ஏகாதிபத்திய சக்திகளாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிக்கு ஒரு கடமை உண்டு. அக் கட்சி தேசிய அளவில் ஒரு பொதுவான பரந்து விரிந்த நோக்கத்தோடு தனது பதாகையை உயர்த்த வேண்டும். ஏகாதி பத்திய வேட்டை நாய் களைத் தவிர மீதமுள்ள அனைத்து சக்திகளையும் ஏகாதி பத்தியத்துக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் தேசபக்தியை உலகம் அறியச் செய்வோம். உலக சமாதானத்தையும், தேச ஒற்றுமையையும் நாம் எந்த அளவுக்கு உறுதியுடன் உயர்த்திப் பிடிக்கின்றோம் என்பதையும் உலகறியச் செய்வோம்.... (மாவோ)
மாவோ 1958ல் நான்நிங் மாநாட்டில் நிகழ்த்திய உரை யுடன் தொகுப்பு எட்டு துவங்குகிறது. தோழர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அறிவுரையுடன் ஆரம்பிக்கும் மாவோ, கட்சிக் குழுக்களில் உள்ள தோழர்களுக்கு முக்கிய மான அபாயம் எந்பது `கம்யூனிஸ்டாக இருந்து நிபுணத்துவம் பெறாமல் இருப்பதுதான் என்கிறார் யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டு, புதிர்களை புரிந்து கொண்டு, தெளிவாக செயல்பட கற்க வேண்டும். மக்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. இருப்பினும் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் தலைமைக்குழுவின் செயல்பாட்டையும் விமர்சிக்க அவர் தவறவில்லை. மாவோவைப் பொறுத்தவரை எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தாலும், பேசி, விவாதித்து, கட்சி கமிட்டிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த இயலு மென்பதை அழுத்தமாக நம்புகிறார். அத்தகைய நம்பிக்கை ஒருமித்த செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானதாகும். கம்யூனிஸ்டுகள் எப்படி இருக்க வேண்டும்?
எந்த ஒரு பிரச்சனையையும் அரசியலாக அணுக வேண்டும். அரசியலற்ற அணுகமுறையை விமர்சிக்க வேண்டும். தத்து வார்த்த மற்றும் அரசியல் பணி என்பது நமது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பணிக்கான தனித்திறனை உறுதி செய்வதாகும். நமது தத்துவார்த்த அரசியல் பணியில் ஏற்படும் லேசான தொய்வு, நமது பொருளாதார, தொழில்நுட்ப பணியில் நெறிதவற வழி வகுத்துவிடும்...
நடைமுறை அறிவைப் பெறாமல் இருப்பது போலி சிவப்பாகவும், அறிவற்ற அரசியலாகவும் ஆகிவிடும் என்று வலியுறுத்துகிறார். பணிமுறைகளுக்கு அறுபது அம்சங்கள் என்ற தலைப்பின் கீழ் பல ஆலோசனைகளை - அரசியல், பொரு ளாதாரம், சமூகம், கட்சியை கட்டுதல், சோஷலிச கட்டுமானம், திட்டங்கள் - என பரவலான விஷயங்கலை தெளிவாக விளக்கி யுள்ளார். குறிப்பாக கட்சி தோழர்கள், கமிட்டிகள் ஊதாரித் தனத்தை எதிர்க்க வேண்டும் என்றும், நெறிப்படுத்தும் இயக் கத்தை அமுலாக்க ஒவ்வொரு கிளையும் சில நாட்களை ஒதுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். முந்தைய தொகுதிகளில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, ஊழியர் பயிற்சியை கட்சித் தலைமை முக்கியமான விஷயமாகக் கருதவேண்டுமென்று கூறுகிறார். தவிர, ஒரு பக்கம் சோஷலிச மற்றும் ஏகாதிபத்திய உலகங்களுக்கிடையே கடுமையான வர்க்கங்கள் இன்னமும் நீடிப்பதால், நாட்டுக்குள்ளேயே வர்க்க போராட்டம் நடப்பதையும் விளக்கி, இருவகையாந அம்சங்களிலும் கட்சி, கிளைகள், தோழர்கள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைக்கின்றார்.
வறட்டு வாதம்
`கற்பனாவாதம் எப்படி பல துறைகளில் பிரச்சனைகளை உருவாக்கியதோ, அதேபோல் வறட்டுவாதம் என்பதும் நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததை மாவோ சோவியத் யூனியன் அனுபவங்களின் மூலம் விளக்குகிறார். வறட்டு வாதம் பல்வேறு சூழ்நிலைகளில் தோன்றுகிறது. இதை ஆராய்வது அவசியம். வறட்டுவாதம் ஏன் தோன்றுகிறது என்பதும் ஆய்வுக் குட்படுத்த வேண்டிய விஷயம். சீனாவின் கனரகத் தொழில் வளர்ச்சி, கல்வி, பொது சுகாதாரத்துறை போன்றவற்றில் சோவியத் யூனியனை அப்படியே அச்சு அரசலாக பின்பற்றியதால், சீனாவில் சில பிரச்சனைகள் தோன்றின. சோவியக் திட்டமிடலில் பெரும் பகுதி சீனாவுக்குப் பொருத்தமாக இருந்தது. அதன் ஒரு பகுதி பொருத்தமாக இல்லை. எனினும் ஆய்வின்றி அது இறக்கு மதி செய்யப்பட்டது. சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கு மிடையே இருந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளாமல், குருட்டுத் தனமாக பின்பற்றியதால் பிரச்சனைகள் தோன்றின. அவற்றை புரிந்துகொண்ட பின்னர் நிலைமை மாறியது என மாவோ விளக்க மளித்துள்ளார். பல தோழர்கள் விதிமுறைகளையும், மரபுகளையும் எதிர்க்கின்றனர். ஆனால் அவற்றிற்கு மாற்று உண்டா, சீன நிலைமைகளுக்கேற்ப அவற்றை பொருத்த இயலுமா என பார்க்காமல், வறட்டுத்தனமாக எதிர்ப்பது சரியாகுமா என வினவுகிறார். சோவியத் அனுபவத்தில் நல்லவை அனைத்தையும் ஏற்று, மோசமானதை நிராகரிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறார்.
ஒற்றுமை, ஒற்றுமையின்மை
கட்சித் தோழர்கள் மனதில் எழுகின்ற எண்ணங்கள் மாறிக் கொண்டே வருகின்றன. கருத்து வேறுபாடுகள் எழு கின்றன. இதனால் ஒற்றுமையின்மை ஏற்படுகிறது. ஆனால் இது தீர்க்க இயலாத பிரச்சனை அல்ல என்கிறார் மாவோ. ஒற்றுமையைப் பற்றி பேசும் பொழுதே ஒற்றுமையின்மை ஏற் படுகிறது. எல்லா நேரத் திலும் வேறுபாடற்ற ஒற்றுமையைப் பற்றி பேசி போராட்டத்தைப் பற்றி பேசாதது மார்க்சியம்-லெனினியம் அல்ல என்கிறார். மேலும், போராட்டத்தின் வழியாகவே ஒற்றுமை உருவாகிறது என்றும் கூறுகிறார். கட்சிக்குள், வர்க்கங்களுக்குள், இத்தகைய போராட் டங்கள் ஏற்பட்டு பின் ஒற்றுமை ஏற்படுகிறது. போராட்டம், முரண் பாடுகள் பற்றி பேசாமல், மாறுபடாத ஒற்றுமைப்பற்றி பேச இயலாது. இதை சோவியத் யூனியனில் நிலவிய கட்சி தலைவர்கள் - தொண்டர்கள் இடையேயான முரண்பாடுகளை மேற்கோள்காட்டி விளக்குகிறார். தலைவர்களுக்கும், தலைமை தாங்கப்படுவோ ருக்கும் இடையேயான முரண்பாடுகள் பற்றி சோவியத் யூனியன் பேசவில்லை. முரண்பாடுகள் இல்லையென்றால் போராட்டம் இருக்காது.... முன்னேற்றம் இருக்காது.... எல்லா நேரத்திலும் ஒற்றுமைபற்றியே பேசுவது தேங்கி நிற்கும் ஒரு குட்டை போன்றது. இது வெறுப்பு ஏற்பட வழிவகுக்கும் என்று கூறி, விவாதம் மூலம், முரண்பாடுகளை களைய இயலும் என்றும், ஒற்றுமை என்பதை வறட்டுத்தனமாக பார்ப்பது சரியல்ல என தெளிவுபடுத்துகிறார். இதன் மூலம் நமது தத்துவத்தை சரிசெய்து கொள்ளவும், புரிதல் நிலையை உயர்த்திக் கொள்ளவும் முடியும் என்பது வலியுறுத்தப் படுகிறது.
ஒற்றுமையை எப்படி கொண்டுவர இயலும் என்பதை விளக்கி, சிந்தனைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியதன் அவ சியத்தை சுட்டிக்காட்டுகிறார். மனம் எப்போது கரடு தட்டிப் போனாலும் அது ஆபத்தானது. நமது ஊழியர்களின் சிந்தனையை உயிர்ப்பூட்ட, மைய, வட்டார, மாகாகண ஊழியர்களுக்கு கல்வியும், பயிற்சியும் தரப்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டுகிறார். பல விஷயங்களை முன்கூட்டியே கணிக்க இயலாது. சோஷலிசத்தை கட்டும்பொழுது, பிரச்சனைகள் எழத்தான் செய்யும். ஏகாதி பத்தியம், நிலபிரபுத்துவம், அதிகார மனோபாவ முதலாளித்துவம், வலதுசாரிகள் ஆகியோரை எதிர்கொள்வது எளிதான காரிய மல்ல. அவ்வாறு எதிர்கொள்கையில் தவறுகள் நேரும். தவறுகளை நிராகரிப்பது வறட்டுவாதம், தவறுகள் இருக்கக் கூடாதென்பது மார்க்சியத்திற்கு புறம்பானது. தவறுகளைத் தாண்டி மார்க்சும், லெனினும் சாதித்துள்ளனர் என்பதை பல உதாரணங்கள் மூலமாக மாவோ விவரித்துள்ளார். சாதிக்க வேண்டுமெனில் நமது பணி யில் முன்னேற்றம் காணவேண்டும். உறுதியுடன் செயல்படுதல், நேர்மையுடன் பேசுதல், அனைத்துப் பிரச்சனைகளையும் துடைத் தெறியும் உணர்வை கொண்டிருத்தல், ஆகியவற்றுடன் செயல்பட மார்க்சிய தத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் குறைகள் இருந்தாலும் கூட, இத்தகைய உணர்வுகலை ஸ்டாலின் கொண்டிருந்நததை மாவோ சுட்டிக் காட்டியுள்ளார். நம்பிக்கை கண்மூடித்தனமாக இருந்தால், சிந்தனைகள் முடங்கிப்போகும்.
புதிய சிந்தனைகளை உருவாக்கியவர்கள் பண்டைகாலம் தொட்டு, அதிகம் படித்திராத இளைஞர்களாக இருந்துள்ளனர் என்றும், அனுபவங்கள் அவர்களின் சிந்தனைகளை செழுமைப் படுத்த உதவியுள்ளன என்று கூறும் மாவோ, அதிகம் படிக்க வில்லை என்று வருந்தாமல் படிப்பது, எழுதுவது போன்ற திறமை களை ஊழியர்கள் வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலி யுறுத்துகிறார். கன்ஃபூசியஸ் இருபத்து மூன்று வயதில் எழுத ஆரம்பித்தார். சாக்கிய முனி பத்தொன்பது வயதில் புத்தமதத்தை உருவாக்கி, பின் படிப்படியாக கல்வி பெற்றார். மார்க்ஸ் மிகச் சிறிய வயதில் இயக்கவியல் பொருள் முதல்வாத்தை எழுதினார். மின் சாரத்தை கண்டுபிடித்த ஃப்ராங்களின் பத்திரிக்கைப் போடும் பையனாக வாழ்க்கையைத் துவங்கினார். மார்க்சிம் கார்க்கி துவக்க கல்வி மட்டுமே கற்றார். தூக்கமாத்திரை கண்டு பிடித்தவர் ஒரு மருந்தாளுநர்தான். டாக்டர் அல்ல. இப்படிப்பட்ட இளைஞர்கள் பழைய பத்தாம்பசலித்தனங்களுக்கு தீயிட்டனர். கற்றல் என்ற விஷயத்தில் இளைஞர்கள் பிடிப்புடன் இருந்தால், புதுமை படைக்க முடியும், புதிய சிந்தனைகளை உருவாக்க முடியு மென மாவோ நம்பினார். செங்போ நாட்டில் மாவோ நிகழ்த்திய உரையில் நெறிப்படுத்தும் இயக்கம் தொடர்பாக கூறிய பல விஷ யங்கள் முந்தைய தொகுப்புகளிலும் வெளிவந்த கருத்துக்கள் தான். அவை மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
1958ல் எட்டாவது கட்சி காங்கிரசில் மாவோ ஆற்றிய உரை மிகவும் பயனுள்ள உரையாகும். மார்க்சின் நூல்களை படிக்க, மார்க்சியம் பற்றி அறிந்துகொள்ள நிறைய தயக்கம் உள்ளது. அது மிகவும் கடினம் என்ற எண்ணம் நமது தோழர்கள் மத்தியிலும் உள்ளது. மாவோ கூறுகிறார். மார்க்சின் அனைத்து நூல்களை யும் படிக்க வேண்டிய தேவையில்லை. அடிப்படை விஷயங்களை படித்தாலே போதுமானது. அக்டோபர் புரட்சி பற்றி மார்க்ஸ் கூற வில்லை. ஆனால் லெனின் செய்தார். நடைமுறை விஷயத்தில் மார்க்சை லெனின் விஞ்சிவிட்டார்.... எனவே, தோழர்கள் தங்களால் கற்க இயலாது என்ற எண்ணத்தை கைவிட்டு, முன்னேற வேண்டும். சிறந்த எடுத்துக்காட்டாக கிருமிகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். கிருமிகள் என்ற நுண்ணுயிர் வகை கள் அளவில் சிறிதாக இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அவை மனிதனைவிட மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றிடம் மூடநம்பிக்கை இல்லை. முழுமையான சக்தியோடு இருக்கின்றன. அவற்றிடம் மூடநம்பிக்கை இல்லை. முழுமையான சக்தியுடன் இருக்கின்றன. அவை எதற்கும் அஞ்சுவதில்லை. அச்சமில்லா உணர்வுகொண்ட அவற்றிற்கு எதுவும் பொருட்டல்ல. முன்னேற்று வதற்காக அவை போராடுகின்றன. முனைப்பும், அடித்தளமும் இருந்தால் கண்டிப்பாக வெற்றிபெறமுடியும். முந்தைய தொகுப்பு களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்கள் - குறிப்பாக, மக்களிட மிருந்து கற்றுக்கொள்வது பற்றியவை-மீண்டும் மீண்டும் வலி யுறுத்தப்பட்டுள்ளன. நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். செங்கொடியை ஏற்றி காற்றின் திசையைக் கண்டறியுங்கள். நாம் ஏற்றாவிடில் மற்றவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றுவார்கள். எந்த பெருமலையிலும், சிறுகுன்றிலும் விவாதத்திற்கு பிறகு செங்கொடி ஏற்றப்பட வேண்டும். காற்றின் திசை என்றால் அது கீழைக் காற்றா, மேலைக் காற்றா என்பதுதான் பொருள். கொள்கை திசை என்று பொருள் அல்ல என விளக்கம் அளிக்கிறார் மாவோ.
ஏகாதிபத்தியம் பற்றி முந்தைய தொகுப்புகளில் வெளியிடப் பட்டுள்ள கருத்துக்களையே தொகுப்பு எட்டில் பிரதிபலிக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் கொடூரம் மாவோவின் பல்வேறு உரைகளில் வெளிப்படுகின்றது. சோவியத் யூனியன் இதர நாடுகளுடன் கொண்டிருந்த உறவை பரிசீலனை செய்திருப்பதும், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் எத்தகைய நிலையில் உள்ளன என்பதைப்பற்றியும் தனது கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளார். கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் வலுச்சண் டைக்கு போகும் கொள்கையை ஏகாதிபத்திய நாடுகள் ஊக்கு விக்கின்றன. 1958ல் ஆற்றிய உரையில் மாவோ, ஏகபோக மூல தனம் நீடித்திருப்பதால் போர் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை என்றும், இதற்கு காரணம் கச்சா பொருட்கள் மற்றும் சந்தை பற்றாக்குறை என்கிறார். 1958ல் அமெரிக்கா பல நாடுகளில் எவ்வாறு பதட்டத்தை தோற்றுவித்தது (உ.ம். இராக்) என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து போராடித்தான் சோஷலிச சமுதாய அணைப்பை கொண்டுவர இயலும்.
1959ல் மாகாண செயலாளர்களுக்கு ஆற்றிய உரையில் புத்த கங்கள் படிப்பது பற்றியும், வேளாண் நிலை பற்றிய கருத்துக்களும் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறை அனுபவம் மூல மாகவே திட்டங்கள், இலக்குகள் பூர்த்தி அடைவதை பற்றி முறை யாக புரிந்துகொள்ள முடியும். பக்கங்கள் 253 - 276 வரையிலான பகுதி முழுவதும், மக்கள் கம்யூன் பற்றியவை. கம்யூன் என்பது என்ன, அது எப்படி செயல்பட வேண்டும், எப்படி செயல்படுகிறது, அவற்றை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் என்ன என்பதை தெளிவாக விவரிக்கிறார். கம்யூன் பற்றி நமக்கு புரிந்துகொள்ள இப்பகுதி மிகவும் உதவிகரமாக அமையும். கம்யூன் என்பது உண்மையில் ஒரு கூட்டமைப்பு அரசு என்கிறார் மாவோ. உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அந்தந்த பகுதிகள் வளர்ச்சி அடைவது போன்றவற்றில் கம்யூஸ்டுகளின் பங்கு குறிப்பிடத்தக்க தாகும். உற்பத்திக்கான மூலாதாரணங்களை கம்யூன்கள் விரிவு படுத்தின என்பது போன்ற நல்ல அம்சங்கள் இருந்தபோதிலும், மக்கள் கம்யூன்களில் முரண்பாடுகள் இருந்தன. கட்சி கமிட் டிக்கும், கம்யூன்களுக்கும் இடையேயான் உறவு எப்படி இருக் கிறது என்பது அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்த வேண்டியது என்றார் மாவோ. கட்சி கமிட்டிகளுக்கு எழுதிய கடிதத்தில் (மார்ச் 1959) கம்யூன்கள் செயல்பாட்டை விவாதத்திற்குட்படுத்தி, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். குறிப்பாக கட்சி ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம்தான் முரண்பாடுகள் தெரியவரும். உண்மை நிலையின் அடிப்படையில் இயக்கத்தை விரிவடையச் செய்ய முடியும் என்றும், கெட்டித்தட்டிப்போன சிந்தனைகளில் நெகிழ்ச்சிதன்மையை ஏற்படுத்த இயலும். கீழிருந்து, மேலும், மேலிருந்து கீழுமான தொடர்பு வலுவாக இருந்தால், பிரச் சனைகளை தீர்க்க முடியும். தவறுகளை திருத்தி, கட்சியை வலுப் படுத்த இயலும் என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.
ஏழாவது ப்ளீனத்தில் மாவோ ஆற்றிய உரையில் எட்டு பிரதான விஷயங்களை முன்வைக்கிறார். இவை கட்சி கமிட்டி செயல்பட மிகவும் உதவும். எவ்வாறு திட்டமிட வேண்டும். நெருக்கடியை உறுதியுடன் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றெல்லாம் விளக்குகிறார். அதே போல பணிமுறைகள் தொடர்பான முக்கிய அம்சங்களை தொகுப்பு ஐந்தில் அவர் விளக்கியுள்ளது. மீண்டும் இத்தொகுதியில் சில மாற்றங்களுடன் தரப்பட்டுள்ளது.
இயக்கவியலின் உதாரணங்கள் என்ற (சுருக்கப்பட்ட தொகுப்பு) பகுதியில் மாவோ வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் மார்க்சிய தத்துவத்தை சீனாவின் தன்மைக்கேற்ப விளக்கியுள்ள பகுதி. இது மிகவும் பயனுள்ள பகுதியாகும். மிக எளிமையாக சில தத்துவார்த்த பிரச்சனைகள் விளக்கப்பட்டுள்ளது. இயக்க வியலை புரிந்துகொண்டால்தான் பகுப்பாய்வை புரிந்துகொள்ள இயலுமென்கிறார். மாவோ வளர்ச்சியும், இயக்கமும் எல்லையற்றது என்பது போலவே எதிர்மறைகளின் போராட்டமும் எல்லையற்றது என்கிறார் மாவோ. முரண்பாடுகளில் முதன் முரண்பாடுகளும், துணை முரண்பாடுகளும் உண்டு என்பது நாம் அறிந்தது. சீனா வில் முதன் முரண்பாடுகளின் சாரத்தை உள்வாங்கிக்கொள்ளா மல், துணை முரண்பாடுகளை முதன்மையாக கருதியதால் ஏற் பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி எது முதன்மையானது, எது துணை முரண்பாடு என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். ஒரு பிரச்சனையிந் சாரத்தை மட்டுமின்ரி அதன் பிரதான போக்கையும், பாதையை பரிசீலிப்பதும் அவசியமென மார்க்சியம் சொல்கிறது என்பதை சுட்டிக்காட்டி, டிட்டோ தத்துவார்த்த ரீதியில் தொய்வடைந்திருப்பதின் மூலம் தான் சரியான பாதை உருவாகிறது என்கிறார். தவறுகளே இல்லாதே முழுமைதான் சரி என்ற கருத்து மார்க்சீய - லெனினியத்தை மீறியதாகும். வரலாற்றை புரட்டினால், தவறுகளே இல்லாத முழுமை நிலை எந்பது இருந்ததில்லை. இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை போற்றுவது விவாதத்தை ஊக்குவிக்கும். அதன் மூலம் சரியான பாதையை நோக்கி செல்ல முடியும். அத்துடன் சோஷலிசப் படிநிலையில் உள்ள இருவகை உடைமை முறைகளை விளக்கி, சீனா, சோவியத் யூனியன் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குகிறார்.
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஒன்றுபட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற கட்டுரை இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருத்தமானது. 1959ல் தேசிய மற்றும் ஜனநாயக இயக்கங்கள் வளர்ந்ததைப் போல, தற்போதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான குரல் இப் பொழுதும் வலுவாக எழுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுயசார்பு ஆதரவு இயக்கங்கள், இதர பகுதிகளிலும் ஜனநாயக இயக்கங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடக் கின்றன. உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா செய்யும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல என மாவோ இன்றும் உலகின் வளங்களை கொள்ளையடிக்க உலக நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயங்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.
இளைஞர்களுக்கு செய்தி
இளைஞர்களுக்கு போதிக்க வேண்டிய கோட்பாடுகள் பற்றி 1960ல் மாவோ எழுதியுள்ளவை, வாலிபர் சங்கத் தோழர்களும், கட்சியும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். (பக்கம் 427)
1. மார்க்சியம் - லெனினியத்தை புரிந்துகொள்ளவும், குட்டி பூர்ஷ்வா உணர்வை வெல்லவும் கற்றுத்தாருங்கள்.
2. கட்டுப்பாட்டையும், அமைப்பையும் வெற்றிருக்கவும், அமைப்புக்குள் குழப்பவாதத்தையும், தாராளவாதத்தையும் எதிர்க்க கற்றுக்கொடுங்கள்.
3. கீழ்நிலையில் உள்ள நடைமுறைப் பணியில் உறுதியாக உட் செல்வதற்கும், நடைமுறை அனுபவத்தை ஏளனமாக பார்ப்பதை எதிர்ப்பதற்கு கற்றுக்கொடுங்கள்.
4. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நெருக்கமாக இருக்கவும், அவர்களுக்கு உறுதியுடன் சேவை செய்யவும் தொழி லாளர்களையும், விவசாயிகளையும் ஏளனமாக பார்க்கும் உணர்வை எதிர்க்கவும் கற்றுத்தாருங்கள்.
வர்க்கத் தனித்தன்மை பற்றி கட்டுரையும் அன்றாட கட்சிப் பணிகளில் ஈடுபடும் தோழர்கள் பல வர்க்க பின்னணியிலிருந்து வருபவர்கள்-புரிந்துகொண்டு, செயலாற்ற உதவும். ஒருவரின் வர்க்க உள்ளடக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் இடையே பாகு பாடு இருக்க வேண்டும். நமது வர்க்க பின்னணி எதுவாக இருப் பினும், நாம் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, கீழ், நடுத்தர விவ சாயிகள் பக்கம் இருக்கிறோமா என்பது முக்கியம். சோஷலிச கொள்கையை உருவாக்குவதற்கு வர்க் போராட்டத்தை ஆராய் வது அவசியமாகும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் சுரண்ட லுக்கு ஆளாகின்றனர். அவர்கள் மார்க்சிய நூல்களைப் படித்து, மார்க்சியத்தை தாங்களாகவே உருவாக்க இயலாது. வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டு அதை அனுபவங்களிலிருந்து கல்வி கற்கின்றனர். சுரண்டும் வர்க்கங்களிலிருந்து கட்சிக்குளஅ சிலர் வந்திருப்பார்கள். அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பார்க்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்த அனைவரும் வர்க்க உணர்வு அடிப்படையில் திரட்ட வேண்டியது கடமையாகும். நிலபிரபுத்துவ வர்க்கம் மீட்சி பெற்றது தொடர்பான ஆய்வு, புரிதலில் பின்தங்கி இருந்ததாக மாவோ சீன கம்யூனிஸ்ட் கட்சியை சுய விமர்சனம் செய்யும் அதே சமயம், நகர்ப்புற எதிர்ப் புரட்சி பற்றி நன்கு அறிந்திருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஜனநாயக மத்தியத்துவம்
1962ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரை தொகுதி எட்டில் மிகவும் முக்கியமான பகுதியாகும். கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தருவதுடன் துவங்குகிறது. சமீப காலமாக ஜனநாயக மத்தியத்துவம் பற்றி நமது தோழர்களும் விரிவாக விவாதிக்கின்ற சூழலில் (சென்ற இதழில் இது தொடர்பான கட்டுரை உள்ளிட்ட) மாவோவின் கருத்துக்களை படிப்பது, ஜன நாயக மத்தியத்துவம் பற்றி மேலும் தெளிவுபெற உதவும். மார்க்ஸ் - லெனின் விளக்கிய ஜனநாயக மத்தியத்துவம் பற்றி சிலர் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்ற விமர்சனத்துடன் துவக்குகிறார். மக்களின் மனம் திறந்த பேச்சுக்கு அஞ்ச வேண் டாம். நமது அணுகுமுறை உண்மையை ஏற்றுக் கொள்வதும், தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருப்பதும் ஆகும். நமது பணிகளில் மக்களுடன் மாறுபடும் சூழள் ஏர்படலாம்.... அதை கத்திகளாலும், துப்பாக்கிகளாலும் சரி செய்ய இயலாது. மாறுபாடுகள் பற்றி விவாதிக்க வேண்டும். விமர்சனம் மற்றும் சுய விமர்சனம் மூலமே தீர்வு காண முடியும். ஜனநாயக முறையால், மட்டுமே தார்வு காணமுடியும். கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஜனநாயகம் இருக்க வேண்டும்.
பிரச்சனைகள் வெளிப்படையாக கொண்டு வரப்பட வேண்டும். மக்களை மனம் திறந்து பேச அனுமதிக்க வேண்டும். நம்மை பழிதூற்றுவதாக இருந்தாலும்கூட வெளிப்படையாக பேச வேண்டும். பழிதூற்றுத லால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும். நாம் தள்ளாடி விழலாம், தற்போதுள்ள பதவிகளில் தொடர முடியாமல் போகலாம். கீழ்நிலை அமைப்புகளுக்கு பதவி இறக்கப்படலாம். பதவியிறக்க மும், இடமாற்றமும் சில நன்மைகளை கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். பல புதிய சூழ்நிலைகளை படிக்கவும், ஆய்வு செய்யவும் இவை பயன்படும் என்கிறார். சில தோழர்களை தவறாக நடத்தி இருக்கலாம். முழுமையாகவோ, பகுதியாகவோ என்பதல்ல பிரச்சனை. மறு ஆய்வுக்குப்பின், அவர்களை பற்றிய பிரச்சனையில் அவர்களுக்கு நிவாரணம் பிரச்சனையின் தன்மைக்கேற்ப தர வேண்டும். தவறு செய்தவர்களின் புரட்சிகர உணர்வு செம்மைப்படுத்தப்பட வேண்டும்.
சோஷலிச சமுதாயம் வந்துவிட்டாலே தவறுகள் ஏற்படாது என்று கருதக்கூடாது. சரியான, சரியற்ற பாதையிலான தலைமை யின் காலகட்டங்களில் கூட தவறுகள் நடக்கும். சரியான பாதை யின் கீழ், தவறுகள் செய்தவர்களை மறு ஆய்வு செய்து சரி செய் யப்படும். சரியற்ற பாதையில் இது சாத்தியமில்லை. ஜனநாய.க மத்தியத்துவ முறையின் வழியாக சரியான பாதையை பிரதிநிதித் துவப்படுத்துகின்றவர்களால் மட்டுமே, பொருத்தமான சந்தர்ப் பத்தில் தோழர்களால் விமர்சிக்கப்பட்டு, உயர்நிலையில் ஆய்வு செய்யப்பட்டு சரியான முறையில் பதவியிறக்கம் செய்யப்படுகி றார்கள். அல்லது இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் இத்தகைய நடவடிக்கைகள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவும். தலைவர்களிடமிருந்து மாறுபட்டு விவாதத்தை துவக்குகிற, யோசனைகளை முன்வைக்க சில தோழர்கள் தயங்குகிறார்கள், அஞ்சுகிறார்கள். மக்களுக்கும், கட்சிக்கும் தீங்கு விளைவிக்கும் தவறுகளை செய்தால் மக்களின், தோழர்களின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டும். சுய விமர்சனம் செய்துகொள்ள தயக்கம் கூடாது. விமர்சனமும், சுய விமர்சனமும் முரண்பாடுகளை களை வதற்கான வழி. ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறைப்படுத் தாவிட்டால் விமர்சனம், சுய விமர்சனம் என்ற வழிமுறையடை செயல்படுத்த இயலாது என்கிறார் மாவோ.
மத்தியத்துவம், ஜனநாயகம் என இரண்டும் உள்ள, கட்டுப்பாடு, சுதந்திரம் என இரணடும் உள்ள, எண்ண ஒற்றுமை, தனிப்பட்ட மன சாந்தி மற்றும் கிளர்ச்சி என்ற இரண்டும் உள்ள ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இத்தகைய அரசியல் சூழ்நிலையை நாம் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மன எழுச்சியைத் தூண்டுவது சாத்தியமல்ல. ஜனநாயகம் இல்லாமல் பிரச்சனை களை வெல்ல முடியாது. மத்தியத்துவம் இல்லாமல் இப்படி செய் வதும் கூட சாத்தியமில்லைதான். ஆனால் ஜனநாயகம் இல்லை யென்றால் மத்தியத்துவமும் இருக்காதுய
`மத்தியத்துவம் என்றால் என்ன? சரியான சிந்தனைகளில் ஒருமித்த கவனம் வேண்டும். அந்த அடிப்படையிலேயே புரிதலில், கொள்கை, திட்டம், உத்தரவு, நடவடிக்கை ஆகியவற்றில் ஒற்று மையை உருவாக்க முடியும், இதுதான் மத்தியத்துவத்தின் மூல மான ஒற்றுமை. சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனை பற்றி தெளிவாக இல்லையென்றால், அவர்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்படாம லேயே இருந்தால், அவர்களின் போகம் வெளிப்படாமலேயே இருந்தால், மத்தியத்துவத்தின் மூலமான ஒற்றுமையை எப்படி சாதிக்க முடியுமென மாவோ வினவுகிறார். ஜனநாயகம் இல் லாமல், அனுபவத்தை சரியாகத் தொகுத்துரைப்பது சாத்திய மில்லை. மக்களிடமிருந்து யோசனைகள் வராமல், சரியான பாதை களை, கோட்பாடுகளை அல்லது வழிமுறைகளை உருவாக்குவது சாத்தியமில்லை. கீழே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றிய ஞானமில்லாமற்போனால், அதுபற்றி தெளிவான சிந்தனை இல்லையென்றால், உயர்நிலைக்கும், கீழ்நிலைக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லையென்றால், ஒருதலைப்பட்சமான பலத் தோடு அல்லது துல்லியமற்ற தகவல்களோடு உயர்நிலையில் உள்ள முன்னணி அமைப்புகலால் தன்னிச்சையாக பிறச்சனை களுக்கான தீர்வு முடிவு செய்யப்பட்டால், இத்தகைய முடிவுகள் அகவியமாக இருப்பதை தவிர்ப்பது சிரமம். எனவே புரிதலிலும், நடவடிக்கையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவது அல்லது உண்மை யான மத்தியத்துவத்தை உருவாக்குவது சாத்தியமில்லாமல் போகும். முழு அளவில் ஜனநாயகம் வளர்க்கப்படாவிட்டால் ஒற்றுமை மத்தியத்துவம் என்பதெல்லாம் போலியாக இருக்கும் என்கிறார்.
பெரும்பான்மை - சிறுபான்மை மேலும், பாட்டாளிவர்க்க மத்தியத்துவம் என்பது பரந்த ஜன நாயக அடித்தளத்தைக் கொண்ட மத்தியத்துவம். கட்சி கமிட்டி யின் தலைமை என்பதற்கு கூட்டுத் தலைமை என்று பொருள். முதல்நிலை செயலாளர் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுப்ப தில்லை. முதல்நிலை செயலாளருக்கும், மற்ற செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்களுக்குமிடையேயான உறவு என்பது பெரும் பான்மைக்கு, சிறுபான்மை கட்டுப்படுவதாக இருக்க வேண்டும். நான் ஏதாவது ஒன்றைச் சொன்னால்... மற்றவர்கள் ஏற்க வில்லையென்றால், அவர்களின் கருத்துக்கு நான் இணங்கிப் போவதுதான் அடிக்கடி நிகழ்கிறது. ஏனென்றால் அவர்கள் பெரும் பான்மை, என்று தன்னையே முன்னுதாரணமாக குறிப்பிடும் மாவோ சீனாவில் சில மாகாண, வட்டார கமிட்டிகளில் ஒரு நபர் சொல்வதே நடக்கிறது என்பதை கடுமையாக சாடியுள்ளார். முக்கியமான விஷயங்களை கூட்டாக விவாதிக்க வேண்டும் என்றும், மாறுபட்ட கருத்துக்களை கவனித்து, நிலைமையின் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தி, எது நல்லது, எது கெட்டது, எது எளிது, எது சிரமம், எது சாத்தியம், எது அசாத்தியம் என நிலைமையிந் பல்வேறு அம்சங்களை மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்து கிறார். கூடுமானவரை கவனமாகவும், முழுமையாகவும் இது செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். இல்லையெனில், அது ஒரு நபர் ஆணவமாகவே இருக்கும். அத்தகைய செயலாளர்கள் ஆணவக்காரர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை செயல்படுத்தும் அணித் தலைவர்களாக அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.
யார் பொறுப்பு?
மாறுபட்ட கருத்தை காதுகொடுத்து கேட்கவும், எந்த விமர் சனத்தையும் தோழற்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறும் மாவோ, சில மாகாண கமிட்டி செயலாளர்கள் வந்து உட் கார்ந்ததும், தோழர்கள் பேசுவது நின்று போகிறது என்பதை சுட்டிக்காட்டி, அது தவறு, ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றும் விமர்சிக்கிறார். மற்றவர்களை சுதந்திரமாக பேச அனுமதிக்கா விடில், பிரச்சனை எழும். யார் தவறு செய்தாலும், மனம் திறந்து பேசி, விமர்சிக்க தயங்கக் கூடாது. மேலும் மாவோ கூறுகிறார், பீக்கிங்கில் நடைபெற்ற செயல்முறை மாநாட்டில் எனது குறைகளையும், தவறுகளையும் பற்றி நான் விவாதித்தேன். அதை அனைத்து தோழர்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டு மென்று சொல்லப்பட்டது. மத்திய குழுவால் செய்யப்படும் தவறு களில், எனக்கு நேரடியாக தொடர்புள்ளவற்றுக்கு நான் பொறுப்பு. எனக்கு நேரடியாக தொடர்பில்லாதவற்றிலும் எனக்கொரு பங்குண்டு. ஏனெனில் நான் அதன் தலைவர் வேலைகளில் ஏற் படும் குறைகளுக்கும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எவருமே அணுகமுடியாத புலியைப்போல் நடந்து கொண்டால் தோற்பது உறுதி என்றும் கூறுகிறார். உயர்ந்தபட்ச ஜனநாயகம் இல்லாமல், உயர்ந்தபட்ச மத்தியத்துவத்தை பெறுவது சாத்தியமில்லை. உயர்ந்தபட்ச மத்தியத்துவம் இல்லாமல், சோஷலிச பொருளாதாரத்தை நிறுவு வது சாத்தியமாக இருக்காது. சோஷலிச பொருளாதாரத்தை நிறுவத் தவறினால், அது திருத்தல்வாத அரசாக மாறிவிடும். உண்மையில் அது முதலாளித்துவ அரசாக மாறிவடும். அதில் பிற்போக்கு பாசிச சர்வாதிகாரம் இருக்கும் என சீனாவிலுள்ள கட்சியின் முக்கிய தலைவர்களை சிந்தித்து செயல்படும்படி மாவோ எச்சரிக்கிறார். அதேபோன்று ஜனநாயக மத்தியத்துவம் இல்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உறுதிப்பட முடியாது. தவிர, மத்திய கமிட்டியில் ஆற்றிய உரையில், சோஷலிச கட்டு மானத்தில் வர்க்க செயல்பாடுபற்றியும், எந்த வர்க்கங்களுடன் ஒன்றுபட வேண்டும் என்றும், எந்த வர்க்கங்களை நாம் அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதையும் விவாதிக்கிறார். மேலும் நெறிப் படுத்தும் இயக்கம் கட்சி ஒற்றுமையை கட்ட உதவியுள்ளதையும் விளக்கியுள்ளார்.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்
உலகில் பல நாடுகளிலும் மார்க்சியம், லெனினியத்தை ஆதரிக்கிறார்கள். சோவியத் யூனியன்தான் முதலாவது சோஷலிச அரசு. மாவோ, 1962ல் ப்ளீனத்தில் உரையாற்றுகையில், சோவியத் கட்சி மற்றும் அரசுத் தலைமை திருத்தல்வாதிகளால் கைப்பற்றப்பட்டிருந்தாலும், அம்மக்கள் புரட்சியை விரும்புகிறார் கள் என்கிறார். சோவியத் யூனியனிலிருந்து நாம் பாடம் கற்க வில்லையெனில் நாம் தவறு செய்து விடுவோம் என்று எச் சரிக்கை விடுக்கிறார். மார்க்சிய லெனினிய அடிப்படையில் சோஷ லிச நாடுகளும், உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் உறுதியோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஏகாதிபத்தியவாதிகள் கம்யூனிஸ்டு களை தூற்றுவதை நிறுத்தமாட்டார்கள். தனிமைப்படுத்த முயற்சி செய்வார்கள். சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்ற கோட் பாட்டை உலக கம்யூனிஸ்டுகள் அனைவரும் எப்போதும் பற்றி நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறார். வெளிப் படையான எதிரிகளைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. ரகசிய எதிரிகளிடம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் முகத்துக்கு முன்னால் உண்மை பேசுவதில்லை. எனவே கவனத்துடன் செயல்பட்டு, கட்சி, மக்கள் ஒற்றுமையை கட்ட வேண்டும்.
தயவு செய்து வாருங்கள். என்னை இரவு பகலாக விமர்சனம் செய்யுங்கள் (சிரிப்பொலி). பின்னர் நான் உட்கார்ந்து இதுபற்றி அமைதியாக சிந்திப்பேன். இரண்டு அல்லது மூன்று இரவுகள் தூக்கம் போய்விடும். முழுமையாக சிந்தித்த பின், அதனை புரிந்துகொண்டபின், நேர்மையுடன் சுய விமர்சனம் எழுதுவேன்... நீங்கள் மற்றவர்களை மனம் திறந்து பேசவிட்டால், வானம் இடிந்து வீழ்ந்துவிடாது. நீங்களும் சீரழிந்துவிடமாட்டீர்கள். நீங்கள் செய்யாவிட்டால், நீங்கள் சீரழிந்துபோகும் அந்தநாள் தவிர்க்க முடியாமல் வந்தேதீரும்.
(ஜனநாயக மத்தியத்துவம் பற்றி (30..1.1962) சீன கட்சி மத்தியக்குழு கூட்டிய பணி மாநாட்டில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து)
வே1962 செப்டம்பரில் பத்தாவது ப்ளீனத்தில் மாவோ ஆற்றிய உரையும் இந்த தொகுப்பின் பயனுள்ள பகுதி எனலாம். திருத்தல் வாதம், சோஷலிச நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். சீனாவுக்கும், ஏகாதிபத்தியத்திற்குமிடையேயான முரண்பாடு ஆகிய விஷயங்கள் பற்றிய தெளிவானதொரு உரையாகும். தொடர்ந்து அரசியல் பொருளாதாரம் என்ற சோவியத் பாட நூலுக்கான விமர்சன குறிப்புகள் (பக்கம் 498 - 616) பலதரப்பட்ட விஷயங்களை அலசி, ஆராய்வதாக உள்ளது. ரஷ்யா, சீனா ஒப்பீடு, இந்தியாவில் ஏன் புரட்சி செய்யமுடியவில்லை. ஜனநாயக புரட்சியிலிருந்து சோஷலிச புரட்சிக்கு மாறும்பொழுது எழும் பிரச்சனைகள், பாட்டாளி வர்க்க அரசின் வடிவம், வேளாண் - தொழில்துறை இரண்டிற்குமிடையேயான உறவு, சோஷலிச அமைப்பில் உடைமை முறைகள், சோஷலிசத்தில் தொழிலாளர் உரிமைகள், பொருள் சார்ந்த ஊக்குவிப்புகள்,. ஊதியங்களின் வடிவங்கள்.... என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. விமர்சன கண்ணோட்டத்துடன் மாவோ தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். சோவியத் யூனியனில் சோஷலிசத்தின் பொருளாதார பிரச்சனைகள் என்ற ஸ்டாலினின் நூல் மீதான விமர்சன கட்டுரையுடன் எட்டாவுது தொகுப்பு நிறைவுறுகிறது. இந்த கட்டுரை சோவியத் யூனியனில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார நிகழ்வுகளை புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்.
முந்தைய தொகுப்புகளில் பேசப்பட்ட சில முக்கிய விஷயங்கள் இந்த தொகுப்பில் மீண்டும் இடம் பெற்றிருந்தாலும்கூட, ஜனநாயக மத்தியத்துவம், சீனாவில் கம்யூன்கள் செயல்பாடு, சோவியத் யூனியனில் வளர்ச்சி - பிரச்சனைகள் பற்றிய விமர்சனங்கள் ஆகியவை மிகவும் பயனுள்ள பகுதிகள் ஆகும். தொகுதி எட்டு, தோழர் மயிலைபாலு அவர்களால் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கட்டுரையாளர் ஆர்.சந்திரா
No comments:
Post a Comment