Thursday, May 2, 2013

வர்க்க ஒற்றுமையை நிலை நிறுத்துக

தொழிலாளி வர்க்கமானது மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசிய அறைகூவல்கள் தன்னை மிதமிஞ்சி ஆட்கொள்ளப்படுவதற்கு அனுமதிக் காமல், தன்னுடைய வர்க்க ஒற்றுமையை தொடர்ந்து காப்பாற்றுமானால் அது ஜனநாயக கருத்திற்கு வடிவம் கொடுப்பதற்கும், சீர்குலைவு சக்திகளின் சவாலைச் சந்திப்பதற்குமான ஒரு நிலையில் இருக்கும்.

அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கமும் அதனுடைய கட்சியும் சாதகமான நிலைமைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதும் உணரப்பட வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமை, தேசிய ஒற்றுமை என்ற பாரம்பரியம் மக்களின் மனதில் இன்னும் பலமாக இருக்கின்றது.


தொழிலாளி வர்க்கம் தேசிய ஒற்றுமைக்கான தேவையையும் அனைத்து தேசிய இனங்களுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கையையும் இணைக்க வேண்டும். தேசிய ஒற்றுமை உணர்வை ஆளும் வர்க்கங்களும் ஸ்தலத்திலுள்ள குறுகிய தேசிய வெறியர்களும் ஒவ்வொரு நாளும் அதிரித்துக் கொண்டிருந்த போதிலும் அந்த உணர்வைத் தகர்ப்பதில் ஆ ளும் வர்க்கம் வெற்றியடையவில்லை.

நாடுகள், தேசிய இனங்கள் உருவாக்கப்பட்டதன் வளர்ச்சிப் போக்கு‍ - எங்கல்ஸ்

மத்திய காலத்தின் முடிவு முதலே, ஐரோப்பாவில் பெரும் தேசிய நாடுகளை (National States) அமைப்பதற்காக வரலாறு வேலை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய நாடுகள் மட்டுமே ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் வழக்கமான அரசியல் வடிவமாகும். அதே சமயத்தில் இவைகள் மக்களிடையே நல்லிணக்கமான சர்வதேச ஒத்துழைப்பை நிறுவுவதற்கான தவிர்க்க முடியாத முன் நிபந்தனையாகும். இதில்லாமல், தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி என்பது சாத்தியமேயில்லை. சர்வதேச அமைதியை உறுதிப்படுத்த தவிர்க்கக் கூடிய அனைத்து தேசிய மோதல்களும் இல்லாது செய்யப்பட வேண்டும். 

ஒவ்வொரு பிரஜையும் சுதந்திரமாயிருக்க வேண்டும். அதனுடைய வீட்டிற்கு அதுவே தலைவனாயிருக்க வேண்டும். வர்த்தகம், விவசாயம், தொழில் வளர்ச்சியுடன், அதன் காரணமாக முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தியும், தேசிய உணர்வும் எல்லா இடங்களிலும் அதிகரித்தன. பிரிக்கப்பட்டுள்ள அதைப் போன்றே ஒடுக்கப்பட்டுள்ள நாடுகள் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும் கோரின.

எனவே பிரான்ஸ் நீங்கலாக ஒவ்வொரு இடத்திலும் 1848-ம் வருடப் புரட்சியானது சுதந்திரத்திற்கான கோரிக்கையைப் போன்றே தேசியக் கோரிக்கைகளை திருப்தி செய்வதையே குறியாகக் கொண்டிருந்தது.
(மார்க்ஸ், எங்கல்ஸ் தேர்வு நூல்கள், பாகம்3, பக்கங்கள் 376-378)

பிரிந்து செல்லும் உரிமையும், பிரிவினையும்

நாடுகளுக்குள்ள பிரிந்து செல்லும் உரிமை என்பதை பிரிவினையைத் தூண்டுவது என்பதுடன் சேர்த்துப் பார்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது.

1917-ம் ஆண்டு மே மாதத்தில், சுய நிர்ணய உரிமை என்பதை வலியுறுத்திப் பேசும்பொழுது லெனின பின்வரும் வகையில் தெளிவுபடுத்தினார்.

சுதந்திரமாக, நாடுகளுக்குள்ள பிரிந்து செல்லும் உரிமை என்பதை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறித்த நேரத்தில் ஒரு குறித்த நாட்டிற்கு பிரிவினை தேவை என்று கூறப்படுவதோடு சேர்த்துப் பார்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. தொழிலாளி வர்க்கக் கட்சியானது இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அம்சம் குறித்து ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்சனையிலும் முற்றிலும் சுதந்திரமாக தீர்மானிக்க வேண்டும், அவ்வாறு தீர்மானிக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக சமூக வளர்ச்சியின் நலன்களையும், சோசலிசத்திற்காக தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்ட நலன்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
(தொகுதி நூல்கள், பாகம் 24, பக்கங்கள் 302-303)

ஸ்டாலின் கூறுகிறார்:

இந்த நிர்ணயிப்பை மேலும் முன்கொண்டு செல்லும் பொழுது ஸ்டாலின் எழுதுகின்றார்:

தேசங்களின் உரிமைகள் என்ற பிரச்சனையானது ஒரு தனிப்பட்ட தன்னிறைவுப் பிரச்சனையல்ல, அது தொழிலாளி வர்க்கப் புரட்சியினுடைய பொதுவான பிரச்சனையின் ஒரு பகுதியாகும். முழுமைக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு அந்த முழுமையின் கண்ணோட்டப் பார்வையி லிருந்து கவனிக்கப்படுதல் என்பதாகும். கடந்த நூற்றாண்டின் நாற்பதாம் ஆண்டுகளில் போலந்துக்காரர்கள், ஹங்கேரியர்களின் தேசிய இயக் கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். செக்கோஸ்லோவாகிய நாட்டுக்காரர்கள், தெற்கு ஸ்லால் இனத்தவர்களின் தேசிய இயக்கங்களை மார்க்ஸ் எதிர்த்தார். ஏன்? ஏனென்றால் செக்கோஸ்லோவாகியாகாரர்களும், தெற்கு ஸ்லால் இனத்தவரும் அச்சமயத்தில் பிற்போக்கான மக்கள், ஐரோப் பாவில் ரஷ்யாவின் புறக்காவல் படைகளாக இருந்தனர். 

எதேச்சாதிகாரத்தின் புறக்காவல் படைகளாக இருந்தனர். அதே சமயத்தில் போலந்துக்காரர்களும், ஹங்கேரியர்களும் புரட்சிகர மக்களாக இருந்தனர். எதேச் சாதிகாரத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் செக்கோஸ்லோவாகியாக்காரர்களிடையே தெற்கு ஸ்லாவியர்களுடைய தேசிய இயக்கத்திற்கு அச்சமயத்தில் ஆதரவளிப்பதென்பது ஐரோப்பாவில் புரட்சிகர இயக்கத்தின் மிக ஆபத்தான எதிரியான ஜார் மன்னனின் கொள்கைகளுக்கு மறைமுக ஆதரவை தருவதற்குச் சமமாகும்.

ஸ்டாலின் பின்னர் லெனின் கூறியதை மேற்கோள் காட்டுகின்றார்:

சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட... ஜனநாயகத்தில் பல்வேறுவித கோரிக்கைகள் ஒரு முழுமையான உலக இயக்கமல்ல; ஆனால் பொதுவான ஜனநாயக (தற்பொழுது பொதுவான சோசலிஸ்ட்) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியாகும். தனியான, திட்டவட்டமான சம்பவங்களில் ஒரு பகுதியானது முழுமையோடு முரண்படும்.  அவ்வாறானால் அது நிராகரிக்கப்பட வேண்டும்.
(லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் நேஷனல் புக் ஏஜென்சி, பக்கம் 80-81)
முதல் உலகப் போர் முடியும் வரை தொழிலாளர் இயக்கத்தில் தேசியப் பிரச்சனை குறித்து நடைபெற்ற விவாதங்கள் அனைத்தும் பெரும்பாலும் முதலாளித்துவ ஐரோப்பாவின் தேசங்கள் தேசிய இனப் பிரச்சனை குறித்து ஐரோப்பாவாக பிரிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நாடுகள் குறித்து விவாதிப்பதோடு மட்டுமே தன்னை பெரும்பாலும் கட்டுப்படுத்திக் கொண்டது. 

உலக யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏற்பட்ட விடுதலை இயக்கங்கள், காலனிகள் குறித்த அணுகுமுறைப் பிரச்சனை முன்னுக்குக் கொண்டுவந்தது. முதல் உலக யுத்தத்திற்கு முன்பு இரண்டாவது அகிலம் இந்தப் பிரச்சனையை விவாதித்தது, ஆனால் ஒரு சந்தர்ப்பவாத நிலை எடுத்தது. 

லெனினும், போல்ஷ்விக் கட்சியும் முதல் உலக யுத்தத்தை காலனிகளைக் கைப்பற்றுவதற்கான யுத்தம் என்று கூறி நிந்தித்தனர். காலனிகளுக்கு முழுச் சுதந்திரம் என்று கோரிக்கையை முற்றிலும் ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் அகிலத்தோடு இணைக்கப்பட்டிருந்த அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் காலனிகளின் விடுதலையை ஆதரித்தன. 

சுதந்திரத்திற்காக ஒடுக்கப்பட்ட நாடுகள் நடத்தும் போராட்டமானது முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்காக உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மகத்தான புரட்சிகர சக்தியாக உணரப்பட்டது. தேசிய இயக்கங்களும், அவைகளின் வெற்றியும் ஏகாதிபத்தியத்தின சக்தியை பலவீனப்படுத்தும் என்றும், இது வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்குமென்றும் உணரப்பட்டது.

தேச விடுதலை இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட்டுகள் ஆதரவு தருவது சோசலிசப் புரட்சிகள் நடைபெறும் தருவாயில் சமூக இயக்கத்தை முன்கொண்டு செல்வதில் அந்த இயக்கங்கள் ஆற்றும் பங்கை மீண்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

தொழிலாளி வர்க்கப் புரட்சியுடன் இணைந்தது:
ஸ்டாலின் கூறுகிறார்:

தேசியப் பிரச்சனை என்பது முன்னர் சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்திலிருந்து காணப்பட்டது. மூலதனத்தின் சக்தி என்ற பொதுவான பிரச் சனையோடு ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிவதோடு தொழிலாளி வர்க்கப் புரட்சியோடு எவ்வித சமபந்தமும் இல்லாத ஒரு தனியான பிரச்சனை என்று கருதப்பட்டது. காலனிகளில் உள்ள விடுதலை இயக்கத்தோடு ஒரு நேரடி உறவும் இல்லாமல் ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறுவது சாத்தியம் என்றும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் பக்கம் போகாமலே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு  புரட்சிகரப் போராட்டம் இல்லாமலே தேசிய காலனி ஆதிக்கப் பிரச்சனை. அதனாலேயே அமைதியாகத் தீர்க்கப்பட முடியுமென்றும், மறைமுகமாகக் கருதப்பட்டது. இந்த புரட்சி எதிர்ப்புக் கண்ணோட்டப்பார்வை அம்பலப்படுத்தப்பட்டுவிட்டதென்று நாம் இப்பொழுது கூற முடியும். 

தேசிய பிரச்சனை என்பது தொழிலாளி வர்க்கப் புரட்சியோடு சம்பந்தப்படுத்தப்பட்டு மட்டுமே அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதையும் மேற்கு நாடுகள் புரட்சியின் வெற்றிக்கான பாதையானது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக காலனி நாடுகளிலும் சார்பு நாடுகளிலும் உள்ள விடுதலை இயக்கத்தின் புரட்சிகரக் கூட்டிலேயே அடங்கியிருக்கின்றது என்பதையும் லெனினிசம், நிரூபித்துக்காட்டியுள்ளது. ஏகாதிபத்திய யுத்தமும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. தேசியப் பிரச்சனையானது தொழிலாளி வர்க்கப் புரட்சியின் பொதுவான பிரச்சனையின் ஒரு பகுதியாகும. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பிரச்சனையின் ஒரு பகுதியாகும்.

கேள்வி இதுதான். ஒடுக்கப்பட்ட நாடுகளின் புரட்சிகர விடுதலை இயக்கத்தில் பொதிந்துள்ள புரட்சிகர சாத்தியப்பாடுகள் ஏற்கெனவேயே பயன்படுத்தப்பட்டுவிட்டதா அல்லது இல்லையா, இல்லையென்றால் இத்தகைய சாத்தியப்பாடுகளை தொழிலாளி வர்க்கம் புரட்சிக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு ரிசர்வ் பகுதியை புரட்சிகர தொழிலாளி வர்க்கத்தின் ஒரு ரிசர்வ் பகுதியாக ஆக்குவதற்கும் பின்னர் கூறப்பட்டதின் கூட்டாளியாக ஆக்கப்படுவதற்கும் ஏதாவது நம்பிக்கை இருக்கின்றதா? ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா?
லெனினிசம் இந்தக் கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கின்றது....


மறுபடியும் இரண்டு அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. விடுதலை இயக்கங்களின் பங்கானது அவைகள் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு - உலகின் சமூக வளர்ச்சிக்கு உதவி செய்வதை வைத்தே தீர்மானிக்கப்படு கின்றது. இரண்டாவதாக தேசிய விடுதலைப் பிரச்சனையைத் தீர்க்க வளர்ச்சியடைந்த (மெட்ரோ பாலிடன்) நாடுகளிலும், ஒடுக்கப்பட்ட நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை அவசியம் என்பது மீண்டுமொருமுறை வலியுறுத்தப்படுகின்றது.

போலந்து பிரச்சனை

சர்வதேச உழைப்பாளர் கழகத்தின் (முதல் அகிலம்) தற்காலிக பொதுக்குழுவின் பிரதிநிதிகள் செய்ய வேண்டியது குறித்து 1866 ஆம் ஆண்டில் மார்க்ஸ் குறிப்புகள் எழுதினார். அதில் போலந்துக்காரர்கள் பிரச்சனை என்ற தலைப்பில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

(அ) ஐரோப்பியத் தொழிலாளிகள் இந்தப் பிரச்சனையை ஏன் எடுக்க வேண்டும்? முதலில் நடுத்தர வர்க்க எழுத்தாளர்களும், கிளர்ச்சியாளர் களும் இதை ஒடுக்குவதற்காகச் சதி செய்கின்றனர். ஐரோப்பியக் கண்டத்தில் ஏன் அயர்லாந்திலும் கூட அனைத்து வகைப்பட்ட தேசிய இனங்களுக்கும் அவர்கள் ஆதரவளிக்கிறார்கள் என்ற போதிலும் போலந்துக்காரர்கள் விஷயத்தில் சதி செய்கிறார்கள். இந்த மவுனம் எங்கிருந்து வருகின்றது. ஏனென்றால் பிரபுக்களும், முதலாளித்துவ வர்க்கத்தினரும் இந்த பிற்போக்கு ஆசிய சக்தியை (ரஷ்யாவை) தொழிலாளி வர்க்க வெற்றிகளின் முன்னேற்ற அலைக்கு எதிரான கடைசி ஆதாரம் என்ற பின்னணியில் காண்கின்றனர். போலந்தை ஒரு ஜனநாயக அடிப்படையில் மீண்டும் நிலை நிறுத்துவதன் மூலமே இந்த சக்தியை கடுமையாக ஒடுக்க முடியும்.

(ஆ) மத்திய ஐரோப்பாவின் இன்றைய மாறிய நிலை, அதிலும் குறிப்பாக ஜெர்மனி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்பொழுது, ஒரு ஜனநாயக போலந்தை பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் முன்னெப்பொழுதையும் விட அதிகமாகத் தேவைப்படுகின்றது. அது இல்லாமல், ஜெர்மனி என்பது புனித கூட்டு (Holy Alliance) என்பதனுடைய ராணுவப் பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக மாறிவிடும். அத்துடன் அந்தப் புனித கூட்டின் கூட்டாளியான பிரான்ஸ் குடியரசின் ராணுவப் பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக மாறிவிடும்.

இந்த மகத்தான ஐரோப்பிய பிரச்சனை தீர்க்கப்படும் வரை தொழிலாளி வர்க்க இயக்கம் தொடர்ந்து குறுக்கீடு செய்யப்படும்
(காரல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ், தேர்வு நூல்கள் பாகம் 2, பக்கம் 84)

போல்ஷ்விக்குகளின் சரியான நிலை

போலந்தின் பிரச்சனையானது ஐரோப்பிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டதாகும். எனவே தான் அதற்கு முக்கியத்துவம் உள்ளது. அதே சமயத்தில் ஒடுக்கும் நாடுகளும் ஒடுக்கப்பட்ட நாடுகளும் உள்ள ஜார் மன்னனின் ரஷ்யாவில் மார்க்சியம்... லெனினியம், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு சுயநிர்ணய உரிமையை ஆதரித்தது, அதற்காகப் போராடவும் செய்தது. 

ரஷ்யாவின் புரட்சிக்காகப் போராடிக்கொண்டிருந்த காலம் முழுவதிலும் லெனின் தலைமையின் கீழிருந்த போல்ஷ்விக் கட்சி இந்த சுயநிர்ணய உரிமைக் காகப் போராடியது. தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து கொண்டு சுயநிர்ணய உரிமையை ஏதாவதொரு வடிவத்தில் எதிர்த்துக் கொண்டிருந்த மகத்தான ரஷ்யா என்ற கருத்தைக் கொண்டிருந்த குறுகிய தேசிய வெறி பிடித்தவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் போல்ஷ்விக் கட்சி கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தது. 

ஆனால், இதனால் போல்ஷ்விக்குகள் பிரிவினைக்காகவும், பிளவுக்காகவும் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்று பொருளாதார சுயநிர்ணய உரிமைக்காக வாதாடியதன் மூலம் போல்ஷ்விக் வழிமுறை என்பது முற்றிலும் சமத்துவமானது, அனைத்து தேசிய சலுகைகளையும் ஒடுக்குமுறைகளையும் அகற்றக் கூடியது என்று ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை அவர்கள் சம்மதிக்கச் செய்தார்கள். அதே சமயத்தில் பொதுவான தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மூலமாகவும் ஒடுக்கப்படும், ஒடுக்கும் தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளைக் கொண்டிருந்த பொதுவான தொழிலாளி வர்க்க ஸ்தாபனம் மூலமாகவும் ஒற்றுமைக்கான தேவையை அவர்கள் பேணிக்காத்தனர். அதன் மூலம், புரட்சிக்குப் பிறகு அவர்களை அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றாக வைத்திருக்க முடிந்தது.





தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக

மக்களில் பலர், தேசியப் பிரச்சனைகள் குறித்த மார்க்சிஸ்ட் அணுகுமுறையை பிரிவினைவாதம் பிளவுவாதத்துடனே சேர்த்துப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமான மார்க்சியம் அதனுடைய கண்ணோட்டத்தில் சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகும். அது உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நிற்கின்றது. இறுதியில் உலகத்தை ஒன்றுபடுத்துவதற்காக நிற்கின்றது. பிரிவினைவாதத்தை அது தன்னுடைய அடித்தளமாகக் கொண்டிருக்க முடியாது.

லெனின் கூறியது:

லெனின் இப்பிரச்சனை குறித்து சரியான கண்ணோட்டத்தை பின்வரும் வார்த்தைகளில் கூறினார்.

தொழிலாளி வர்க்கக் கட்சி எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு பெரிதான ஒரு நாட்டை உருவாக்கப் பாடுபடுகின்றது. ஏனென்றால் இது உழைக்கும் மக்களுக்கு நன்மை அளிப்பதாய் இருக்கும். அது, நாடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருப்பதற்கு பாடுபடுகின்றது; அவர்கள் மேலும் இணைவதற்கு, அது பாடுபடும்; ஆனால் இந்த லட்சியத்தை அது வன்முறை மூலம் அடைய விரும்பவில்லை. ஆனால் அனைத்து நாடுகளின் தொழிலாளிகள், உழைக்கும் மக்களின் ஒரு சுதந்திரமான, சகோதரத்துவ ஒன்றியத்தின் மூலம் மட்டுமே அதை அடைய விரும்புகின்றது.
(தொகுதி நூல்கள், பாகம் 24, பக்கம் 73)


இதுதான் தேசிய இனப் பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்களின் அணுகுமுறையாகும். இது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை தேசிய இனங்களின் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றோடு இணைத்து தாங்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒன்றியத்திற்கு இட்டுச் செல்கின்றது.
நம்பிக்கையைப் பெற்றது எவ்வாறு? இப்பிரச்சனை குறித்து புரட்சிகரப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு சரியான நிர்ணயிப்பும், அணுகுமுறையும் இல்லையென்றால் தாங்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒன்றியத்தை அமைக்க இயலாது. லெனினுடைய வழி காட்டலின் கீழ், போல்ஷ்விக் கட்சி, புரட்சிக்காகப் போராடிக் கொண்டிருந்த ஆண்டுகளில் இதே அணுகுமுறையை உறுதியாகக் கடைப்பிடித்தது. இதனால் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் போல்ஷ்விக் கட்சி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

பல நாடுகள் ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஜார் மன்னனின் ரஷ்யாவில் இருந்த பிரச்சனை எதுவென்றால், இந்த நாடுகளின் உரிமைகளையும், சமத்துவத்தையும் எவ்வாறு பாதுகாப்பதென்பதும், அதே நேரத்தில் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையை எவ்வாறு பாதுகாப்பதென்பதுமேயாகும்.

தேசிய இனங்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் தீவிரமாக வாதாடும் சிலர், தொழிலாளர் வர்க்க ஒற்றுமை அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் ஒற்றுமை ஆகியவற்றை மறந்துவிட்டு அவர்களுடைய கோரிக்கைகளை குறுகிய பிரிவினைவாதக் கோரிக்கையாக மாற்றுகின்றார்கள்.


நினைவிற் கொள்ளப்பட வேண்டிய இரண்டாவது அம்சமானது மார்க்சியம், தேசியப் பிரச்சனைக்கான தீர்வை யதார்த்தத்துக்குப் புறம்பாகக் கருதுவதில்லை என்பதாகும். சமூக வளர்ச்சியின் அன்றைய கட்டம் வர்க்கப் போராட்டத்தின் அன்றைய கட்டம் ஆகியவைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு நமது காலங்களின் வர்க்கப் போராட்டமான பொதுவான சமூகப் போராட்டத்தை வளர்ச்சி பெறச் செய்வதில் அதனுடைய பங்கிற்கு உரித்தான முக்கியத்துவத்தை இந்தப் பிரச்சனைகள் அளிக்கின்றது.

Friday, April 19, 2013

Frederick Engels

கருத்துக்களுக்கும் தத்துவங்களுக்கும் ஒரு‍ வர்க்கத் தன்மை உண்டு‍... 
                                          



-------- பிடெரிக் ஏங்கெல்ஸ்

Tuesday, April 9, 2013

Engels Quotes

முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன........


.....................ஏங்கெல்ஸ் (1839)