Thursday, May 2, 2013

தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக

மக்களில் பலர், தேசியப் பிரச்சனைகள் குறித்த மார்க்சிஸ்ட் அணுகுமுறையை பிரிவினைவாதம் பிளவுவாதத்துடனே சேர்த்துப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமான மார்க்சியம் அதனுடைய கண்ணோட்டத்தில் சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகும். அது உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நிற்கின்றது. இறுதியில் உலகத்தை ஒன்றுபடுத்துவதற்காக நிற்கின்றது. பிரிவினைவாதத்தை அது தன்னுடைய அடித்தளமாகக் கொண்டிருக்க முடியாது.

லெனின் கூறியது:

லெனின் இப்பிரச்சனை குறித்து சரியான கண்ணோட்டத்தை பின்வரும் வார்த்தைகளில் கூறினார்.

தொழிலாளி வர்க்கக் கட்சி எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு பெரிதான ஒரு நாட்டை உருவாக்கப் பாடுபடுகின்றது. ஏனென்றால் இது உழைக்கும் மக்களுக்கு நன்மை அளிப்பதாய் இருக்கும். அது, நாடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருப்பதற்கு பாடுபடுகின்றது; அவர்கள் மேலும் இணைவதற்கு, அது பாடுபடும்; ஆனால் இந்த லட்சியத்தை அது வன்முறை மூலம் அடைய விரும்பவில்லை. ஆனால் அனைத்து நாடுகளின் தொழிலாளிகள், உழைக்கும் மக்களின் ஒரு சுதந்திரமான, சகோதரத்துவ ஒன்றியத்தின் மூலம் மட்டுமே அதை அடைய விரும்புகின்றது.
(தொகுதி நூல்கள், பாகம் 24, பக்கம் 73)


இதுதான் தேசிய இனப் பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்களின் அணுகுமுறையாகும். இது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை தேசிய இனங்களின் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றோடு இணைத்து தாங்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒன்றியத்திற்கு இட்டுச் செல்கின்றது.
நம்பிக்கையைப் பெற்றது எவ்வாறு? இப்பிரச்சனை குறித்து புரட்சிகரப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு சரியான நிர்ணயிப்பும், அணுகுமுறையும் இல்லையென்றால் தாங்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒன்றியத்தை அமைக்க இயலாது. லெனினுடைய வழி காட்டலின் கீழ், போல்ஷ்விக் கட்சி, புரட்சிக்காகப் போராடிக் கொண்டிருந்த ஆண்டுகளில் இதே அணுகுமுறையை உறுதியாகக் கடைப்பிடித்தது. இதனால் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் போல்ஷ்விக் கட்சி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

பல நாடுகள் ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஜார் மன்னனின் ரஷ்யாவில் இருந்த பிரச்சனை எதுவென்றால், இந்த நாடுகளின் உரிமைகளையும், சமத்துவத்தையும் எவ்வாறு பாதுகாப்பதென்பதும், அதே நேரத்தில் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையை எவ்வாறு பாதுகாப்பதென்பதுமேயாகும்.

தேசிய இனங்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் தீவிரமாக வாதாடும் சிலர், தொழிலாளர் வர்க்க ஒற்றுமை அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் ஒற்றுமை ஆகியவற்றை மறந்துவிட்டு அவர்களுடைய கோரிக்கைகளை குறுகிய பிரிவினைவாதக் கோரிக்கையாக மாற்றுகின்றார்கள்.


நினைவிற் கொள்ளப்பட வேண்டிய இரண்டாவது அம்சமானது மார்க்சியம், தேசியப் பிரச்சனைக்கான தீர்வை யதார்த்தத்துக்குப் புறம்பாகக் கருதுவதில்லை என்பதாகும். சமூக வளர்ச்சியின் அன்றைய கட்டம் வர்க்கப் போராட்டத்தின் அன்றைய கட்டம் ஆகியவைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு நமது காலங்களின் வர்க்கப் போராட்டமான பொதுவான சமூகப் போராட்டத்தை வளர்ச்சி பெறச் செய்வதில் அதனுடைய பங்கிற்கு உரித்தான முக்கியத்துவத்தை இந்தப் பிரச்சனைகள் அளிக்கின்றது.

No comments:

Post a Comment