அறிவியல் நோக்குடைய தத்துவம் பற்றி சிந்திக்கும்போதோ, அதன் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கும்போதோ இந்நாட்டில் மார்க்சிய - லெனினிய வளர்ச்சியைப் பற்றியே நாம் குறிப்பிடுகிறோம். நாட்டிற்கு வெளியேயிருந்து கிடைத்த அனுபவத்தினால் மட்டும் எந்தவொரு தத்துவமும் வளர்ச்சியடைவதில்லை என்பதை நாம் முதலாவதாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு தத்துவமானது வளர்ச்சியடைய வேண்டுமானால், அது புரட்சிகர இயக்கத்தின் உடனடித் தேவைகளுக்கும் பயன்படக் கூடியதாக, மக்களின் உண்மையான போராட்டங்களோடு ஒன்றுபட்டதாக இருக்க வேண்டும். இவ்வகையில் ஒரு தத்துவமானது மக்களின் போராட்டத்திற்கான ஒரு கருவியாக அமைகிறது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் அப்புதிய தத்துவமானது வளர்ச்சியடைந்து கொண்டே போகிறது.
இரண்டாவதாக, ஒரு தத்துவமானது வெட்டவெளியில் இருந்து உருவாவதில்லை. மக்களில்லாமல், அத்தத்துவத்திற்காகப் போராடக்கூடிய வர்க்கங்களில்லாமல், அத்தத்துவத்திறகாகத் தங்களது உயிரையும் தியாகம் செய்யக்கூடிய மக்களில்லாமல், அத்தத்துவத்திற்கேற்ற வகையில் செயல்படத் தயாரான மக்கள் இல்லாமல், எந்தவொரு தத்துவத்திற்கும் எதிர்காலம் என்பதே இல்லை.
எனவே, மார்க்சிய - லெனினிய தத்தவத்தின் வளர்ச்சியைப் பற்றி அல்லது அறிவியல் நோக்கிலான தத்துவத்தின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கும்போது, இந்தியச் சூழ்நிலையில் அத்தத்துவத்தின் பொருள் என்ன என்பதை முதலாவதாக உணர்ந்து கொள்ள வேண்டும்.....
நமது நாடு இப்போது மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகிறது. கடந்த 65 ஆண்டுகால சுதந்திரத்தில் நமது மக்கள் வறுமையையும், துயரத்தையும் மட்டும் எதிர் நோக்கவில்லை. நமது நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாடும் கூட அபாயத்திற்கு ஆளாகியுள்ளன. நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மார்க்சிய - லெனினிய தத்துவத்தின் உதவியை நாடுவது அவசியம் ஆகும். மார்க்சிய - லெனினிய தத்துவத்தை ஒதுக்கித் தள்ளிய சக்திகளும், அரசியல் கட்சிகளும் நாட்டின் பிரச்சனைகளை சரியான முறையில் கையாளத் தாங்கள் தகுதி அற்றவை என்பதை நிரூபித்துவிட்டதோடு, இந்திய அரசியலையும் குழப்பியுள்ளன. அதே போன்று மார்க்சிய - லெனினிய தத்துவத்திலிருந்து வேறுபட்ட பல்வேறு வகையான சோசலிஸ்ட் கோஷ்டிகளும் நாட்டிற்கு அழிவிற்கு மேல் அழிவு செய்துள்ளன.
இன்றைய சூழ்நிலைக்குத் தீர்வு தேடுகின்ற, நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை பாதுகாக்க விரும்புகின்ற அனைவரும் மார்க்சிய - லெனினிய தத்துவத்தையே சார்ந்திருக்க வேண்டும். அத்தத்துவத்தின் மூலம் தற்கால நிலைமையின் பிரச்சனைகளையும், ஜனநாயகப் புரட்சியை, மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சனைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
உலகத்தையே மாற்றியமைக்கும் இத்தத்துவத்தை இன்றைய இளைய தலைமுறை விரும்பியேற்கும் என்று நான் விரும்புகிறேன்.
(வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு - 1987)
No comments:
Post a Comment