங்கம் உதவிட வேண்டும்.
  • தொழிலாளர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.  இந்த ஆய்வறிக்கைகளை வைத்துக்கொண்டு தொழிலாளர்களுடன் சங்கம் உரையாடவேண்டும். பொதுநலன் சார்ந்த பிரச்னைகளை அனைவரும் விவாதிக்கவேண்டும்.
  • சங்கத்தின் கிளைகள் ஒன்றிணைந்து ஒரு சர்வதேச அமைப்பாக ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் கோட்பாடுகளை அங்கீகரித்து, அவற்றைக் காத்து நிற்கும் ஒவ்வொருவரும் இதன் உறுப்பினராகத் தகுதியுடையவர். ஒவ்வொரு கிளையும் அது சேர்த்துக்கொள்ளும் உறுப்பினர்களுடைய நேர்மைக்குப் பொறுப்புடையதாகும்.’
  • ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஒவ்வொரு உருப்பினரும் தன் குடியிருப்பை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மாற்றிக் கொள்ளும்பொழுது அங்கேயுள்ள இணைக்கப்பட்ட சங்கத் தொழிலாளர்களுடைய சகோதர ஆதரவைப் பெறுவர்.’
தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை மார்க்ஸ் வேறோரிடத்தில் குறிப்பிடுகிறார்.
  • தொழிலாளி வர்க்கத்தின் முழுமையான விடுதலையை மாபெரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
  • தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டும் அமைப்பாகவும் உணர்வுடன் செயலாற்றும் மையமாகவும் திகழவேண்டும்.
  • இந்தத் திசையில் செல்ல விரும்பும் ஒவ்வொரு சமூக, அரசியல் இயக்கத்துக்கும் உதவிட வேண்டும்.
  • ‘அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தம்மைக் கருதி அவ்விதமாகச் செயலாற்றும்பொழுது அவை, சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களைத் தங்கள் அணிகளில் சேர்க்குமாறு செய்யவேண்டும்.’
  • ‘மிகவும் மோசமான கூலி கொடுக்கப்படுகின்ற தொழில்களை, உதாரணமாக, பாதகமான நிலைமைகளின் காரணமாக சக்தியில்லாதவர்களாக இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுடைய நலன்களுக்காக தொழிற்சங்கம் அதிகமான கவனத்துடன் பாடுபடவேண்டும்.’
  • ‘தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் குறுகிய நோக்குடையவையோ அல்லது சுயநலமானவையோ அல்ல, கீழே மிதிக்கப்பட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையே அவற்றின் நோக்கம் என்பதை உலகத்தினர் நம்புகின்ற வகையில் அவை நடந்துகொள்ளவேண்டும்.’

தொழிலாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களையும் தொழிற்சங்கங்கள் கற்கவேண்டிய விஷயங்களையும் மார்க்ஸ் மீண்டும் மீண்டும் பல இடங்களில் பட்டியலிடுகிறார். ஓர் அமைப்பாக தொழிலாளர்கள் திரளவேண்டிய அவசியத்தையும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார். ’தொழிலாளி வர்க்கத்தினரின் விடுதலையைத் தொழிலாளி வர்க்கத்தினரே வென்றெடுத்துக்கொள்ளவேண்டும். ‘ என்கிறார்.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஒரு நாட்டின் தொழிலாளர் பிரிவுக்கு இன்னொரு நாட்டின் தொழிலாளர் பிரிவினரே தொழில்முறைப் போட்டியாளராக உருவாகியிருப்பதை நாம் காண்கிறோம். இது பற்றிய மார்க்ஸின் விவாதங்கள் முக்கியமானவை. சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகத் திரளவேண்டும் என்று மார்க்ஸ் சொன்னது ஏன் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது பற்றிய அவருடைய விவாதங்களை  தேடிப்படித்து வாசிப்பதோடு அவற்றைத் தொழிலாளர்களிடமும் கொண்டு சென்று சேர்ப்பிக்கவேண்டும்.
ஒன்று நிச்சயம். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்காட்டிலும் சிக்கலானவை அல்ல மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சிந்தனைகள். எனவே இந்த மே தினத்தை அவர்களுடைய படைப்புகளை வாசிப்பதன்மூலம் தொடங்குவோம். நம் உலகையும் சக மனிதர்களையும் புரிந்துகொள்ள இதைக் காட்டிலும் பொருத்தமான வேறு வழிமுறை இல்லை.
மேலதிகம் வாசிக்க :
  1. சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் பொது விதிமுறைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்
  2. தற்காலிய மத்தியக் கவுன்சிலின் பிரதிநிதிகளுக்கு சில பிரச்னைகளைப் பற்றிய ஆணைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்

Friday, June 14, 2013

Marx still threatening them!

திருவாளர் எஸ். குருமூர்த்தி “மறைந்து போன மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். “கிழக்கு” பதிப்பகத் தின் இந்த வெளியீட்டில், “அரசியல், பொருளாதார விமர்சகர்” என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏதோ பொதுவான மனிதர் போன்ற பிம்பத்தைக் காட்டும் வார்த்தைகள்! உள்ளே தனது முன்னு ரையில் “சுதேசி விழிப்புணர்வு இயக்க நண்பர்கள்” பற்றிக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். அந்த இயக்கம் ஆர்.எஸ். எஸ்.சின் துணை அமைப்பு என்பதை அறிந்து கொண்டால் இவர் எப்படிப்பட்ட வர் என்பதைச் சட்டென்று புரிந்து கொள்ளலாம்.

மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூலின் முதல்பகுதியில் “லெனின், ஸ்டா லின், சிலைகளைப் போல மார்க்சும் ஒரு பழமைச் சின்னமாகவும் பயன் ஒழிந்து போன மனிதராகவும் ஆகிவிட்டார்” என்று உற்சாகமாகப் பிரகடனப்படுத்தியிருக் கிறார் மனிதர். அது மட்டுமா? இதற்கான காரணத்தையும் அரிய கண்டுபிடிப்பாய் வெளியிட்டிருக்கிறார். அது “காரல் மார்க்ஸ் பழமையாகிப் பயனற்றுப் போன தற்கு மார்க்சைவிட மார்க்சிஸ்டுகளே காரணம்”. பயனற்றுப் போனவர் பற்றி இந்த அதிமேதாவி ஏனிப்படி வரிந்து கட் டிக்கொண்டு ஆங்கிலத்தில் நூல் எழுதி, அதை தமிழிலும் பெயர்த்து வெளியிட வேண்டும்? முடிந்தது கதை என்று வேறு வேலைக்குப் போயிருக்கலாம் அல்லவா? முடியவில்லை இவரால். அந்தப் “பழமைச் சின்னமாக” ஆகிப் போனவர் இன்று இவரைப் புத்தம் புதிய ஆயுதமாய் மிரட்டிக் கொண்டே இருக்கிறார்.

அதனால் தான் தனது காட்டத்தையெல்லாம் அந்த மாமேதை மீது காட்டியிருக்கிறார். மார்க்ஸ் பயனற்றுப் போனதற்கு மார்க் சிஸ்டுகள் தாம் காரணமாம்! அடடா! அப்படியென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவரைக் காலமெல்லாம் போற்றி வந்தார்களா? அவரைப் “பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு” என்று புகழ்பாடி வந்தார்களோ? இவர் களது குருஜி கோல்வால்கர் தனது மூன்று எதிரிகளாக வருணித்தது “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” அல் லவா? அவரைக் காலமெல்லாம் தூற்றி வந்தவர்கள் தாம் இப்போதும் தூற்று கிறார்கள் என்பதை மார்க்சிஸ்டுகள் நன்கு அறிவார்கள்.

மார்க்ஸ் நல்லவர், மார்க்சிஸ்டுகளே கெட்டவர்கள் - மாமரம் நல்லது, மாங்கனி களே கசப்பானவை - எனும் இந்த அர்த்த மற்ற வாதத்தை தொடர்ந்து பராமரிக்கவும் அவரால் முடியவில்லை. மார்க்சின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு துரோகம் செய் கிறவர்கள் மெய்யான மார்க்சிஸ்டுகள் அல்ல என்பதால் சட்டென்று மார்க் சையே நேரடியாகத் தாக்கத் துவங்குகிறார்.“காரல் மார்க்சின் பொருள்முதல் வாதச் சித்தாந்தம் முழுவதும் கிறிஸ்தவ அனுபவங்களின் அடிப்படையிலும், அதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை யிலும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்சியச் சிந்த னைக் கட்டமைப்புக்கு கிறிஸ்துவ உல கைத் தவிர்த்து வெளியிலிருந்து குறிப் பிடும்படியான உள்ளீடுகள் ஏதும் கிடையாது” என்கிறார்.

மார்க்சியமானது கிறிஸ் துவத்தின் நீட்சியே என்பதாகவும், அதனால் இது முழு உலகத்திற்கும் பொருந் தாது என்பதாகவும் நிலைநிறுத்த மனிதர் துடியாத் துடித்திருக்கிறார்.இந்துத்துவாவாதிகளின் பிறமத வெறுப்பு உலகறிந்ததே. அதை மார்க்சியத் தைக் கொச்சைப்படுத்தவும் பயன்படுத்தி யிருப்பது தான் இந்த நூலாசிரியரின் தனித்துவம். மார்க்ஸ் வடித்தெடுத்த இயங்கியல் பொருள்முதல்வாதமானது கிறிஸ்துவத்திற்கு மட்டுமல்ல, சகல மதங்களின் ஆத்திகத் தத்துவங்களுக்கும் நேர் எதிரானது.

19ம் நூற்றாண்டிலேயே உலகம் சுருங்கிப் போனது. லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் உலக ஞானச் சுவடிகள் எல்லாம் இருந்தன. அவற்றையெல்லாம் உள்வாங்குகிற ஒரு தவத்தை மார்க்ஸ் மேற்கொண்டார் என் பதை அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். குருமூர்த்தி போல் நுனிப்புல் மேய்கிறவர்களுக்கு அது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.வினோதம் என்னவென்றால், மாமேதை மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி அறிவார், அது பற்றிய சில மதிப்பீடு களைத் தந்திருக்கிறார் என்பதையும் இவரால் மறைக்க முடியவில்லை. ஆனால் “கிறிஸ்துவர்கள் பயன்படுத்திய தகவல்களையே இந்திய நாகரிகத்தை மதிப்பிடுவதற்கான கருவியாகப் பயன் படுத்திக் கொண்டார்” என்று அங்கும் தனது பிறமத வெறுப்பைக் கக்குகிறார்.

“குரங்குகளையும், பசுமாடுகளையும் வணங்குவோர்” என்று இந்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டார் என்று மனிதர் பொருமுகிறார். அது உண்மைதானே? இன்றைக்கும் கோமாதா அரசியல் நடத்து கிறவர்கள், இன்றைக்கும் “பஜ்ரங்தள்” என்று அனுமார் சேனை வைத்திருப் பவர்கள் அதற்காகக் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

உண்மையைக் கிறிஸ் தவர் சொன்னால் என்ன, இந்து சொன் னால் என்ன, நாத்திகர் சொன்னால் என்ன, உண்மை உண்மைதானே?ஆனால், மார்க்ஸ் இந்துக்கள் மத்தி யிலிருந்த இந்த விலங்கு வழிபாட்டை மட்டும் சுட்டிக்காட்டியவர் அல்ல. இந்த மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் எப்படிக் கொடூரமாகச் சுரண்டப் படுகிறார்கள் என்பதையும் அதே பிரிட்டனில் இருந்து கொண்டு உலக மன சாட்சியாய் முரசறைந்து சொன்னவர். பழைய உலகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஒரு புதிய உல கத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை என்றும் வருத்தப்பட்டவர். இங்குள்ள சாதிய கட்டுகள் பற்றிக் கவலைப்பட்டவர். அதை நவீனத் தொழிற்சாலைகளாவது தளர்த்தி விடாதா என்று ஏங்கியவர். அந்த மகத்தான மனிதாபிமானியை கிறிஸ்துவக் குடுவைக்குள் அடைக்கப் பார்க்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கின் வேலை எடுபடாது.

இந்தியா பற்றி மார்க்ஸ் எழுதியதை எல்லாம் சேர்த்துவைத்துப் படிக்கிற எவரும் இவரது பித்தலாட்ட வியாக்யானத்தை இடக்கையால் புறந்தள்ளுவார்.“உபரி, லாபம் எனும் கருத்தியலே மார்க்சியப் பொருளாதாரத்தின் அஸ்தி வாரம். மார்க்சின் இந்தக் கருத்தியல் அஸ்திவாரம் அவர் அறிந்திருந்த திடச் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டிராத மிகப் பெரிய அறிவுசார் அமைப்பின் கீழ் புதையுண்டு விட்டது” என்று குருமூர்த்தியார் கொக்கரிக்கிறார்.அரசு வெளியிடும் காகிதப் பணம், அதுபோலத் தனியார்கள் தரும் உண்டி யல்கள் - காசோலைகள், கம்பெனிப் பங்குகள், அவற்றின் மீதான ஊக வணிகம் போன்றவற்றைக் காட்டி, இவை “புரொஃ பெஷனல்கள் எனப்படும் நிபுணர்களால் இயக்கப்படுகிறது” என்பதைச் சுட்டிக் காட்டி, இவற்றில் மார்க்சின் பொருளா தாரக் கோட்பாடு திவாலாகிவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறார். இன்று இவை உலகப் பொருளாதாரத் தில் தீவிர செல்வாக்கை செலுத்துகின் றன என்பது உண்மையே என்றாலும், இவையெல்லாம் மார்க்ஸ் காலத்திலேயே துவங்கியவை தான். “கிழக்கந்தியக் கம்பெனி” என்று அவர் காலத்திலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் புறப்பட்டு, அவை உலக வர்த்தகத்தை ஆட்டிப் படைக்க முயன்றன. அவற்றின் பங்குகள் ஏற்ற இறக்கமாக எகிறுவதும் நடந்தது. பொருளாதாரத்தில் பண ஊடாட்டத்தின் முக்கியம் பற்றியும் மார்க்ஸ் பேசியிருக்கிறார்.ஆனால், இந்தக் காகிதப் பணங்களும், அவற்றின் மீதான ஊக வணிகங்களும், அவை நிபுணர்களின் துணை கொண்டு நடத்தப்படுவதும், எல்லாம் பொருள் உற்பத்தி எனும் திடச் சொத்து உருவாக் கத்தையே அஸ்திவாரமாகக் கொண்டுள் ளன என்பதையும் அவர் அறிவார். ஒரு சிமிண்ட் கம்பெனியின் பங்கு மதிப்பு ஊக வணிகத்தால் கூடலாம், குறையலாம். ஆனால் அந்தக் கம்பெனி தனது சிமிண்ட் உற்பத்தியைச் சுத்தமாக நிறுத்திவிட்டால் அந்தப் பங்கின் கதி அதோ கதிதான்.

அதன் மீது ஊக வணிகம் நடக்காது; போட்ட பணத்தில் எவ்வளவு திருப்பி வரும் எனும் கவலையே மிஞ்சி நிற்கும். இயக்கம்தான் ஊகத்திற்கு வாய்ப்புத் தருகிறது. உற்பத்திதான் ஊக வணிகத் திற்கு வாய்ப்புத் தருகிறது. பொருள் உற்பத்தி இல்லையென்றால், திடச் சொத்து உருவாக்கம் இல்லையென்றால் ‘புரோஃபஷனல்களால் புனையப்பட்ட’ பொருளாதாரம் என்கிறாரே அது இருக் கவே இருக்காது, மணல் வீடாய்க் கரைந்து போகும். முதலாளிகள் இல்லையென்றால் இந்தப் புரோஃபஷனல்களே கிடையாது.குருமூர்த்தியோ விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார். அதிலும் குரூர மான முறையில் சொல்கிறார். “பராம்பரிய முதலாளித்துவ முறையில் எவ்வாறு உழைக்கும் வர்க்கம் சுரண்டப்பட்டதோ அதே வகையில் இன்று புதிய வடிவான அறிவுச் சக்தியினால் இயக்கப்படும் முத லாளித்துவத்தில் புரொஃபஷனல்கள் தான் முதலாளிகளை சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த வகை முதலாளித்துவத்தை மார்க்ஸ் கற் பனை கூடச் செய்து பார்க்கவில்லை” என்கிறார் மகானுபாவர்.

முதலாளிகளிடம் சம்பளம் பெறும் மூளை உழைப்பாளர்களை - அந்த நிபு ணர்களை - சுரண்டல்காரர்கள் என்றும், மெய்யான சுரண்டலில் ஈடுபடும் முத லாளிகளை பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் என்றும் சித்தரிக்கும் இந்தக் குருமூர்த்தி களை மார்க்ஸ் கற்பனை செய்து பார்த் திருக்கமாட்டார் தான்! வக்கிர புத்தியின் வீச்சு இந்த அளவுக்குப் போகும் என்பது அந்த மகா ஞானியின் கற்பனைக்கும் எட்டாததுதான்.தகவல் தொடர்புத் தொழில் உள்ள நிபுணர்களை கார்ப்பரேட் முதலாளிகள் நினைத்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்களே - அந்த உரிமையோடே அவர்களை வேலைக்கு எடுக்கிறார்களே - இதற்குப் பெயர் “புரோஃபஷனல்களின் சுரண்டலா?” எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிபுணர் என்றாலும் அவரது உழைப்பால் முத லாளிக்கு உபரி மதிப்பு கிடைத்தால் தான் அவரை அதே சம்பளத்திற்கு வைத்துக் கொள்வார். இல்லையெனில் சம்பளத்தை வெட்டுவார் அல்லது வெளியே அனுப்பு வார். இதுதான் இப்போதும் நடக்கிறது. இந்த மெய்மை நீடிக்கும் போது மார்க்ஸ் எப்படித் தோற்றுப் போவார்? அவரது கருத்தியல் எப்படிக் காலாவதியாகும்?பொருளுற்பத்தி தான், திடமான சொத்து உருவாக்கம் தான் சகல பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் அஸ்திவாரம் என்பதால், அதில் உபரி, லாபம் என்பது கிடைக்கும்போது தான் கார்ப் பரேட் நிறுவனங்கள அதைத் தொடரு கின்றன என்பதும் உண்மை.

லாபம் எனப் படுவது ஏதோ யதேச்சையாகக் கூடுதல் விலை கிடைப்பதால் உருவாவதல்ல. உற்பத்தியில் செலுத்தப்படும் உழைப்புக் கான ஊதியத்தைக் காட்டிலும் அதில் கூடுதல் மதிப்பு உருவாவதால் ஏற்படு வது. வேறு மாதிரியாகச் சொன்னால், கிடைத்த கூடுதல் மதிப்பைக் காட்டிலும் உழைப்பாளிகளுக்கு குறைந்த ஊதியத் தைக் கொடுத்ததால் ஏற்படுவது அது வெறும் புனைவு அல்ல, திடமான மெய்ப் பொருள்.இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கு எவ்வளவுதான் கூடுதல் விலை கிடைத்தாலும் உற்பத்திச் செலவு அதைவிடக் கூடுதலாக இருந்தால் லாபம் கிடைக்குமோ? கிடைக்காது அல்லவா. அதனால் குறைந்த உற்பத்திச் செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருளை உற்பத்தி செய்து வைத்துக் கொள்ளவே முயலுகிறார் ஒரு முதலாளி. அந்தப் பொருளுக்கு எதிர்பார்த்த விலையைக் காட்டிலும் கூடுதலான அல்லது குறை வான விலை கிடைப்பது வேறு சில வர்த்த கக் காரணங்களால் நடப்பது. அது அவருக்கு இரண்டாம் பட்சம். அடிப்படை விஷயம் குறைந்த செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருள். இல்லையென்hறல் உற்பத்தியை நிறுத்திவிடுவார். பல தொழிற் சாலைகள் அவ்வப்போது மூடுவிழா காண்பதற்கான காரணம் இதுதான்.முதலாளித்துவ பொருளாதாரத்தின் இந்த அடிப்படை இயங்குநிலை இப்போ தும் தொடரத்தானே செய்கிறது.

இப்போதும் மார்க்ஸ் கண்டறிந்து சொன்ன உபரி மதிப்பு எனும் மகத்தான கோட்பாடு செயல்பட்டுக் கொண்டுதானே இருக் கிறது. எங்கே அது புதையுண்டு போனது? பாவம், குருமூர்த்தி யார்! அப்படி அது புதை யுண்டு போக வேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால், உலகப் பொருளாதார வாழ்வியல் உண்மையோ வேறுமாதிரி யாக உள்ளது.மார்க்ஸ் மறைந்து ஐம்பது ஆண்டு களில்- 1930களில் - அமெரிக்காவில் “மகாமந்தம்” எனும் பொருளாதார நெருக் கடி வந்தது. அதற்குப் பிறகு முதலாளித் துவ உலகில் பெரிதும் சிறிதுமாக நெருக் கடிகள் அவ்வப்போது வந்து கொண்டே யிருக்கின்றன. இப்போது கூட கிரீஸ், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, நிதி நெருக்கடி, வங்கிகள் மூடல், கடன் சுமை, வெளிநாட்டு வர்த் தகத்தில் குளறுபடி, இதனால் நாடுகளி டையே உரசல்கள், உள்நாட்டு வாழ்வில் வர்க்கங்களிடையே கொடூரமான ஏற்றத் தாழ்வு - இவை இல்லாத முதலாளித்துவ நாடுகள் உண்டா?

இதற்கெல்லாம் மூல காரணம் முதலாளித்துவ அமைப்பானது சுரண்டலை அடிப்படையாகக் கொண் டது என்பதே.மார்க்ஸ் எனும் அந்தத் தாடிக்காரக் கிழவன் ஒரு முழு மனிதன், மகா தீர்க்க தரிசி. “அவன் சொன்னது சரிதான், சரி தான்” என்று வாழ்வின் ஒவ்வொரு கூறும் அடித்து அடித்துச் சொல்கிறது. அது சங்பரிவாரத்தினரின் காதுகளில் விழ வில்லையென்றால் அவர்கள் தூங்குவது போல நடிப்பவர்கள். சரித்திரம் அவர் களைத் தாண்டிச் செல்லும்.

எதிர்ப்பது மேற்கத்திய முதலாளித்துவத்தையே!

நூலின் முதல் பகுதியில் “மறைந்து போன மார்க்சியம்” பற்றிப் பேசிய எஸ். குருமூர்த்தி இரண்டாம் பகுதியில் “மங்கி வரும் மார்க்கெட்டு” பற்றி பேசுகிறார். முதலாளித்துவத்தைக் குறிக்கவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அது பொருத்தமானது அல்ல. “மார்க்கெட்” - சந்தை - எனப்படுவது விற்கிறவரும், வாங்குகிறவரும் சந்திக்கும் இடம். அது முதலாளித்துவத்தின் கண்டு பிடிப்பு அல்ல. வெள்ளைக்காரர்கள் இங்கே வருவதற்கு முன்பே வாரச்சந்தை, மாதச் சந்தை என்று கூடியதை தமிழர் களாகிய நாமறிவோம்.

ஆண்டான் - அடிமை யுகம் காலத்திலிருந்து இருக்கக் கூடிய சந்தையை ஏதோ முதலாளித் துவத்தின் கண்டுபிடிப்பு போலச் சொல்லி, அதை மார்க்சியர்கள் இப்போது தான் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது போல எழுதிச் செல்கிறார். இரண்டுமே தவறு. முதலாளித்துவத்தின் தனித்தன்மை சந்தையில் இல்லை; அது ஆலைமுறை என்கிற புதிய உற்பத்தி முறையிலும், அதற் கான மூலதன ‘உருவாக்கத்திலும்’ அதைத் தனியுடைமையாகக் கொண்ட முதலாளிகள் என்கிற புதிய வர்க்கம் பிறந்ததாலும், அதன் மறுபக்கமாக உழைப்பையே சொந்தமாகக் கொண்ட தொழிலாளர்கள் எனும் மற்றொரு புதிய வர்க்கம் உதயமானதிலும் உள்ளது. இப்படி இருவேறு முரண்பட்ட நலன்கள் கொண்ட வர்க்கங்கள் உருவாகி, அதனால் தவிர்க்க முடியாதபடி அவற்றுக்கிடையே போராட் டம் நடக்கிறது எனும் உண்மையை அங்கீ கரிக்க இவருக்கு மனமில்லை. அத னாலும் மார்க்கெட் ஆராய்ச்சிக்குள் தன்னை அடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.எனினும் அத்தகைய அலசலிலிருந் தும் அவர் வந்து சேர்ந்த முடிவு என்னவோ இதுதான்: “1930-களில் அமெரிக்கா சந் தித்த பெரும் பொருளாதாரச் தொய்வை விட மோசமானது (தற்போதைய நெருக் கடி) இது. வெறும் நிதி சார்ந்த அமைப்பின் வீழ்ச்சியல்ல இது; அவர்களுடைய முன் மாதிரியின் வீழ்ச்சி. அதாவது, ஆங்கிலோ சாக்சனிய கட்டற்ற சந்தை முன்மாதிரி யின் வீழ்ச்சி ஆகும்”.

அமெரிக்கா உரு வாக்கித் தந்துள்ள முதலாளித்துவமும் தோற்றுபோய் வருகிறது என்பது தான் குருமூர்த்தியின் கணிப்பு. முதலாளித்துவம் தோற்கத்தான் செய்யும், அதன் உள்முரண்கள் அவ்வளவு கடுமையானவை என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துக் காட்டியதில் தான் மார்க்சின் பெருமை உள்ளது. ஒருபுறம் மார்க்சின் சித்தாந்தம் புதைந்து போய்விட் டது என்று கெக்கலி கொட்டிச் சிரித்தவர், மறுபுறம் அமெரிக்க மாடல் முதலாளித் துவமும் சிதைந்து வருகிறது என்று சொல்லி கன்னத்தில் கை வைக்கிறார். கவனியுங்கள், எல்லா வகை முதலாளித் துவத்தையும் எதிர்க்கவில்லை, அமெரிக்க பாணியை மட்டும்தான் எதிர்க்கிறார்!அமெரிக்க பாணி மீது இவருக்கு என்ன இவ்வளவு கோபம்? “தனிமனிதர் களின் அதிகரித்து வரும் அரசுச் சார் பினால் குடும்பத்தின் கடமைகள் தேசிய மயமாக்கப்பட்டு மிகப்பெரிய பொதுக் கடமையான மக்களின் சமூகப் பாது காப்பு, பிற பாதுகாப்புகள் என்ற பெரும் சுமையை அரசு தன் மேல் ஏற்றிக் கொண் டுள்ளது” - என்பதில் தான் இவருக்கு ஏக வருத்தம்!

குருமூர்த்தியார் விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார். முதலாளித்துவ மானது குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கிறது என்பது உண்மை. சேமிப்பு என்பது இளையவர், முதியவரின் எதிர்காலப் பாது காப்புக்குத் தேவையாக இருந்தது. அவர் களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்கிற மனப்போக்கை உருவாக்கி, அதன் விளைவாக சேமிப்புப் பழக்கத்தை ஒழித் துக்கட்டி, ஊதியத்தை எல்லாம் நுகர் பொருளில் செலவழிக்கிற நுகர்வு கலாச் சாரத்தை உருவாக்கியது முதலாளித் துவம். இது இளையவரையும், முதியவரை யும் அனாதைகளாக்கியது. அந்தக் கட்டத் தில் அரசு தலையிட வேண்டிய அவசியம் உருவானது. அப்படித்தான் வேலையில் லாக் கால நிவாரணம், முதியோர் ஓய்வூதி யம், மருத்துவ மானியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அமெரிக்கா - ஐரோப்பாவில் தலையெடுத்தன. இங்கே சேர்த்துச் சொல்ல வேண்டிய விஷயம் அன்றைய சோவியத் ஒன்றியத்தின சோச லிசக் கட்டுமானம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் முன்னணியில் நின்றது. அமெரிக்கா - ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் அத்தகைய திட்டங்கள் வேண்டு மென்று போர்க்கொடி தூக்கிய போது வேறு வழியின்றி அரைகுறைமனதோடு சில திட்டங்களை மேற்குலக முதலாளித்துவ நாடுகளும் அமல்படுத்தின.சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக் குப் பிறகு இந்த சமூகப் பாதுகாப்புத் திட் டங்களையும் வெட்டத் துணிகின்றன முத லாளித்துவ அரசுகள். எஜமானனைக் காட்டிலும் அதிக எஜமான விசுவாசம் காட்டுகிற குருமூர்த்தியார் இந்தத் திட்டங் கள் தான் அமெரிக்க பாணி முதலாளித் துவத்தின் மிகப்பெரிய ஊனம் என்கிறார், அதனால்தான் அது வீழ்ந்து வருகிறது என்கிறார். முதலாளித்துவம் உருவாக்கிய குடும்பச் சீரழிவு காரணமாகவே சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வந்தன, இப் போதும் தேவைப்படுகின்றன என்பதை மறைத்து விட்டு, இந்தத் திட்டங்கள் காரணமாகத் தான் குடும்ப அமைப்பு சீரழி கிறது என்று பெரும் போடாகப் போடுகிறார்.இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங் களும் இல்லையென்றால் முதலாளித்துவ உலகில் பாட்டாளிகளின் வாழ்வு மேலும் பரிதாபமாகிப் போகும்.

அதைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அத னால் தீவிரமான வர்க்கப் போராட்டங் களும் சமூகப் பதட்டங்களும் ஏற்படும் என்பதை இந்த ஆர்.எஸ்.எஸ்.காரரைக் காட்டிலும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் நன்கு உணர்ந்துள்ளன. அத னால் தான் இந்தத் திட்டங்களை ஒழித் துக் கட்ட வேண்டுமென்று அவை உள் ளூர ஆசைப்பட்டாலும் அப்படிச் செய்யா மல், அவ்வப்போது வெட்டிச் சுருக்கவே முயலுகின்றன.ஜெர்மனியின் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் உர்சுலா வோன் டெர் லெயன் கூறுகிறார்: “எங்களது சமூகப் பாதுகாப்புத் திட்டம் நிலைப்படுத்தும் கருவியாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓய்வூதியம், வேலையில்லாக் கால நிவாரணம் மற்றும் இதர உதவிகள் மக்களிடம் பணம் இருக்குமாறும், அதனால் சரக்குகளுக்கு உள்நாட்டில் தேவை இருக்குமாறும் பார்த் துக்கொள்கின்றன. எனவே, நெருக்கடியை நாங்கள் பெரிதாக உணரவில்லை” (டைம்ஸ் ஆப் இண்டியா, 7.6.2013)முதலாளித்துவ ஆட்சியாளர்களே சமூகப் பாதுகாப்புத்திட்டங்களின் தேவை யை இந்தப்படியாக உணர்ந்திருக்கும் போது குருமூர்த்தியார் குதர்க்கமாகச் சிந்திக்கிறார். அவற்றை அரசின் மீதான “பெரும்சுமை” என்று மிரட்டி, “இந்தச் சிதைவானது உண்மையில் தீவிரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு கலாச்சாரச் சீரழிவே” என்று முத்தாய்ப்பு கொடுக்கிறார். சங்பரிவாரத் தினர் ஏழை, எளியவர்களின் நேர் எதிரி கள் என்பதை இதிலிருந்து சட்டென்று புரிந்து கொள்ளலாம்.முதலாளித்துவத்தில் குடும்ப அமைப்பு சீர்குலைவது பற்றி குருமூர்த்தி கவலைப்படுகிறாரே என்று தோன்றலாம். அவர் காப்பாற்ற விரும்புகிற குடும்ப அமைப்பு ஜனநாயகமயமானது அல்ல, மாறாக பழைய கட்டுப்பெட்டி அமைப்பு. 

அமெரிக்காவின் தற்போதைய நிலைமை யின் மோசமான அம்சங்கள் என்று இவர் பட்டியலிட்டிருப்பதில் இதுவும் ஒன்று; “1980ல் கூட ஆண்கள் வேலைக்குப் போவதும், பெண்கள் வீட்டில் இருப்பது மான முன்மாதிரியே பழக்கத்தில் இருந் தது. 2000 ஆண்டுவாக்கில் கணவன், மனைவி இருவருமே பணி புரியும் முன்மாதிரியே மேலாண்மை செலுத்து கிறது.”முதலாளித்துவத்தின் சில நல்ல கூறுகளில் ஒன்று தனது பொருளாதாரத் தேவை கருதி பெண்களையும் சுதந்திரத் தொழிலாளர்களாக மாற்றியிருப்பது. நிலப் பிரபுத்துவம் பெண்களை அடுப்படியில் அடைத்துப் போட்டது என்றால் இது அவர்ளை ஆலைகளிலும் அலுவலகங் களிலும் வேலை பார்க்க வைத்தது. அத னால் அவர்கள் பொருளாதார ரீதியாகச் சொந்தக்காலில் நிற்க முடிந்து, காலங் காலமாகத் தொடர்ந்த ஆணாதிக்கப் போக்குகளை எதிர்த்துப் போராடும் சூழல் உருவானது. இது பொறுக்கவில்லை குருமூர்த்தியாருக்கு.

அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப் போவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் இந்தப் புத்திசாலி! ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமூக சீர்திருத்தத்தின் பிரதான எதிரிகள், ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் மகா விரோதிகள் என்பதை இது துல்லியமாக வெளிப்படுத்துகிறது.குடும்பங்களின் சேமிப்பு குறைந்து போன நிலையில், அந்தக் குறைந்த சேமிப்பையும் பங்குச் சந்தையில் போட அவை பயப்படுகின்றன. ஜெர்மனியிலும், ஜப்பானிலும் பங்குச் சந்தையில் குடும் பங்களின் முதலீடு மிகக் குறைவே. “ஐந்து வருடச் சேமிப்புக் கணக்குக்கு 1 சதவீத வட்டியே கிடைக்கும் சூழலில் கூட ஜப்பானியர்கள் தாங்கள் சேமிப்பின் 56 சதவிகிதத்தை ஜப்பானிய வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர்” என்கிறார் குருமூர்த்தி. இதற்கு நேர்மாறாக, அமெரிக் காவில் “பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கக் குடும்பங்கள் பங்குச் சந்தையின் முதலீடு செய்துள்ளன” என்றும் கூறுகிறார்.

இதற்கு மூல காரணம் அமெரிக்காவில் பங்குச் சந்தை மட்டுமல்லாது வங்கிகளது நடவடிக்கைகளும் ஊக வணிகமாக இருப்பது. எந்த நேரத்தில் எந்த வங்கி மூழ் கும் என்று சொல்ல முடியாது. சமீபத்தில், கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் சில தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றில் பணம் போட்டவர்களின் கதி அதோ கதியானது. மறுபுறம் கடன்காரர் களை நெருக்கிப் பிடித்ததில் அவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு தெரு வோரம் நின்றிருந்த கார்களில் குடிபுகுந்த அவலமும் ஏற்பட்டது! பொருளாதாரம் தனியார்மயமான பிறகு அந்த வங்கிகளில் போடப்படும் தங்களது சேமிப்புக்கு பாதுகாப்பு இல்லை என் பதை அறியும் மத்திய தர வர்க்கம் பங்குச் சந்தைப் பக்கம் திரும்பியது. அங்கும் பாது காப்பு இல்லை. விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் எங்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான்.இதைத் தவிர்க்க வங்கி - இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங்களாவது பொதுத் துறையில் இருக்க வேண்டுமென்பது தான் இதிலிருந்து பெறப்படும் பாடம். இந் தியாவின் நிதி மேலாண்மை தற்போதைய உலக நெருக்கடியை ஓரளவு சமாளித்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் நமது பொதுத்துறை வங்கிகள் - ஈட்டுறுதி நிறுவனங்கள். இந்த உண்மையை ஒப்புக் கொண்டு நிதித்துறையைத் தனியார்மய மாக்காதே என்பாரா குருமூர்த்தியார்? அதுதான் இல்லை. அப்படியெல்லாம் தப்பித்தவறியும் சொல்லவில்லை. நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலமே முத லாளித் துவத்தின் உள்ளார்ந்த விதி எனும் உண்மையைப் போட்டு உடைக்கவோ, அதை ஓரளவாவது கட்டுக்குள் வைத் திருக்க அரசின் தலையீடு வேண்டுமென் பதை வலியுறுத்தவோ அவர் தயாராயில்லை. எனவே, பொதுத்துறையின் பெருமையை அல்ல, பழைய குடும்ப அமைப்பின் புனிதத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகிறார். அதை இழந்துவிட்ட அமெரிக்கா சகலத்தையும் இழந்து விட்டது என்கிறார். “கம்யூனிசம் வீழ்ந்ததை விட வேகமாக முதலாளித் துவ மேற்கும் வீழ்ந்துவிடும்” என்று உற் சாகமாகக் கூறுகிறார்.இந்த விஷயத்தில் அமெரிக்கபாணி முதலாளித்துவமே உலகின் இறுதி இலக்கு, அதை அடைந்துவிட்டதால் மனித குல வரலாறே முடிந்து போனது என்பதாக ஆணவத்தோடு முரசறைந்த ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் கருத்தை யும் மறுதலிக்கிறார்.

தனது சமீபத்திய நூல் ஒன்றில் கலாச்சாரத்திற்கு உள்ள பங் களிப்பைத் தான் புறக்கணித்துவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் கொஞ்சம் மகிழ்ந்து போகிறார். ஆகவே, கலாச்சாரத்தை - அதாவது புனித குடும் பத்தை - கைவிட்டுவிட்ட முதலாளித் துவ மேற்கு வீழத்தான் செய்யும் என்று ஆணையிட்டுச் சொல்கிறார்!அப்படியென்றால் அதனிடத்தில் என்ன வந்து உட்காரும்? உலகம் “ஒரு மாற்றுப் பொருளாதார மாதிரியைத் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார். நமக்கு ஆர்வம் பிறக்கிறது. ஆஹா! ஆர்.எஸ்.எஸ். காரரும் மாற்றுப் பொருளா தாரம் பற்றிப் பேசுகிறாரே!ஆனால், கவனத்தில் வையுங்கள் “முதலாளித்துவ மேற்கு வீழ்ந்து விடும்” என்று தான் சொல்கிறாரே தவிர முத லாளித்துவமே வீழ்ந்து விடும் என்று சொல்லவில்லை. இவர் முன்வைக்கிற மாற்றுப் பொருளாதாரம் “முதலாளித்துவ கிழக்கு” ஆகும். அதுதான் இவரது நூலின் அபத்தமான உச்சக்கட்டம். அந்த மாற் றின் லட்சணத்தை, அதாவது அவலட் சணத்தை அடுத்துக் காண்போம்.

கிழக்கிந்திய முதலாளித்துவமும் கேடானதே!

நூலின் மூன்றாம் பகுதிக்கான தலைப்பே பரபரப்பானது. அது : “மார்க்ச்சுக்கும், மார்க்கெட்டுக்கும் அப்பால் உலகத்துக்கான முன் மாதிரி”. இந்திய அரசியலில் மூன்றாவது மாற்று பற்றிப் பேசப்படுவது போல உலக சமூகக் கட்டமைப்பிற்கு ஒரு மூன்றாவது மாற்றைப் பரிந்துரைக்கிறார் எஸ்.குருமூர்த்தி. தலைப்பைப் பார்த்தால் இது சோசலிசமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல என்பது போலப்படும். ஆனால் முத்தாய்ப்பாக இவர் கூறுவது “நமக்குத் தேவை முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய ஒரு சந்தை. அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்பதுதான். சந்தை என்று இவர் கூறுவது முதலாளித்துவத்தையே என்பதைக் கண்டு வந்தோம். அதிலே ஒரு வகையைத் தான் மனிதர் பரிந்துரைக்கிறார். ஆக, இது மூன் றாவது மாற்றே அல்ல. ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ அமைப்பில் ஒரு முக்கிய மாறுதலையே கோருகிறார்.அது என்னவெனில் “முறைசாரா அமைப்பு களோடு இணைந்து செயலாற்றக்கூடிய” தன்மை முதலாளித்துவத்திற்கு வேண்டும். அதுதான் அமெரிக்க பாணி முதலாளித்துவத்திடம் இல்லை என்கிறார். அப்படியெனில், “முறைசாரா அமைப்புகள்” என்று இவர் எவற் றைச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.மனிதர் இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

ஆதி காலத்தில் பல நூற்றாண்டுகளாகப் பொருளாதாரத்தில் ஓங்கி நின்றிருந்த இந்தியாவும், சீனா வும் பின்னர் தேங்கிப் போயின என்பதை ஒப் புக் கொள்கிறார். வணிகம் சார்ந்த முதலாளித் துவ அமைப்பு முறை மேற்கில் எழுந்து வந்த தால்தான் அது கிழக்கை முந்திப்போனது என் பதையும் ஏற்றுக் கொள்கிறார்.

நாகரிகத்தில் பெரிதும் செழித்திருந்ததாகச் சொல்லப்பட்ட ஆசியாவில் முதலாளித்துவம் தோன்றாமல் அது ஏன் ஐரோப்பாவில் தோன்றியது எனும் கேள்வி வரும்போது தான் மனிதர் குழம்பிப் போகிறார். அவரால் சத்தியத்தை நேருக்கு நேராய் தரிசிக்க முடியவில்லை.“நவீன முதலாளித்துவம் என்பது புரா டெஸ்டன்ட் கிறித்துவ நெறிமுறைகளின் விளைபொருள்” என்று மாக்ஸ் வெபர் எழுதி னார். ஆகையினால் கர்மா, மறுபிறப்பு ஆகி யவை மீது நம்பிக்கை கொண்டிருந்த இந்து மதம், பௌத்தம் போன்ற சமயங்கள் எல்லாம் நவீன முதலாளித்துவம் வளர உதவாது என் றும் அவர் சொன்னார்” என்று வருத்தத்தோடு எழுதிச் செல்கிறார்.

முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கும், கத்தோலிக்க கிறித்துவத்திற்கு எதிராக ஐரோப்பாவில் கிளர்ந்தெழுந்த புராடெஸ்டன்ட் இயக்கத்தின் தோற்றத்திற்கும் இடையே பலத்த தொடர்பு உண்டு. கத்தோலிக்க கிறித்துவமானது நிலப்பிரபுத் துவத்தின் சித்தாந்த அடையாளம் மற்றும் மத ஸ்தாபனமாக இருந்தது. அதை எதிர்த்த இயக்கமானது தோற்றத்தில் மதச்சீர்திருத்த செயல்பாடாகவும், உள்ளுக்குள் புதிதாக எழுந்து வந்திருந்த முதலாளி வர்க்கத்தின் பொருளாதார- சித்தாந்த அபிலாஷைகளின் வெளிப்பாடாகவும் இருந்தது. கிறித்துவத்தின் சில அடிப்படை அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்ற கூறுகளை எல்லாம் பகுத்தறிவு நோக்கில் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இது முரட்டு நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி பகுத்தறிவுவாதத்தை முன்னுக்கு கொண்டு வந்தது. இது முடிவில் பரிசோத னை அடிப்படையிலான விஞ்ஞானத்தையும், புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளையும் ஐரோப்பாவுக்கு வழங்கியது. வேறு சில பௌதீக-பூகோள-வரலாற்றுக் காரணங்கள் இருந்தாலும் இந்தச் சித்தாந்தப் போராட்டம் ஒரு முக்கியமான பங்களிப்பை செலுத்தியது. இப்படியொரு எதிர்ப்பு இயக்கம் வைதீக இந்து மதத்திற்குள்ளோ அல்லது இஸ்லாமிற் குள்ளோ அல்லது பௌத்தத்திற்குள்ளோ நடக்கவில்லை.

ஆசியாவின் நிலப்பிரபுத்துவமும், அதன் சித்தாந்த அடையாளமான மதங் களும் இங்கே மூடுண்ட அமைப்புகளாகவே இருந்தன. பிரம்மத்தோடு ஒன்றுதல், பக்தி இயக்கங்கள், சரணாகதி தத்துவங்கள் என்ற பெயரில் இவை நம்பிக்கைவாதத்தையே தூக் கிப் பிடித்தன.

பகுத்தறிவு கீற்றுக்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. மனிதர்களை நம்பு ... நம்பு.... என்று வம்பு செய்தனவே தவிர, சுதந்திரமாக யோசி...யோசி என்று உற்சாகப் படுத்தவில்லை- குறிப்பாக இடைக்காலம் எனப்பட்ட நிலப்பிரபுத்துவ யுகத்தில். அதனால்தான் கிழக்கு பிந்தியது, மேற்கு முந்தியது- கூடவே வேறு சில காரணங்கள் இருந்த போதிலும்.இந்த வரலாற்று உண்மையை ஏற்க குரு மூர்த்தியாருக்கு மனமில்லை. அவருக்கு கோபம் கோபமாக வருகிறது. “மாக்ஸ் வெபர் இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனையாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதன் விளைவாக இந்தியச் சிந்தனையாளர்கள் கர்மா, மறுபிறவி ஆகியவற் றின் மீதான நம்பிக்கை, இந்தியாவின் சாதி அமைப்பு ஆகியவையெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவை அழித்து விட்டது என்று முழுமை யாக நம்பினார்கள். ஆகவே இந்தியா இவற்றை யெல்லாம் துறந்தால் ஒழிய, அதாவது இந்தியா தன்னையே மறுதலித்தால் அன்றி முன்னேற வழியில்லை என்று நம்பினார்கள்” என்று ஆத்திரத்தோடு எழுதுகிறார். பூனைக்குட்டி சாக்குப்பையிலிருந்து வெளியே வந்துவிட்டது.

இந்தியா என்றாலே கர்மா, மறுபிறவி, சாதி என்பதுதானாம்! அவற்றைக் கைவிடச் சொல்வது இந்தி யாவையே கைவிடுவதாம்! இந்தியா பின்தங் கிப் போனதற்கு வைதீக மதக்கோட்பாடுகளும் காரணமல்ல, சாதி எனும் சமூகக்கட்ட மைப்பும் காரணமல்ல, பிறகு எது காரணம்? அதற்குள் போகவில்லை குருமூர்த்தியார். வை தீக மதத்தையும், சாதியத்தையும் காத்து நிற் பதில் குறியாக இருக்கிறாரே தவிர, வேறு எது காரணமாக இருக்கும் என்று அலசவில்லை. அது பயனற்றது என்பதை அவர் அறிவார். உண்மையான காரணம் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. அதை மூடி மறைக்கிற வேலை மட்டுமே தங்களுக்கு இருப்பதை இவ ரைப் போன்ற பழமைவாதிகள் அறிவார்கள்.ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்து முடிவில் ஆட்சியையே பிடித்து விட்டார்கள், துலாக்கோல் பிடித்து வந்து முடிவில் செங்கோலைப் பிடித்து விட்டார்கள். இதற்கு மூலகாரணம் இங்கே இருந்த நிலப் பிரபுத்தவத்தை விட அவர்கள் வசம் முத லாளித்துவம் எனும் நவீன அமைப்பு இருந் தது. அவர்கள்தாம் அதை நமக்கு அறிமுகப் படுத்தினார்கள். அதன் பிறகுதான் இங்கே நவீன தொழில்வளர்ச்சி ஏறபட்டது. ஏகாதிபத் திய ஆடசி எனும் கெடுதலில் நமக்கு கிடைத்த ஒரு நன்மை அது.
இப்போதும் அந்த முதலாளித்துவம்தான் இங்கே பரவி வருகிறது - அதனுடைய சகல எதிர்மறைக் கூறுகளுடனும்.இங்கே ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார் குருமூர்த்தியார். அது : “இந் தியா தன் சொந்தப் பொருளாதார முன்மாதிரி யை உருவாக்கிக் கொண்டிருக்கிறது....(இது) உயிர்த்துடிப்போடு இயங்கும் இந்திய சமு தாயத்தின் அங்கங்களான இந்தியக் குடும்பங் கள், சமூகங்கள், சாதிகள் எதையும் தனிமைப் படுததி அணுமயமாக்கவில்லை. எப்போதும் நம் மேட்டுக்குடி மக்களால், நம் ஜனநாயக அர சியல் சமுதாயம் சிதைவதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் சாதிய, சமூக அடிப்படையிலான அரசியல் கூட ஒரு வகையில் ஒத்திசைந்து போகக்கூடிய ஒரு வழிமுறைதான்.”இந்திய முதலாளித்துவம் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணி அல்ல. அங்கே உருவான முதலாளித்துவமானது அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களை எல்லாம் சிதறடித்துவிட்டது. இங்கே உருவான முதலாளித்துவமோ அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களான குடும்பங்களை மட்டுமல்ல, “சமூகங்கள், சாதிகள்” என்பவற்றையும் பாது காத்துக் கொண்டது, அவற்றோடு ஒத்தி சைந்து போனது, அதாவது, மேற்கத்திய முத லாளித்துவம் காலாவதியான நிலப்பிரபுத்துவத்தை முட்டி மோதி வீழ்த்தியது என்றால் இந்திய நிலப்பிரபுத்துவமோ அத்தோடு பல விஷயங்களில் சமரசம் செய்து கொண்டது. இதுதான் இந்திய முதலாளித்துவத்தின் தனிச் சிறப்பு. இதுவே குருமூர்த்தியாரின் கருத்து. இது நல்ல ஒப்புதல் வாக்குமூலம். இதை யொரு பெருமையான விஷயமாகக் கருதி, இங்கே முதலாளித்தவமானது சாதியத்தோடு எப்படி இசைந்து போகிறது, ஒட்டி உறவாடு கிறது என்பதற்கு உதாரணங்களையும் தரு கீறார் மனிதர்.

சில சாதிகளின் பெயர்களைச் சொல்லி, அந்த சாதியக் கட்டமைப்புக்குள்ளேயே அவர்கள் எப்படி சில தொழில்துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள் என்று பெருமிதத் தோடு குறிப்பிட்டிருக்கிறார். பிறகு இதை யொரு கருத்தியலாக இப்படி வடித்தெடுக்கிறார்: “ இந்தியாவில் சாதி, சமூகங்கள் எல்லாம் அண்டைப்புறம் தாண்டிச் செயல்படும் சமுதாய அமைப்புகளாகும். மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமாக்கத்தி னால் மக்களிடையே இருந்த அண்டைப் புற உறவுமுறைகள் குலைக்கப்பட்டன. ஆனால் நம் நாட்டின் சாதிய, சமூக அமைப்புகளால் தொழில் மயமாக்குதலின் பிரச்சனையை எளி தாகவும், செயலாற்றலுடனும் கையாள முடிந்தது.”இந்திய முதலாளித்துவமானது மடிசஞ்சி நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டணி அமைத் திருப்பதைக் கொஞ்சி மகிழ்கிறார். இந்த நவீன காலத்தில் சாதியத்தை இப்படிப் பச்சையாக ஆதரிக்கிற ஓர் அறிவு ஜீவியை நீங்கள் கண் டதுண்டா? சங் பரிவாரத்தில்தான் அப்படிப் பட்ட ஆட்கள் இருப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது.முதலாளித்துவ வளர்ச்சிக்கு சாதியம் இடையூறாக இல்லை, மாறாக உதவியிருக் கிறது என்று கைநடுங்காமல் எழுதியிருக் கிறார். “சுதந்திரம், சமத்தவம், சகோதரத்துவம்” என்று ஐரோப்பாவில் முழங்கிப் புறப்பட்ட முதலாளித்துவம் இந்தியாவில் சாதியம் எனும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டில் மடங்கிப் போய் தனது கொள்கை முழக்கத் தைக் கைவிட்ட கொடுமையைச் சுத்தமாக மறைத்திருக்கிறார். அந்த அசிங்கத்தை அற்புதச் செயலாக வருணித்திருக்கிறார்.

கனடாவின் “நார்தர்ன் பிரிட்டிஷ் கொலம் பியா பல்கலைக்கழகத்தை” சார்ந்த மூன்று பேராசிரியர்கள் இந்தியக் கம்பெனிகளின் இயக்குனர் அவைகளில் சாதியம் எப்படி நிலவுகிறது என்பது பற்றி ஓர் ஆய்வு நடத்தி னார்கள்; அதன் முடிவுகளை “எக்னாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி” இதழில் (11-8-12) வெளியிட்டார்கள். தங்களது இந்த ஆய் வுக்காக இந்தியாவின் ஆயிரம் பெரிய கம்பெனி களை எடுத்துக் கொண்டார்கள். இந்தியாவின் அனைத்துக் கம்பெனிகளது மொத்த சந்தைப் படுத்தப்பட்ட மூலதனத்தின் ஐந்தில் நான்கு பங்கு இந்த ஆயிரம் கம்பெனிகளுக்குடையது. அப்படியென்றால் இவை எவ்வளவு பெரிய வை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அவர்களது ஆய்வு முடிவுகள் வருமாறு: “இயக்குநர் அவை உறுப்பினர்களில் 93 சதவிகிதம் பேர் முன்னேறிய சாதியினர். 46 சதவிகிதம் பேர் வைசியர்கள், 44 சதவிகிதம் பேர் பிராமணர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் முறையே 3.8 சதவிகிதம் பேர் மற்றும் 3.5 சதவிகிதம் பேர். கிட்டத்தட்ட 65 சதவிகிதம் இந்தியக் கம்பெனிகளின் இயக் குநர் அவை ஒவ்வொன்றும் ஒரேயொரு முன் னேறிய சாதியினரைக் கொண்டுள்ளது.”சரித்திர ரீதியான நியாயப்படி பார்த்தால் நிலப்பிரபுத்துவ சாதியத்தை முதலாளித்துவம் சிதைத்திருக்க வேண்டும். இந்தியாவிலோ அது சாதியத்தோடு சமரசம் செய்து கொண் டுள்ளது. இங்கே வர்க்கமும் சாதியமும் இன்ன மும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந் திய முதலாளித்துவத்தின் படுபிற்போக்குத் தனமான குணம் இது தான். இதைத்தான் குருமூர்த்தியார் ஏற்றிப் போற்றுகிறார்!இன்னும் சொல்லப்போனால், நம்நாட்டு முதலாளித்துவம், தாழ்த்தப்பட்ட - பழங்குடி யின - பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டுமல் லாது மதச் சிறுபான்மையினரான முஸ்லிம் களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. இந்தியப் பெரும் கம்பெனிகளில் - அவற்றின் இயக்குனர் அவைகளில் - இவர்கள் மிகச் சொற்பமே என்பதையும் இந்தப் புள்ளிவிபரங் கள் வெளிப்படுத்துவதை நோக்குங்கள். ஏற் கனவே இதுபற்றி சச்சார் குழுவும், மிஸ்ரா கமி சனும் பேசியிருக்கின்றன. இந்தியத் தொழில் துறையில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள் என்பதை உணர்ந்துதான் இவர் களுக்கென்றே தனி நிதி கார்ப்பரேசன் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலைமை இங்கே உள்ளது. ஆனால், குருமூர்த்தியாருக்கோ இதுவெல்லாம் இந்தியப் பெருமையாக உள்ளது.”“முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக்கூடிய ஒரு சந்தை.... அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்றாரே அது இப்படிப்பட்ட இந்திய முதலாளித்துவம் தான். சாதி மதப்பாகுபாடு காட்டிக் கொண்டே வளருகிற முதலாளித்துவம் தான். இதிலே பாலினப்பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும் கம்பெனிகளது நிர்வாகத் தில் பெண்களின் பங்கும் மிகமிகச் சொற்பமே. இதுபற்றி பெண்களுக்கான தேசிய கமிசன் தனது கவலையை அவ்வப்போது வெளி யிட்டு வருகிறது. மொத்தத்தில் இந்திய பாணி முதலாளித்துவமானது சாதியமும், ஆணாதிக் கமும் நிறைந்த வருணாசிரம முதலாளித் துவம். இதைத்தான் துதிக்கிறார் மனிதர்.இதைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், குலைத்து விடக்கூடாது என்றும் இப்படி வலி யுறுத்துகிறார். “வளர்ந்து வரும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, குழந்தைகளின் உரிமை தொடங்கி பெரியவர்களின் உரிமை, பெண் ணுரிமை, ஒற்றைப்பாலினர் உரிமை வரை அனைத்துமே சமுதாயத்தைப் பிரிக்கவே உதவுகின்றன. இவை முறைசாரா அமைப்பு களையும், உறவுமுறைகளையும் வலுவிழக்கச் செய்துவிட்டன.” பெண்ணுரிமை எல்லாம் பேசக்கூடாது, மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இருக்கக்கூடாது, அப்படி இல்லாமலாக்கியதுதான் பாரதத்தின் முறைசாரா அமைப்புகளும், உறவுமுறைகளும்! இவற்றைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டே இங்கே முதலாளித்துவம் வளருகிறது. ... அது தொடர வேண்டும் அது மட்டுமா? இதுவே அமெரிக்கப் பாணி முதலாளித்துவத்திற்கு சரியான மாற்று! இதை உலகம் முழுக்க ஏற்க வேண்டும், இந்திய வருணாசிரம முதலாளித் துவத்தை உலகம் முழுக்கக் கொண்டு வரப் பகற்கனவு காண்கிறது ஆர்எஸ்எஸ். அதையே எதிரொலிக்கிறார் இந்த பிரகஸ்பதி.

குருமூர்த்தியாருக்குச் சொல்லிக் கொள்வோம் - உங்கள் கனவு பலிக்காது. அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப்போவது உண்மை. ஆனால் அதனிடத்தில் கேடு கெட்ட இந்திய பாணி முதலாளித்துவம் வராது. மாறாக, சகல பாணி முதலாளித்துவமும் அழி யும். அதனிடத்தில் சோசலிச சமுதாயம் மல ரும்.

அதுவே முதலாளித்துவத்திற்கான மெய்யான மாற்று.மார்க்ஸ் இன்னும் வாழ்கிறார், தனது சீரிய விஞ்ஞானச் சிந்தனையால் வாழ்கிறார். அவரின் தேவையை உலக வாழ்வு நித்தம் நித்தம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. பூமிப் பந்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்ல, இந்த “புண்ணிய பூமி”-க்கும் அவர் தேவைப்படு கிறார்.நிலப்பிரபுத்துவத்தின் சாதியத்தை ஒழிக்க வேண்டிய முதலாளித்துவம், அதனோடு கூட்டுச் சேர்ந்து கொண்ட அநீதி இங்கே நடந் திருக்கிறது. தனது எதிரி செய்து முடித்திருக்க வேண்டிய வேலையும் தனது தோள் மீது விழுந்திருப்பதை இந்தியப் பாட்டாளி வர்ககம் உணர்ந்திருக்கிறது. அது வருணாசிரமம், முதலாளித்துவம் இரண்டையும் ஒருசேர வீழ்த்தி இங்கும் சோசலிசத்தை உருவாக்கிக் காட்டும். அதற்கும் மாமேதை மார்க்சே வழி காட்டுவார். அந்த வெற்றி கீதத்தை குரு மூர்த்தியார் கேட்காமல் போகலாம்; ஆனால் அவரின் சந்ததியார் கண்டிப்பாகக் கேட்பார்கள்.

 அருணன்